பல நூறு ஆண்டுகளுக்கு முன் கலிங்க தேசத்தை ஆண்டு வந்த மன்னன் ஒருவன் தன்நாடு செழிக்கவும் மக்கள் நலமாக இருக்கவும் என்ன வழி என்று சான்றோர்களையும் சாஸ்திர வல்லுநர்களையும் கேட்டான். அன்னை காளி தேவிக்கு ஓர் ஆலயம் அமைத்து தினமும் ஆயிரம் பொருட்களால் அர்ச்சனை ஆராதனை செய்ய வேண்டும். ஒரு நாள் பூ வைத்தால் அடுத்த நாள் பழம். அதற்கு மறு நாள் பலகாரம் இப்படி மாற்றி மாற்றி வைக்க வேண்டும். ஒரு நாள் வைத்து அதே பொருள் அடுத்த நாள் கூடாது. இப்படி தொடர்ந்து பூஜித்தால் அம்பிகை மனம் இரங்குவாள். நீ வேண்டுவதெல்லாம் கிடைக்கும். அவர்கள் சொன்னார்கள். அப்படியே அரசன் ஐந்து ஆண்டுகள் பொறுமையாக வழிப்பட்டான். அதற்கு அடுத்த நாள் பூஜைக்கான நேரம் நெருங்கியது. அவசர அவசரமாக ஓடி வந்தார் மந்திரி. மன்னா நேற்று வரை விதவிதமான பொருட்களை காணிக்கையாக வைத்து விட்டோம். ஆனால் இன்று எதை வைத்து பூஜை செய்வது என்றே தெரியவில்லை. எல்லாம் முன்பு வைத்த பொருட்களாகவே இருக்கின்றன. பதட்டாமாக அவர் சொன்னது அரண்மனை முழுக்க எதிரொலித்தது. அது நகரம் நாடு என பரவி எல்லோரையும் தொற்றிக்கொண்டது. என்ன செய்ய போகிறார் மன்னர் என்று எல்லோரும் பதைபதைத்தார்கள். செய்யத் தவறினால் தெய்வ குற்றம் வந்துவிடுமே என்று தவித்தார் அரசர்.
அரசன் முன்னிலையில் மொத்தம் ஆயிரம் பேர் வந்தார்கள். வந்தவர்களில் தலைவர் சொன்னான். வேந்தே கவலைப்பட வேண்டாம். நானும் எங்கள் இனத்தவருமாக மொத்தம் ஆயிரம் பேர் இதோ வந்திருக்கிறோம். எங்களையே காளி தேவிக்கு காணிக்கையாக அர்பணித்து பூஜைசெய்யுங்கள். சிலிர்த்துபோனான் அரசன். பரவசபட்டார்கள் ஊர்மக்கள். நாட்டுக்காக இப்படி ஓர் அர்ப்பணிப்பா ஆச்சரியப்பட்டார்கள். பூஜையை ஆரம்பித்தான் மன்னன். ஆயிரம் பேரும் தயாராக வந்து அம்மன் முன் நின்றார்கள். அப்போது ஓர் அசரீரி எழுந்தது. மன்னா உன் வேண்டுதலை ஏற்றேன். உன் நாடு இனி எந்த பஞ்சமும் இல்லாமல் செழித்து விளங்கும். எனக்கு மனப்பூர்வமாக தங்களை அர்ப்பணிக்க வந்தவர்களை நான் என் மக்களாகவே கருதுகிறேன். நீ பூஜிக்கும் என் திருவடிவை உன் இறுதிகாலத்தில் ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிடு அசரீரியாக அம்மன் வாக்கு வந்தது.
நாடு செழிப்பாகவே இருந்ததால் மன நிறைவோடு ஆட்சி செய்தான் மன்னன். தன் வாழ்நாள் நிறைவடையும் காலத்தில் அம்மன் திருவடிவினை அழகான பேழையில் வைத்து ஆற்றில் விட்டான். அம்மனை சுமந்து கொண்டு தொட்டில் போல் அசைந்து ஆடியபடியே ஆற்றில் மிதந்தது பெட்டி உள்ளே ஆனந்தமாக உறங்கியபடி வந்த காளி தங்களையே காணிக்கையாக தர முன் வந்த மக்கள் வசிக்கும் இடத்திற்கு வந்ததும் விழித்தாள். இனத்தவரின் தலைவர் கனவில் தோன்றினால் காளிதேவி. பெட்டிக்குள் தான் இருப்பதை சொன்னாள். உடனே அனைவரும் ஓடினார்கள். அனைவரும் உரிய மரியாதைகளோடு அம்பிகையை அழைத்து வந்தார்கள். என் மக்கள் என்று சொன்ன தாயை தங்கள் வீட்டு பெண்ணாகவே பாவித்து சகல சீர்களுடன் கூட்டிக்கொண்டு வந்தார்கள். கோயில் கட்டினார்கள். பெட்டியை வைத்து திறக்க போனார்கள். இப்போதும் அசரீரி வாக்காக அம்மன் பேசினாள். ஐந்து ஆண்டுகள் மன்னன் பூஜித்த பின் நீங்கள் என் முன் வந்ததால் அந்த நாளில் மட்டுமே இனி நான் வெளியில் வருவேன். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளித்தாலும் என் அருள் என்றென்றும் இங்கே நிலைத்திருக்கும். உங்கள் இனத்தவரே என்னை தொடர்ந்து பூஜிக்கட்டும். அதே சமயம் இங்கே வந்து என்னை யார் வழிப்படாலும் அவர்கள் வேண்டுவன யாவும் கிடைக்கும் என்று அசரீரீயாக கூறினாள். ஐந்து வருடங்கள் கழித்து பேழையைத் திறந்து பார்த்து அதனுள் இருந்த ஓலைக் குறிப்பைக் கொண்டு அன்னைக்குத் தினமும் பூஜை செய்யும் முறையையும் அன்னைக்குப் படைக்கும் பொருட்கள் ஆயிரமாக இருக்க வேண்டும் என்பதையும் அறிந்துகொண்டு பூஜைகளை நடத்தினர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூஜை செய்திட முடிவெடுத்து அதன்படி தற்போது பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.
பூஜை செய்து பேழையில் வைக்கப்படும் அம்மன் ஐந்து ஆண்டுகள் கழித்து திறக்கும் போது மஞ்சள் பூச்சி பிடிக்காமல் இருப்பதும் எலுமிச்சை கெடாமல் இருக்கிறது. காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள திருமலைராயன் பட்டினத்தில் இருக்கிறது ஆயிரம் காளியம்மன் ஆலயம்.