மூலவர் கந்தசுவாமி. உற்சவர் முத்துக்குமார சுவாமி. தாயார் வள்ளி தெய்வானை. தல விருட்சம் மகிழ மரம். தீர்த்தம் சரவணப் பொய்கை. இங்குள்ள விநாயகர் குளக்கரை விநாயகர். சித்திபுத்தி விநாயகர் அமர்ந்த கோலத்தில் தனிச்சன்னதியில் உள்ளார். சித்தியும் புத்தியும் ஒருகாலை மடக்கி மற்றொரு காலை தொங்கவிட்ட கோலத்தில் காட்சி தருகின்றனர். சரவணப்பொய்கையின் கரையிலும் ஒரு விநாயகர் இருக்கிறார். இவருக்கு வலப்புறத்தில் லட்சுமிதேவியும் இடப்புறத்தில் சரஸ்வதி தேவியும் உள்ளனர். கந்தசுவாமி இவ்விடத்தில் தானாக விரும்பி நின்றவர் என்பதால் பீடம் இல்லாமல் தனித்து தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக உள்ள இவருக்கு இருபுறமும் வள்ளி தெய்வானை ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் உள்ளனர். மூலவருக்கு நேரே வாயில் இல்லை. அவருக்கும் கொடிமரத்திற்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டும் உள்ளது. ராஜகோபுரமும் பிரதான வாயிலும் வடக்குப்பகுதியில் உள்ளது.
வேளூர் மாரிச்செட்டியார் பஞ்சாளம் கந்தப்ப ஆசாரி என்கிற இரு முருக பக்தர்கள் ஒவ்வொரு கிருத்திகை அன்றும் சென்னையில் இருந்து திருப்போரூர் வரை பாத யாத்திரை சென்று கந்தனைத் தரிசித்து வந்தார்கள். கிபி 1673ம் வருடம் மார்கழி மாதம் கிருத்திகை அன்று கந்தனை தரிசித்து விட்டுத் திரும்பியவர்கள் செங்கண்மால் ஈஸ்வரன் கோயில் (பழைய மாமல்லபுரம் சாலை) அருகேயிருக்கும் குளக்கரையில் ஓய்வு எடுக்க அமர்ந்தவர்கள் அசதியில் தூங்கிவிட்டார்கள். அப்போது கனவில் தோன்றிய முருகன் நீங்கள் ஏன் இவ்வளவு தூரம் உடலை வருத்திக் கொண்டு வருகிறீர்கள். இதோ இந்தப் புற்றிலிருக்கும் என்னை எடுத்துச் சென்று நீங்கள் வசிக்கும் சென்னப் பட்டணத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள் என்றார். உடனே இருவரும் கண் விழித்து தனக்கு வந்த கனவைப்பற்றி பேசினார்கள். இருவருக்கும் ஓரு போலவே கனவு வந்தபடியால் வந்த சொன்னது முருகனே என்று மகிழ்ந்தவர்கள் சுற்றுலும் தேடிப்பார்த்தார்கள். அருகில் முருகனின் உருவம் தென்படவே அவரை எடுத்து வந்தார்கள். வரும் வழியில் பாரிமுனையில் முருகனின் பாரம் தாங்காமல் கீழே வைத்தார்கள். அதன் பின் முருகரை அங்கிருந்து அசைக்க முடியவில்லை. முருகர் இங்கேயே கோவில் கொள்ள அருளுகிறார் என்று எண்ணிய இருவரும் தற்போது கோவில் இருக்கும் இடத்தில் செங்கல்லினால் கோயில் அமைத்தார்கள். பின்னர் கருங்கல்லால் கோயில் அமைக்க பக்தர்களால் நிச்சயித்து உண்ணாழி அந்தராளம் மகாமண்டபம் ஆகியவை கட்டினார்கள்.
கந்தகோட்டம் கோவிலில் முருகனடியார்கள் எல்லாம் ஒன்று கூடி கந்தகோட்டத்து முருகன் கோயிலுக்கு உற்சவ விக்ரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். சிற்ப சாஸ்திர வல்லுணர்களில் மிக நுட்பறிவு கொண்ட ஒருவரை தேர்வு செய்தனர். சிற்ப சாஸ்திரரிடம் உற்சவ முருகனாக பஞ்சலோகத்தில் விக்ரகம் ஒன்றை வார்த்து தரும்படி ஒப்படைத்தனர். சாஸ்திரரும் புடம்போட்டு எடுத்தபின் வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம் மினு மினு வென மின்னியது, அதன் ஒளிச் சிதறல்கள் கண்களைக் கூசச் செய்தது. ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள்போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் பொறுப்பாளர்கள் சிற்பசாஸ்திர முதன்மையாளரிடம் சிற்பம் நல்லா வந்திருக்கிறது. ஆனால் வெளித்துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்களென்றால் சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர்.
தலமை சிற்பியும் துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்ரகத்தை தொட்டார். அவ்வளவுதான் சிற்பத்தை தொட்ட மாத்திரத்தில் மின்சாரம் தாக்கியவர்போல் தூரப் போய் விழுந்தார். பக்கத்திலிருந்தவர்கள் ஓடி வந்து சிற்பசாஸ்ததரரை தூக்கி வைத்து ஆசுவாசப் படுத்தி என்ன ஆச்சு ஐயா என்றனர். என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது வாய் குழறி குழறிக் கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு தெளிந்து எழுந்த சிற்பி கண்களில் மிரட்சியோடு ஆலயப் பக்தர்களை நோக்கி கைகளைக் கூப்பி இந்த விக்ரகம் நீறு பூத்த அணலாக இருக்கிறது. இதைச் சுத்தத் தூய்மையாக்கும் சக்தி என்னிடம் இல்லை. என்னை விட்டு விடுங்கள் இது என்னால் இயலாது என்று கூறி போய்விட்டார். பிசிறுகளுடன் இருக்கும் உற்சவ விக்ரகத்தை தீண்டப் பயந்து வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளாமல் விக்ரகத்தை ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டி விட்டனர். இந்தச் செயலுக்குப் பின்பு இரண்டு ஆண்டுகளும் கடந்து போய்விட்டன.
ஒருநாள் காசியில் இருந்து சாம்பையர் எனும் துறவி கந்தகோட்டத்து முருகனைத் தரிசிக்க ஆலயத்திற்குள் புகுந்தார். அவர் மூலவரைத் தரிசித்த பின் ஆர்வத்தோடு உற்சவர் இல்லையா? எனக் கேட்டார். சிவாச்சாரியாரும் விக்ரகம் வார்ப்பெடுத்து உருவான விபரம் முதல் அனைத்தையும் சாம்பையரிடம் கூறிவிட்டு ஆலய முக்கியஸ்தரரிடம் அழைத்துப் போய் கொண்டு விட்டு விட்டார். இதன்பின் கோயில் நிர்வாகிகளைச் சந்தித்த சாம்பையர் அந்த உற்சவ விக்ரகத்தை நான் பார்க்கலாமா? என்றார். சாம்பையருடைய தோற்ற கோலத்தைக் கண்டு கட்டுப்பட்ட நிர்வாகிகள் உற்சவர் இருந்த அறையைத் திறந்து விட்டனர். அறைக்குள் நுழைந்த சாம்பையர் சில நிமிடத்தில் வெளியே வந்தார். சாம்பையர் கூடியிருந்த அனைவரையும் பார்த்து நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள் இக்கோயிலில் உள்ள மூலவருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே சக்தி இந்த உற்சவ மூர்த்தத்திலும் பொதிந்திருக்கிறது என்றார். விக்ரகம் இவ்வாறு அமைவது வெகு அபூர்வமானது. இங்கு இது அமையப் பெற்றதனால்தான் உங்களை நான் பாக்கியசாலி என்றேன் என்றார். தன்னை வழிபடும் அடியார்களுக்கு மூலவரைப்போல் இந்த உற்சவரும் அளவிலா அருட்செல்வத்தை வழங்குவார் இவர். இவரைப் பார்த்து வணக்கம் தியானம் ஆராதணை செய்யலாமே தவிர இவர் திருமேனியில் எந்த விதமான கருவிகளும் படக் கூடாது என்றார்.
இந்தத் தன்மை கொண்ட உற்சவ விக்ரகங்களை ஆத்ம சக்தியால் மூலம் தூய்மைப் படுத்த முடியும். ஆயுதத்தால் தீண்டித் தொட முனைந்தால் அது நடவாது போய்விடும். இந்த உற்சவரை ஆத்ம சக்தியால் நானே தூய்மை செய்து தருகிறேன் என்றார். தூய்மை செய்யும் நேரத்தில் கூறிப்பட்ட ராகத்தில் நாதஸ்வரம் வாசிக்க சொன்னார். நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த பண்டிதரான சாம்பையரின் வார்த்தைகளை அப்படியே ஏற்று மகிழ்ந்த ஆலய நிர்வாகிகளும் பக்தர்களும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தனர். தனி அறையில் உற்சவ விக்ரகம் வைக்கப்பட்டு திரை போட்டு மறைக்கப்பட்டது. வெளியே நாதஸ்வரம் வாசிக்கப்பட்டது. வடிவேலனின் முன் அமர்ந்து வேத மந்திரங்களைச் சொல்லி ஆத்ம சக்தியால் உற்சவரின் திருமேனி மீது இருந்த பிசிறுகளை நீக்கினார் சாம்பையர். திரை விலக்கி வெளியே வந்தார் சாம்பையர். முருகனின் முகத்தை மட்டும் சரி செய்ய இயலாது என்று கூறி விட்டு சென்று விட்டார். இப்போதும் கந்தகோட்டத்தில் இருக்கும் உற்சவர் இந்த முருகர் தான். மிகவும் அழகாக இருக்கும் முருகனின் முகம் மட்டும் அந்த பிசிருகளோடு இன்றும் இருக்கிறார். ஆறுமுகனின் அருளாடலால் வெளிப்பட்ட அந்த உற்சவ வடிவத்தை இன்றும் கந்த கோட்டத்திற்குச் சென்றால் தரிசிக்கலாம்.
கந்தசாமி கோயில் எனப்படும் கந்தகோட்டத்தின் 1858ம் வருட கல்வெட்டின் படி கோயிலின் வரலாற்றைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம். சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பார்க் டவுனின் ராசப்ப செட்டித் தெருவில் எட்டு ஏக்கர் பரப்பில் இக்கோவில் அமைந்துள்ளது. மூலவர் கந்தசாமி என்றும் உற்சவர் முத்துக்குமாரசுவாமி என்றும் அழைக்கப்படுகின்றனர். இருவரும் வள்ளி தெய்வானையுடன் காட்சியளிக்கின்றனர். கோவிலின் உள்ளேயே ஒரு தெப்பக்குளமும் உள்ளது. 1869 ஆம் வருடம் வையாபுரி செட்டியார் என்பவர் இக்கோயிலுக்கு 66 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார். இவர் கோயிலுக்காக ஒரு தேர் செய்வித்தார். 1880ம் ஆண்டில் அக்கம்மாபேட்டை கோவிந்த செட்டியார் நாராயணச் செட்டியார் என்பவருடன் சேர்ந்து கோயிலின் அருகே இருந்த நிலத்தைக் கோயிலுக்கு அளித்தனர். அங்கு தான் வசந்த மண்டபம் கட்டப்பட்டது. கோயிலின் ராஜகோபுரம் 1901ம் வருடம் காளிரத்தினச் செட்டியார் அளித்த 50 ஆயிரம் ரூபாய் நன்கொடையைக் கொண்டு எழுப்பப்பட்டது என மதராசபட்டினம் நூலில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் நரசய்யா.
ஆங்கிலேயர்கள் வருகைக்கு முன்பு நடந்த முகலாயர்கள் படையெடுப்பு ஒன்றில் கோயில்கள் எல்லாம் சேதப்படுத்தப்பட்டன. அப்போது பக்தர்கள் சிலர் திருப்போரூர் முருகன் சிலையைக் காக்கும் பொருட்டு புற்றுக்குள் மறைத்து வைத்தனர். சில காலத்திற்குப் பிறகு சிலை இருந்த இடம் தெரியாமல் புதிய சிலையை பிரதிஷ்டை செய்து விட்டார்கள். இதுவே அந்த இரு முருக பக்தர்களின் கனவிலும் முருகப்பெருமான் சொல்லி சென்னைப் பட்டணத்திற்கு வந்த கதை என்று கோவில் புராண வரலாறு சொல்கிறது. வள்ளலார் கந்தசாமி முருகனை தனது திருவருட்பாவில் உருகி உருகிப் பாடியிருக்கிறார். அவர் சென்னையில் வாழ்ந்த நாட்களில் கந்தகோட்ட முருகனை தினமும் தரிசனம் செய்துள்ளார். ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவுவேண்டும் என்ற பாடலில் தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்தலம் ஓங்கு கந்தவேளே என்று பாடியிருக்கிறார். திருப்போரூர் சிதம்பர சுவாமிகளும் பாம்பன் சுவாமிகளும் கந்தகோட்ட முருகனைப் பற்றி பாடியுள்ளனர்.