நாகபூசணி அம்மன் கோவில்
நாகபூசணி அம்மன் கோவில் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டம் நயினார் தீவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிட்டத்தட்ட 14000 வருங்கள் பழமையானது ஆகும். இந்த கோவில் நாகர்களால் கட்டப்பட்டது. இந்த கோவில் கட்டும் போது நாகலோகத்து நாகர்களும் தங்களால் இயன்ற வரை உதவி செய்திருக்கிறார்கள் என்று கோவிலின் புராண வரலாற்றில் உள்ளது. நாகபூசணி அம்மன் ஆலயம் நயினாதீவு முதலாம் வட்டாரத்தில் பரப்பவன் சல்லி என்னும் காணிப்பகுதியில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. ஆகம மரபுக்குட்பட்ட முறையில் அமைந்து விளங்கும் இவ்வாலயம் கருவறைக்குள் நிமிர்ந்து காணப்படும் கருநாகச் சிலை வடிவமும் அதன் கீழ் உள்ள அழகிய பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அருவுருவடிவமான அம்பாளின் திருவுருவும் சுயம்பு உருவங்களாகவே உள்ளன. நீள் உருளை வடிவத் திருமேனியில் அம்மன் எழிலாக காட்சி தருகின்றாள். சீறும் ஐந்துத் தலை நாகச்சிலை பல்லாயிரமாண்டுகள் பழமையானது என்றும் காந்தார சிற்பக் காலத்தைச் சார்ந்ததாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆலயத்தில் நாயன்மார்களின் உருவச்சிலைகள் உள் பக்கம் அமைக்கப்பட்டுள்ளன. ஆலய பூஜைகள் கயிலாசநாத குருக்கள் என்பவரது பரம்பரையால் சுமார் 250 ஆண்டுளாக நடத்தப்படுகின்றன. தல மரம் வன்னி தல தீர்த்தம் தீர்த்தக்கேணி ஆகும். இத்திருத்தலத்தில் 4 கோபுரங்களும் வசந்த மண்டபம் வாகன மண்டபம் கல்யாண மண்டபம் அன்னபூரணனேஸ்வரி அன்னதான மண்டபம் அமுதசுரபி அன்னதான மண்டபம் ஸ்ரீ புவனேஸ்வரி கலையரங்க மண்டபம் முதலான 6 மண்டபங்களும் அமைந்துள்ளன.
நாகபூசணி அம்மனை நாகபாம்பு பூக்களைக் கொண்டு வந்து பூஜித்த வழிபாட்டுச் சிறப்பு மிக்க தலமாக இது விளங்குகின்றது. வரலாற்றுப் பெருமையும் வழிபாட்டுச் சிறப்பு மிக்க இவ்வாலயம் கி.பி 1620 ம் ஆண்டு ஒல்லாந்தர் என்னும் போர்ச்சுக்கீசியர் காலத்தில் தரைமட்டமாக்கப்பட்டது. இதன் சுவடுகள் இன்றும் கடலின் அடியில் காணப்படுகிறது. போர்ச்சுக்கீசியர் போர் தொடுக்கும் முன்பாக ஆலயத்தின் முக்கிய மூர்த்திகள் பொருட்களை பக்தர்கள் மறைத்து வைத்தனர். அம்மனை ஆலய மரப் பொந்தில் வைத்து வழிபட்டனர். டச்சுக்காரர்கள் ஆட்சிக்குப் பின்பு ராமலிங்கம் ராமச்சந்திரர் என்பவர்களால் 1788 இல் கல்லுக் கட்டிடமாகக் கட்டப் பெற்றது. 1935 ஆம் ஆண்டு கிழக்கு வாயில் ராஜகோபுரம் கட்டப்பட்டது. இவ்வாலயத்தின் விமானம் 1951 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது. வெளியில் நுழைவாயில் கிழக்கு நோக்கிய வாயிலையுடைய 108 அடி உயரமான நவதள நவகலச ராஜ கோபுரத்திற்கு 2012 ஆம் ஆண்டில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
நாகபூசணி அம்மன் கோயில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் தேவியின் இடுப்புப் பகுதி விழுந்த பீடமாகவும் தந்திர சூடாமணி கூறும் 51 சக்தி பீடங்களில் தேவியின் சிலம்புகள் விழுந்த பீடமாகவும் கருதப்படுகிறது. உண்மையான சக்தி பீடக் கோவில் போர்ச்சுக்கீசியப் படையெடுப்பில் இடிக்கப்பட்டு விட்டதால் இந்தக் கோவிலின் அம்மன் சன்னதியே சக்தி பீடமாக வணங்கப்படுகிறது ஆதியில் நாகர்களின் முக்கிய வழிபாட்டுத்தலமாகக் காணப்பட்டுப் பின்னர் நாகபூசணி அம்மன் திருக்கோயிலாக மாற்றம் பெற்ற தலமே நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயமாகும். இக்கோவிலின் கருவறையிலுள்ள சீறும் ஐந்துத்தலை நாகச்சிலை பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். சுயம்புவாகத் தோன்றிய அம்பிகையின் வடிவத்தை இந்தியாவில் இருந்து வந்த நயினாபட்டர் என்ற வேதியர் பூஜித்து வந்துள்ளார் அதற்கான சான்றுகள் உள்ளது.
நாகபூசணி அம்மனை வழிபட நயினா தீவுக்கு அருகில் உள்ள புளியந்தீவில் இருந்த நாகமொன்று அம்மனைத் தரிசிக்க தினந்தோறும் கடலில் நீந்தி வருவது வழக்கமாக இருந்தது. அவ்வாறு வரும் போது அம்மனுக்கு அர்ச்சனை செய்ய புளியந்தீவில் இருந்து பூக்களை கொண்டு வருவது வழக்கம். ஒரு நாள் வழக்கம் போல் பூக்களுடன் நீந்தி வந்த நாகத்தை கருடன் ஒன்று உணவாக்க முயன்றது. இதனால் பதறிய நாகம் கடலின் நடுவில் இருந்த கல் பாறை ஒன்றில் ஒதுங்கியது. அந்த இடத்திற்கு வந்த கருடனுக்கும் நாகத்திற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அந்த நேரத்தில் வாணிகம் செய்வதற்காக காவிரிப் பூம்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் இலங்கை சென்று கொண்டிருந்தான் மாநாயக்கன் என்ற வணிகன். அவன் நாகத்தை கருடன் கொல்ல முயல்வதைக் கண்டு மனம் இரங்கினான். நாகத்தை காப்பாற்ற கருடனிடம் பேசினார். நாகம் அம்மனை வழிபடுவதற்காச் செல்கிறது எனவே அதனை தடுக்க வேண்டாம் என்று வேண்டினான். அதற்கு கருடன் ஐயா அம்மன் மீது உங்களுக்கு பக்தி இருக்குமானால் கப்பலில் உள்ள உங்கள் பொருட்கள் அனைத்தையும் அம்மன் ஆலயத்திற்குத் தர ஒப்புக்கொண்டால் நானும் உங்களுக்காக இந்த நாகத்தை விட்டு விடுகிறேன் என்றது. கருடன் கூறியதற்கு வணிகன் ஒப்புக்கொண்டான். தான் கப்பலில் கொண்டு வந்த பொருட்களை எல்லாம் கோவிலுக்கு வழங்கி விட்டான். இதனால் நாகம் விடுதலை பெற்று வழக்கம் போல அம்மனை வழிபட்டது. வணிகன் கொடுத்த பொருட்களைக் கொண்டு கோவில் அழகாகவும் சிறப்பாகவும் கட்டமைக்கப்பட்டது. நயினா தீவின் அருகே பாம்பு சுற்றிய கல் இருப்பதையும் கருடன் கல் இருப்பதையும் இன்றும் காணலாம்.
நாகபூசணி அம்மனை இந்திரன் சில காலம் பூஜித்து தனது சாபத்தை போக்கிக் கொண்டான். அதன் பின் அம்மனுக்கு சிறிய ஆலயம் கட்டினான். மகாபாரதத்தில் அர்ஜூனன் நாகங்களைக் கொன்ற பாவங்கள் தீர இங்கு வந்து நாககன்னியை மணந்து பப்பரவன் என்ற மகனைப் பெற்றான். இதற்கு சான்றாக அர்ஜூனனின் மகனின் பெயரிலே இன்றும் அம்பாளின் ஆலயத்திடலுக்கு பப்பரவன் திடல் என்ற பெயர் உள்ளது. மணிமேகலை காவியத்தில் நாக இளவரசியான பீலிவளை மீது கிள்ளி என்னும் சோழ வேந்தன் காதலுற்று அவளைப் பிரிந்து வருடந்தோறும் நடத்தும் இந்திர விழாவையும் நடத்த மறந்தான் என்றும் இவர்களின் குழந்தையே தொண்டமான் இளந்திரையன் என்றும் இவனின் சந்ததியினரே பிற்காலத்தில் தொண்டைமான் சந்ததியினரும் தொண்டை மண்டலத் தேசத்தவரும் ஆவர்கள். நாகபூசணி அம்மன் கோவிலுக்கு பல பரம்பரைக் கதைகளோடும் பல புராண இதிகாசங்களோடும் பல ஆயிரம் வருடங்களுக்கான வரலாறுகள் இருப்பதை அறியலாம். நாகர்கோயில் நாகதேவன்துறை நாகதீவு போன்ற பெயர்களும் இன்றும் மக்களால் பின்பற்றப்பட்டு வரும் நாக வழிபாட்டு முறையும் இக்கூற்றை உறுதி செய்கின்றது.
இவ்வாலயத்திற்கு 1951 1963 1983 1998 2012 ஆகிய ஆண்டுகளில் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இவ்வாலய மகோற்சவம் ஆனிப் பூரணையை தீர்த்தோற்சவமாகக் கொண்டு நடைபெறுவது வழக்கமாகும். ஆரம்பத்தில் பத்து நாட்களே மகோற்சவம் நடைபெற்றது. 1960 ஆம் ஆண்டிலிருந்து பதினைந்து நாட்கள் மகோற்சவம் நடைபெறுகின்றது. இப்போதும் அடிக்கடி பல நாகங்கள் கோவிலுக்கு வந்து செய்கிறது. நாகங்கள் யாரையும் எந்த விதத்திலும் துன்புறுத்துவது இல்லை. கொழும்பில் இருந்து 431 கி.மீ. தூரத்திலும் யாழ்ப்பாணம் நகரில் இருந்து 38 கி.மீ. தூரத்திலும் உள்ள நயினா தீவில் இக்கோவில் அமைந்துள்ளது.
நாகபூசணி அம்மன் கோவில் தேர்:
நாகபூசணி கோவிலின் தேர் தனித்துவம் வாய்ந்தது. இத்தேரில் வரலாற்று நிகழ்வுகள் கிருஷ்ணர் அஷ்டலட்சுமி நாகம் புளியந்தீவில் பூப்பறித்து வரும் போது கருடன் சண்டையிட்டது மணல் லிங்கம் எழுப்பி வழிபடும் காமாட்சி போன்ற வரலாறுகள் தத்ரூபமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் தேரில் நாகபூசணி பவனிவர தேரோட்டியாக பிரம்மனின் மனைவி பிரமாணி இருப்பதும் குறிப்பிடத்தக்க அம்சம் ஆகும். மூன்று வரிசையில் எட்டுத் திசைகளிலும் மரச்சிற்பங்கள் கலைநயத்தோடு மிளிர்கின்றது.
இலக்கியங்கள்:
யோகி சுத்தானந்த பாரதியார் இயற்றிய மனோன்மணி மாலை மற்றும் அமரசிங்கப்புலவர் இயற்றிய நயினை நாகபூஷணியம்மை திரு ஊஞ்சல் மற்றும் வரகவி முத்துக்குமாருப் புலவர் இயற்றிய நயினை நாகபூஷணியம்மை திருவிருத்தம் மற்றும் வரகவி நாகமணிப்புலவர் எழுதிய நயினை மான்மியம் மற்றும் வேலனை தம்பு உபாத்தியார் இயற்றிய திருநாக தீபப் பதிகம் மற்றும் க.ராமச்சந்திரன் இயற்றிய தேவி பஞ்சகம் மற்றுப் நயினைத் தீவு சுவாமிகள் கவிஞர் செல்வராஜன் இயற்றிய பாடல்கள் என எண்ணற்ற இலக்கியங்கள் நாகபூசணி அம்மனைப் புகழ்கின்றன.
தொன்மைச் சிறப்பு:
ஐம்பெரும்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை காப்பியம் நயினா தீவை மணிபல்லவம் என்று குறிப்பிடுகிறது. குலோதர மகோதர என்ற இரண்டு நாக அரக்கர்களுக்கிடையே மணியாசனம் காரணமாக எழுந்த பெரும் போரை விலக்கி வைக்க புத்தர் இங்கு எழுந்தருளியதாக பவுத்த நூல்கள் கூறுகின்றன. இத்தீவில் பழமையான பவுத்த கோவில்கள் இருந்ததற்கான சுவடுகள் இன்றும் காணப்படுகின்றன. அம்மன் ஆலயத்திற்கு சற்றுத் தொலைவில் புனரமைக்கப்பட்ட பவுத்த ஆலயம் ஒன்றும் படித்துறையும் உள்ளது. இந்து சமயத்தவருக்கும் பவுத்த சமயத்தவருக்கும் புனித தலமாக நயினா தீவு விளங்குகின்றது.
வணக்கம் . யாழ்ப்பாணம் நயினார் தீவு நாகபூசணி அம்மன் கோயில் நாங்கள் நேரில் தரிசித்தது போல் இருந்தது.எங்களுக்கு நல்ல உள்ளம் உடல் நலம் வளமோடு வாழவும் நாகபூசணி அம்மன் அருளட்டும் ஓம் சக்தி தாயே போற்றி சரணம்அம்மா