நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் திருக்கோயிலில் மோகனூரில் லலிதையும் கிருஷ்ணனும் இணைந்த கோலமான சம்மோகன கிருஷ்ணர் உருவம் உள்ளது. கிருஷ்ணர் தனது பாதி உடலை ராதைக்கு அளித்து அர்த்தநாரீ கிருஷ்ணராக காட்சியளிக்கிறார்.
மூலவர் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர். சுயம்பு மூர்த்தியாக வலது புறம் ஸ்ரீதேவியுடனும் இடதுபுறம் பூமா தேவியுடனும் நின்ற திருக்கோலத்தில் வேதஸ்ருகங்க விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். உற்சவர் சீனிவாசர் பொதுவாக உற்சவமூர்த்தியின் மார்பில் மகாலட்சுமியின் உருவம் பொறிக்கப்படடிருக்கும். ஆனால் இங்குள்ள உற்சவர் சீனிவாசரின் மார்பில் முக்கோணம் போன்ற வடிவமும் அதன் மத்தியில் மகாலட்சுமி ரேகையும் உள்ளது. அம்மன்/தாயார் பத்மாவதி. மகா மண்டபத்தின் வலதுபுற விளிம்பில் தனிச்சன்னதியில் சிவ பார்வதியின் அர்த்தநாரீஸ்வரர் கோலத்தைப் போல லலிதையும் கிருஷ்ணரும் இணைந்து கோபால சுந்தரி எனும் சம்மோகன கிருஷ்ணராக அருள்பாலித்து வருகின்றார். தல விருட்சம் வில்வம். தீர்த்தம் காவிரி. புராணபெயர் மோகினியூர். காவிரியின் கரையில் அமைந்த கோயில் இது. காவிரி இங்கு வடக்கிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. காவிரியம்மனுக்கும் தனிசன்னதி இருக்கிறது. ஆடிப்பெருக்கு மற்றும் ஐப்பசி மாதத்தில் இவளுக்கு காவிரி தீர்த்தத்தால் அபிஷேகம் நடக்கிறது. சுவாமி சன்னதிக்கு பின்புறம் தன்வந்திரிக்கு சன்னதி உள்ளது. தன்வந்திரிக்கு மூலிகைகள் கலந்த சூர்ணம் பிரதான நைவேத்யமாக படைக்கப்பட்டு சுக்குப்பொடி நாட்டுச்சர்க்கரை நல்லெண்ணெய் மற்றும் மூலிகைள் சேர்ந்த தீர்த்தத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இச்சன்னதியின் முன் மண்டப மேற்கூரையில் நவக்கிரகங்கள் மரச்சிற்பமாக இருக்கிறது. எதிரே கோஷ்டத்தில் லட்சுமி நரசிம்மர் இருக்கிறார். சுவாமி கோஷ்டத்தில் லட்சுமி ஹயக்ரீவர் இருக்கிறார். பௌர்ணமி மற்றும் வியாழக்கிழமைகளில் ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. இவருக்கு எதிரே மேதா சரஸ்வதி காட்சி தருகிறாள். இவளிடம் வீணை கிடையாது.
கோயில் முன் மண்டபத்தில் நவநீதகிருஷ்ணர் இரு கரங்களிலும் வெண்ணெய் வைத்தபடி காட்சி தருகிறார். உடன் பாமா ருக்மணி உள்ளனர். ஆண்டாள் சக்கரத்தாழ்வாருக்கு சன்னதி இருக்கிறது. கோயிலின் அக்னி மூலையில் கிழக்கு நோக்கி பதினாறு திருக்கரங்களுடன் ஸ்ரீசக்கரத்தாழ்வார் காட்சி கொடுக்கிறார். கோயில் வளாகத்தில் வன்னி மரத்தடியில் விநாயகரும் ஆஞ்சநேயரும் இருக்கின்றனர். கோயிலுக்கு எதிரே ஆஞ்சநேயருக்கு மற்றொரு சன்னதி இருக்கிறது. கருடாழ்வார் அமைந்திருக்கும் சோபன மண்டபத்தின் வடபுறம் பரமபத வாசல். அதன் நேர் எதிரே திருப்பதி வேங்கடவனின் சுதைச் சிற்ப உருவம் தாங்கிய உற்சவர் அலங்கார மண்டபம் உள்ளது. முதல் பிராகார மண்டபத் தூண்களில் ஆழ்வார்களின் உருவங்கள் சுதைச் சிற்ப வடிவில் உள்ளது. அதன் கீழே அவரவர் பாடிய பாசுரங்களில் நான்கு வரிகள் எழுதப்பட்டுள்ளது.
இந்த ஊரில் வசித்த பக்தர் ஒருவர் திருப்பதி வெங்கடாஜலபதி மீது தீவிர பக்தி கொண்டிருந்தார். வருடம் தவறாமல் திருப்பதி கோயிலுக்கு சென்று வருவார். ஒரு சமயம் அவருக்கு வாத நோய் ஏற்பட்டதால் திருப்பதிக்கு செல்ல முடியவில்லை. வருத்தமடைந்த அவர் காவிரியில் மூழ்கி உயிர் துறக்க நினைத்தார். தள்ளாடியபடி நடந்து சென்று காவிரிக் கரையை அடைந்தார். அப்போது கரையில் இருந்த ஒரு புற்றில் இருந்து நாகம் வெளிவந்தது. பாம்பைக் பார்த்த பக்தர் தற்கொலை எண்ணத்தை கைவிட்டு வீடு திரும்பி விட்டார். அன்றிரவில் அவரது கனவில் தோன்றிய திருமால் பாம்பு வெளிப்பட்ட புற்றுக்குள் சிலை வடிவில் இருப்பதாக கூறினார். காலை எழுந்ததும் மிகுந்த மகிழ்ச்சியடைந்த பக்தர் உடனே அங்கு சென்று புற்றை உடைத்து பார்த்த போது உள்ளே சுவாமி சிலை இருந்தது. பின்பு அந்த இடத்திலேயே ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக மணக்கோலத்தில் பிரதிஷ்டை செய்தனர். சுவாமிக்கு கல்யாண பிரசன்ன வெங்கட்ரமணர் என்று பெயர் சூட்டப்பட்டது. இதுதவிர பத்மாவதி தாயாருக்கு தனி சன்னதி கட்டப்பட்டது.
திருப்பதி வெங்கடாஜலபதியின் அருளால் கோயில் உருவாக்கப்பட்டதால் நவராத்திரியின்போது வரும் ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் திருப்பதியில் ஓர் நாள் என்னும் உற்சவம் நடக்கிறது. அன்று அதிகாலை நடை திறக்கப்படுவதில் இருந்து இரவு வரையில் அனைத்து பூஜைகளும் திருப்பதியில் நடக்கும் முறையிலேயே செய்யப்படுகிறது. திருப்பதியில் வெங்கடாஜபதிக்கு அலங்காரம் செய்யப்படுவது போலவே அன்று சுவாமிக்கு அலங்காரம் செய்யப்படுகிறது. ஒவ்வொரு திருவோண நட்சத்தர தினத்தன்று மாலையில் சத்யநாராயண பூஜை நடக்கிறது. அப்போது சுவாமிக்கு மட்டைத்தேங்காய் படைத்து வழிபடப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமைகள் மற்றும் திருவோண நட்சத்திரத்தில் சுவாமி கருடவாகனத்தில் எழுந்தருளுகிறார்.








