வற்றாப்பளை கண்ணகி கோயில்

இலங்கையின் வடபகுதியான வன்னிப் பெருநிலப்பரப்பில் முல்லைத்தீவு மாவட்டத்தில் வற்றாப்பளை என்னும் கிராமத்தில் நந்தி கடலோரம் வற்றாப்பளை கண்ணகி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் உள்ள விநாயகரின் பெயர் காட்டா விநாயகர். தன்னை நம்பி அடைக்கலமான பக்தன் ஒருவனை எதிரிகளுக்கு காட்டாமல் காத்ததால் அவருக்கு காட்டா விநாயகர் என பெயர் வந்தது. மூலஸ்தானத்துக்கு அருகே கோயிலின் தல மரம் அனிச்ச மரம் இருக்கிறது. இக்கோயிலில் வைகாசி மாத பெருவிழாவும் அதை தொடர்ந்து கடல் நீரில் விளக்கு எரியும் அதிசயமும் இப்போதும் ஒவ்வொரு வருடமும் நடந்து கொண்டிருக்கிறது. இலங்கையில் மகா ஆச்சரியமான புண்ணிய தலங்கள் பல உண்டு. அதில் வற்றாபளை கண்ணகி அம்மன் கோயிலும் ஒன்று. இந்த இடத்தில்தான் சீதை சிறை வைக்கப்பட்டாள் என்று கருதப்படுகிறது. அங்கு வைகாசி மாதம் பௌர்ணமி அன்று கடல் உப்பு நீரில் தீபம் அந்த ஒருவார காலம் விடாமல் தொடர்ந்து எரியும் காலம் காலமாக இந்த அதிசயம் நடந்து வருகிறது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயிலின் கதை ஒன்று உள்ளூர் புராணத்தில் உள்ளது. ஒரு முறை வற்றாப்பளைக் கிராமத்தின் கிழக்குப் பகுதிக்கு ஒரு வயதான மூதாட்டி வந்தாள். அங்கு கால் நடைகளை மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் அவளின் சோர்வை பார்த்து அவளின் பசியை போக்க தங்களிடம் இருந்த பொங்கல் உணவை அவருக்கு வழங்கி அவளைப்பற்றி விசாரித்தார்கள். வயதான மூதாட்டி தான் சோழ சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவள் என்று கூறி தனக்கு தங்குவதற்கு இடமில்லை என சிறுவர்களிடம் முறையிட்டாள். அவர்கள் மரத்திற்கு அருகே ஒரு குடிசை அமைத்து கொடுத்தார்கள். மாலைப் பொழுதானதும் குடிசைக்குள் விளக்கு ஏரிவதற்கு எண்ணெய் இல்லையே என்று சிறுவர்கள் மனம் வருந்தினர். அவர்கள் கவலைப் படுவதைக்கண்ட அம்மூதாட்டியர் பிள்ளைகளே கடல் நீரை எடுத்து எண்ணையாக பாவித்து திரி வைத்து விளக்கேற்றுங்கள் என்றார். அவர்களும் அது போல் செய்ய விளக்கு எரிந்தது. தனக்கு குடிசை அமைத்து விளக்கேற்றி கொடுத்த சிறுவர்களைப் பார்த்து தனது தலை கடிக்கிறது பேன் பார்த்து விடும்படி கேட்டார். மூதாட்டியாரின் தலை முடியை வகுத்த சிறுவர்கள் தலையெல்லாம் கணகளாயிருப்பதைக் கண்டு பயந்து அலர மூதாட்டி உடனே தான் இங்கு வந்த தினமான வைகாசி விசாகம் (வைசாக) பண்டிகையின் போது பொங்கல் தயாரித்து வணங்குங்கள் என்று குழந்தைகளுக்கு அறிவுறுத்தி ஒவ்வொரு வைகாசித் திங்களன்றும் இங்கே வருவேன் எனக் கூறி மறைந்தார். சிறுவர்கள் நடந்ததை ஊர் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். மக்களும் அங்கே வந்து குடிசைக்குள் பார்த்த போது கடல் நீரில் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த குடில் இருந்த இடத்தில் கண்ணகி அம்மனுக்கு கோவில் கட்டி வைகாசி பௌர்ணமி தினத்தன்று பொங்கல் பொங்கி கடல் நீரில் விளக்கேற்றி வழிபடத் தொடங்கினர். ஆதி காலத்தில் அம்மன் காட்சி கொடுத்த ஆடு மேய்க்கும் சிறுவர்களின் பரம்பரையை சேர்ந்தவர்களே கோவில் பூசை வழிபாட்டில் பிரதான பங்கு வகிக்கிறார்கள். கண்ணகி அம்மாள் வந்தமர்ந்த இடம் பத்தாம்பளை. இந்த பெயர் மருவி வற்றாப்பளையாயிற்று என்பது வரலாறு.

நந்தி ஏரியில் இருந்து தீர்த்தம் எடுத்து சென்று கண்ணகி கோவிலில் வைத்து வழிபட்டு பின்னர் விளக்கேற்றுவார்கள். அந்த விளக்கு 7 நாள் எரியும். 7 ஆம் நாள் அதை ஊர்வலமாக எடுத்து சென்று கண்ணகி கோவிலில் வைத்து பொங்கலிடுவார்கள். குறிப்பிட்ட இந்த காலம் மட்டும்தான் நீரில் விளக்கு எரியுமே தவிர மற்ற நாளில் எரியாது. 1964 ஆம் ஆண்டு கொழும்பிலிருந்து வந்த ஆய்வாளர்கள் தீர்த்தத்தில் தீபம் எரிவதைப் பற்றி ஆய்வு செய்தனர். எனினும் எவ்வித முடிவும் கண்டறியப்படாது திரும்பினர். மீண்டும் 1970 ஆம் ஆண்டிலும் இவ்வாறான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்கள் கடல் நீரிலே காணப்படும் உப்புக் கரைசல் தீபத்தை ஏற்றும் போது நெருப்பு எரியக் கூடிய ஒரு பொருளாக மாறுகின்றது என ஆதாரமற்ற கருத்தை முன் வைத்தனர். ஆனால் உப்பு நீர் எரியுமா? உப்பு நீரை எரியக் கூடிய பொருளாக மாற்ற முடியுமா? என்ற கேள்விக்கு பதில் சொல்லாமலே ஆய்வு முடிந்தது. இன்றுவரை தீர்த்த நீரிலே தீபமேற்றுவது பற்றிய விளக்கத்தை எந்த விஞ்ஞானிகளாலும் கொடுக்க முடியவில்லை. இறைவனை வணங்கிவிட்டு ஒதுங்கி கொண்டது ஆய்வாளர் குழு.

இக்கோயில் இருக்கும் பிரதேசத்தை வன்னி மன்னர்கள் ஆட்சி செய்தார்கள். இந்த மன்னர்கள் காலத்தில் கோயில் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. கோயிலின் பெருமைகளை குறையாமல் இந்த மன்னர்கள் காத்தார்கள். பிற்காலத்தில் அந்நிய படையெடுப்பின் போது இந்த இடத்தை போர்த்துக்கேயர்கள் கைப்பற்றினார்கள். போர்த்துக்கேயர் இலங்கையை ஆண்டபோது முல்லைத்தீவுப் பகுதியும் அவர்களது ஆட்சிக்கு கீழ் இருந்தது. நெவில் என்ற போர்த்துக்கேய அதிகாரி ஒவ்வொரு முறையும் கோவிலை குதிரையில் தாண்டிச் செல்லும் போது அம்மனை பரிகாசம் செய்வார். ஒரு நாள் கோவில் அருகே வந்தவர் உங்கள் கடவுள் அதிசயங்கள் செய்வதாக கேள்விப்பட்டேன். அது உண்மையானால் எங்கே இப்போது செய்து காட்டட்டும் என்றார். அனிச்ச மரத்தின் கீழ் குதிரையில் அமர்ந்தபடியே அம்மனை அகங்காரத்தோடு தூற்றினார். உடனே தீடிரென அனிச்ச மரம் குளுங்கத் தொடங்கியது. காற்று பயங்கரமாக வீசத் தொடங்கியது. மரத்தில் இருந்த அனிச்சம் காய்கள் அம்மனைப் பரிகாசம் செய்த அதிகாரி மேல் விழுந்தன. வேறு யார் மீதும் இந்த காய் விழவில்லை. அனிச்சம் காய்களின் தாக்குதலால் காயமடைந்த அதிகாரி குதிரையிலிருந்து மூர்ச்சித்து கீழே விழுந்தான். அவன் அகங்காரம் அடங்கியது. அதன் பின் இன்றுவரை அந்த அனிச்ச மரம் பூப்பதும் காய்ப்பதும் இல்லை. இந்த அற்புத நிகழ்வை ஆலயத்தின் புராண வரலாற்றை சொல்லும் இன்றும் கோயிலில் படிக்கப்படும் பன்னிச்சை ஆடிய பாடற்சிந்து பாடல்கள் மூலம் அறியலாம். பிற்காலத்தில் பல அதிசயங்களை உணர்ந்த சிங்களவர்களும் வற்றாப்பளை ஆலயத்திற்கு யாத்திரை செல்லும் மரபை ஏற்றுக் கொண்டனர். வருடாந்த பொங்கல் பண்டிகையின் போது ​​சிங்களவர்களும் தமிழர்களும் வழக்கமான சடங்குகளில் பங்கேற்பது கண்ணகியின் பாரம்பரியத்தின் பகிரப்பட்ட கலாச்சார முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

சேரமன்னன் செங்குட்டுவன் தனது தலைநகராகிய வஞ்சியில் இமயமலையில் இருந்து கொண்டு வந்த கல்லில் கண்ணகிக்கு சிலை செய்து கோயில் அமைத்து பெருவிழா எடுத்தான். கிபி 178 இல் நடந்த அவ்விழாவிற்கு செங்குட்டுவனின் அழைப்பையேற்று அவன் நண்பணாகிய இலங்கை அரசன் கஜபாகு விழாவில் கலந்து கொண்டான். விழாவில் கலந்த கஜபாகு கண்ணகியின் அற்பதங்களைக் கண்டு வியந்தான். கஜபாகு கண்ணகியை செங்குட்டுவனைப்போல் நித்தியபூசை செய்து வலம் வந்து தன் நாட்டிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என்று அவன் கேட்டு பிரார்த்தித்தான். அவன் விரும்பியபடி எல்லாம் நடக்குமென அசிரீரி கேட்டு கஜபாகு உள்ளம் நெகிழ்ந்து கண்ணகி மேல் கூடிய நம்பிக்கை கொண்டான். இலங்கையில் கண்ணகி வழிபாட்டினை பரப்ப தன் விருப்பத்தை செங்குட்டுவனிடம் கஜபாகு தெரிவித்தான். செங்குட்டுவன் சந்தன மரத்தால் செய்த கண்ணகி சிலையையும் ஒரு கால் சிலம்பையும் சந்தன மரப்பேழையில் வைத்து கஜபாகுவிடம் கொடுத்தான். கஜபாகு கண்ணகி விக்கிரகத்துடன் இலங்கைக்குத் திரும்பும் போது தன்னுடன் பன்னிரண்டாயிரத்துக்கு மேற்பட்ட பல் குடிமக்களையும் அழைத்துச் சென்றான். இலங்கையில் கோயில் கட்டினான். இந்த கண்ணகி கோயில் வற்றாப்பாளை கோயிருக்கு சிறிது தூரத்தில் இருக்கிறது. இந்த செய்தியை கிபி 171 முதல் கிபி 193வரை அனுராதபுரத்தில் இருந்து ஆட்சி புரிந்த கஜபாகு என்ற அரசனால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது என இராஜவாளி என்ற சிங்கள நூல் கூறுகிறது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.