விநாயகருக்கு உள்ள மிகப்பெரிய குடைவறைக்கோயில். மூலவரான விநாயகர் கற்பக விநாயகர் என அழைக்கப்படுகிறார். தேசிவிநாயகப் பிள்ளையார் என்ற வேறு பெயரும் உள்ளது. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க அழகுள்ள விநாயகர் என்று பொருள். ஆறு அடி உயரத்தில் கம்பீரம்மாக வடக்கு நோக்கி உள்ளார் கற்பக விநாயகர். கோவில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது. இக்கோவில் தமிழ் நாட்டில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் குடைந்து கோவில் அமைந்துள்ளது. தென்னிந்தியாவில் அர்ஜுன வன திருத்தலங்கள் நான்கு இருக்கிறது. அர்ஜுனம் என்ற சம்ஸ்கிருதச் சொல்லுக்கு மருத மரம் என்று அர்த்தம். அதில் தமிழ் நாட்டில் மூன்றும் ஆந்திர மாநிலத்தில் ஒன்றும் இருக்கிறது. தமிழகத்தில் இருக்கும் மூன்றில் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலும் ஒன்று. இக் கோயிலின் தலவிருட்சமாக அர்ச்சுனா மரம் உள்ளது. இக்கோவில் இருக்கும் பிள்ளையார்பட்டியின் புராண பெயர்கள் எருகாட்டூர் அல்லது எக்காட்டுர் மருதங்குடி திருவீங்கைகுடி திருவீங்கைச்வரம் இராசநாராயணபுரம் மருதங்கூர் தென்மருதூர் கணேசபுரம் கணேசமாநகரம் பிள்ளை நகர் ஆகும். முருகனுக்கு தான் ஆறு படை வீடுகள் போல் விநாயகருக்கும் ஆறு படைவீடுகள் இருக்கின்றன. இத்தலத்தில் உள்ள கற்பக விநாயகர் சன்னதி விநாயகரின் ஐந்தாவது படை வீடாகும்.
கோவிலில் இரண்டு பெரிய ராஜகோபுரங்கள் உள்ளது. ஒன்று கிழக்கு வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது. ஏழு நிலைகளுடன் அமைந்த இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கல்லாலும் அதற்கு மேற்பட்ட பகுதிகள் செங்கல் மற்றும் சுதை கொண்டு எழுப்பப்பட்டுள்ளது. இரண்டாவது கற்பக விநாயகர் சந்நிதியின் முன்புறமாக இருக்கும் வடக்கு வாயிலில் விநாயகக் கோபுரம் எழுப்பப்பட்டுள்ளது. இது மூன்று நிலைகளுடன் காணப்படுகிறது. இக்கோபுரம் அதிட்டானம் முதல் கல்லாரம் வரை வெள்ளைக் கற்களைக் கொண்டும் அதன் மேல் எழுப்பப்பட்டுள்ள கோபுரத் தளங்கள் செங்கல்லைக் கொண்டும் எழுப்பப்பட்டிருக்கிறது. அலங்கார மண்டபத்தில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்கள் ஓவியக்கலைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருக்கிறது. விநாயகர் கோபுரத்திற்கு எதிரே வெளிப் பிரகாரத்தின் வட திசையில் விசாலமாக அமைந்த திருக்குளம் உள்ளது.
தெற்கு நோக்கியபடி சங்கர நராயணர் அருளுகிறார். சண்டீசன் கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்கள். மலையைக் கடைந்து செதுக்கிய பெரிய மகாலிங்கம் உள்ளது. திருவீசர் எனப்படும் இப்பெருமானுக்கு திருவீங்கைக்குடி மகாதேவர் என்ற பெயரும் உண்டு. சற்று வடக்கில் வெளிப்புறச் சுவரில் லிங்கோத்பவர் காட்சியளிக்கிறார். இங்கு திருமணம் நடைபெற வைக்கும் கார்த்தியாயினி அம்மன் சன்னதியும் பிள்ளை வரமளிக்கும் நாகலிங்கம் சுவாமி சன்னதியும் அனைத்து செல்வ வளங்களை அளிக்கும் பசுபதீசுவரர் சன்னதியும் உள்ளது. இக்குகைக் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் கிழக்கு நோக்கிய சந்நிதியாக அமைந்திருக்கிறது மருதீசர் சந்நிதி. சதுர வடிவ கருவறையின் நடுவே வட்ட வடிவமான ஆவுடையார் மீது லிங்க வடிவில் அமைந்துள்ள மருதீசர் அர்ஜுனவனேசர் என்ற பெயரிலும் வழங்கப்படுகிறார். இக் கருவறையைச் சுற்றியுள்ள புறச் சுவர்கள் சிற்பங்கள் எதுவுமின்றி நுட்பமான கட்டட வேலைப்பாடுகளுடன் மிக அழகாகவும் எளிமையாகவும் திகழ்கின்றன. மருதீசர் கோயிலின் மேல்சுற்றுப் பிரகாரத்தின் வடகிழக்குப் பகுதியில் வீற்றிருப்பவர் வாடாமலர் மங்கை. இவருடைய சந்நிதி தெற்கு முகமாகக் காட்சியளிக்கிறது. கருவறை நடுவே அம்மாள் பத்ம பீடத்தின் மீது இரண்டு கைகளுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறாள். வடக்கு கோபுர வாயிலின் உள்ளே கிழக்குப் பகுதியில் சிவகாமியம்மன் சந்நிதி உள்ளது. மகா மண்டபத்தின் வடக்குப் பகுதியில் நடராசர் சபையுள்ளது.
கோயிலின் அமைப்பு இருபகுதிகளாக அமைந்திருக்கிறது. கோயிலின் ஒரு பகுதி குடைவரைக் கோயிலாகவும் மற்றொரு பகுதி கற்றளி ஆகவும் அமைந்திருக்கிறது. பிள்ளையார்பட்டி கோயில் தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்களில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆறு அடி உயரமுள்ள கற்பக விநாயகரின் சன்னதி மலையைக் குடைந்து அமைக்கப்பட்டுள்ளதால் வினாயகர் சன்னதியை வலம் வர இயலாது.
குடைவரை கோயில்களை கட்டுவதில் சிறந்தவர்களாக விளங்கியவர்கள் பல்லவ மன்னர்கள். அவர்கள் வழி வந்த மகேந்திர வர்ம பல்லவ மன்னனால் கட்டப்பட்டதே இந்த கோயில் என்று ஆய்வுகள் கூறுகின்றன. 1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. ஏக்காட்டூர் கோன் பெருபரணன் என்கிற சிற்பியால் பிள்ளையாரின் உருவமும் சிவலிங்கத்தின் உருவமும் செதுக்கப்பட்டுள்ள தகவல் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது. 4ம் நூற்றாண்டில் பிள்ளையார் சிலையை செதுக்கி இருக்கலாம் என்று நம்மப்படுகிறது. இது போல் 14 சிலை உருவங்கள் இக் கோயிலில் உள்ளது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.
விநாயகரின் சிறப்புகள்:
- இங்கு பெருமானின் துதிக்கை வலம் சுழித்ததாக அமைந்திருக்கிறார்.
- சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குகிறார்.
- அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குகிறார்.
- வயிறு ஆசனத்தில் படியாமல் கால்கள் மடித்திருக்க அமர்ந்திருக்கிறார்.
- வலத்தந்தம் நீண்டும் இடத்தந்தம் குருகியும் காணப்படுகிறார்.
- வலக்கரத்தில் சிவலிங்கத்தைத் தாங்கியருள்கிறார்.
கோவில் திருவிழாக்களில் விநாயகருக்கும் சண்டிகேஸ்வரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். சண்டிகேஸ்வரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும். 9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. மகா அபிஷேகமும் நடத்தப்படும்.
ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஞ்ஞூரு வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிராகாரத்தில் வலம் வருவார். திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும் உமாதேவி உடனுறை சந்திரசேகரப் பெருமானும் திருவீதி உலா வருவார். பிள்ளையார் மருதங்குடி நாயனார் சந்நதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும். மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி உடனுறை நடராசப் பெருமான் திருவீதி உலா வருவார். ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியே இங்கு பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் திருவிழாவாக நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி கொடியேற்றம் நடக்கும். பிள்ளையார்பட்டி கோயிலின் சிறப்பாக விநாயகர் சதுர்த்தி தினத்தன்று முக்குறுணி அரிசியை கொண்டு தயாரிக்கப்படும் மிகப்பெரிய கொழுக்கட்டை விநாயகருக்கு படைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு அக்கொழுக்கட்டை ஊரார்களுக்கும் பக்தர்களுக்கும் அருட்பிரசாதமாக வழங்கப்படுகிறது. 10ம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவமும் உச்சிகால பூசையின் போது ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியமும் இரவு ஐம்பெருங்கடவுளரும் தங்க வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா வருவார்கள்.