சத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதிமலை. இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது. ஒதிமலையில் ஐந்து முகங்களும் எட்டு கரங்களும் கொண்ட முருகபெருமான் அருள்பாலிக்கிறார். இந்த அமைப்புக்கு கவுஞ்சவேதமூர்த்தி என்று பெயர். பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்படுகிறது. புராணபெயர் ஞானமலை. தீர்த்தம் சுனைதீர்த்தம். சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன் இந்த ஓதிமலை தலத்தில் வேதம் ஆகமங்களை உபதேசித்தார். சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் ஓதிமலை என்றும் சுவாமிக்கு ஓதிமலை முருகன் என்ற பெயரும் ஏற்பட்டது. முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இந்த மலைதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது. கைப்பிடி இல்லை. கோயம்புத்தூர் அருகே புஞ்சைப் புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை மேட்டுப்பாளையம் செல்லும் வழியில் அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது.
சித்தர்களில் ஒருவரான போகர் முருகனைத் தரிசிக்க பழநிக்குச் சென்றார். அப்போது அவருக்கு சரியாக வழி தெரியவில்லை. வழியில் இத்தலத்தில் தங்கிய அவர் முருகனை வேண்டி, யாகம் நடத்தினார். அப்போது இத்தலத்து முருகன் அவருக்கு வழிகாட்டினார். வழிகாட்டிய முருகன் இத்தலத்திலிருந்து சற்று தூரத்திலுள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோயிலில் ஒரு முகத்துடன் காட்சி தருகிறார். ஆறு முகங்களுடன் உள்ள முருகன் போகருக்கு வழிகாட்ட ஒரு முகத்துடன் சென்றதால் ஓதிமலையில் ஐந்து முகங்களுடனும் இத்தலத்தில் ஒரு முகத்துடனும் இருக்கின்றார். இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும். இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது. இங்குதான் போகர் பழனி முருகனை காணவேண்டி யாகம் நடத்தியிருக்கின்றார். இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும். விபூதிக்காடு என்று அழைக்கப்பட்ட இந்த இடம் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது.
படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன் பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல் நிற்கவே அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கினார். படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய ஆத்மாக்களாக பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம் முறையிட்டாள். சிவன் முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி பிரம்மாவையும் விடுவித்தார்.
மலைக்கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு வலப்புறத்தில் காசிவிஸ்வநாதர், இடப்புறம் காசி விசாலாட்சி தனித்தனி சன்னதிகளில் காட்சி தருகின்றனர். இடும்பன், சப்தகன்னியருக்கும் சன்னதி இருக்கிறது. முருகனிடம் பிரம்மவை விடுவிக்கும்படி பரிந்துரைத்த சிவபெருமான் கைலாசநாதராக மலையடிவாரத்தில் தனிக்கோயிலில் இருக்கிறார். முருகனை சந்தித்தபோது சிவபெருமான் மட்டும் தனித்து வந்தார். உடன் அம்பிகை வரவில்லை. எனவே இக்கோயிலில் அம்பிகை சன்னதி கிடையாது.
சத்தியமாவது சரவணபவமே:
ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
ஓம் ஸ்ரீ மத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் பாதகமலம் சரணம் சரணம்:
குருவின் குருவான பரமகுருவே
ஓம் ஸ்ரீ மத் அருணகிரிநாதா போற்றி போற்றி போற்றி
🙏🙏🙏🙏🙏🙏
அறியாத ஆன்மீக தகவல்.. தங்களின் ஆன்மீக தகவல் பதிவிற்கு மிக்க நன்றிங்க அய்யா…
ஓம் சரவண பவ.🙏🙏🙏
ஞானமருந்தே போற்றி போற்றி
இறைவா உன்னைக் காணவே இப்பிறவியில் எத்தனை தவங்கள்
ஓதிமலை முருகனுக்கு அரோகரா…
good
பிரனவமந்திரம் அளித்த முருகா போற்றி போற்றி