திருச்செந்தூர் முருகன் கோயில் கடற்கரையிலிருந்து வெறும் 67 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது. 133 அடி உயரமுள்ள இந்த திருக்கோயிலின் ராஜ கோபுரம் கடற்கரையிலிருந்து 140 மீட்டர் தொலைவில் தான் அமைந்துள்ளது. இந்த கோயிலின் கருவறை தரை மட்டத்திலிருந்து 15 அடியும் கடல் மட்டத்திலிருந்து 10 அடியும் தாழ்வான இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கோவில் பற்றிய விவரங்கள் தொல்காப்பியம், புறநானூறு, அகநானூறு, திருமுருகாற்றுப்படை சிலப்பதிகாரம் போன்ற சங்ககால இலக்கியங்களில் காணப்படுவதை நாம் கருத்தில் கொண்டால் இந்த கோயில் கட்டப்பட்டு குறைந்தது 3000 ஆண்டுகளுக்கு மேல் இருக்குமென்று நாம் அறிந்து கொள்ளலாம். இவ்வளவு ஆபத்தான இடத்தில் கடலுக்கு மிக அருகில் துணிந்து கட்டப்பட்ட இந்த திருக்கோயில் இத்தனை ஆண்டுகளாக எந்தவித பாதிப்புகளுமில்லாமல் கம்பீரமாக நிற்கிறது. தமிழகத்தில் உள்ள கோவில்கள் பெரும்பாலும் மன்னர்களாளும் பெரும் பணக்காரர்களும் கட்டப்பட்டிருக்கும் நிலையில் பிட்சை ஏற்று உண்ணும் ஆண்டிகலாலேயே கட்டப்பட்ட திருக்கோவில் திருச்செந்தூர் முருகன் கோவிலாகும். கோவிலைக்கட்டிய ஆண்டிகள் இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டி புனரமைப்பு பணிகள் செய்த ஆண்டிகள்.
- மௌனசுவாமி
- காசிசுவாமி
- ஆறுமுகசுவாமி இவர் ராஜகோபுரம் கட்டியவர்
- ஸ்ரீவள்ளிநாயகசுவாமி
- தேசியமூர்த்திசுவாமி.
முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் அமைந்திருக்கும் நாழிக் கிணற்றின் தெற்கே மூவர் சமாதி என்ற பெயருடனே அமைந்துள்ளது.
நான்காவதாக ஞான ஸ்ரீவள்ளிநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜ கோபுரத்தின் வடக்கு வெளிப்பிரகாரத்திலிருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது.
ஐந்தாவதாக ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக் கடந்து ஆழ்வார்தோப்பு என்னும் ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் உள்ளது.