அச்சன் கோவில் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் அலுவலர் ஸ்ரீ கார்யம் ஆவார். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அச்சன் கோயிலில் ஸ்ரீ காரியம் தர்ம சாஸ்தா மீது அளவற்ற பக்தியோடு அவரை நினைத்தவாறே பணி செய்வார். அச்சன்கோவில் வனப்பகுதியில் இருந்து அதீதமான மரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு காணாமல் போய்க்கொண்டே இருந்தது. ஆங்கிலேய அதிகாரிகள் காணாமல் போன மரங்களின் விபரங்களை ஸ்ரீ கார்யத்திடம் கேட்டார்கள். கோவிலேயே அதிக நேரம் தினம் இருந்து இறைவனையே நினைத்துக் கொண்டே இருந்தார். அதனால் வேலையில் கவனமின்மை ஆனதால் யார் வெட்டினர் என தெரியாமல் போனது. என்ன விபரம் கொடுப்பது என்று புரியாது அவர் திகைத்தார். சரியான பதில் தராத காரணத்தால் நீதிமன்றதுக்கு வந்து வழக்கை சந்திக்குமாறு அதிகாரி உத்தரவிட்டு கடிதம் அனுப்பினார். ஒரு தவறும் செய்யாத தன் மேல் வீண் பழி வந்ததே என்று மன வருத்தத்துடன் இருந்தார்.
தர்ம சாஸ்தா கோவிலின் திருவிழா நடைபெற்று வந்த காலம் அது. உன்னை நினைத்து நினைத்து வாழ்ந்த நான் கஷ்டத்தோடு இங்கே இருக்கிறேன். உனக்கு விழாவா என்று எண்ணிக் கொண்டே இரவு படுக்க சென்றார். அன்றிரவு தர்ம சாஸ்தா அவர் கனவில் வந்து நாளை நீதிமன்றத்தில் நீதிபதி மரங்கள் வெட்டியது யார்? என்று கேட்டால் எல்லாம் மணிகண்டனுக்கு தெரியும் என்று மட்டும் சொல் என்றார். மறுநாள் கோர்ட்டில் ஆங்கிலேய நீதிபதி இவரிடம் கேள்விகள் கேட்க இவரும் எல்லாம் தெரிந்தவன் மணிகண்டன் தான் அவன் வந்து சாட்சி சொல்லுவான்’ என்றார். அதை கேட்ட நீதிபதி மணிகண்டனை அழைக்க உத்தரவிட்டார். நீதிமன்ற ஊழியர் மணிகண்டன் மணிகண்டன் மணிகண்டன் என மும்முறை அழைத்தார். பின்னர் நீதிபதி சாட்சிக் கூண்டில் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் யாரோடு பேசுகிறார் என அங்கே இருந்த அனைவரின் கண்களுக்கு புலப்படவில்லை. நீதிபதி தொடர்ந்து சாட்சி கூண்டில் இருந்தவரிடம் பேசிக்கொண்டே இருந்தார். பின்னர் ஸ்ரீகார்யத்தை நோக்கி மணிகண்டன் அளித்த கணக்குகளின்படி நீ நிரபராதி. உன் மேல் தவறில்லை’ என தீர்ப்பளித்தார்.
இந்த நிகழ்வைக் கண்டு நீதிமன்றத்திலிருந்த அனைவரும் ஆங்கிலேய நீதிபதிக்கு என்ன ஆனது என பேசிக்கொண்டனர். என்ன நடந்தது யாரிடம் பேசினார் இந்த நீதிபதி. ஸ்ரீ கார்யம் நிரபராதி என ஏன் நீதிபதி கூறினார். புரியாத புதிராக இருந்தது அங்கிருந்தவர்களுக்கு. தீர்ப்பு வந்தவுடன் ஸ்ரீ கார்யம் சாஸ்தா மீது கொண்ட பக்தியின் மேலீட்டால் மயங்கி விழுந்தார். தீர்ப்பு முடிந்து நீதிபதி தனது இருக்கையில் இருந்து எழுந்து வந்தார். வழக்கறிஞர்கள் சிலர் நடந்தது குறித்து நீதிபதியிடம் கேள்வி எழுப்பினர். எங்கள் கண்களுக்கு தெரியாத மனிதரிடம் பேசினீர்கள் என்றனர். நீதிபதி சாட்சி சொல்ல மணிகண்டன் என்பவர் வந்தார். அவர் கூறிய சாட்சிகளின் அடிப்படையிலே தீர்ப்பு வழங்கப்பட்டது என்றார். வந்தவர் சாதாரண மனிதன் அல்ல, அச்சன் கோவில் அரசன் அந்த தர்ம சாஸ்தா என்று பலரும் பதில் கூறினார்கள். அச்சன் கோவில் வந்தார் ஆங்கிலேய நீதிபதி. மூலஸ்தானத்தை பார்த்தார் நீதிபதி. அவருக்கு கோர்ட்டிற்கு வந்த கோலத்தில் சாஸ்தா காட்சி கொடுத்தார். உடனே வந்தது இவர் தான். இவர் தான் என உணர்ச்சி பூர்வமாக கத்தினார். சாஸ்தாவிடம் சரண் புகுந்தார் அந்த ஆங்கிலேய நீதிபதி.
இந்த ஆலயம் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டம் புனலூர் தாலுகாவில் அச்சன் கோவில் உள்ளது. கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பஞ்ச சாஸ்தா கோவில்களில் இதுவும் ஒன்றாகும். மற்ற நான்கு கோவில்கள் குளத்துப்புழா ஆரியங்காவு சபரிமலை மற்றும் கந்தமாலா கோவில்கள் ஆகும். அச்சன் கோவில் என்ற ஊரின் பெயரால் அழைக்கப்படும் ஒரு ஆறு கோயிலுக்கு அருகில் உருவாகிறது. சபரிமலை கோயிலைப் போலவே அச்சன்கோவில் கோயிலிலும் பதினெட்டு படிகள் உள்ளன. அச்சன் சிலை கிழக்கு நோக்கி உள்ளது. இந்த பரசுராமரால் நிறுவப்பட்டது. இங்குள்ள ஐயப்பனின் பிரதிஷ்டை கேரளாவில் உள்ள மற்ற சாஸ்தா ஆலயங்களில் இருந்து மிகவும் தனித்துவமானது. இந்த சிலை ருத்ராட்ச சிலை என்று அழைக்கப்படுகிறது. அச்சன் தனது இரண்டு மனைவிகளான பூர்ணா மற்றும் புஷ்கலாவுடன் கிரிஹஸ்தாஷ்ரமியாக திருமண வாழ்க்கையை நடத்துபவராக சித்தரிக்கப்படுகிறார். விஷமுள்ள பாம்புக் கடிகளைக் குணப்படுத்துவதில் இந்த ஆலயம் புகழ் பெற்றது. இதனால் அய்யப்பன் பெரும்பாலும் மகாவைத்தியராக அருள் பாலிக்கிறார். சிலையின் வலது உள்ளங்கையில் எப்போதும் சந்தனம் மற்றும் தீர்த்தம் ஆகியவை இருக்கிறது. இவை மருத்துவ குணங்கள் கொண்டதாக இருக்கிறது. இக்கோயிலில் மாளிகைப்புறத்தம்மா துர்க்கை நாகராஜா நாகயக்ஷி கணபதி முருகர் கருப்பசுவாமி கருப்பாயி அம்மா செப்பனிமுண்டன் சப்பாணிமாடன் மாடத்தேவன் காளமாடன் கொச்சட்டிநாராயணன் ஷிங்காலி பூதத்தன் அருக்கோலத்தன் போன்ற உப தெய்வங்கள் உள்ளன. கோயிலின் பின்புறம் நாகர் உள்ளார்.