ஹொய்சாளேஸ்வரர் கோயில் ஒரு சிவன் கோயில் ஆகும். இது இன்றைய இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹளபீடு என்னும் இடத்தில் உள்ளது. 12ஆம் நூற்றாண்டில் போசளப் பேரரசை விஷ்ணுவர்த்தனன் ஆண்டு வந்த காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டது. ஹொய்சாளேஸ்வரர் கோயிலில் காணப்படும் சிவா பார்வதி சிலை அக்காலத்தில் போசளப் பேரரசை ஆண்டுவந்த விஷ்ணுவர்த்தன ஹொய்சாளேஸ்வரர் என அழைக்கப்பட்ட விஷ்ணுவர்த்தனன் என்னும் மன்னனின் பெயரைத் தழுவியே இக்கோயிலின் பெயர் ஏற்பட்டதாகப் பதிவுகள் காட்டுகின்றன. இருந்தாலும் இக்கோயில் மன்னனால் மட்டுமின்றி நகரத்தின் செல்வந்தர்களான குடிமக்களாலும் கட்டுவிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கேதமல்லன் கேசரசேத்தி என்னும் இருவர் இவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவர். இக்கோயில் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பெரிய குளம் ஒன்றை நோக்கியபடி அமைந்துள்ளது. இதற்கு யகாச்சி ஆற்றுக்குக் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த அணைக்கட்டு ஒன்றிலிருந்து வாய்க்கால்கள் மூலம் நீர் வழங்கப்பட்டது. இக்குளம் ஹொய்சாளேஸ்வரர் கோயில் கட்டப்படுவதற்குச் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இக்கோயில் தென்னிந்தியாவில் உள்ள பெரிய சிவன் கோயில்களுள் ஒன்றாகும்.
கோவில் எளிமையான இரட்டை விமானக் கோயில் ஆகும். ஒரு விமானம் ஹொய்சாளேஸ்வரருக்கும் மற்றது சாந்தலேஸ்வரருக்கும் உரியது. சாந்தலேஸ்வரர் என்ற பெயர் விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலேஸ்வரியின் பெயரைத் தழுவி ஏற்பட்டது ஆகும். நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகளைச் செய்வதற்கு உகந்த சோப்புக்கல் எனப்படும் ஒருவகைக் கல்லாலேயே இக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கோயில் முழுவதும் ஜகதி எனப்படும் மேடையொன்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இங்குள்ள இரண்டு கோயில்களும் கிழக்கு நோக்கியவையாக அருகருகே அமைக்கப்பட்டுள்ளன. இக்கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் முன் மண்டபங்கள் உள்ளன. இரண்டு மண்டபங்களும் இணைக்கப்பட்டனவாய்ப் பெரிதாகக் காட்சியளிக்கின்றன. கருவறைகளில் சிவனைக் குறிக்கும் எளிமையான லிங்க வடிவங்கள் உள்ளன. கருவறைகளுக்கு மேல் அமைந்திருந்து இன்று அழிந்து போய்விட்ட சிகரங்கள் இதன் கருவறையைப் போலவும் நல்ல நிலையிலிருக்கும் பிற ஹோய்சாலக் கோயில்களில் காணப்படுவது போலவும் நட்சத்திர வடிவு கொண்டு இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. இக் கோயில்களின் வெளிச் சுவர்களில் பல நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள் உள்ளன. ஹளபீட்டில் உள்ள இக் கோயில் இந்தியக் கட்டிடக்கலையின் ஒரு சிறப்பான எடுத்துகாட்டு எனப்படுகின்றது.
கோவில் வாசலில் விநாயகப்பெருமான் கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். மேல் உள்ள இரண்டு கைகளில் பாச அங்குசம் உள்ளது. வலதுகரம் மாலிக்காபூர் படையெடுப்பில் உடைக்கப்பட்டு விட்டது. இடக்கரம் மோதகத்தை தாங்குகிறது. துதிக்கையால் மோதகத்தைச் சுவைத்தபடி காட்சி தருகிறார். விநாயகரின் கிரீடமும் யாளியால் ஆன திருவாட்சியும் நுட்பமான வேலைப்பாடுகளுடன் உள்ளது. கால்கள் இரண்டையும் மடித்து அமர்ந்திருக்கிறார். கழுத்தில் அணிந்திருக்கும் தாழ்வடம் பாதத்திற்கும் கீழே தரையில் கிடக்கிறது. வெயிலும் மழையும் பாராமல் வெட்டவெளியில் வெயிலுகந்த விநாயகராக காட்சியளிக்கிறார். இரண்யனை வதம் செய்யும் உக்ர நரசிம்மர் கோவர்த்தன மலையைக் குடையாகத் தாங்கும் கிருஷ்ணர் லட்சுமி நாராயணர் அர்ஜுனனுக்கு தேரோட்டும் கிருஷ்ணர் என்று ராமாயண மகாபாரத கதை தொடர்பான சிற்பங்கள் உள்ளன. ஆதிநாதர் சாந்திநாதர் பார்சவநாதர் ஆகிய சமணக் கோயில்களும் இக்கோயிலின் சுற்றுப்புறங்களில் உள்ளன.
கோவிலில் இரண்டு பிரதான சன்னதிகள் அமைந்துள்ளன. முதல் சன்னதியில் ஹொய்சாளேஸ்வரர் என்னும் திருநாமத்தில் இருக்கிறார். சிவலிங்க பாணத்தின் மேல் நாகாபரணம் குடைபிடிக்கிறது. பாணத்தின் மீது இரு கண்கள் அழகாக உள்ளது. இச்சன்னதியின் முன் நவரங்க மண்டபம் மிகுந்த வேலைப்பாடுகளுடன் உள்ளது. விஷ்ணுவர்த்தனன் என்னும் ஹொய்சாள மன்னனின் மனைவி சாந்தளாதேவி. ராணியின் பெயரால் இவர் சாந்தளேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். வடநாட்டு பாணியில் சாந்தளேஸ்வரர் மீது தாராபாத்திரம் வைக்கப்பட்டுள்ளது. இரு சன்னதிக்கும் நேரே கிழக்கு வாசல்கள் உள்ளன. வடக்கு தெற்கு வாசல்களும் உண்டு. வெளியில் எவ்வளவு வெயில் இருந்தாலும் கோயிலுக்குள் நுழைந்ததும் குளிர்ச்சியாக உள்ளது. சுவாமி தரிசனத்தின் போது தீர்த்தம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. சாந்தளேஸ்வரர் சன்னதியில் உற்சவர் சிலைகள் உள்ளன. ஹொய்சாளேஸ்வரருக்கும் சாந்தளேஸ்வரருக்கும் நேராக நந்தி மண்டபங்கள் உள்ளன. நந்தியும் மண்டபத் தூண்களும் கலைநயம் மிக்கவை. நந்தி மண்டபத்தைச் சுற்றி மரச்செப்பு கடசல் போல கல்லில் வடித்த கலைநயம் மிக்க தூண்கள் உள்ளன. ஒற்றைக் கருங்கல்லினால் நந்தி வடிக்கப்பட்டுள்ளது. இரு நந்திகளும் ஒன்று போலவே உள்ளன. கழுத்து சிறிது வளைந்திருக்கிறது. தமிழ்நாட்டுப் பாணியில் நாக்கை வெளியில் நீட்டாமல் உள்ளது. சிவாம்சத்துடன் நந்தி மகாகாளர் என்னும் துவாரபாலகர்கள் சன்னதிகளில் காவலாக நிற்கின்றனர். இதில் சாந்தளேஸ்வரர் முன்புள்ள துவாரபாலகர்கள் கையில் திரிசூலமும் டமருகம் என்னும் உடுக்கையும் ஏந்தி சிவாம்சத்துடன் உள்ளனர். கைகளை லாவகமாக வளைத்தும் கால்கள் சற்று சாய்ந்தும் ஒய்யார பாவனையில் இந்த சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. அவர்களின் அருகில் சாமரம் வீசும் சேடிப்பெண்களின் சிலைகள் கண்களைக் கவரும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன. துவார பாலகர்களின் பாதத்தில் காவல் வீரர்கள் நிற்கின்றனர்.
கோவில் பிரகார சுவர் முழுவதும் சித்திர வேலைப்பாடுகள் நுட்பமாக செதுக்கப்பட்டுள்ளன. யானை சிங்கம் குதிரைவீரர்கள் பூவிதழ் என்று அடுக்கடுக்காக சிற்பங்கள் நூற்றுக்கணக்கில் ஒன்றின்மேல் ஒன்றாக உள்ளன. கோயில் ஒரு தேர் போலவும் அதை இழுத்துச் செல்வது போல சிற்ப வரிசைகளும் உள்ளன. யானைகள் ஒன்றையொன்று முட்டி மோதிக் கொள்ளும் சிலைகளைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். ஹொய்சாள மன்னர்கள் தங்களை துவாரகாபுரியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்வார்கள். இருப்பினும் இவர்கள் கிருஷ்ணனை வணங்காமல் சமண சமயத்தையே பின்பற்றி வாழ்ந்தனர். ராமானுஜர் காலத்திற்குப் பிறகு இவர்கள் மீண்டும் தங்கள் வேதசமயத்தைப் பின்பற்ற தொடங்கினர். அதன்பின் சிறியதும் பெரியதுமாக சிவபெருமான் மகாவிஷ்ணுவை மூலவராகக் கொண்டு 150 கோயில்கள் கட்டினர். பதினோராம் நூற்றாண்டில் ஹளபேடு ஹொய்சாளர்களின் தலைநகராகத் திகழ்ந்தது. அப்போது இங்கு ஒரு சிவாலயம் கட்டி மூலவருக்கு தங்கள் இனத்தின் பெயரால் ஹொய்சாளேஸ்வரர் என்று பெயரிட்டனர். 1127ல் தொடங்கிய கோயில் கட்டும்பணி 1207ல் நிறைவு பெற்றது. விஷ்ணுவர்த்தனின் அமைச்சரில் ஒருவரான கெட்டுமல்லா இக்கோயிலைக் கட்டினார்.
14 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வட இந்தியாவிலிருந்து படையெடுத்த டெல்லி சுல்தான் படைகள் ஹளபீட்டைத் தாக்கிக் கொள்ளையிட்டபோது இக்கோயிலும் அழிவுக்கு உள்ளாகிக் கவனிப்பாரற்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அன்னியப் படையெடுப்பின் போது சிதைந்த சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கோவில் தொல்லியல் துறையின்கீழ் செயல்பட்டு வருகிறது. மைசூரில் இருந்து 149 கிமீ தூரத்தில் இக்கோவில் உள்ளது.