திருதேசமலை எனும் திருத்தியமலை திருத்தலத்தில் சிவபெருமான் ஏகபுஷ்பப் பிரியநாதன் என்னும் திருப்பெயரோடு அருளுகிறார். அம்பாள் தாயினும் நல்லாள். இறைவனுக்கும் அம்பாளுக்கும் இடையில் அமர்ந்தவாறு சுவரில் உள்ள துவாரம் மூலம் அதிகார நந்தி இறைவனை தரிசிக்கிறார். இங்கு தெய்வானையுடன் சுப்பிரமணியர் காட்சி தருகிறார். உமா மகேஸ்வரர் பைரவர் மகாலட்சுமி சண்டிகேஸ்வரர் சூரியன் நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளார்கள். இந்த மலையில் வற்றாத நீர் உள்ள ஒரு சுனையில் பல யுகங்களுக்கு ஒரே ஒரு முறை மட்டும் மலர் ஒன்று பூக்கும். அந்த மலரின் பெயர் தேவ அர்க்கய வள்ளிப்பூ. இறைவனால் படைக்கப்பட்ட எத்தனையோ மலர்கள் இறைவனுக்குச் சாத்தப்படுகின்றன. ஆனால் இந்த தேவ அர்க்கய வள்ளிப்பூ என்னும் ஒரு மலரை மட்டுமே இறைவனே காத்திருந்து ஏற்றுக் கொள்கிறார். தேவ அர்க்கய வள்ளிப்ப்பூவை அணிந்து மகிழ்வதற்காக யுக யுகாந்திரமாய் காத்திருப்பதால் இந்த சிவபெருமானின் திருப்பெயர் ஏகபுஷ்பப் பிரியநாதர் என்று வழங்கப்படுகிறது. பிருகு முனிவரும் அகத்தியரும் அவரது மனைவி லோபமுத்ராவும் இந்த இறைவனையும் இறைவியையும் தரிசித்துள்ளார்கள். கோவிலில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் சிவலிங்கத்திற்கு வில்வத்தாலும் ஆவுடையாருக்கு துளசியாலும் அர்ச்சனை செய்யப்படுகிறது.
ஒரு மகாசிவராத்திரி நாளில் நாரதர் தேவலோகத்தில் உள்ள ரிஷிகளிடம் பூலோகத்தில் ஒரே ஒருமுறை பூக்கும் தேவ அர்க்கவல்லி என்ற மலரினால் சிவபெருமானை பூஜித்தால் உலகில் உள்ள எல்லா மலர்களையும் கொண்டு பூஜித்த பலன் கிடைக்கும் என்று சொன்னார். இதனைக் கேட்ட பிருகு மகரிஷி அம்மலரைக்காண பூவுலகில் பல இடங்களில் தவம் செய்தார். சிங்கம்புணரியை அடுத்த திருக்களம்பூரில் தவம் செய்த போது அங்கு ஒரு வாழை மட்டையானது பிரான்மலை குளக்குடி நெடுங்குடி வழியாக அந்த மகா முனிவருக்கு வழிகாட்டி இறுதியாக திருத்தியமலை வந்தவுடன் அந்த வாழை மட்டையானது மறைந்தது.
திருத்தியமலையில் அப்போது மாமுனிவர் அகத்தியரும் அவரது துணைவியார் லோபமாதாவும் மலையைச் சுற்றி கிரிவலம் வந்து கொண்டிருந்திருந்தார்கள். பிருகு மகரிஷி அகத்திய முனிவரிடம் தேவ அர்க்கவல்லி மலரின் இரகசியத்தைக் கேட்டு அறிந்து கொண்டு பல காலம் அங்கு தவமிருந்தார். ஒரு மகாசிவராத்திரி நாளில் மலையின் மீது மிகப்பெரிய மரமும் அதில் ஆயிரக்கணக்கான பறவைகளும் காணப்பட்டன. அகத்தியர் தான் கிரிவலம் செய்த போது இதுபோன்ற மரமும் பறவைகளும் இல்லையென்றும் எனவே இன்று ஒரு மகா அதிசயம் நடக்க இருப்பதாக லோபமாதாவிடமும் பிருகு முனிவரிடமும் கூறினார். அவ்வாறே மகா சிவராத்திரியான அந்த நாளில் அந்த மரத்தில் இருந்த பறவைகள் எல்லாம் ஓம் நமச்சிவாய என்று கூறியவாறு பறந்து சென்றதை அவர்கள் கண்டனர். அகத்திய முனிவர் பறவைகளின் மொழியை அறிந்தவர் ஆதலால் தேவ அர்க்கவல்லி பூவை அப்பறவைகள் கண்டு கொண்டதால் அவை சிவலோகம் செல்வதாக கூறினார். பறவைகள் மட்டும் அம்மலரைக் கண்டு கொண்டதால் பிருகு முனிவர் சிறிது வருத்தப்பட்டார்.
அகத்திய முனிவர் பிருகு முனிவரையும் லோப மாதாவையும் திருத்தியமலை குன்றின் மீது சுனைக்கு அருகே அழைத்து சென்றார். அங்கு உள்ள சுனைநீரில் தேவ அர்க்க வல்லி பூவின் பிம்பத்தை அவர்கள் மூவரும் கண்டனர். பூவின் பிம்பத்தை மட்டும் கண்ட அவர்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றார்கள். அப்போது சுனையில் தோன்றிய தேவ அர்க்கய வள்ளிப்பூ மெல்ல நகர்ந்து போய் ஏகபுஷ்பப் பிரியநாதரின் சிரசில் அமர்ந்தது. இந்த அரிய காட்சியைக் கண்ட பிருங்கி முனிவர் ஆனந்தக் கூத்தாடினார். அப்போது சிவபெருமான் அந்த தேவ அர்க்க வல்லி பூவை சூடிக்கொண்டு சுயம்புவாக அகத்தியருக்கும் லோபமாதாவுக்கும் பிருகு முனிவருக்கும் காட்சியளித்தார்.
இத்திருக்கோயிலானது 5000 ஆண்டுகளுக்குமேல் பழமை வாய்ந்தது. ஆதித்திய சோழர் விக்ரம சோழர் மற்றும் இரண்டாம் இராஜேந்திர சோழர்கள் காலத்தில் பராமரிக்கப்பட்டு இறுதியாக கிபி1883 ஆம் கால கட்டத்தில் சென்னையை ஆண்டு வந்த சென்னப்ப நாயக்கர் மற்றும் நக்கன நாயக்கரால் புதுப்பிக்கப்பட்டது. திருக்கோயில் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகக் கல்வெட்டு கூறுகிறது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் சோழர்கள் காலத்தின் அளவை முறைகள் மற்றும் கோவிலின் சிறப்பு முதலியவற்றை பற்றி எடுத்துரைக்கின்றன.