சாஸ்தா ஆலயம்

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே அழகிய ஆஸ்ராமம் என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு சாஸ்தா ஆலயம் ஒன்று உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தின் வரலாறு சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் வரலாற்றோடு தொடர்புடையது.

ஒரு காலத்தில் வனமாக இருந்த சுசீந்திரம் பகுதி ஞானாரண்யம் என அழைக்கப்பட்டது. அந்த வனத்தின் ஒரு பகுதியில் அத்திரி மகரிஷி ஆசிரமம் அமைத்து தவ வாழ்க்கை வாழ்ந்து வந்தார். அவருடைய தர்ம பத்தினி அனுசூயா தேவி. இவர் கற்பில் சிறந்தவர். ஒரு முறை அனுசூயா தேவியின் கற்பை சோதிக்க எண்ணிய சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் அத்திரி மகரிஷி இல்லாத நேரத்தில் அடியார்களின் வடிவத்தில் ஆசிரமத்துக்கு வந்தனர். மூன்று அடியார்களும் அனுசூயா தேவியிடம் பிச்சை கேட்டனர். சற்றும் தாமதிக்காமல் அனுசூயா தேவி தன் கணவனின் பாத தீர்த்த சக்தியால் அறுசுவை உணவுகளை நொடிப் பொழுதில் தயாரித்தாள். அவர்களுக்கு ஆசனம் இட்டு அமரச் செய்து விருந்தளிக்க முன்வந்தாள். அதுவரை ஆசனத்தில் அமர்ந்திருந்த அடியார்கள் உடனடியாக எழுந்துவிட்டனர். அதைக் கண்டு மனம் வருந்திய அனுசூயா தேவி நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று மூவரிடமும் கேட்டாள்.

அதற்கு அந்த அடியார்கள் மழை இல்லாத காரணத்தால் ஒரு மண்டலம் உணவில்லாமல் வருந்திய நாங்கள் தற்போது உண்ண வேண்டு மென்றால் அதற்கு ஒரு நோன்பு உண்டு. அந்நோன்பு முடியாமல் நாங்கள் உணவு உட்கொள்ளக்கூடாது என்று கூறியவர்கள் மேலும் தொடர்ந்து பிறக்கும்போது எந்தக் கோலத்தில் இருந்தாயோ அந்தக் கோலத்தில் அன்னம் பரிமாறினால்தான் நாங்கள் உணவு அருந்துவோம் என்றனர். இதைக்கேட்ட அனுசூயாதேவி திடுக்கிட்டாள். எனினும் மனதைத் தேற்றிக் கொண்டு கணவனே கடவுள் என்றும் கற்பே நன்னெறி என்றும் நினைத்து வாழும் நான் என் கற்பின் பெருமையால் அடியார்கள் கூறியவாறு அமுது படைப்பேன் எனத் தெளிந்து தனது கணவர் காலைக் கழுவி வைத்திருந்த பாத தீர்த்தத்தை கையில் எடுத்து கணவனை மனதில் தியானித்துக் கொண்டு இவர்கள் மூவரும் குழந்தைகளாக மாறக்கடவது என அடியாளர்களின் தலையில் தீர்த்த நீரைத் தெளித்தாள். முத்தொழிலையும் செய்யும் அந்த மும்மூர்த்திகளும் பால் மணம் மாறாத பச்சிளம் குழந்தைகளானார்கள். பின்பு தான் பிறந்தபோது இருந்த நிலையில் அமர்ந்து மூவருக்கும் உணவூட்டினாள் அனுசூயா தேவி. தங்களின் கணவர்கள் குழந்தையாக மாறியதைக் கேள்விப்பட்ட முப்பெரும் தேவியரும் அத்திரி முனிவரின் ஆசிரமம் வந்து அனுசூயா தேவியை வேண்ட அவளும் மீண்டும் அவர்களுக்கு சுயவுருவை அளித்தாள்.

அத்திரி மகரிஷியும் அனுசூயா தேவியும் தங்கியிருந்த ஆசிரமம் தான் தற்போது ஆஸ்ராமம் என்றழைக்கப்படும் சிற்றூர். இந்த அத்திரி மகரிஷியே இங்கு சாஸ்தாவாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். அத்திரி மகரிஷி யாகம் செய்த ஓமகுண்டம் தற்போது கோவிலின் அருகில் தீர்த்தக்குளமாக இருக்கிறது. சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு பார்வை இழந்த ஒருவர் தினமும் இக்கோவிலில் சாஸ்தாவை வழிபட்டு வந்துள்ளார். ஒருநாள் இவர் கோவிலில் படுத்து உறங்கிக்கொண்டிருந்தபோது அவரது கண்களில் யாரோ மைதீட்டுவது போல உணர்ந்துள்ளார். உடனே திடுக்கிட்டு எழுந்துள்ளார். அவரது இரு கண்களிலும் பார்வை வந்துவிட்டது. உடனே சாஸ்தாவை வணங்கி அஞ்சனம் எழுதியது கண்டேன் சாஸ்தா என உரக்கக்கூவினார். அது நாளடைவில் மருவி அஞ்சனம் எழுதிய கண்டன் சாஸ்தாவாக மாறிவிட்டது. அஞ்சனம் என்றால் மை. எழுதிய என்றால் தீட்டிய என்று பொருள். கண்களில் மை தீட்டிய கடவுள் என இவரை வழிபடுகின்றனர்.

இங்கே உள்ள சாஸ்தா வித்தியாசமான வடிவில் காட்சியளிக்கிறார். சாஸ்தா கோவில்களில் சபரிமலை ஐயப்பனைப் போலவே சாஸ்தாவின் சிலையும் கால்களை மடக்கி உட்கார்ந்த வடிவில் இருக்கும். ஆனால் இங்கே சாஸ்தா இடது காலை மடக்கி ஒரு கையை அதன் மீது வைத்துள்ளார். வலது காலை வித்தியாசமாக மடக்கி வைத்திருப்பதோடு வலக்கையில் கதாயுதம் ஏந்தியபடி காட்சியளிக்கிறார். சாஸ்தாவின் தலைமுடி சுருள் சுருளாக தோள்பட்டைக்குக் கீழே இருப்பதோடு நடு உச்சியில் கொண்டையுடன் பூணூலும் அணிந்திருக்கின்றார். கழுத்தில் பதக்கமும் இரு கைகளிலும் கோதண்டராம பதக்கமும் திருநீற்றுப் பட்டையும் அணிந்துள்ளார். இங்குள்ள சாஸ்தாவின் உருவம் மற்ற கோவில் சாஸ்தாவின் சிலைகளோடு ஒப்பிடும் போது மிகவும் பெரியது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.