கஞ்சமலை சித்தேசுவரசாமி கோவில்

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். திருமூலரின் 7 சீடர்களில் ஒருவரான காலாங்கிநாதர் இங்கு சித்தேசுவரசாமியாக அருள்பாலிக்கிறார். கோயிலின் அலங்கார நுழைவு வாசலை கடந்ததும் விநாயகர் அருளுகிறார். இளம் யோகியின் உருவத்தில் சின்முத்திரையுடன் வீராசன நிலையில் காட்சயளிக்கிறார் சித்தேஸ்வர சுவாமி. இக்கோயிலில் காளியம்மன் செல்வ விநாயகர் சன்னதிகளும் அருகே சிறு குன்றில் ஞான சத்குரு பாலமுருகன் சன்னதியும் கஞ்சமலையின் மீது மேல்சித்தர் கன்னிமார் கோயிலும் உள்ளன. சித்தேசுவரர் கோவிலை சுற்றி 7 தீர்த்தக் குளங்கள் உள்ளன. கோவில் வளாகத்துக்குள் காந்த தீர்த்தக்குளம் உள்ளது. கோவிலுக்கு அருகில் பொன்னி என்கிற ஒரு ஓடை ஓடுகிறது. இதன் அருகில் தான் தீர்த்தக் குளங்கள் உள்ளன. கஞ்சமலையில் ஏராளமான மூலிகை செடிகள் உள்ளதால் மலைப் பகுதியில் இருந்து வரும் தண்ணீர் ஓடை வழியாக தீர்த்தக் குளங்களுக்கு வருகிறது. இதனால் மூலிகை கலந்த தண்ணீர் குளத்தில் நிறைகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் பக்திக்கு ஏற்ப சித்தேசுவரசாமி இந்த மூலிகைகளை காற்றில் பரவ விட்டும் குளத்து நீரின் வழியாகவும் மேலும் பல வகைகளின் வழியாகவும் தனது குரு திருமூலர் காட்டிய வழியில் நிவர்த்தி செய்து அருள் பாலிக்கிறார். திருமூலரின் சீடராக இந்த கஞ்சமலை காலாங்கிநாதர் விளங்குகிறார். இதனை திருமூலர் தனது திருமந்திர பாடல்கள் வழியாக உணர்த்துகிறார்.

பாடல் #69: பாயிரம் – குருபாரம்பரியம்

மந்திரம் பெற்ற வழிமுறை மாலாங்கன்
இந்திரன் சோமன் பிரமன் உருத்திரன்
கந்துருக் காலாங்கி கஞ்ச மலையனோடு
இந்த எழுவரும் என்வழி யாமே.

காலாங்கி என்ற இவரது பெயருக்கு பல பெயர் காரணங்கள் சொல்லப்படுகிறது. கால் + அடங்கி = காற்றினை உடலாகக் கொண்டு வாழ்ந்தவர். ஆகையால் காலாங்கி எனப் பெயர் பெற்றார். மேலும் அங்கி என்றால் ஆடை என்றும் அணிவது என்றும் பொருள். காலாங்கி என்றால் காலத்தையே ஆடையாக அணிந்தவர் என்று பொருள். திருமூலரை தனது குருவாக ஏற்றுக் கொண்டு அவர் காட்டிய பாதையில் சென்றார்.

முன் காலத்தில் கஞ்சமலை பகுதியில் அதிகமான மூலிகைகள் இருந்துள்ளன. கைலாயத்தில் இறைவனால் தனக்கு சொல்லப்பட்ட மூலிகைகள் இந்த மலையில் இருப்பதை அறிந்து கொண்ட 18 சித்தர்களில் ஒருவரும் 63 நாயன்மார்களில் ஒருவருமான திருமூலர் அதனைக் காண இந்த மலைக்கு வந்தார். இங்கு உள்ள மூலிகைகள் வயது மூப்பும் மரணமும் இல்லாத நன்மையை அளிக்கக் கூடிய மூலிகைகள் ஆகும். இவர் தனது முதன்மை சீடரான கஞ்சமலை காலாங்கிநாதரை தன்னுடன் அழைத்துச் சென்றார். திருமூலரும் காலாங்கிநாதரும் மலை அடிவார பகுதியில் சில காலம் தங்கியிருந்தார்கள். இறைவனால் தனக்கு சொல்லப்பட்ட மூலிகைகளை தனது சீடரான காலாங்கி நாதருக்கு காட்டி அதனைப் பற்றிய ரகசியங்களை சொல்லிக் கொடுத்தார். தனது குருவான திருமூலர் சொல்லிக் கொடுத்தபடி அதனைப் பயன் படுத்திய காலாங்கிநாதர் என்றும் அழியாத இளமைத் தோற்றத்தை பெற்றார். காலாங்கிநாதருக்கு அனைத்தையும் கற்றுக் கொடுத்தபின் அங்கிருந்து கிளம்ப திருமூலர் முடிவு செய்தார். அவருடன் காலாங்கி நாதரும் கிளம்ப தயாரானார். அப்போது திருமூலர் காலாங்கிநாதரிடம் நீ இங்கேயே இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று கூறி விட்டு சென்றார்.

குருவின் உத்தரவின் படி காலாங்கிநாதர் அங்கேயே இருக்க முடிவு செய்தார். வயதான தோற்றத்தில் இருந்த தான் இளம் வயதுக்கு உருமாறியதை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்று நினைத்து ஒரு நாடகத்தை அவர் அரங்கேற்றினார். அதன்படி அந்த பகுதியில் மாடு மேய்க்க வரும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடுவார். அப்போது ஒரு மாட்டின் பாலை மட்டும் தொடர்ந்து குடித்து வந்தார். பின்னர் தன்னுடன் விளையாடும் சிறுவர்களின் தலையில் ஒரு குட்டு வைத்து அனுப்பி விடுவார். இதனால் அவர்கள் நடந்ததை மறந்து வீட்டுக்கு சென்று விடுவார்கள். இந்த நிலையில் மேய்ச்சலுக்கு செல்லும் அனைத்து மாடுகளும் பால் அதிகமாக கறக்கும் போது ஒரு மாடு மட்டும் பால் தராதது மாட்டின் உரிமையாளருக்கு சந்தேகத்தை உண்டாக்கியது. எனவே சிறுவர்கள் மாடு மேய்க்க சென்ற போது அவர்களை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தார். அப்போது சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டு ஒரு குறிப்பிட்ட மாட்டில் மட்டும் பாலை காலாங்கி நாதர் குடிப்பதை உரிமையாளர் பார்த்தார். இதுபற்றி ஊருக்குள் சென்று கூறி பொதுமக்களை அழைத்து வந்து காலாங்கிநாதரை தேடும் போது அருகில் இருந்த சங்கு இலை செடி புதருக்குள் காலாங்கி நாதர் தவக் கோலத்தில் காட்சி அளித்தார். அங்கிருந்த மக்களின் நோய்களை அங்கிருந்த மூலிகைகளை வைத்து சில வினாடிகளில் தீர்த்து வைத்தார். இதை கண்ட மக்கள் அவரை வணங்கி அவரை சித்தர் என்று அழைத்தனர். பிறகு சித்தரேசாமி என அழைக்கத் தொடங்கி நாளடைவில் அவர் சித்தேசுவரசாமியாக மாறினார். அவர் தவக்கோலத்தில் காட்சி அளித்த இடத்தில் பிற்காலத்தில் கோவில் கட்டப்பட்டது. கோயிலில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் சித்திரை மாதம் 3 ஆவது செவ்வாய்க்கிழமை கோவிலில் திருவிழா நடைபெறுகிறது.

சுமார் 8000  ஆண்டுகள் பழமைவாய்ந்த இக்கோயிலின் சிறப்புகள் குறித்து சிறுபாணாற்றுப்படை, கொங்கு மண்டல சதகம், கரபுரநாதர் புராணம் போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கஞ்சமலை மிகுந்த மூலிகை வளம் கொண்டது. தங்கம் இரும்பு தாமிரம் ஆகியவற்றின் கலவை கஞ்சம். இங்கு உயர்தர இரும்பு படிவம் ஏராளமாக உள்ளது. எளிதில் துருப்பிடிக்காத கஞ்சமலை இரும்பைக் கொண்டுதான் மாவீரன் அலெக்ஸாண்டரின் வாள் செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. இங்குள்ள பொன்னி ஓடையில் கிடைத்த பொன்னைக் கொண்டு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு பொன் கூரை வேயப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கஞ்சமலையில் கருநெல்லி, கருநொச்சி, கரு ஊமத்தை, கருந்துளசி என பல்வேறு மூலிகைகள் உள்ளன. அதியமானால் அவ்வைக்குத் தரப்பட்ட அரிய கருநெல்லிக்கனி கஞ்சமலையில்தான் கிடைத்துள்ளது.

சித்தேஸ்வர சுவாமி கோயில் காலை 6.30 மணி முதல் மதியம் ஒரு மணி வரையிலும், மாலையில் 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் சித்தர்கோவில் அமைந்துள்ளது.

திரிசூலநாதர் கோயில்

மூலவர் திரிசூலநாதர் வேறு பெயர் திரிச்சுரமுடையார். உற்சவர் சந்திரசேகரர். அம்பாள் திரிபுரசுந்தரி. தல விருட்சம் மரமல்லி. தீர்த்தம் பிரம்ம தீர்த்தம். இத்தீர்த்தம் பிரம்ம தேவரால் உருவாக்கப்பட்டது. தீர்த்தம் கோயிலின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இந்த கிணற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரே இறைவனின் பூஜைகள் வழிபாட்டுக்கு பயன் படுத்தப் படுகிறது. ஆகமம் காரணாகமம். ஊர் திரிசூலம் சென்னை. புராண பெயர் திருச்சுரம். இந்த திருத்தலத்துக்கு பல்லவபுரமான வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்றும் பழைய பெயர் உண்டு. இந்த பல்லவபுரம்தான் மருவி அருகில் உள்ள பல்லாவரம் பகுதி ஆனது. இதன் அடிப்படையில் முற்காலத்தில் பல்லவ மன்னர் ஒருவர் இங்கு முதலில் கோயில் கட்டியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இதனை இப்பகுதியில் கடந்த 1901 ஆம் ஆண்டு தொல்பொருள் துறையினர் நடத்திய ஆய்வில் கிடைத்த 14 கல்வெட்டுகளில் மிகப் பழைமையான முதலாம் குலோத்துங்க சோழன் (கிபி 1070 – 1120) காலத்திய கல்வெட்டு உறுதி செய்கிறது. பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த இக்கோயிலுக்கு கடந்த 1960 ஆம் ஆண்டு கவியோகி சுத்தானந்த பாரதியார் உள்ளிட்ட பெரியோர் அடங்கிய குழுவினரால் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோயில் சென்னை விமான நிலையம் அருகே உள்ள திரிசூலத்தில் நான்கு மலைக் குன்றுகளுக்கு நடுவே உள்ளது. இந்த நான்கு மலைகளும் நான்கு வேதங்களாகக் கருதப்படுகின்றன. வேதத்தின் உட்பொருளாக அதன் நடுவே சிவபெருமான் கோயில் கொண்டுள்ளார். இந்த சிவ ஸ்தலத்தை தனது ஆணவம் அடங்கும் பொருட்டு பிரம்மா நிர்மாணித்து வழிபட்டதாக புராண வரலாறு கூறுகிறது. ஆகையால் இந்த ஸ்தலத்துக்கு பிரம்மபுரி என்றும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர் என்றும் வழங்கப்படுகிறார். பிரம்மா தனது படைத்தல் பணி சிறப்பாக நடப்பதற்காக லிங்க பிரதிஷ்டை செய்து நான்கு வேதங்களையும் சுற்றிலும் வைத்து பூஜை செய்தார். சிவபெருமானும் அவ்வாறே அவருக்கு அருள் செய்தார். லிங்கத்தைச் சுற்றியிருந்த நான்கு வேதங்களும் மலைகளாக மாறின. மலைகளுக்கு இடைப்பட்ட பகுதியை சுரம் என்பர். எனவே சிவன் திருச்சுரமுடைய நாயனார் என்றழைக்கப்பட்டு பிற்காலத்தில் திரிசூலநாதர் என்று அழைக்கப்படுகிறார்.

மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்டம் எனப்படுகிறது. பிரகாரத்தில் விநாயகர் சீனிவாசப் பெருமாள் காட்சி தருகின்றனர். வைகுண்ட ஏகாதசியின் போது சீனிவாசர் முத்தங்கி சேவையில் காட்சி தருவார். தனி சன்னதியிலுள்ள மார்க்கண்டேஸ்வரர் சோடச லிங்க (பதினாறு பட்டை லிங்கம்) வடிவில் காட்சி தருகிறார். காசி விஸ்வநாதர் விசாலாட்சி மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகன் மற்றும் ஐயப்பன் ஆதிசங்கரர் சன்னதிகளும் உள்ளன. கஜபிருஷ்ட விமானத்துடன் அமைந்த சன்னதிக்குள் சிவன் அருகில் சொர்ணாம்பிகை அருள்கிறார்கள். திரிசூலநாதர் கருவறையில் சொர்ணாம்பிகை எழுந்தருளி இருப்பதற்கு ஒரு வரலாறு உண்டு. ஆரம்பத்தில் பிரதான அம்பிகையாக இருந்த சொர்ணாம்பிகை அந்நியர் படையெடுப்பின் போது வலது கையில் கட்டை விரல் சேதமடைந்தது. அதனால் பின்னப்பட்ட சிலையை வழிபடக் கூடாது என்று கூறி தனியே வைத்து விட்டார்கள். அப்போது அர்ச்சகரின் கனவில் வந்து தனது பின்னத்தை சரி செய்து மீண்டும் திரிசூலநாதரின் அருகே வைக்குமாறு அம்பாள் அருள் கூற அதன்படி சிலையின் பின்னப்பட்ட விரலுக்கு பதிலாக தங்கத்தில் விரல் செய்து பின்னர் திரிசூலநாதரின் அருகிலேயே சொர்ணாம்பிகையை பிரதிஷ்டை செய்தார்கள். திரிசூலநாதரின் அருகே இடது புறத்தில் அவரை பார்த்தபடி நின்றபடி இருக்கிறார் சௌந்தராம்பிகை. இதனால் நேர்பார்வையில் சௌந்தராம்பிகையை தரிசிக்க முடியாது. அன்னையை முழுமையாக தரிசிக்க வேண்டும் என்றால் ஆண்கள் மேல்சட்டையின்றி கருவறைக்கு முன் உள்ள அறைக்குள் அனுமதி பெற்று நுழைந்தால் அன்னையின் தரிசனத்தை பெறலாம்.

பிரதான அம்பிகை திரிபுரசுந்தரி தனி சன்னதியில் காட்சி தருகிறாள். அம்பாளின் திருக்கரங்களில் அட்சத மாலையும் தாமரைப் பூவும் திகழ்கின்றன. இதன் மூலம் ஞானத்தையும் செல்வத்தையும் ஒருசேர அருள் பிரசாதமாகத் தருகிறாள் அன்னை திரிபுரசுந்தரி. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் திரிபுரசுந்தரி அம்மன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரிபுரசுந்தரிக்கு வெள்ளிக் கிழமைகளில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. கருவறைச் சுற்று மாடத்தின் மேல் பகுதிச் சுற்றில் பூத கண வரிசையும் அவற்றின் நடுவே சிவலிங்கத்தை பிரம்மன் வழிபடுதல், கண்ணப்ப நாயனார் பக்தி, சிவலிங்கத்தை அனுமார் வழிபடுதல், லிங்கத்தின் மேல் பால் சொரியும் பசுவின் சிற்பங்கள் போன்றவை செதுக்கப்பட்டுள்ளன. கருவறையை சுற்றியுள்ள தேவகோட்டங்களுக்கு மேலே மகரதோரண சிற்பங்களிலும் வாலி சுக்ரீவன் யுத்தம் போன்ற புராணக் கதைகளும் சோமாஸ்கந்தர் ரிஷபாரூட மூர்த்தி போன்ற இறை வடிவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. முன்மண்டபத் தூண்களிலும் காலசம்ஹார மூர்த்தி இருமுகம் கொண்ட சரபேஸ்வரர் காமாட்சி அம்மன் தவம் காளிங்க நர்த்தனம் உள்ளிட்ட அற்புத சிற்பங்களைக் காணலாம்.

கருவறைச் சுற்றுப் பிரகாரத்தில் தனி சந்நிதியில் எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணியரிடமும் தனிச் சிறப்புகள் உள்ளன. வழக்கமாக முருகனின் வாகனமான மயில் வலப்புறம் நோக்கி இருக்கும். ஆனால் இங்கு இடப்புறத்தை நோக்கியுள்ளது. அதோடு ஒரு காலை சற்றே தூக்கி பறக்கத் தயாராகும் நிலையிலும் காணப்படுகிறது. சிவன் கோஷ்டத்திலுள்ள விநாயகர் நாக யக்ஞோபவீத கணபதி என்றழைக்கப்படுகிறார். உடலிலுள்ள ஆறு ஆதாரங்களில் மூலாதார சக்தியான குண்டலினி நாக வடிவில் இருக்கிறது. இவரது சிலை சுவரைக் குடைந்து உருவாக்கப்பட்டிருக்கிறது. சிவன் சன்னதி கோஷ்டத்தில் வீராசன தட்சிணாமூர்த்தி ஒரு காலை மடித்தும் மற்றொரு காலை தொங்கவிட்டும் இருக்கும் தட்சிணாமூர்த்தி இந்த சிற்பத்தில் வலது காலை முயலகன் மீது ஊன்றி தனது இடது காலை குத்திட்டு அமர்ந்திருக்கிறார். இக்கோலத்திற்கு வீராசன தட்சிணாமூர்த்தி என்று பெயர். வலது செவியில் மகர குண்டலமும் இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து காட்சி தருகிறார். தட்சிணாமூர்த்திக்கு கீழே அமர்ந்துள்ள சீடர்கள் வழக்கமான அஞ்சலி முத்திரையுடன் அமர்ந்திருப்பார்கள். இந்த சிற்பத்தில் சின்முத்திரை காட்டியபடி இருக்கின்றனர். நரசிம்மரின் உக்கிரம் தணிக்க வந்த சரபேஸ்வரர் தன் சுயரூபத்துடன் ஒரு தூணில் காட்சி தருகிறார். சரபேஸ்வரருக்கு சரபம் என்ற பறவையின் இறக்கை இருக்கும். ஆனால் இங்கே இறக்கை இல்லை. இரண்டு முகங்கள் இரு கைகளில் மான் மழு ஏந்தியுள்ளார். மற்ற இரு கைகளாலும் நரசிம்மரை பிடித்த கோலத்தில் உள்ளார். இத்தகைய அமைப்பில் சரபேஸ்வரர் வேறு எங்கும் இல்லை.

நவராத்திரி விழாவின் போது விசேஷ ஹோமம் மற்றும் 18 சுமங்கலிகள் 18 குழந்தைகளை வைத்து சுமங்கலி கன்யா பூஜைகள் நடத்தப்படும். தை ஆடி வெள்ளி நாட்களில் பூப்பாவாடை என்னும் வைபவமும் நடக்கிறது. இக்கோயிலுக்கு திருப்பணி செய்து 41 வேலி நிலங்களை தேவதானமாக வழங்கிய பிற்காலச் சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் இந்த ஊரின் பழைய பெயராகிய வானவன் மாதேவி சதுர்வேதி மங்கலம் என்பதனை தனது பெயரில் திருநீற்றுச் சோழநல்லூர் என்று மாற்றி ஆணையிட்டதாக இங்கு கிடைத்த கல்வெட்டு கூறுகிறது. பல சோழமன்னர்கள் இவ்வாலயத்துக்கு திருப்பணிகள் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறியமுடிகிறது. இவ்வூர் ஜயங்கொண்ட சோழ மண்டலத்துப் புலியூர் கோட்டத்து குலோத்துங்க சோழ வளநாட்டு சாத்தூர் நாட்டு திருச்சுரம் என்று இருந்ததையும் அறிந்து கொள்ளலாம். சுரம் என்றால் வளம் நிறைந்த மலை என்று பொருள். இந்த மலையில் இறைவன் வீற்றிருப்பதால் இறைவனுக்கு திருச்சுரமுடையார் என்றும் பெயர். இந்த திருச்சுரம் என்பது மருவி பின்னர் திரிசூலம் என்று மருவி விட்டது.

துர்கை

ரங் மகால்

உத்திரபிரதேச மாநிலத்தில் மதுரா மாவட்டத்தில் பிருந்தாவனம் என்ற ஊர் உள்ளது. இந்த ஊருக்கு விருந்தாவன் என்ற வேறு பெயரும் உள்ளது. இந்த இடம் மகாபாரதத்தில் கிருஷ்ணர் தனது குழந்தை பருவத்தில் ஆடி பாடி விளையாடிய இடம் ஆகும். இந்த இடத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான கிருஷ்ணர் ராதை கோவில்கள் உள்ளன. இக்கோயில்களில் பங்கே பிகாரி கோயிலும் ரங் மகாலும் முக்கிய இடமாகும். புராண காலக் கோயிலான இக்கோயில் 1864 ஆம் ஆண்டில் மறுசீரமைத்து கட்டப்பட்டது. மூலவர் ராதா கிருஷ்ணன். கிருஷ்ணரால் உருவாக்கப்பட்ட லலிதா என்று அழைக்கப்படும் குளம் கோயிலில் உள்ளது.

துறவி ஹரிதாஸ் என்பவர் கிருஷ்ணர் கோபியர்களுடன் நடனமாடும் காட்சியை காண வேண்டும் என்று கடுமையான தவத்தை செய்தார். அவரது தவத்தின் பலனாக கிருஷ்ணர் ராதை கோபியர்களுடன் நடனமாடியபடி காட்சி கொடுத்தார். கிருஷ்ணரிடம் இங்கேயே இருந்து தங்களைக் காணவரும் அனைவருக்கும் இக்கட்சியை கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார் துறவி ஹரிதாஸ். அவரது வேண்டுகோலை ஏற்றுக் கொண்ட கிருஷ்ணர் ஆணவம் அகங்காரம் இல்லாமல் தன்னை காண வரும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பேன் என்று அவருக்கு அருளினார். அதன்படி இன்னும் தகுதி உடையவர்களுக்கு காட்சி கொடுத்துக் கொண்டிருக்கிறார். பின்னாளில் அவரை வழிபட வேண்டி பக்கதர்ளுக்காக கிருஷ்ணரின் சிலை உருவாக்கப்பட்டடு ஒரு தனி சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் உருவாக்கப்பட்டது. இக்கோயில் அரண்மனை போல் பிரம்மாண்டமாக உள்ளது.

இக்கோயில் உள்ள நிதிவன காட்டுப்பகுதி மிகவும் வறட்சியான பகுதியாகும். இந்த வனத்தில் நீரை பார்ப்பதே மிகவும் அரிதாகும். நீர் இல்லாத நிலையில் இங்குள்ள மரங்கள் அனைத்தும் எப்பொழுதும் செழிப்பாகவே காணப்படுகிறது. பங்கே பிகாரி என்றால் வளைந்து மகிழ்பவர் என்று பொருள். பெயருக்கு ஏற்றார்போல் இந்த காட்டில் இருக்கும் அனைத்து மரங்களும் நேராக வளராமல் கிருஷ்ணருக்கும் ராதைக்கும் மரியாதை செலுத்தும் விதமாக தரையை நோக்கியபடி வளைந்தே காணப்படுகிறது. இந்த காட்டை சுற்றி துளசி செடிகள் மிகுந்து காணப்படுகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் ஜோடி ஜோடியாகவே வளர்ந்து வருகிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் உயரம் குறைவாகவே வளர்கிறது. இந்த துளசி செடிகள் அனைத்தும் கிருஷ்ணருடன் சிறுவயதில் வாழ்ந்த கோபியர்கள் என புராண வரலாறு சொல்கிறது. இந்த கோவிலில் சந்தன மரத்தால் செய்யப்பட்ட கட்டில் உள்ளது. கட்டிலுக்கு அருகில் இரவு உணவாக ஒரு கலசத்தில் நீரும் இனிப்பும் வைக்கப்படுகிறது. உணவிற்குப் பின் கிருஷ்ணர் போட்டுக் கொள்ள வெற்றிலை பாக்கும் ஒவ்வொரு இரவும் வைக்கப்படுகிறது. காலையில் எழுந்ததும் கிருஷ்ணர் பல் துலக்குவதற்காக வேப்பங்குச்சியும் வைக்கப்படுகிறது. அர்ச்சகர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பிறகு ரங் மஹால் மற்றும் நிதிவனின் பிரதான கதவுகள் வெளியில் இருந்து பூட்டப்பட்டு காலையில் மட்டுமே திறக்கப்படும். தினமும் காலையில் பார்க்கும் போது கட்டில் படுக்கையில் யாரோ தூங்கியது போல ஒழுங்கற்றதாக கலைந்து கிடக்கும். இனிப்புகள் மற்றும் வெற்றிலைகள் யாரோ ஓரளவு சாப்பிட்டது போலவும் வேப்ப மரக் குச்சிகள் பயன்படுத்தப்பட்டது போலவும் இருக்கும்.

கோயிலில் இரவு 7 மணி பூஜைக்கு பிறகு பக்தர்கள் பூஜை செய்பவர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்த காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி விடுகின்றனர். இப்பகுதியில் ஏராளமான குரங்குகள் மற்றும் மயில்கள் வசிக்கின்றன. பகலில் இந்த காட்டுப் பகுதியில் காணப்படும் விலங்குகளும் பறவைகளும் கூட இரவு வேளையில் மட்டும் இந்த காட்டுப் பகுதியை விட்டு வெளியேறி விடுகிறது. ஒவ்வொரு நாளும் காலையில் இந்த கோயிலை திறந்து பார்க்கும் போது கட்டிலில் உள்ள துணிகள் கலைந்து காணப்படுகிறது. தண்ணீரும் உணவுகளும் உண்ணப்பட்டு காணப்படுவதும் இன்றுவரை நடந்து வருகிறது. இரவில் கிருஷ்ணரும் ராதையும் இந்த கோவிலுக்கு வருவதாகவும் அப்பொழுது இந்த கோவிலை சுற்றி வளர்ந்திருக்கும் துளசி செடிகள் கோபியர்களாக மாறி கிருஷ்ணருடன் ஆடி பாடுவதாகவும் கருதப்படுகிறது. பல காலங்களாக இந்த காட்டிற்குள் இரவு நேரங்களில் மக்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

இக்கோயிலுக்குள் இரவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அத்துமீறி நுழைய முயற்சித்த பலருக்கு கண் பார்வை போயிருக்கிறது. பலர் மன நிலை பாதித்திருக்கிறார்கள். இக்கோயில் இருக்கும் காட்டின் எல்லையில் சில வீடுகள் உள்ளது. இவர்கள் இரவில் தங்கள் வீட்டில் உள்ள ஜன்னல்களை மூடி விடுகிறார்கள். பலர் வீடுகளுக்கு ஜன்னலே இல்லாமல் கட்டிருக்கிறார்கள். இக்காட்டில் எல்லையில் வசிப்பவர்கள் இக்காட்டில் இருந்து இரவு நேரத்தில் நடனமாடும் சத்தம் கேட்பதாக கூறுகிறார்கள்.

பனசங்கரி

பனசங்கரி கோயில் பெங்களூரில் எஸ். கரியப்பா சாலையில் அமைந்துள்ளது. 20 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தக் கோயில் 106 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. மூலவர் பனசங்கரி தேவி. ஆஞ்சநேய சுவாமி சிலை உள்ளது. கோவிலின் சுவர்கள் மற்றும் தூண்களில் சிற்பங்கள் உள்ளன. கோயிலில் கிணறு ஒன்று உள்ளது. மழை இல்லாத பஞ்ச காலத்தில் கூட இக்கிணற்றில் நீர் வற்றியது இல்லை. இந்த கிணற்றின் நீரைக் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.

பசப்பா ஷெட்டர் என்பவரின் குல தெய்வம் பதாமி குகைக் கோயிலில் உள்ள பனசங்கரி ஆகும். ஒவ்வொரு வருடமும் அங்கு சென்று குலதெய்வத்தை தரிசித்து வந்த பசப்ப ஷெட்டரி ஒரு வருடம் உடல் நலக்குறைவால் குலதெய்வத்தை தரிசிக்க முடியாமல் போனது. இதனால் வருத்தமடைந்த அவர் பாதாமி பனசங்கரி தேவியை மனதார வேண்டிக் கொண்டார். அன்று இரவு ​​பசப்ப ஷெட்டரின் கனவில் தோன்றிய பனசங்கரி பாதாமி பனசங்கரி கோயிலுக்கு வருமாறும் அங்கு அவருக்கு ஒரு பனசங்கரியின் சிலை கிடைக்கும் என்றும் அதனை வைத்து கோயில் எழுப்புமாறு அருள்பாலித்தாள். அதன்படி பாதாமி கோயிலுக்குச் சென்ற பசப்ப ஷெட்டா அங்கு கோயில் அர்ச்சகர் கொடுத்த பனசங்கரி தேவியின் சிலையைக் கொண்டு வந்து தற்போது கோயில் இருக்கும் இடத்தில் வைத்து வழிபட்டார். பின்னர் அதே இடத்தில் ஸ்ரீ பசப்ப ஷெட்டர் அவரது மகன்கள் சோமன்ஷெட்டி பலருடன் இணைந்து 21-05-1915 அன்று இந்தக் கோயிலைக் கட்டி சக்தி ஸ்வரூபினி தேவி மற்றும் சிம்மவாஹினி பனசங்கரி தேவியை பிரதிஷ்டை செய்தனர்.

ராகுகால பூஜைக்கு பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஞாயிறு செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் பக்தர்களால் அம்மனுக்கு எலுமிச்சம்பழத்தில் தீபம் ஏற்றி வழிபடப்படுகிறது. இக்கோயிலில் பௌர்ணமி அன்று ஜாத்ரா மஹோத்ஸவம் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் பாத்ரபத பௌர்ணமி தினத்தில் அம்மனின் பிறப்பு விழா நடைபெறும். நவராத்திரியின் போது அம்மனுக்கு சிறப்பு பூஜை அலங்காரம் ஹோமங்கள் நடத்தப்படுகின்றன.

மாசாணி அம்மன்

பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலைக்கு அருகில் மாசாணி அம்மன் கோயில் உள்ளது. ஆழியார் ஆறு மற்றும் உப்பர் ஓடை சங்கமிக்கும் இடத்தில் இக்கோயில் உள்ளது. கோயில்களில் அம்மன் அமர்ந்த கோலத்திலோ அல்லது நின்ற கோலத்திலோ அருள்பாலிப்பார்கள். இக்கோயிலில் மாசாணியம்மன் 17 அடி நீளத்தில் நெற்றியில் பெரிய பொட்டுடன் படுத்த நிலையில் அருள்பாலிக்கிறார். இவளது காலடியில் ஒரு அரக்கன் இருக்கிறான். அம்மனுக்கு மயான அம்மன் என்ற வேறு பெயரும் உள்ளது. நான்கு கைகளில் ஒரு கையில் பாம்பு ஒரு கையில் நெருப்புக் கிண்ணம் ஒரு கையில் குங்குமம் அடங்கிய கிண்ணம் மற்றும் திரிசூலம் ஆகியவற்றைப் பிடித்திருக்கிறாள். பலரால் குடும்ப குல தெய்வமாக வணங்கப்படுகிறாள். மாசாணி அம்மன் ஆதி பராசக்தியின் அவதாரமாக கருதப்படுகிறாள். நீதி கல் மற்றும் மகாமுனியப்பன் ஆகிய இரண்டு தெய்வங்கள் சன்னதி கோயிலுக்கு உள்ளேயே உள்ளது. இத்தலத்திற்கு மூன்று வகையான புராண வரலாறுகள் சொல்லப்படுகிறது.

அம்மனை தொழுபவர்களுக்கு பில்லி சூனியம் மாதவிடாய்க் கோளாறு பேய் பிசாசு முதலிய பிடித்திருப்பவர்கள் ஒருமுறை மாசாணியம்மன் கோயில் சென்று வணங்கிவிட்டு வந்தால் அத்தனை பீடைகளும் நோய்களும் துன்பங்களும் நீங்கும் என்றும் மாசாணி அம்மன் வரலாறு கூறுகிறது. மேலும் பொன் பொருள் நகை போன்றவற்றை திருடிச் சென்றோ இல்லை பணம் வாங்கிக்கொண்டு இல்லை என்று கூறுபவர்களுக்கோ உள்ள ஆட்டுக் கல்லில் மிளகாயை அரைத்து வைத்து மூன்று மாதம் வரை காத்திருந்தால் எடுத்தவர்கள் பணத்தை திருப்பிக் கொண்டுவந்து கொடுத்து விடுவார்கள். துரோகம் செய்தவர்கள் வந்து மன்னிப்பு கேட்டு விடுவார்கள். அவ்வாறு கேட்கவில்லை என்றால் அவர்கள் உடல்  மிளகாய் தேய்த்தது போல்  எரியும் என்ற நம்பிக்கை உள்ளது. அவ்வாறே அவர்களது கோரிக்கை நிறைவேறியவுடன் அம்மனுக்கு மீண்டும் பாலபிஷேகம் இளநீர் போன்றவற்றை அபிஷேகம் செய்து அம்மனை குளிர்ச்சி செய்து வழிபடுகிறார்கள்.

முதல் வரலாறு

ராமாயண காலத்தில் கௌசிக மன்னராக இருந்து ரிஷியாக மாறிய விசுவாமித்திரர் தவம் செய்து பல வரங்களைப் பெற்றவர்.  தன் உடலையே  திரியாக்கி எரித்து காயத்ரி மந்திரத்தை போதித்தவர். இத்தகைய தவசீலர் ராஜரிஷி என்ற பட்டம் பெற்று விஸ்வாமித்திரர் என்ற பெயருடன் விளங்கினார். இவர் ஒரு முறை கனக மலையில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது தாடகை என்ற இராட்சசி அவரது தவத்திற்கு இடையூறு செய்தாள். தாடகை விரதம் இருந்து பல வரங்களையும் படை பலத்தையும் பெற்றவள். மேலும் ராவணனிடம் இருந்தும் பல சக்திகளைப் பெற்றவள். தாடகையை அழிக்க வேண்டும் என்று தசரதனின் மகன்கள் ராமர் லட்சுமணனை அழைத்துக் கொண்டு வந்தார் விசுவாமித்திரர். இவள் ஒரு பெண் இவளை எப்படி அழிப்பது என்று ராமர் யோசித்தார். இதனை அறிந்த விசுவாமித்திரர் இவள் பெண்ணே அல்ல. இவள் ஒரு ராட்சசி என்று கூறி அவளை வதம் செய்யுமாறு கூறினார். அவ்வாறு வதம் செய்வதற்கு முன்பு ராமர் ஈஸ்வரியை நோக்கி தவம் செய்தார். ஈஸ்வரியும் ராமருக்கு முன் தோன்றி தாடகையை எவ்வாறு வதம் செய்ய வேண்டும் என்ற சூட்சுமங்களை கூறினார். அதன்படி மண்ணால் ஈஸ்வரி ரூபத்தை உருவாக்கி வழிபட்டு பின் மண்ணினால் செய்யப்பட்ட விக்கிரகத்தை அழித்து விட்டு பிறகு தாடகையை வதம் செய்யுமாறு கூறினார். அதேபோல் ராமரும் ஈஸ்வரியை மண்ணால் உருவாக்கி பூஜை செய்து தாடகையை வதம் செய்யச் சென்றார். அந்த நேரத்தில் மண்ணால் செய்த ஈஸ்வரியை அழிக்க மறந்தார். தாடகையை வதம் செய்தபின் ஞாபகம் வந்து அதை அழிக்க முற்படும் போது ஈஸ்வரி தோன்றி அதை அழிக்க வேண்டாம் அது அங்கேயே இருக்கட்டும் என்று கூறினார். ராமரின் கைகளால் உருவானவர் மாசாணி அம்மன்.

இரண்டாவது வரலாறு

ஆனை மலைக்கு அருகில் உள்ள அழகிய ஒரு கிராமத்தில் மனமொத்த தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக நேசித்தனர். அவ்வாறு வாழ்ந்து வந்த நேரத்தில் மனைவி கருவுற்றாள். கணவனும் மனைவியும் அன்பாக இருந்த காரணத்தால் மனைவி தாய் வீடு கூட செல்லாமல் பிரசவத்தை தன் கணவன் முன்னிலையே நடத்திக் கொள்ள விரும்பினாள். பிரசவ காலத்தில் பிரசவ வலி அதிகமானது. மனைவி படும் துயரத்தை தாங்க முடியாத கணவன் வலி மிகுந்த நேரத்தில் அவளை சற்று ஆசுவாச படுத்தி விட்டு மருத்துவச்சியை அழைத்து  வரக் கிளம்பினான். அதே சமயம் மனைவியை தனியாக விட்டு செல்வதற்கும் அவனுக்கு பயம். இவன் தனியாக சென்று மருத்துவச்சியை அழைத்து வருவது என்றால் மனைவியை தனியாக விட முடியாது. அடர்ந்த காடு வனவிலங்குகள் அதிகம். அருகில் மனிதர்கள் யாரும் இல்லையே என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்தான். அதை புரிந்துகொண்ட அவன் மனைவி இரண்டு கல் தொலைவில் உள்ள என் தாயார் வீட்டிற்கு நாம் செல்வோம். அங்கு ஒரு மருத்துவச்சி இருக்கிறார். அவர் முக்காலமும் உணர்ந்தவர். தெய்வ சிந்தனையும் நற்பண்புகளும் ஞானத்தால் நடப்பதை அறியும் திறனும் பெற்றவர். நன்கு மருத்துவம் செய்வார். அவரிடம் செல்வோம். கஷ்டப்பட்டு நான் தங்களுடன் நடந்து வருகிறேன் என்று கூறினாள். பிரசவ வேதனையும் வலியும் தாங்க முடியாத நிலையை எட்டியதால் வேறு வழி இன்றி  தாய் வீடு நோக்கி பயணமானார்கள்.

மெதுவாக நடந்து நடந்து ஒரு மைல் தூரம் வந்து சேர்ந்து விட்டார்கள். அதற்கு மேல் அவளால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை. சற்று தூரத்தில் பார்த்தால் விளக்கு ஒளி தெரிந்தது. அச்சமயம் கணவனிடம் என்னால் இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. தாங்கள் சென்று அந்த விளக்கு வெளிச்சத்தில் மருத்துவச்சி இருப்பார்கள். தயவு செய்து அழைத்து வாருங்கள். நான் எங்கும் போகமாட்டேன். இங்கேயே அமர்ந்து இருக்கிறேன் என்று உறுதிபட கூறினாள். கணவன் வேறு வழியின்றி அவளை அங்கு அமர வைத்து விட்டு  வெளியே விளக்கு வெளிச்சத்தை நோக்கி சென்றான். மிகுந்த மனவருத்தத்துடன் வேறு வழியின்றி வெளிச்சத்தை நோக்கி சென்று மருத்துவச்சியின் வீட்டுக் கதவை தட்டினான். அவரிடம் நிலைமையை  எடுத்துச் சொல்ல அவளும் மருத்துவ சாதனங்களையும் உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு மனைவி இருந்த இடத்திற்கு வந்தார்கள். அங்கு வந்து பார்த்த பொழுது மனைவியை காணவில்லை. இது என்ன இறைவா சோதனை மனவேதனை என்று வருந்தி தேடினார்கள். தூரத்தில் மனைவியும் குழந்தையும் இறந்து கிடந்ததை கண்டார்கள். இதனை கண்ட மருத்துவச்சி நான் கண்ட கனவு பலித்துவிட்டது என் கனவு நிஜம் ஆகிவிட்டதே என்றாள். கதறி அழுத அவன் அந்த மருத்துவச்சியிடம் அம்மா தாங்கள் கண்ட கனவு பலித்து விட்டது என்று கூறுகிறீர்களே. தாங்கள் என்ன கனவு கண்டீர்கள். என்ன நடந்தது என்று சற்று விளக்கமாக கூற வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.

உடனே அவர் நீ மனைவியை விட்டு வந்தவுடன் ஒரு பெரிய கருத்த உருவம் ஒன்று இவளை நோக்கி கையை நீட்டிக் கொண்டு வந்தது. அது கண்டு அவள் பயந்து எழுந்து ஓட ஆரம்பித்தாள். ஆனால் ஒரு அளவுக்கு மேல் ஓட முடியாமல் என்னை விட்டு விடு விட்டு விடு என்று அந்த கரிய உருவத்திடம் கெஞ்சினாள். ஆனால் அந்த கோர உருவமும் விடாமல் அவளைத் துரத்தியது. அந்த நேரம் அவளுடைய போறாத காலம் அவள் அங்கிருந்து மாட்டுச்சாணியில் கால் வைத்து வழுக்கி விழுந்து உயிர் நீத்தாள். அதே நேரத்தில் அவள் உடலிலிருந்து உயிர் பிரிந்து வானளாவி ஒரு பயங்கர ஜோதி ரூபமாய் கோடி சூரிய பிரகாசமாகத் தோன்றி நீண்ட உருவாமாய் திறந்த வாயுடனும் கைகளில் வேலுடனும் ஆயுதங்களுடனும் அந்த கரிய  கொடிய உருவத்தை நோக்கி வந்து அவனுடைய மார்பைப் பிளந்து அந்த பெண்ணின் காலடியில் போட்டு விடுகிறது. இதுவே தான் கண்ட கனவு என்று அந்த மருத்துவ மூதாட்டி அவள் கணவனிடம் கூறினாள். மேலும் அவள் சாதாரண பெண்ணல்ல. வானில் தேவலோகத்திலிருந்து மண்ணில் உதித்த பெண் அவள். அவள் பக்தர்களை மனிதர்களை இரட்சிக்க வேண்டி உருவான தெய்வாம்சம் பொருந்திய பெண்ணவள் என்றும் மற்றும் காமதேனுவினால் இடப்பட்ட சாணத்தில் கால்வைத்து இறக்காமல் இருந்திருந்தால் வேறு ஒரு ரூபத்தில் அவள் இறந்திருப்பாள். இவள் மானிடப்பிறவி அல்ல தெய்வப்பிறவி. இந்த அரக்கனை அழிக்க வேண்டி உருவானவள் என்பதனாலும் இந்த தெய்வாம்சம் பொருந்திய இந்த அம்மனுக்கு ஒரு கோயில் கட்டி பூஜித்து வழிபாடு செய்ய வேண்டும் என்றார்கள். மாட்டு சாணத்தில் கால்வைத்து விழுந்ததால் மாசாணி என்றும் இன்று முதல் அவளுக்கு பெயர் வந்தது.

3 ஆவது வரலாறு

ஆனை மலையை நன்னன் என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். ஒரு நாள் ஒரு முனிவர் மிகவும் சக்தி வாய்ந்த சுவையுடைய ஒரு மாங்கனியை கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்து தாங்கள் இக்கனியை உண்ண வேண்டும். இது மிகவும் சக்தியும் சுவையும் வாய்ந்தது. அதை உண்டுவிட்டு அதனுடைய கொட்டையை தாங்கள் ஆற்றில் எறிந்து விட வேண்டும் என்று கூறினார். மன்னனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார். அவன் அந்த மாங்கனியை உண்டு அதன் சுவையால் கவரப்பட்டு ஈர்க்கப்பட்டு முனிவர் கூறிய படி செய்யாமல் அந்தக் கொட்டையை தன்னுடைய அரண்மனையில் நட்டுவைத்து வளர்க்க ஆரம்பித்தான். அதை மிகவும் கவனமாக போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வந்தான் நாளடைவில் அது வளர்ந்து விருட்சமாகி ஆகியது. அவ்வாறு வளர்ந்து பெரிய மரமாக ஆன அந்த மரத்தில் ஒரு பிஞ்சோ கனியோ ஒன்று கூட விடவில்லை. நாளடைவில் அதிலிருந்து பூக்கள் மட்டும் தோன்றி  உதிர்ந்தன.

மன்னன் காத்திருந்து பின் இறுதியாக கனி கொடுத்த  அந்த முனிவரை எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு வேண்டுகோள் விடுத்தான். அவரைத் தேடி அழைத்து வந்த உடன் முனிவரும் மன்னா நான் தங்களுக்கு கொடுத்த கனி மரத்திலிருந்து பறிக்கப்பட்ட கனியல்ல. பலவருடம் தவம் செய்து என்னுடைய குருநாதர் எனக்கு விரும்பி கொடுத்த கனி. அதை நான் உண்பதைக் காட்டிலும் நாடாளும் மன்னன் ஆகிய நீ சுவைப்பது தான் சாலச்சிறந்தது என்றுதான் நான் உன்னிடம் கொடுத்தேன். நான் கூறியதற்கு மாறாக நீ கொட்டையை ஆற்றில் வீசாமல் நட்டு வைத்ததால்  வீண் வம்பை விலைக்கு வாங்கி கொண்டாய். மேலும் அந்த கனி ஒரு முறை தான் காய்க்கும். ஒரு பழம்தான் காய்க்கும். மீண்டும் அது காய்க்காது. அதுமட்டுமல்லாது ஒரு நாட்டில் விளைந்த கனியை மற்றொரு நாட்டில் உள்ளவர்கள் தான் உண்ண வேண்டுமே ஒழிய அந்த நாட்டில் உள்ளவர்கள் அந்தக் கனியை உண்ணக் கூடாது இதுவே இதனுடைய தாற்பரியம் என்று கூறினார்.

இந்த மரத்தில் விளையும் அந்த ஒரு கனியை யார் உண்ண வருவார்கள் என்று துறவியிடம் மன்னர் கேட்டார். அதற்கு துறவி வேறு நாட்டிலிருந்து வரும் ஒரு கன்னிப்பெண் தான் இந்த கனியை உண்பாள். அவள் மானிடப் பிறவி அல்ல. அவள் ஒரு தெய்வப்பிறவி. அவள் அஷ்டமாசித்திகளை உடையவள். சகல சக்திகளும் வாய்ந்தவள். ஆதலால் நீ இந்த மரத்தினுடைய கனி தனக்கு கிடைக்கவில்லையே என்று மரத்தை அறுத்து விடாதே வெட்டி விடாதே சகல சக்தியும் வாய்ந்த ஒரு அம்மன் கன்னிப் பெண்ணாக வந்து இந்த மரத்தின் கனியை உண்பாள். அதுவரை காத்திரு என்று கூறி அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார். இம்முறையும் மன்னன் முனிவரின் பேச்சைக் கேட்க மறுத்து விட்டான். அவர் சென்ற உடன் இந்த கனியை தானே சுவைக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டான். மேலும் அது விளையப்போகும் ஒரே ஒரு கனி. அதை யாரும் உண்டு விடாமலிருக்க அந்த மரத்திற்கு அதிகமான காவல் வைத்தான். சதாசர்வகாலமும் 24 மணி நேரமும் காவலை நீட்டித்து கொண்டே இருந்தான்.

கரிமேசுவரன் என்ற ஒரு யானை வியாபாரி இருந்தார். அவருடைய குலத்தொழில் யானை வியாபாரம்தான். காட்டு யானைகளை பிடித்து அதனை போருக்கு பழக்கி நாடு நாடாக யானை வியாபாரம் செய்து வருவார். அவ்வாறு நாடு கடந்து வரும்போது அவனும் அவன் மகள் தாரணியும் ஆனைமலை பகுதிக்கு வந்து ஒரு வீட்டில் குடியிருந்தார்கள். தாரணி அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் உடன் சென்று ஒருநாள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாள். அந்தப் பெண் தாரணி எங்கு குளித்துக் கொண்டிருந்தாளோ அந்த ஆற்றின் கரையில் தான் அந்த மாமரம் இருந்தது. இவள் குளித்துக் கொண்டிருந்த வேளையில் மாமரத்தில் இருந்த கனி தானாக விழுந்து இவளை நோக்கி வந்தது. இவள் பொன்னிறமாக ஈர்க்கப்பட்ட அந்த கனியின் அழகில் மயங்கி அதை எடுத்து சுவைத்து விட்டாள். உடனே செய்தி அரசனுக்கு எட்டியது. அரசன் உடனே தாரணியையும் அவள் தந்தையும் அழைத்து வரச் செய்தான்.

தாரணியோ உடனே மன்னனிடம்  இருகரம் நீட்டி உயிர்ப்பிச்சை வேண்டினாள். மன்னா நாங்கள் வேறு நாட்டில் இருந்து வருகிறோம். தாங்கள் முரசு அறிவித்தது தண்டோரா போட்டது எதுவும் எங்களுக்கு தெரியாது. ஒரு மாங்கனிக்காக அந்த நாட்டில் கொலை செய்வார்கள் என்றும் எனக்குத் தோன்றவில்லை. ஆகையால் எங்களுக்கு விடுதலை தந்தருள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாள். ஆனால் அவள் கோரிக்கையை செவிமடுக்காத மன்னன் அவளை கொலைக் களத்திற்கு அனுப்பினான். கொலைக் களத்திற்கு கொண்டு சென்று அவளைக் கொலை செய்தார்கள். அந்த நேரத்தில் அவள் மன்னா நான் மரித்தாலும் மீண்டும் வருவேன். மிகுந்த சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்குவேன். ஆனால் என்னைக் கொலை செய்த காரணத்தால் உன்னுடைய நாடும் மக்களும் அழிந்து போவார்கள் என்று சாபமிட்டு அவள் உயிர் நீத்தாள்.

அந்த பெண்ணின் உடலை அவள் தந்தை பெற்றுக் கொண்டார். இந்த பெண்ணின் சாபப்படி நாடு அழிந்தால் தங்களுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது தங்களை காத்தருள வேண்டும் என்று அந்த பெண்ணிற்கு மண்ணால் ஊரில் உள்ளவர்களும் சேர்ந்து ஒரு உருவம் செய்தார்கள். அது நாளடைவில் மாங்கனிக்காக உயிர் விட்ட காரணத்தினால் மாங்கனி அம்மன் என்று அழைக்கப்பட்டு நாளடைவில் மாசாணியம்மன் என்று மருவியது. மாசாணி என்றால் தமிழில் மாங்கனி என்ற பொருளும் உள்ளது. அது சிறிய மயான அம்மனாக இருந்து நாளடைவில் வளர்ந்து பெரிய கோயில் ஆகி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக ஆகிவிட்டது. அவளின் சாபப்படி நன்னனை எதிரி நாட்டுப் படைகள் சூழ்ந்து அவனது வம்சத்தையே பூண்டோடு அழித்து ஒழித்தார்கள். இவளை சரணடைந்து வழிபட்டவர் அனைவரையும் இவள் காப்பாற்றினாள்.

சங்கராச்சாரியார் கோயில்

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக் கரையில் உள்ள சங்கராச்சாரியார் மலையில் 1000 அடி உயரத்தில் இந்த சிவன் கோயில் அமைந்துள்ளது. வட்ட வடிவ அறையில் பெரிய சிவலிங்கம் உள்ளது. அதனை சுற்றி ஒரு பாம்பு இருக்கிறது. இக்கோயிலுக்கு ஜோதிஷ்வரர் கோயில் என்றும் பெயர். பௌத்தர்கள் பாஸ் பாஹர் என்றும் அழைப்பார்கள். தற்போது உள்ள இக்கோயில் கிபி 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் சிவனை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டப்பட்டது எப்போது என்ற உண்மையான தேதி குறித்து வரலாற்று ஆசிரியர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. 1924 ஆம் ஆண்டு வாழ்ந்த பண்டிதர் ஆனந்த கௌலின் என்பவர் இக்கோயில் காஷ்மீரை ஆண்ட மன்னர் சண்டிமன் என்பவரால் கிமு 2629 – 2564 க்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக குறிப்பிடுகிறார். கிமு 371 ஆம் ஆண்டு அந்நாட்டை ஆட்சி செய்த மன்னன் இக்கோயிலை கட்டினார் என்று எழுத்தாளர் கல்ஹனா குறிப்பிடுகிறார்.

காஷ்மீர் மன்னர்கள் கோபாதித்தியன் கிமு 426 – 365 மற்றும் லலிதாத்தியன் கிமு 697 – 734 காலத்தில் இக்கோயில்லுக்கு திருப்பணி செய்துள்ளார்கள். நிலநடுக்கத்தில் சிதைந்த இக்கோயிலின் கூரைகளை ஜெனுலாபீத்தீன் என்பவர் சீரமைத்தார். சீக்கியப் பேரரசின் காஷ்மீர் ஆளுநர் குலாம் மொய்னூதீன் உத்தீன் (1841 – 46) இக்கோயில் கோபுரத்தை செப்பனிட்டுள்ளனர். டோக்ரா வம்ச மன்னர் குலாப் சிங் 1846 – 1857 காலத்தில் ஆயிரம் அடி உயரமுள்ள இம்மலைக்கோயிலுக்குச் செல்ல படிக்கட்டுகள் கட்டிக் கொடுத்துள்ளார். 1925 ஆம் ஆண்டில் மைசூர் மகாராஜா கோயிலுக்குச் சென்று மின் தேடுதல் விளக்குகளை நிறுவி அதற்கான மின்சாரக் கட்டணச் செலவுக்கு நிதியை கொடுத்திருக்கிறார். 1961 ஆம் ஆண்டு துவாரகாபீடத்தைச் சேர்ந்த சங்கராச்சாரியார் இக்கோவிலில் ஆதி சங்கராச்சாரியார் சிலையை நிறுவினார். பாண்டிச்சேரியின் ஸ்ரீ அரவிந்தர் 1903 ஆம் ஆண்டு கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். பிரபல இந்திய தத்துவஞானி வினோபாபா 1959 கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார்.

இமயமலையில் உள்ள புனித தலங்களுக்கு ஆதிசங்கரர் சுற்றுப்பயணம் சென்ற போது ஸ்ரீநகரில் உள்ள இக்கோயிலுக்கும் சென்று சிவலிங்கத்தை தரிசித்துள்ளார். ஆதிசங்கரர் பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை எழுத வேண்டி அதற்கான மூலச் சுவடிகளை தேடி காஷ்மீரின் சாரதா பீடத்திற்குச் சென்றார். பின்னர் கோபாத்திரி மலையில் உள்ள சிவபெருமானை தரிசித்து சௌந்தர்ய லகரி எனும் அம்பாள் தோத்திரப் பாடலை இக்கோயிலில் பாடினார். எனவே இக்கோயில் சங்கராச்சாரியார் கோயில் என அழைக்கப்படுகிறது. மேலும் இத்தலத்தை பௌத்தர்களும் புனித தலமாக கருதுகிறார்கள். 19 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தை புதுப்பித்துள்ளார்கள்.

நாராயணபால் விஷ்ணு கோயில்

இந்திராவதி ஆற்றின் மறுகரையில் நாராயணபால் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு புராதனமான அற்புதமான விஷ்ணு கோவில் உள்ளது. கோயில் நிறுவப்பட்ட பின்னர் நாராயண்பூர் என்று பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் நாராயணபால் என்று இந்த ஊர் அழைக்கப்பட்டது. சுமார் 70 அடி உயரம் கொண்ட சிவப்புக் கல்லால் ஆன இந்தக் கோயில் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 11 ஆம்  நூற்றாண்டில் நாகவன்ஷி வம்சத்தின் ஆட்சியாளர் சிந்தக் நாக்வன்ஷ் மன்னர் ஜகதீஷ் பூஷனால் இக்கோயில் கட்டப்பட்டது.

இக்கோவிலுக்குள் சுமார் 8 அடி உயர கல்வெட்டு உள்ளது. கல்வெட்டுகள் தேவநாகரி எழுத்துக்களில் உள்ளன. இதில் கோயில் கட்டுவதற்கு அருகில் உள்ள கிராம மக்கள் மன்னருக்கு உதவியதாக பொறிக்கப்பட்டுள்ளது. கோயிலில் சிவலிங்கம் சூரியன் சந்திரன் பசு மற்றும் கன்று வடிவமும் செதுக்கப்பட்டுள்ளது.

பண்டரிபுரம் விட்டலன் ருக்மணி தாயார்

கிருஷ்ணர் இங்கு விட்டலர் விதோபர் பாண்டுரங்கன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறார். மஹராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் மாவட்டத்தில் பந்தர்ப்பூர் என்று அழைக்கப்படும் பண்டரிபுரம் என்ற நகரத்தில் பாயும் சந்திரபாகா ஆற்றின் கரையில் இக்கோயில் அமைந்துள்ளது

மகாராட்டிராவில் புண்டரீகபுரத்தில் வசித்து வந்த ஜானுதேவர் சத்யவதி தம்பதிக்குப் பிறந்த மகன் புண்டரீகன். பெற்றோரிடம் மிகுந்த மரியாதையும் பக்தியுமாக இருந்தவன். பெற்றோர்க்குச் சேவை செய்யும் புண்டரீகனை ருக்மணிக்கு காட்ட எண்ணிய கிருஷ்ணர் புண்டரீகனின் குடில் வாயிலில் நின்று தண்ணீர் கேட்டான். அங்கு மழை பெய்து சேறும் சகதியுமாக இருந்தது. உள்ளேயிருந்து புண்டரீகன் ஒரு செங்கல்லைத் தூக்கிப் போட்டான். சற்று நேரம் அதன் மேலே நில்லுங்கள். என் பெற்றோருக்கான பணிவிடைகளை முடித்துவிட்டு உங்களைக் கவனிக்கிறேன் என்றான். அதன்படியே தனது பெற்றோர் சேவையை முடித்துக் கொண்டு புண்டரீகன் அவர்களை வரவேற்று தாங்கள் யார் என்று கேட்டான். அப்போது ருக்மிணி வந்திருப்பது கிருஷ்ணன் என்பதைக் கூறினாள்.

புண்டரீகன் பதறினான். மண்ணில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டான். கிருஷ்ணர் புன்னகைத்து உன் மாதா பிதா சேவையில் மனம் மகிழ்ந்தேன். வேண்டும் வரம் கேள் என்றார். நீங்கள் எழுந்தருளியுள்ள இத்தலமான புண்டரீகபுரம் புண்ணியத் தலமாக விளங்க வேண்டும். பக்தர்கள் அனைவரும் தரிசித்து அருள் பெறும்படியாக நீ இங்கே சாந்நித்தியம் கொள்ள வேண்டும் என்று வேண்டினான் புண்டரீகன். அவ்வாறே கிருஷ்ணன் இத்தலத்தில் செங்கல் மீது நின்று கொண்டு விட்டலராக காட்சி அளிக்கிறார். மராத்திய மொழியில் விட் என்றால் செங்கல் என்று பொருள். செங்கல் மீது நின்று அருளுகின்றபடியால் கிருஷ்ணருக்கு இத்தலத்தில் விட்டலர் எனப்பெயர் உண்டானது.

மாதங்கேஸ்வரர்

கஜூராஹோ கேதார்நாத் வாரணாசி மற்றும் கயா ஆகிய இடங்களில் மாதங்க முனிவரின் ஆசிரமங்கள் அமைந்திருக்கின்றன. இந்த நான்கு தலங்களும் தற்போது நான்கு மாதங்கேஸ்வரர் கோவில்கள் என்று அழைக்கப்படுகின்றன.

மத்திய பிரதேசத்தில் உள்ள கஜூராஹோ நகரில் உள்ளது இந்த கோயில். சிறிய அளவிலான இந்த ஆலயத்தின் உள்ளே அதிக பக்தர்கள் நிற்க முடியாது. வந்த வழியே திரும்பி வருவதும் சிரமம் தான். எனவே ஒரு வழியாக ஏறிச் சென்று மற்றொரு வழியாக இறங்கி வருவதற்கு என்று தனித்தனியாக படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆலயத்தில் உள்ள மாதங்கேஸ்வரர் சிவலிங்க வடிவில் பிரமாண்டமாக காட்சி தருகிறார். இந்த லிங்கத்தின் பாணம் 1.1 மீட்டர் விட்டத்துடன் 2.5 மீட்டர் உயரமுள்ளது. லிங்கத்தின் அடிதளம் 1.2 மீட்டர் உயரமும் 7.6 மீட்டர் விட்டமும் கொண்டது. லிங்கத்தில் நாகரி மற்றும் பாரசீக கல்வெட்டுகள் உள்ளன.

இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயம் கிபி 900 முதல் 925 ஆம் ஆண்டுக்குள் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. கோயிலின் உட்புறச் சுவர்கள் வெளிப்புறச் சுவர்கள் மற்றும் வளைவு கோபுரம் ஆகியவை எந்த சிற்பங்களின் வடிவமைப்பும் இல்லாமல் காட்சியளிக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சிவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறும். 1986 ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இந்த கோயில் இடம் பெற்றது.

இடம்: மத்தியப்பிரதேசம் கஜூராஹோ நகர்

சுயம்பு நடராஜர்

கோனேரிராஜபுரம் நடராஜர் தீபாராதனை. புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே இந்த கோவிலில் உள்ள நடராஜரை தரிசிக்க முடியும் என்று அப்பர் பெருமானார் போற்றிப் பாடப்பட்ட சுயம்பு நடராஜர் இவர். இந்த கோயில் வரலாற்றையும் நடராஜரின் வரலாற்றை அறிந்து கொள்ளவும் மேலும் புகைப்படங்களை பார்க்கவும் கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்