உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள ஹொன்னாவாரா தாலுக்காவில் உள்ள ஒரு சிறிய இடம் இடகுஞ்சி ஆகும். இங்கு இடகுஞ்சி கணபதி ஆலயம் உள்ளது. இடகுஞ்சி இடத்தின் முக்கியத்துவம் கந்தபுராணத்தின் சஹ்யாத்ரி காண்டில் குறிப்பிடப் பட்டுள்ளது. இடா என்றால் இடதுபுறம் குஞ்ச் என்றால் தோட்டம். சராவதி ஆற்றின் இடது கரையில் அமைந்திருப்பதால் இந்த இடத்திற்கு இடகுஞ்சி என்ற பெயர் வந்தது. இடகுஞ்சி கணபதி கோயில் 1500 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான கோயிலாகும். கோவில் சற்றே பெரியது. வினாயகர் சிலை கருங்கல்லாலானது. விநாயகர் சிலை நின்ற கோலத்தில் இரண்டு கைகளுடன் மிகக் குட்டையான கால்களுடன் தரையில் தாழ்வுடன் ஒரு கல் பலகையில் நிற்கிறார். ஒரு கையில் மோதகத்தையும் மற்றோரு கையில் பத்மத்தையும் (தாமரை பிடித்துள்ளார். மார்பின் குறுக்கே ஒரு மாலையை அணிந்துள்ளார். சிறிய மணிகளால் ஆன மாலையால் அலங்கரிக்கப்பட்டுள்ளார்.
துவாபர யுகத்தின் முடிவில் கடவுள் கிருஷ்ணர் தனது தெய்வீக வசிப்பிடத்திற்கு செல்ல பூமியை விட்டு வெளியேற நேரம் வந்து விட்டதாக எண்ணினார். கிருஷ்ணரும் பூமியை விட்டு செல்வதால் கலியுகத்தின் வருகையை கண்டு அனைவரும் பயந்தனர். கர்நாடகாவின் சராவதி நதிக்கரையில் உள்ள குஞ்சவனம் என்ற வனப் பகுதியில் வாலகில்ய முனிவர் கலியுகத்தின் அனைத்து தடைகளையும் சமாளிக்க கிருஷ்ணரின் உதவியை நாடி யாகங்கள் பிரார்த்தனைகள் மற்றும் வழிபாடுகளை செய்யத் தொடங்கினார். இந்த நேரத்தில் அவர் யாகம் செய்வதில் பல இடையூறுகளைச் சந்தித்து மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானார். எனவே அவர் நாரத முனிவரின் ஆலோசனையை நாடினார். யாகத்தை மீண்டும் தொடங்கும் முன் தடைகளை நீக்கும் விநாயகரின் ஆசீர்வாதத்தைப் பெறுமாறு நாரதர் வாலகில்யருக்கு அறிவுறுத்தினார்.
வாலகில்ய முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க நாரதரும் மற்ற முனிவர்களும் சேர்ந்து தேவதீர்த்தம் என்ற புதிய குளத்தை உருவாக்கினர்கள். நாரதர் விநாயகரின் அன்னை பார்வதியிடம் விநாயகரை அனுப்ப வேண்டும் என்று வேண்டினார். அர்ச்சனைகள் செய்யப்பட்டு விநாயகப் பெருமானைப் போற்றும் பாடல்கள் பாடப்பட்டன. அவர்களின் பக்தியால் மகிழ்ந்த விநாயகர் எந்த பிரச்சனையும் இல்லாமல் யாகங்களை நடத்த அவர்களுக்கு உதவ அந்த இடத்தில் இருக்க சம்மதித்தார். இந்த சந்தர்ப்பத்தில் மேலும் ஒரு ஏரி உருவாக்கப்பட்டு கோவிலுக்கு தண்ணீர் வர விநாயகர் தீர்த்தம் என்று பெயரிடப்பட்டது. அதே இடம் இப்போது இடகுஞ்சி என்று அறியப்படுகிறது அங்கு விநாயகர் கோயில் கிபி 4-5 ஆம் நூற்றாண்டுகளில் பக்தர்களால் கட்டப்பட்டது.