













கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற ஊரில் புகழ்பெற்ற கோவிலாக விருபாட்சர் கோவிலில் உள்ளது. இங்கு மூன்று தலைகளும் ஒரே உடலும் கொண்ட நந்தியானது உலகில் வேறு எங்கும் இது போன்ற நந்தி கிடையாது. இக்கோவிலில் மூன்று கால வழிபாடு நடைபெறுகிறது. நந்தியின் மூன்று தலை பகுதிகள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தலைப்பகுதி மட்டும் சிதைந்த நிலையில் தற்போது காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவில்களில் இக்கோவிலின் கோபுரம் மிகவும் உயரமானதாகும்.
தட்சிணாமூர்த்தி தனது சின்முத்திரை காட்டும் திருக்கரத்தை மார்பின் மீது வைத்து கால் மாற்றி அமர்ந்த நிலையில் அருள்கிறார். அவரின் வலக் காலில் யோகப் பட்டயம் அமைந்துள்ளது. இந்த திருக்கோலத்திற்கு உத்குடியாசன திருக்கோலம் என்று பெயர். இலுமியன் கோட்டுர் என்ற ஊரில் உள்ள தெய்வநாதேஸ்வரர் சிவன் கோவிலில் இந்த தட்சணாமூர்த்தி அருள் பாலிக்கிறார்.
ராஜஸ்தானின் சித்தோர்கர் கோட்டையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கௌமுக் குந்த் என்பது புகழ்பெற்ற புனிதமான நீர் ஊற்று ஆகும். இந்த நீரில் பழமையான சிவலிங்கம் உள்ளது. கௌமுக் என்றால் பசுவின் வாய் என்று பொருள். பசுவின் வாயில் இருந்து நீர் பாய்கிறது என்பதால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்குள்ள பழங்கால பசுவின் வாயிலிருந்து வரும் நீர் வருடம் முழுவதும் தொடர்ந்து சிவலிங்கத்தின் மீது அபிசேகம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. இந்த கோட்டையின் பல இயற்கை நீர் ஊற்றுக்களில் இந்த நீர் ஊற்றும் ஒன்றாகும். இன்று வரை தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. சில சமயங்களில் சிவலிங்கம் முழுவதையும் மூடும் வகையில் தண்ணீர் நிரம்பி விடும். கோடை காலத்தில் குளத்தின் நீர்மட்டம் குறைவாக இருக்கும் போது அங்குள்ள கௌமுகமும் சிவலிங்கமும் பழங்கால சிவன் குடும்பம் தொடர்பான சிலைகளும் தெளிவாகத் தெரியும். இந்த நீர் ஊற்றைப்பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் பல வருடங்களுக்கு முன்பு சில வருடங்கள் மழை இல்லாமல் இருந்தது. அப்போதும் பசுவின் முகத்தில் இருந்து தண்ணீர் இருந்து நிற்கவில்லை.
கோவிலுக்குள் ஒரு பெரிய தெய்வத்தின் சிலை கண்ணாடிக்கு முன்பாக இருந்து தன்னைத்தானே பார்த்துக் கொண்டிருப்பதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பக்கலை அறிஞர்களின் கூற்றுப்படி இந்த சிலை பார்வதி தேவியின் சிலை. இக்கோவிலில் ஒரு சிறிய அறையில் இரண்டு பசுக்களின் முகங்கள் உள்ளன அவற்றின் முகங்கள் கிட்டத்தட்ட அழிந்து விட்டன. இரண்டாவது பசுவின் கீழ் சில பழமையான சிவலிங்கம் அமைந்துள்ளது. கோவிலின் முன்புறத்தில் நாற்கர வடிவில் உள்ள பெரிய விஷ்ணுவின் சிலை உள்ளது. பசுவின் வாயிலிருந்து வரும் தண்ணீர் சிவலிங்கத்தின் மேல் விழுந்த பின்பு அங்கிருந்து பிரதான குளத்திற்குச் செல்கிறது. அதன் அருகே ஸ்ரீ யந்திர வடிவ சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. அதன் பின்னால் உமா மகேஸ்வரர் சிலை பக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது. சுவரில் சுவரில் முழு சிவகுடும்பத்துடன் தொடர்புடைய பல சிலைகள் உள்ளது. இவை தற்போது மிகவும் சீரற்ற முறையில் உள்ளது. இந்த நீர் மருத்துவத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. இங்கே தங்கியிருந்தால் அந்த இடத்தின் தெய்வீக தன்மை பசி இல்லாமல் செய்கிறது. இந்த கட்டுமானம் 11 ஆம் நூற்றாண்டில் ராஜா போஜ் என்பவரால் சமிதேஷ்வர் கோயிலுடன் இணைந்து கட்டப்பட்டது. இக்கோவில் வாசலுக்கும் அரண்மனைக்கும் நடுவே சுரங்கப்பாதை உள்ளது.
இந்தோனேசியா நாட்டில் உள்ள எரிமலையின் உச்சியில் 700 வருடங்களாக இருக்கும் வினாயகர். யத்னயா கசடா என்ற திருவிழா பாரம்பரியமாக வருடத்தின் ஒரு சிறப்பு நாளில் தொடங்கி 15 நாட்கள் தொடர்ந்து கொண்டாடப்படுகிறது.
சிவன் ஆலயங்களில் மட்டுமே இருக்கும் பைரவர் வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருக்குறுங்குடி நம்பி கோவிலைக் காக்கும் தெய்வமாக இருக்கிறார். கோவிலின் பிரகாரத்தை சுற்றி வரும் போது இருக்கிறார் இந்த பைரவர். பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கொய்ததால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தை சிவபெருமான் இந்தத் திருக்குறுங்குடி தலத்தில் போக்கிக் கொண்டார் என்பதால் அவருடைய அம்சமான பைரவர் அந்த நற்பணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இவ்வாறு இங்கு காவல் பொறுப்பை மேற்கொண்டிருக்கிறார்.
இந்த கால பைரவருக்கு இடது பக்கத்தில் ஒரு விளக்குத் தூண் உள்ளது. இதன் மேல் பகுதியில் பைரவரின் முகத்தின் அருகில் ஒரு விளக்கும் கீழ்ப் பகுதியில் இன்னொரு விளக்கும் உள்ளது. இவை தவிர இரண்டு சர விளக்குகளும் உண்டு. இந்த நான்கு விளக்குகளிலும் உள்ள தீபம் ஒளி சிந்தி பைரவரின் முழு ரூபத்தையும் தெளிவாகக் காட்டுகின்றன. மேலே உள்ள விளக்கின் தீபத்தின் ஜ்வாலை மட்டும் காற்று பட்டது போல் அசைகிறது. பிற மூன்று விளக்கு ஜ்வாலைகளும் சீராக எந்தச் சலனமுமில்லாமல் எரிந்து கொண்டிருக்கின்றன. மேல் விளக்கு தீபத்தின் ஜ்வாலை மட்டும் எப்படி அசைகிறது? அது பைரவரின் மூச்சுக் காற்று அந்த தீபத்தில் மட்டும் படுவதினால் ஏற்படும் அசைவு ஆகும். பைரவர் மூச்சை இழுக்கும் போது ஜ்வாலை அவரை நோக்கித் திரும்பியும் விடும் போது எதிர் திசையில் விலகியும் அசைகிறது. அது போல் அவரது கண்கள் தீப ஆராதனை ஒளியில் அசைவதை இப்போதும் நேரில் கண்டு தரிசிக்கலாம்.
இவருக்கு வடை மாலையும் பூச்சட்டையும் சாத்துவது பிரதான பரிகார வழிபாடாக உள்ளது. சிறிய வடைகளை ஒன்றாக மாலை போல் கோர்க்காமல் மிகப்பெரிய ஒரு அளவில் ஒரே வடையாகத் தட்டி அதை பைரவரின் மேல் சாத்துகிறார்கள். இவருக்குத் தயிர் சாதம் நிவேத்தியம் படைக்கப்படுகிறது. இந்த பைரவர் 75 சதவீதம் கல்லாலும் மேலே 25 சதவீதம் சுதையாலும் ஆன சிற்பமாகத் திகழ்கிறார். மூலிகை வண்ணத்தால் இவருக்கு அழகு தீட்டியிருக்கிறார்கள். பல வருடங்களாகியும் அந்த வண்ணங்கள் வெளிராமலும் மெருகு குலையாமல் இருக்கிறது. இந்த பைரவரின் மூச்சு விடும் போது ஒரு தீபம் மட்டும் அசையும் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பைரவர் இருக்கும் திருக்குறுங்குடி கோவிலைப்பற்றி அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தோர்கர் என்னும் ஊரில் இக்கோவில் உள்ளது. சமாதீஷ்வரர் என்று அழைக்கப்படும் இந்த திரிமூர்த்தி சிவன் சமாதி பகவான் என்றும் அழைக்கப்படுகிறார். பரமரா மன்னர் போஜாவால் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள் உயர்ந்த மலைப் பகுதியில் தான் மட்டும் தனித்து வீற்றிருக்கிறார். பெருமாள் சுமார் ஐந்தடி உயரத்தில் மார்பில் தாயாருடன் தனித்திருக்கின்றார். பெருமாளை பக்தர்கள் ஆப்பூரார் என்றும் அழைக்கின்றனர். இங்கே வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்று பெருமாளுக்கான திருமஞ்சனத்துக்கு தங்கு தடையின்றி மூலிகை கலந்த தனிச்சுவையுடன் சுரந்து கொண்டிருக்கிறது. ஒரு பிராகரம் மற்றும் முன் மண்டபத்துடன் கோயில் அமைந்துள்ளது. பெருமாள் சந்நிதி கிழக்கு நோக்கி காணப்படுகிறது. பெரிய திருவடியான கருடாழ்வார் கருவறைக்கு முன்னால் பெருமாளை நோக்கி கும்பிட்டப்படி மேற்கு நோக்கி காணப்படுகிறார். மண்டபத்தில் தசாவதார சுதை சிற்பங்கள் மற்றும் அஷ்ட லட்சுமிகள் நடுவில் திருவேங்கடவன் சுதை சிற்பம் காணப்படுகின்றன. இந்த கோயிலில் தாயாருக்கு என்று தனி சந்நிதி கிடையாது. இங்கு பெருமாளும் லட்சுமியும் இணைந்து ஒரே வடிவில் இருப்பதாலும் பெருமாள் லட்சுமியின் சொருபமாகவே இருந்து மகா லட்சுமியை தன்னகத்தே கொண்டிருப்பதால் பெருமாளுக்கு புடவையை தவிர வேறு எந்த வஸ்திரங்களும் சாற்றப்படுவதில்லை. அதனால் தான் ஸ்ரீநித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேச பெருமாள் என்ற பெயர் வந்தது. அகத்திய முனிவர் தவம் செய்த ஒரே வைணவத் திருத்தலம் இது மட்டுமே என்று கூறப்படுகிறது.
சென்னை தாம்பரத்தில் இருந்து சுமார் 23 கி.மீ. தொலைவில் உள்ளது சிங்கப்பெருமாள் கோவில். இங்கிருந்து வலப்புறம் ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் 6 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஆப்பூர் கிராமம். இங்குதான் மெயின் ரோட்டில் இருந்து சற்று விலகி அமைந்திருக்கிறது இந்தப் பெருமாள் கோயில். பெருமாளின் திருத்தலம் அமைந்துள்ள மலை ஔஷதகிரி எனப்படுகிறது. இந்த மலைப் பிரதேசம் முழுக்க முழுக்க மூலிகைச் செடிகள் நிரம்பியுள்ளன. சுமார் எண்ணூறு வருடத்தில் இருந்து ஆயிரம் வரை பழைமை வாய்ந்த இக்கோயில் மிகவும் சிறியதாகவும் அழகாகவும் இருக்கிறது. ஒளஷதகிரி அதாவது மூலிகை மலை இதன் அருகேயுள்ள திருக்கச்சூர் மலைக்கோயில் சிவனுக்கு ஒளஷதகிரீஸ்வரர் (மருந்தீஸ்வரர்) என்ற பெயரும் உண்டு. இந்த இருமலைகளும் ஒன்றோடொன்று வரலாற்று தொடர்புடையதாக விளங்குகிறது.
ராமாயணத்தில் இந்திரஜித்துடன் நடந்த போரில் பாதிக்கப்பட்ட ராமபிரான் மயக்க நிலைக்குத் தள்ளப்பட்டார். ராமர் மயங்கிய நிலையில் பேச்சு மூச்சில்லாமல் இருப்பதைப் பார்த்த அவரின் பக்தனான அனுமன் கண் கலங்கினார். ராமரது மயக்கத்தை உடனே தெளிவிப்பது எப்படி என்று யோசித்தார். அப்போது ஜாம்பவான் சொன்ன யோசனைப்படி சஞ்சீவி மலையில் இருந்து குறிப்பிட்ட சில மூலிகைகளைக் கொண்டு வந்து ராமபிரானுக்கு சிகிச்சை அளித்தால் குணம் பெறுவார் என்று அறிந்தார். அதன்படி சஞ்சீவி மலை இருக்கும் வட திசை நோக்கிப் பறந்தார் அனுமன். சஞ்சீவி மலையை அடைந்தவர் ராமபிரானை குணமாக்கும் மூலிகை எது என்று சரிவரத் தெரியாமல் குழம்பினார். எனவே அந்த மலையை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு புறப்பட்டு வந்தார். சஞ்சீவி மலையைத் தூக்கிக் கொண்டு அனுமன் வரும்போது அந்தப் பிரமாண்ட சஞ்சீவி மலையில் இருந்து சிறு சிறு பாகங்கள் ஆங்காங்கே பெயர்ந்து கீழே விழுந்தன. அதில் ஒரு சிறு பகுதிதான் இந்த ஔஷதகிரி. சஞ்சீவி மலையின் ஒரு பகுதி என்பதால் இங்கு ஏராளமான மூலிகைச் செடிகள் மண்டிக் கிடக்கின்றன. மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான பல மூலிகைச் செடிகள் இங்கு இருப்பதால் இந்த மலையில் சற்று நேரம் அமர்ந்து மூலிகைக் காற்றைச் சுவாசித்துச் செல்வதே பெரிய நிவாரணம்.
மலைப் பாதை துவங்கும் இடத்தில் இருந்து நடந்துதான் செல்ல வேண்டும். மலை ஏறுவதற்கு வசதியாக படிகள் குறுகிய அளவில் இல்லாமல் விசாலமான அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது. சுமார் 508 படிகள் இம்மலையில் உள்ளது. ஔஷதகிரியின் உச்சியில் ஸ்ரீநித்ய கல்யாண பிரஸன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயத்தில் மூலிகைக் காற்றின் வாசம் பரவசமூட்டும். பிராகாரம் மற்றும் முன் மண்டபத்துடன் கூடிய இக்கோவிலில் மண்டபத்தில் தசாவதாரக் காட்சிகள் அஷ்ட லட்சுமியின் வடிவங்கள் ஆகியவை சுதைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. பெருமாளைப் பார்த்தபடி கருடாழ்வார் காணப்படுகிறார். அகத்தியர் உள்ளிட்ட சித்தர்களும் வசிஷ்டர் உள்ளிட்ட மகரிஷிகளும் இந்த மலையில் தங்கி இருந்து தவம் செய்து பேறு பெற்றுள்ளார்கள். பெருமாள் மட்டுமே இங்கு பிரதான தெய்வம். தாயார் உட்பட வேறு எந்த தெய்வங்களுக்கும் சந்நிதிகள் கிடையாது. எனவே பெருமாளுக்குப் புடவை சார்த்தி வழிபடும் வழக்கம் இங்கு உள்ளது. ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உள்ள இந்த ஆலயத்துக்கான பெருமாள் உற்சவர் விக்கிரகம் ஆப்பூர் கிராமத்தில் ஒரு பஜனை கோயிலில் உள்ளது.
சீரணி நாகபூசணி அம்மன் கோயில் யாழ்ப்பாணம் மாவட்டம் வலிகாமம் தென்மேற்குப் பிரிவில் சண்டிலிப்பாய் என்ற ஊரில் உள்ள சீரணியில் அமைந்துள்ளது. தம்மை வழிபட்டுப் பூசித்த நாகம் ஒன்றைத் தன்னுடைய திருமேனியில் ஆபரணமாய் பூண்ட காரணத்தால் இத்தேவியும் நாகபூஷணியம்மை என்று அழைக்கப்படுகிறாள்.
சீரணி நாகபூசணி கோவில் உள்ள இந்த இடத்தில் அக்காலத்தில் சாத்திரம் தெரிந்த சாத்திரியார் சண்முகம் பொன்னம்பலம் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஓர் நாகபூஷணியம்மை இயந்திரம் வைத்துப் பூசை செய்து சாத்திரம் சொல்லி வந்தார். அவருடன் இராமுத்தர் என்னும் ஒருவர் வசித்து வந்தார். சண்முகம் பொன்னம்பலம் இயந்திரத்தைச் சரிவரப் பூசிக்காமையால் அவர் வீட்டிற் சில துர் சகுனங்கள் நிகழ்ந்தன. அவை இராமுத்தர்க்கு பிடிக்காத காரணத்தினாலும் இயந்திரம் இரவில் கலகலப்பான பேரொலி செய்தமையாலும் அதனை அப்புறப்படுத்த நினைத்தார் இராமுத்தர். ஒருநாள் இராமுத்தர் நன்றாய் மதுபானம் அருந்தி விட்டுக் குறித்த இயந்திரத்தையும் அத்துடனிருந்த பொருட்களையும் பெட்டியுடன் எடுத்துச் சென்று வீட்டின் அருகாமையிலுள்ள ஓர் இடத்தில் போட்டுச் சென்று விட்டார். நாகபூஷணி அம்மன் இங்குள்ள அன்பர்கள் பலரின் கனவிற் தோன்றி நான் நயினை நாகபூஷணி எனக்கு கோவில் கட்டுங்கள் என்று காட்சியளித்தாள். பலர் நாங்கள் வறியவர்கள் தாயே எங்களால் எவ்வாறு இயலும் என அன்பர்கள் கூறி வருந்தினார்கள்.
சீரணி நாகபூசணி அம்மன் பக்தனாகிய முருகேசபிள்ளை என்பவரின் கனவிலே பல முறை வெளிப்பட்டு தன் திருவருள் தன்மைகளைக் காட்டியருளினாள். ஒரு முறை ஓரிடத்தைக் குறிப்பிட்டு இவ்விடத்திலே எம்மை வைத்து வழிபட்டு வருவாயாக என அம்மை அருளிச் செய்தாள். அவர் தமது நிலைமையை எண்ணி அஞ்சி தன் கனவில் வருவதை பிறருக்குச் சொல்லாமல் தம்முள்ளே வழிபட்டு வந்தார். 1896 ம் ஆண்டு விளம்பி வருடம் சித்திரை மாதப் பெளர்ணமி தினத்தன்று இரவு தேவி கனவிலே வெளிப்பட்டு உனக்குச் சொன்னவைகளை நீ உண்மை என்று நம்பினாய். அதன் உண்மையை உனக்கு இப்பொழுது காட்டுவோம். அதோ தோன்றுகின்ற தென்னை மரத்திலே சில இளநீர் பறித்து வந்து தா என்று கூறியருளினாள். அன்பருக்கு அது ஒரு முதிர்ந்த வறண்ட பட்டு போன மரமாகத் தோன்றியது. அதையுணர்ந்த அவர் அதில் இளநீர் குரும்பைகள் இல்லையே தாயே. இல்லாத இளநீரை நான் எப்படி தருவது என்றார். அதற்கு அன்னை நீ மரத்தின் அருகிலே சென்று பார். தேவையானது தோன்றும் என அருளினாள். அவ்வாறே அவர் சென்று பார்த்தார். தொங்கும் இளநீர்க் குலைகளைக் கண்டு வியப்பும் அச்சமுங் கொண்டவராய்ச் சில இளநீரைப் பறித்துக் கொண்டு வந்து கொடுத்தார். அம்மனும் அதிக தாகமுடையார் போலப் பருகினாள். பின்னர் அவரை நோக்கி அன்பனே இந்த இடத்தைத் தோண்டிப்பார் இங்கு ஒரு சிலை தோன்றும். அதனையே மூலமாக வைத்து ஒரு கொட்டகை அமைத்து வழிபடுவாயாக. சில காலத்திற்கு பிறகு பல திசைகளிலுமிருந்து அடியார்கள் வந்து வழிபட்டு விரும்பிய சித்திகளை எல்லாம் அடைவார்கள். வேண்டிய திரவியங்களை எல்லாம் காணிக்கையாக கொடுத்து வழிபடுவார்கள். அவற்றைக் கொண்டு திருப்பணிகளைச் செய்யத் தொடங்கு. கோவில் பூர்த்தியாகுவதற்கு யாம் அருள் செய்வோம் வேலையை தொடங்கு தொண்டர்கள் வருவார்கள். செல்வம் செழிக்கும் நாடு நலம்பெறும் வாழ்வு வளம் பெறும் என்றாள். மேலும் உனது மனம் புனிதமாகும் வகையில் ஒரு மந்திரமும் உபதேசம் செய்வோம் என சொல்லி விட்டு மறைந்தாள்.
சீரணி நாகபூசணி அம்மன் கனவில் குறிப்பிட்ட இடத்தை மறுநாள் காலையில் தொண்டிப் பார்த்தார். அங்கு ஒரு சிலை காணப்பட்டது. அதனைக் கண்டு பரவசப்பட்டவராய் ஒரு மண்டபம் அமைத்தார். 1896ம் ஆண்டு ஆடிமாதம் திங்கட்கிழமையும் அமாவாசையுங் கூடிய புண்ணியதினத்திலே பூஜையை தொடங்கி காலம் தவறாமல் பூஜித்து செய்து வந்தார். நான்கு திசைகளிள் இருந்தும் அடியார்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டு வந்து நாகபூஷணியம்மையை வழிபட்டார்கள். இவ்வரலாறு குறித்தும் குட்டம் காசம் ஈளை முதலான கன்ம நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தை அடைந்து தேவியை வழிபட்டு தங்களது நோய்கள் தீர்த்துக் கொண்டார்கள். நாக சாபத்தினாலே நீண்டகாலம் பிள்ளைப் பேறில்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடுகள் செய்து பிள்ளைச் செல்வம் பெற்றார்கள். மேலும் அம்பாளின் அருட்செயல்கள் பற்றிப் பல கர்ண பரம்பரையான கதைகள் காலங்கண்ட முதியோர்களினாலே கூறப்படுகின்றன. சீரணி நாகபூஷணி அம்மன் தேவஸ்தானத்தின் திருப்பணிகளை நடத்தும் பொருட்டு 1962 அக்டோபர் 10 இல் திருப்பணிச் சபையொன்று அமைக்கப்பட்டு பல இடங்களிலும் நிதி திரட்டி தொண்டுகளைச் செய்து வருகின்றனர்.
சீரணி நாகபூசணி அம்மன் கோவில் கோபுரம் 1935 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்குள்ள அழகிய தேர் 1957 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இத்தேர் நுணுக்கமான சிற்பவேலைப்பாடுகளைக் கொண்ட அழகிய தேராகக் காணப்படுகின்றது. 1951 1965 1983 ஆம் ஆண்டுகளில் புனரா வர்த்தன கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடந்தேறியுள்ளது. தேவி வழிபாட்டுக்கு யாழ்ப்பாண நாட்டின் இரு கண்களாக விளங்குவது நயினை நாகபூஷணியம்மை மற்றும் சீரணி நாகபூஷணியம்மை ஆலயங்களாகும்.