திருச்செந்தூர் கோவில்

டச்சுக்காரர்கள் திருச்செந்தூர் கோயிலை ஆக்கிரமித்தனர். பீரங்கித் தளவாடங்களுடன் கோயிலை தங்கள் கொத்தளமாக மாற்றினர். இது கண்ட அப்பகுதி மக்கள் பீதியும் வருத்தமும் கோபமும் அடைந்தனர். திருமலை நாயக்கர் மன்னரிடம் முறையிட்டனர். மன்னர் திருமலை நாயக்கர் சரக்குகளுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறும் திருச்செந்தூர் கோயிலை உடனடியாகக் காலி செய்யுமாறும் டச்சுக்காரர்களுக்கு உத்தரவிட்டார். டச்சுக்காரர்கள் அந்த உத்தரவை மதிக்காமல் சுற்றுவட்டாரத்திலுள்ள ஊர்களுக்குச் சென்று அவற்றைக் கொள்ளையிட்டு சூறையாடவும் தொடங்கினர். தாங்கள் வெளியேற வேண்டுமானால் 40000 டச்சு நாணயங்கள் பணயமாகத் தரப்படவேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தனர். தங்களால் இயன்ற அளவு பணயத் தொகை கொடுப்பதாகச் சொல்லிய ஊர்மக்களின் வேண்டுகோளை டச்சுக் காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த ஆக்கிரமிப்புக்கும் அச்சுறுத்துதலுக்கும் எதிராகத் திருச்செந்தூர் மக்கள் திரண்டெழுந்து போரிட்டனர்.

சுப்பிரமணிய சுவாமியின் திருவுருவச் சிலை உள்ளிட்ட கோயில் சொத்துக்கள் பலவற்றைக் கொள்ளையிட்ட டச்சுக்காரர்கள் மக்கள் கிளர்ச்சி தொடங்கும் முன் தப்பிக்கத் திட்டமிட்டு கப்பல்களில் கிளம்பத் தொடங்கினர். போரைத் தவிர்க்க விரும்பிய திருமலை நாயக்கர் தமது தூதராக வடமலையப்ப பிள்ளை என்பவரை அனுப்பி கோயில் சொத்துக்களைத் திருப்பித் தருமாறு டச்சுக் காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மன்னரின் மனக்கருத்தை அறிந்த டச்சுக்காரர்கள் பணயத் தொகையை 100000 டச்சு நாணயங்களாகக் கூட்டினர்

கோயிலைக் கொள்ளையடித்த டச்சுக்காரர்கள் கப்பல்களில் ஏறித்தப்புவதற்கு முன் கோவிலை பீரங்கிகளால் தகர்த்து அழிக்க முயன்றனர். அது முடியவில்லை. விக்கிரகங்களை உருக்கித் தங்கத்தை எடுத்துச் செல்லலாம் என்று முயன்ற போது விக்கிரகங்களை உருக்க முடியாமல் அப்படியே எடுத்துக் கப்பலில் போட்டனர். கப்பல் கிளம்பியவுடன் சிறிது நேரத்தில் பெரும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. சூறைக் காற்று அடித்தது. கப்பல் நிலைகுலைந்து மூழ்கும் நிலைக்கு வந்தது. உடன் வந்தவர்கள் முருகனுடைய செயல் இது முருகனுடைய விக்கிரங்கள் இருக்கும் வரை நம் உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்று கூறினார்கள். பயந்து போன டச்சுக்காரர்கள் முருகன் விக்கிரகங்களை கடலிலேயே எறிந்தனர். உடனே கடல் கொந்தளிப்பு சூறாவளி அடங்கியது. அங்கிருந்து உடனே தங்கள் நாட்டிற்கு ஓடிவிட்டனர்.

அப்போது திருநெல்வேலியில் ராஜப் பிரதிநிதியாக இருந்த வடமலையப்பபிள்ளை தீவிர முருக பக்தர். சுவாமியின் உருவச் சிலையை டச்சுக்காரர்கள் கொள்ளையிட்டது பற்றிக் கேள்விப்பட்டுப் பெரிதும் வேதனையுற்ற அவர் அதே போன்ற பஞ்சலோக விக்கிரகங்களை வடிவமைத்து பிரதிஷ்டை செய்வதற்காக திருச்செந்தூருக்கு எடுத்து வந்தார். அப்போது வடமலையப்பரது கனவில் முருகப் பெருமான் தோன்றி கடலில் சென்று தனது திருவுருவச் சிலையை மீட்குமாறு ஆணையிட்டார். அதன் படி கடலில் ஓரிடத்தில் எலுமிச்சம்பழம் ஒன்று முழுகாமல் மிதக்கும் என்றும் அந்த இடத்தைச் சுற்றி வானில் கருடன் வட்டமிடும் என்றும் அங்கு தான் சிலை கிடைக்கும் என்றும் கனவில் முருகர் கூறினார். வடமலையப்பர் கடலில் இறங்கியபோது அந்த அடையாளங்களுடன் இருந்த இடத்தில் தெய்வச் சிலைகள் கிடைத்தன. அவற்றை மகிழ்ச்சியுடன் எடுத்து வந்து கோயிலில் பிரதிஷ்டை செய்தார்.

காலனிய வரலாற்றை எழுதிய எம்.ரென்னல் என்பவரது நூலில் (A Description, Historical and Geographical, of India – published in Berlin, 1785) திருச்செந்தூர்க் கோயில் பற்றிய செய்திகள் உள்ளன. டச்சுக் கம்பெனியின் படைத்தலைவர் ஒருவரிடமிருந்து தனக்குக் கிடைத்த விவரங்கள் இவை என்று அவர் குறிப்பிடுகிறார். 1648ல் மீண்டும் திரும்பி வரும் போது கடற்கரையில் இருந்த கோயிலை அழிக்க முயற்சி செய்தனர். பீரங்கிகள் கொண்டு கனரக வெடிகுண்டுகள் அந்தக் கோயில் மீது பொழியப்பட்டன. ஆயினும் அதன் கோபுரம் இவற்றுக்கு சிறிது கூட அசைந்து கொடுக்கவில்லை. லேசான சேதாரம் மட்டுமே ஏற்பட்டது.

வடமலையப்பபிள்ளை கட்டிய மண்டத்தில் இன்றும் ஆவணி மாசி மாத விழாக்களின் போது அவர் பெயரில் கட்டளைகள் நடைபெறுகின்றன. அந்த மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் மேற்சொன்ன தகவல்கள் உள்ளன. வென்றிமலைக் கவிராயர் எழுதிய திருச்செந்தூர் தலபுராணத்திலும் பிள்ளையைப் புகழ்ந்து எழுதப்பட்ட வடமலை வெண்பா என்ற நூலிலும் இந்த தெய்வச் செயல் பற்றிய செய்திகள் உள்ளன.

திருச்செந்தூர்

தேவர்களின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஆறுமுகன் சூரபத்மன் மீது படையெடுத்தார். வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும் கிரௌஞ்ச மலையையும் அழித்துவிட்டு வீரபாகுத் தேவர் மற்றும் தன் படைகளுடன் திருச்செந்தூரில் வந்து தங்கினார். அவர் அசுரனை வெற்றி கொண்ட பிறகு ஈசனை வழிபடுவதற்கு தேவ தச்சன் மயனை அழைத்து கோயில் ஒன்றை எழுப்பினார். அதுவே இன்று நாம் காணும் திருச்செந்தூர் கோயில். வால்மீகி ராமாயணத்தில் கபாடபுரம் குறிப்பிடப்பட்டிருப்பதால் ராமாயண காலத்துக்கு முன்பே திருச்செந்தூர் புகழ் பெற்றிருக்கிறது என்பதை அறியலாம்.

ஓரெழுத்தந்தாதி, திரிபு அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, வெண்பா அந்தாதி, சுப்பிரமணிய அந்தாதி, முருகன் கலித்துறை அந்தாதி, திருச்செந்தில் உலா, திருச்செந்தூர் மாதாந்தக் கலித்துறை, திருச்செந்தூர் வழிநடைச் சிந்து, திருச்செந்தூர்க்கோவை, திருச்செந்தூர் ஷண்முக சதகம், திருச்செந்தூர் நொண்டி நாடகம், தசாங்க வகுப்பு, திருச்செந்தூர் தல புராணம், வழி நடைப்பதம், திருச்செந்தில் பதிகம், திருச்செந்தில் நவரச மஞ்சரி, திருச்செந்தில் சந்த விருத்தம் என்று திருச்செந்தூர் பற்றிய நூல்கள் ஏராளமாக உள்ளது.

137 அடி உயரமும் 9 நிலைகளையும் கொண்ட ராஜ கோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிகமூர்த்தி சுவாமிகள். இவரை ஒடுக்கத்தம்பிரான் என்றும் கூறுவார்கள். கோபுரம் கட்டும்போது பணியாளர்களுக்கு கூலியாக இலை விபூதி தருவார். தூண்டு கை விநாயகர் கோயிலருகில் சென்று இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம்! ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி என்றார். சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோயிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலை இனிதே முடிந்தது.

ஆதிசங்கரர் வடநாட்டு திக் விஜயத்தை மேற்கொண்டபோது அவருக்கு எதிராக அபிநவகுப்தன் என்பவன் யாகம் செய்து ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி முருகன் அருளால் நோய் நீங்கப் பெற்றார். கோவிலின் மகா மண்டபத்தில் ஆதிசங்கரரது சிலை உள்ளது.

இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னார். மன்னன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர்க் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது. இந்தச் செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழில் இடம் பெற்றுள்ளது.

பேரூர் பட்டீஸ்வரர்

கோயம்புத்தூரில் இருந்து மேற்கு திசையில் ஆறாவது கிலோமீட்ட‍ர் தொலைவில் உள்ள‍து பேரூர் நால்வரால் பாடல்பெற்ற‍ இவ்வாலயம் மேல சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு நடராஜப்பெருமான் ஆனந்த தாண்டவம் ஆடியபோது அவர் காலில் அணிந்திருந்த சிலம்பு தெறித்து சிதம்பரத்தில் விழுந்தது. இக்கோவிலில் இறவாத பனை, பிறவாத புளி, புழுக்காத சாணம், எலும்பு கல்லாவது, வலதுகாது மேல் நோக்கிய நிலையில் இறப்ப‍து. என ஐந்து அதிசயங்கள் உள்ளது.

  1. பல ஆண்டுகாலமாக இன்றும் பசுமை மாறாமல் இளமையாகவே ஒரு பனைமரம் நின்று கொண்டிருக்கிறது. இந்த மரத்திற்கு இறப்பென்று எப்போதுமே கிடையாது. இந்த பனை மரத்தின் பட்டையை இடித்துக் கஷாயம் போட்டுக் குடித்தால் தீராத வியாதியெல்லாம் தீரும் இது தான் இறவாத பனை.
  2. பிறவாதபுளி என்றுபோற்ற‍ப்படும் புளியமரம் இங்கு இருக்கிறது. இந்த புளியமரத்தின் கொட்டைகள் மீண்டும் முளைப்ப‍தேயில்லை. புளியம்பழத்தின் கொட்டைகளை மீண்டும் முளைக்க‍ வைப்ப‍தற்காக வெளிநாட்டிலிருந்து வந்த விஞ்ஞானிகள் பலரும் எவ்வ‍ளவோ முயற்சி செய்து பார்த்து விட்டார்கள். முளைக்க‍வே இல்லை. இந்த புளியமரம் இந்த பிறவி மட்டுமே என்று வரம் வாங்கி வந்துள்ள‍து. அதனால் பிறவாத புளி என்று பெயர் பெற்றது.
  3. கோவில் இருக்கின்ற பேரூர் எல்லைக் குட்பட்ட‍ பகுதிகளில் ஆடு, மாடு போன்ற கால் நடைகளின் சாணம் மண்ணில் கிடந்தால் எத்தனை நாட்கள் ஆனாலும் அவற்றிலிருந்து புழுக்க‍ள் உண்டாவதே இல்லை.
  4. இங்குள்ள‍வர்களில் யாரேனும் இறந்து விட்டால் அந்த உடலை எரித்த‍ப் பிறகு மிச்ச‍மாகும் எலும்புகளை இந்த ஆத்மா புண்ணியம் பெறவேண்டும் என்பதற்காக இங்குள்ள‍ நொய்யால் ஆற்றில் விடுவார்கள். ஆற்றில் விடப்படுகிற எலும்புகள் சிறிது காலத்தில் கற்களாக உருமாறி விடுகிறது.
  5. ஐந்தாவதாக பேரூர் எல்லைக்கு உட்பட்டு மரணமடையும் மனிதன் முதல் அனைத்து ஜீவராசிகளும் இறக்கும் தருவாயில் தமது வலது காதை மேல் நோக்கி வைத்த‍படிதான் மரணம் அடைகின்ற அதிசயம் இங்கு இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

இந்த அதிசயங்களை நடத்திக் கொண்டிருக்கின்ற பட்டீஸ்வரர் இங்கு அமைதியாகத்தான் காட்சித்தருகிறார். முன்பு இக்கோயில் இருந்த இடம் அரச மரங்கள் நிறைந்த காடாக இருந்தது. அப்போது பல பசுமாடுகள் இங்கு வந்து மேய்ந்து கொண்டிருக்கும். அதில் ஒரு மாடு மட்டும் அருகிலுள்ள‍ பாம்பு புற்றின் மீது பாலை சொறியும். இதைப்பார்த்த‍ ஒருவன் மற்ற‍வர்களிடம் சொல்ல‍ அவர்கள் அந்த இடத்தைத் தோண்டும் போது கிடைத்த‍வர் தான் பட்டீஸ்வரர். பட்டீஸ்ரர் தலையில் மாட்டின் கால் குளம்புகள் மூன்றும் கொம்பு முட்டிய தழும்பும் இருந்திருக்கின்றது.

ஒரு முறை மன்ன‍ன் திப்புசுல்தான் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று கோயிலுக்குத் திடீர் என்று வந்திருக்கின்றான். கோவில் அதிசயத்தையும் சிவலிங்கம் அடிக்க‍டி அசையும் என்றும் இங்குள்ளோர் சொல்லியிருக்கிறார்கள். இதை நம்பாமல் சிவலிங்கத்தின் மீது கை வைத்துப் பார்த்திருக்கிறான் மன்ன‍ன் திப்புசுல்தான். அப்போது அவன் உடலில் அதிர்வுகள் தோன்றியிருக்கின்றன. நெருப்பின் மீது கைகள் வைப்ப‍துபோல் உணர்ந்து துடித்திருக்கிறான். கண்கள் இருண்டு கீழே விழுந்தவன் சிறிது நேரத்திற்குப்பின் சுய நினைவு அடைந்த பின் தன் செயலுக்கு வருந்தி இறைவனை தொழுது பட்டீஸ்வரரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டியிருக்கின்றான். கோயிலுக்கு நிலங்களை மானியமாக தந்திருக்கிறான். ஹதர் அலியும் நிலங்களை மானியங்களாக தந்திருப்ப‍தாக கல்வெட்டுகளில் செய்திகள் காணப்படுகின்றன.

திருவாலங்காடு வடஆரண்யேஸ்வரர் கோவிலில் அருளும் நடராஜர்.

சிவாலய கோவிலுக்குள் மன்னன் சென்றான். அங்கிருந்த நடராஜ பெருமானை வணங்கும் போது தியான ஸ்லோகம் ஒலிப்பதைக் கேட்ட அவன் மனம் அதனுள் ஒன்றி லயித்தது. கோவிலிருந்து அரச சபைக்குத் திரும்பிய மன்னன் திறமைசாலிகளான சிற்பிகள் அனைவரையும் அவைக்கு வரவழைத்தான். அவர்களிடம் கோயிலில் கேட்ட தியான ஸ்லோகத்தைச் சொல்லி இந்த ஸ்லோகத்திலுள்ள அமைப்புப்படி நடராஜ பெருமான் திருவருவத்தை பஞ்சலோகத்தில் வாா்க்க வேண்டுமென கூறினான்.

இதைக் கேட்ட சிற்பிகள் மன்னா இந்த ஸ்லோகத்தில் குறுக்கும் நெடுக்குமாக கீழும் மேலுமாக திருக்கரங்கள் திருவடிகள் இருப்பதாக கூறி இருக்கிறது. இந்த ஸ்லோகப்படி திருவுருவம் பதிய அவ்விடங்களில் உருக்குநீா் பாயாது. ஆகையால் தாங்கள் சொல்லும் ஸ்லோகப்படி நடராஜ திருவுருவை பஞ்சலோகத்தில் வாா்க்க இயலாது என்றாா்கள். வந்திருந்த அனைத்துச் சிற்பிகளும் அவையை விட்டு சென்றுவிட கடைசியாளாக வந்த சிற்பி மன்னா உங்கள் உள்ளத்தில் நடராஜ திருவுருவம் தோற்றுவித்தது இறைவன் திருவிளையாடலாக இருக்கும். நாம் அனைவரும் முயற்சி செய்தால் நிச்சயமாக அந்த திருவுருவை உருவாக்க முடியும். நான் திருவுருவை வாா்க்க ஆவலாக இருக்கிறேன் என்றான்.

அரசா் பூாித்து சிற்பியின் அறிவுறைப்படி ஓராண்டு காலம் கோவிலில் விசேஷ பூஜைகள், ஜபங்கள், தர்ப்பண ஹோமங்கள் நடந்தது. ஓராண்டு காலம் முடிந்த பிறகும் பஞ்சலோகக் குழம்பைக் கொண்டு நடராஜரின் திருவுருவை அச்சிற்பியின் முயற்சியினால் செய்ய முடியவில்லை. இருப்பினும் சிற்பியும் அரசனும் முயற்சியைக் கைவிடாமல் மனம் தளராமல் ஆகம நியதிகளைக் கடைபிடித்து ஓராண்டுக்கு மேல் பல மாதங்கள் தொடா்ந்து முயற்சித்துக் கொண்டேயிருந்தனா். திருவுருவம் உருவாகவில்லை தோல்விதான் தொடா்ந்தது. சிற்பி மனம் கலங்கி ஈசனை நினைந்து உருகினாா். சிற்பி வாா்ப்பகத்துக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை விட சற்று கூடுதலான நேரத்தை தியானத்திலும் தவம் செய்தும் கழித்தாா்.

ஒரு நாள் சிற்பியின் கனவில் ஈசன் திருநடனமாடி காட்சியருளி இம்முறை முயற்சி செய் மன்னன் எண்ணம் நிறைவேறும் என்றாா். கனவு கலைய காலை விடிந்திருந்தது. வழக்கம் போல் எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டே இருந்தது. ஈசனை நினைத்து பஞ்சலோக குழம்பை வாா்க்கத் துவங்கினாா். பஞ்சலோகம் உருக்கி வரும் இடத்திலிருந்து ஒருவா் மாற்றி ஒருவா் கைமாறி வாா்க்குழம்பு கொடுத்தனுப்ப வாிசையாக நின்று வாா்க்குழம்பை வாங்கிக் கொடுப்பவரிடமிருந்து சிற்பி பஞ்சலோக குழம்பைப் பெற்று பதம் தவறாமல் பக்குவமாக வாா்ப்படத்தில் ஊற்றிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஒரு முதியவரொருவா் ஓடி வந்து வாிசையில் நின்று பஞ்சலோகக் குழம்பை வாங்கிக் கைமாற்றிக் கொடுக்கும் பணியாளரிடம் குழம்பை வாங்கி குடித்து விட்டாா். இதனை பார்த்த அனைவரும் ஸ்தப்பித்து நின்றனா். சிற்பியும் மன்னரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

பஞ்சலோகக் குழம்பைக் குடித்தவா் அரசனையும் சிற்பியையும் பாா்த்து கை செய்கையின் மூலம் வாா்ப்படத்தைப் பிரிக்கச் சொன்னார். சிற்பி வாா்ப்படத்தை பிாித்ததும் நடராஜ பெருமான் திருவுரு முழுமை பெற்றிருந்தது. நடராஜா் முழு உருவமாய் சிரித்தார். சிற்பியும் மன்னரும் முதியவரை தேட அங்கே முதியவரில்லை. ஈசனே உருவாக்கிய இந்த அபூா்வமான அதிசயமான அற்புதத் திருவுருவம் ஊா்த்துவ தாண்டவ ரத்தின சபாபதி என்னும் பெயரோடு திருவாலங்காட்டில் தரிசனம் தந்து அருள் புரிகிறார்.

No photo description available.

திருச்செந்தூர் தலபுராணம்

திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலில் இருக்கும் மடப்பள்ளியில் நைவேத்தியம் தயாரிப்பதற்கு முதியவர் ஒருவரை ஆலயத்தார் அமர்த்தியிருந்தார்கள். அவர் முருகன் மீது அதிதீவிரமான பக்தியைக் கொண்டிருந்தார். நைவேத்தியத்திற்குண்டான நேரத்திற்கு வயோதிகத்தின் காரணமாய் சரியான நேரத்திற்கு இவரால் நைவேத்ய உணவு தயாரித்துக் கொடுக்க முடியவில்லை. இதனால் ஆலய அர்ச்சகர்கள் பலமுறை அவரிடம் கோபம் கொண்டு ஏசினர். முதியவர் முருகனிடம் தன் நிலை குறித்து புலம்பி அழுதார். ஒரு நாள் அவர் மிகவும் தாமதமாக உணவு சமைத்துக் கொடுக்கவே ஒரு அர்ச்சகர் கோபத்தில் அவரை கடுமையாகத் திட்டி விட்டார். இதனால் மனம் வருந்திய முதியவர் தன் உயிரை மாய்த்து விடுவதே சரி என்றெண்ணி கடலுக்குள் இறங்கினார். அவர் கடலினுள் செல்ல செல்ல நீர்மட்டம் கூடுதலாகாமல் அவரது முழங்கால் வரை மட்டுமே இருந்தது. அவரும் ஆழத்தை எதிர்பார்த்து சற்று தொலைவிற்கு நடந்து போனார். அப்போதும் முழங்காலுக்கு மேல் கடல்நீர் உயராமல் இருந்தது.

இன்னும் கொஞ்ச தூரம் செல்லலாம் என்று அவர் செல்லவும் நில்லுங்கள் என குரல் கேட்க சமுத்திரத்தில் நின்றவாறு திரும்பிப் பார்த்தார். கரையில் ஒரு சிறுவன் நின்று கொண்டிருந்தான். அவன் முதியவரிடம் முதலில் கரைக்கு திரும்பி வாருங்கள் என அழைத்தான். அவரும் திரும்பி வந்து அச்சிறுவன் முன்பு நின்றார். கடலில் மூழ்கி உயிரை விடும் அளவிற்கு உங்களுக்கு அப்படியென்ன கஷ்டம் வந்து விட்டது என்றான் அச்சிறுவன். முதியவர் அவனிடம் தன் கவலைகள் அனைத்தையும் சொல்லி அழுதார். இதற்காகவா உயிர் துறப்பார்கள் என்று சிறுவன் சிரித்தான். உங்களுக்கு வேறு பணி இருக்கும்போது எதற்காக மடப்பள்ளியில் வேலை பார்க்கிறீர்கள் என்றான். முதியவர் எனக்கு சமையலைத் தவிர வேறு பணி எதுவும் தெரியாது என வருத்தத்துடன் சொன்னார். நீங்கள் திருச்செந்தூரில் பல காலமாக இருக்கிறீர்களே இந்த தலத்தின் தல புராணத்தை எழுதினால் என்ன என்றான் சிறுவன். இந்த வார்த்தையைக் கேட்டதும் அதிர்ந்துவிட்டார் முதியவர். திருச்செந்தூர் தல புராணத்தை நான் எழுதுவதா பள்ளிக்கூடம் போகாத எனக்கு கல்வியறிவு கொஞ்சமும் கிடையாதே என்னால் இது எப்படி சாத்தியமாகும் என்றார். மனத்தால் நினைத்தால் இதெல்லாம் சாத்தியமாகும். மேலும் நீங்கள் தான் தலபுராணத்தை எழுத வேண்டும் என்று செந்திலாண்டவனும் விரும்புகிறான். இதோ அதற்கான ஊதியத்தை பிடியுங்கள் என்று ஒரு துணிமுடிப்பை அவர் கையில் வைத்தான். சிறுவனிடம் கைநீட்டி ஊதியத்தைப் பெற்றுக் கொண்டார் முதியவர். இனிமேல் நீங்கள் சமையல் பணியாளர் அல்ல இன்று முதல் வென்றிமாலை கவிராசர் என்று அழைக்கப்படுவீர்கள் என்று சொல்லிப் போய் மறைந்தான் அச்சிறுவன்.

முதியவர் ஒன்றும் புரியாமல் நின்றார். முதியவருக்கு குழப்பமாக இருந்தது. வந்த சிறுவன் முருகனோ தெளிச்சி அடைந்த முதியவர் கிருஷ்ண சாஸ்திரி என்பவரைப் போய் பார்த்தார். அவரிடம் செந்திலாண்டவன் தல புராணத்தைச் சொல்லும்படி விவரமாகக் கேட்டார். பின் அதனை நூலாக எழுதினார். அதனை அரங்கேற்றம் செய்ய அர்ச்சகர்களை நாடினார். முருகன் தனக்கு காட்சி தந்ததையும் அவர் சொல்லியபடி நூல் இயற்றியதையும் அர்ச்சர்களிடம் கூறினார். அங்கிருந்த அர்ச்சகர்கள் யாவரும் இதை நம்பவில்லை. மாறாக அவரைக் கேலி செய்து கோயிலிலிருந்து விரட்டி விட்டனர். கோயிலை விட்டு வெளியேறிய கவிராசர் மனம் குமுறி தான் இயற்றிய நூலை கடலில் வீசிவிட்டார். கடலில் விழுந்த நூல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு திருச்செந்தூரிலிருந்து அடுத்த கிராமத்துக் கடற்கரையில் கரை ஒதுங்கிக் கிடந்தது. அடுத்த ஊரில் அங்கு வசித்த வந்த அறிஞர் ஒருவர் காலாற கடற்கரையில் நடந்து வந்தபோது அவரின் கண்களில் இந்நூல் காணப்பட்டன. அதை எடுத்துப் பிரித்துப் படித்தார் வியப்படைந்து போனார். எவ்வளவு மகோத்மன்யமான இது கடலில் கிடந்து கசங்குகிறதே என்று அந்நூலை செந்திலாண்டவன் கோயிலுக்குள் கொண்டு சென்று அர்ச்சகர்கள் முன்பு படித்துக் காட்டினார். நூலின் முடிவில் நூலை எழுதியது வென்றிமாலை கவிராயர் என குறிப்பு இருந்ததைப் பார்த்து அர்ச்சகர்கள் அனைவரும் வியந்து போயினர். கவிராயரை தேடிக் கண்டு அழைத்து வந்தனர் அர்ச்சகர்கள். உங்களிடம் அவமதிப்புடன் நடந்து கொண்டதற்கு, முதலில் எங்களை பெருந்தன்மையுடன் மன்னிக்க வேண்டும் என கேட்டு தகுந்த மரியாதையையும் செய்தனர். பின்பு செந்திலாண்டவன் முன்னிலையில் தல புராண அரங்கேற்றம் சிறப்பாக நடந்தது. படிக்காதவரையும் பாவலராக்கினான் செந்திலாண்டவன் முருகன்.

வேந்தன்பட்டி நந்தீஸ்வரர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 90 வருடங்களாக வேப்பமரம் ஒன்று உள்ளது. இந்த வேப்பமரத்தின் அடியில் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றி உள்ளார். இந்த சுயம்பு நந்திக்கு வேப்பமரத்து நந்தி என்றும் பெயரிட்டு வழிபட்டு வருகின்றனர். இவர் தஞ்சாவூர் நந்தீஸ்வரரின் தம்பியாகக் கருதி தம்பி நந்தி என்றும் பக்தர்கள் பெயரிட்டு அழைக்கின்றனர். இந்த நந்தீஸ்வரருக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்யப்படும். அபிஷேக நெய்யை பிற உபயோகத்திற்காக இக்கோவிலில் பயன்படுத்துவதில்லை. அதை கோவில் வளாகத்திலுள்ள ஒரு கிணற்றில் கொட்டி விடுவார்கள். தற்போது இந்த கிணறு நெய் நிறைந்த நிலையில் இருக்கிறது. பொதுவாக நெய்யின் வாசனைக்கு ஈ, எறும்பு போன்ற உயிர்கள் வரும். ஆனால் இங்கு இருக்கும் நெய்யை ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை. நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கு நடுவே ஒரு சக்கரம் உள்ளது. இது இயற்கையாகவே அமைந்த அமைப்பு. நெய்க்கு ஈ எறும்புகள் வராத இந்த தன்மைக்கு இந்த சக்கரம்தான் ஆதார சக்தியாக அமைந்துள்ளது. இக்கோவிலில் சொக்கலிங்கேஸ்வரரும் மீனாட்சியம்மனும் அருள்பாலித்து வருகின்றனர்.

அமர்நாத் குகை கோயில்

அமர்நாத் குகை கோயில் 5,000 ஆண்டு பழமையானது, அமர்நாத் குகையின் உட்புறத்தில் சிவலிங்கம் ஒன்றின் பனிக்கட்டிச் சிலை அமைந்துள்ளது. இச்சிலை மே முதல் ஆகஸ்ட் வரையான காலங்களில் உருகி மீண்டும் சுயம்புவாக உருவாகிறது. இந்த லிங்கமானது சந்திரனின் வளர்பிறை நேரத்தில் வளர்ந்தும் தேய் பிறை காலத்தில் கரைந்தும் காலங்களுக்கு ஏற்ப உரு மாறுகிறது இக்குகை 3,888 மீட்டர் உயரத்தில் உள்ளது.

No photo description available.

பைஜிநாத் கோவில்

யோக யாத்ரா என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வு

1879 ஆம் ஆண்டு பிரிட்டனின் ஆட்சியின் கீழ் இந்திய இருந்தது. ஆங்கிலேய அதிகாரியான லெப்டினென்ட் கர்னல் மார்ட்டின் அகர் மால்வா ஆப்கானிஸ்த்தான் நாட்டிற்கு எதிரான போரில் படையை தலைமை ஏற்று வழி நடத்தி கொண்டிருந்தார். கர்னல் மால்வா தன் மனைவிக்கு தன் நலன் குறித்து கடிதங்கள் அனுப்புவது வழக்கம் ஆனால் இந்த போர் நீண்டு கொண்டு சென்றது மேலும் கர்னிலிடமிருந்து எந்த கடிதமும் அவரது மனைவிக்கு வரவில்லை. கர்னலின் மனைவி கடிதம் வராதது கண்டு துயருற்றார்.

ஒரு நாள் உலவ குதிரை சவாரி சென்றவளின் கண்களில் பைஜிநாத் கோவில் தென்பட்டது, அந்த கோவிலின் உள்ளிருந்து ஒலித்து கொண்டிருந்த சங்கொலியும் மந்திர ஒலிகளும் அவளை ஈர்க்க உள்ளே சென்று அங்கே பிரார்த்தனை புரிந்து கொண்டிருந்த வேதியர்களை கண்டாள். துயருற்ற முகத்தை கண்ட வேதியர்கள் காரணத்தை கேட்ட பிறகு வேதியர்கள் சிவபெருமான் பக்தர்களின் பிரார்த்தனைகளுக்கு செவிமடுத்து அருள் புரிபவர் எனவும் தன்னை அண்டியவர்களின் துயரங்களில் இருந்து மீட்பவர் என்றும் கூறி கர்னலின் மனைவிக்கு ஓம் நமசிவாய எனும் மந்திரத்தை தொடர்ந்து 11 நாட்கள் உச்சரித்து பிரார்த்தனை புரியுமாறு கூறுகின்றனர். கர்னலின் மனைவியும் தனது கணவன் எந்த துயருமின்றி வீடு திரும்பினால் பைஜிநாத் ஆலயத்தை புதுப்பித்துத் தருவதாக வேண்டி கொண்டு வீடு திரும்பினாள்.

ஓம் நமசிவாய மந்திரத்தை உச்சரிக்க தொடங்கி சரியாக பதினோராம் நாள் செய்தி கொண்டு வருபவர் கர்னலிடமிருந்து செய்தியை கொண்டு வருகிறார், அதில் எழுதி இருந்தது. போர்க்களத்தில் இருந்து தொடர்ச்சியாக உனக்கு நான் கடிதங்களை அனுப்பி கொண்டிருந்தேன் ஆனால் சட்டென ஒரு நாள் அனைத்து பக்கங்களில் இருந்தும் எதிரிகள் எங்களை சூழ்ந்து விட்டனர், நாங்கள் தப்பிச்செல்ல இயலாதவாறு சிக்கி கொண்டோம். நம்பிக்கையற்ற சூழலில் அங்கே சற்று நேரத்தில் ஒரு நீண்ட கேசமுடைய இந்திய துறவியை கண்டேன். அவரது கரங்களில் மூன்று முனைகளையுடைய கூறிய ஆயுதம் வைத்திருந்தார். மேலும் அவரது தோற்றம் மெய்சிலிர்க்கும் வண்ணமும் மேலும் அவர் தனது கையில் இருந்த அந்த ஆயுதத்தை கையாண்ட விதமும் மகத்தான விதமாக இருந்தது, இந்த சிறந்த மனிதனை கண்ட எதிரிகள் பின்வாங்கி ஓடிவிட்டனர். அந்த துறவியின் கருணையினால் தோல்வியை தழுவ வேண்டிய தருணம் நேர் எதிராக மாறி வெற்றியை பெற்றோம். இவைகள் எல்லாம் சாத்தியமானதன் கரணம் அவர் அணிந்திருந்த புலித்தோலும் கைகொண்டிருந்த மூன்று முனை உடைய கூறிய ஆயுதமே. அந்த உன்னத துறவி என்னிடம் கவலை கொள்ள வேண்டாம் என்றும் என் மனைவி பிரார்த்தனை மூலம் கேட்டுகொண்டதற்கு இணங்க காக்க வந்ததாகவும் கூறினார்.

இந்த கடிதத்தை வாசிக்கும் கணமே கர்னலின் மனைவி கண்களில் ஆனந்த கண்ணீர் வந்தன. அவரது இதயம் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தது, அவர் சிவபெருமானின் பாதங்களில் சரணடைந்தார். சில வாரங்களுக்கு பின் கர்னல் மார்ட்டின் திரும்பிய பின் அவரது நடந்தவற்றை விவரித்தார். கர்னல் மற்றும் அவர் மனைவியும் அது முதல் சிவ பக்தர்களாக விளங்கினர். 1883 ஆம் ஆண்டு கர்னல் மற்றும் அவர் மனைவி 16000 ரூபாய் ஆலயத்தை புதுப்பிக்க நன்கொடை கொடுத்தனர். இந்த செய்திகள் இன்றும் பைஜிநாத்தின் கோவில் கல்வெட்டுக்களில் உள்ளது.

மால்ஷேஜ் காட் ஸ்தலம்

கேதாரேஷ்வர் மகாராஷ்டிராவின் மால்ஷேஜ் காட் ஸ்தலத்தின் முக்கியமான வரலாற்று சின்னமான ஹரிஷ்சந்திரகட் கோட்டையிலுள்ள கேதாரேஷ்வர் குகையில் இந்த சிவலிங்கம் அமைந்துள்ளது. முழுவதுமாக நீரால் சூழப்பட்ட 5 அடி உயரமுள்ள இந்த லிங்கத்தை சுற்றி இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. அதோடு மிகப்பெரிய நீர் பிரவாகமே இங்கு ஓடும் என்பதால் மழைக்காலத்தில் இந்தக் குகையை அடைவது முடியாத காரியம். மேலும் சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் அமையப்பெற்றுள்ளன. இந்தத் தூண்கள் சத்ய யுகம், த்ரேத யுகம், த்வாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களை குறிப்பதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு யுகம் முடிவடையும் போதும் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போது 3 தூண்கள் இடிந்து விட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்துவிடும் என்று நம்பப்படுகிறது. அந்த நாளில் இந்த உலகமும் அழிந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.

No photo description available.