திருவாரூரில் மணக்கால் ஐயம்பேட்டையில் என்னும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. நான்கு வேதங்கள் படித்த பண்டிதர்கள் வாழ்ந்த ஊர் ஆகையால் சதுர்வேதி மங்கலம் என்று பெயர் பெற்றது. சோழர்காலத்தில் மணக்கால் ஐயம்பேட்டை என பெயர் மறுவியது. மிகவும் பழமை வாய்ந்த இத்திருக்கோயில் மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மூலவர் சேஷபுரீஸ்வரர். சுயம்பு லிங்கமாக மேற்கு பார்த்த வண்ணம் அருள்பாலிக்கிறார். அம்பாள் அந்தப்புரநாயகி பாலதிரிபுரசுந்தரி. தலவிருட்சம் வில்வம். தீர்த்தம் சிவக்குளத்து தீர்த்தம். கோயில் பிரகாரத்தில் விநாயகர் இருக்கிறார். தட்சிணாமூர்த்தி அர்த்தநாரீஸ்வரராக ஆண்பாதி பெண்பாதியாகவும் ஒரு கையில் வளையல் காலில் சிலம்பு கால் விரளில் மெட்டி ஒரு பக்கம் ஆபரணங்களுடன் அருள்பாலிக்கிறார். சனகாதி முனிவர்கள் அருகில் உள்ளனர். அவரை பார்த்த வண்ணம் நந்தி பகவான் இருக்கிறார். சண்டிகேஸ்வரர் பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள். இத்திருக் கோயிலில் கிழக்கு நோக்கியும் மேற்கு நோக்கியும் விநாயகர் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் மகாமண்டபமும் எதிரில் மடப்பள்ளியும் அமைந்துள்ளது. சண்டிகேஸ்வரர் நுழைவுவாயிலில் சரஸ்வதியும் லட்சுமியும் துவார பாலகர்களாக அருள் பாலிக்கிறார்கள். பலிபீடம் மற்றும் நந்தியும் ஒன்றாக அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் மனிதனுக்கு வேண்டிய பார்வதி (வீரம்) சரஸ்வதி (அறிவு) லட்சுமி (செல்வம்) மூன்று தேவியர்களின் அருளை தரக்கூடிய சிறப்பான ஸ்தலங்களில் இதுவும் ஒன்று.