மூலவர் வினாயகர். மூலஸ்தானத்தில் முழு முதற்கடவுளான கணபதியின் மடியில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கிறார். இவரை கணபதி தன் துதிக்கையால் அரவணைத்திருக்கிறார். இக்கோவில் கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது. விநாயகரின் சதுர்த்தியும் கிருஷ்ணரின் கோகுலாஷ்டமியும் இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. கோயில் சுற்றுப் பகுதியில் சாஸ்தா மகாவிஷ்ணு துர்க்கை அந்திமகா காவலன் யக்ஷி நாகர் சன்னதிகள் உள்ளன.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ளது மள்ளியூர். இங்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கணபதி மீது பக்தி கொண்ட ஒருவர் இக்கோவில் இருக்கும் இடத்தில் கணபதி சிலையை நிறுவி வழிபட்டு வந்தார். ஆர்யபள்ளி மனை வடக்கேடம் மனை என்று இரு குடும்பத்தினர் அந்தக் கணபதி சிலையைச் சுற்றிக் கட்டிடம் கட்டிப் பராமரித்து வந்தனர். பிற்காலத்தில் அந்த இரு குடும்பத்திலும் வறுமையும் துன்பங்களும் ஏற்பட அவர்களால் அந்தக் கோவிலை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. கோவிலில் மேற்கூரை இல்லாத நிலையிலும் அவர்கள் அங்கிருந்த கணபதியைத் தொடர்ந்து வழிபட்டு வந்தனர். அவர்களின் மரபு வழியில் வந்த சங்கரன் நம்பூதிரி என்பவர் குருவாயூரப்பன் மீது மிகுந்த பக்தி கொண்டவராக இருந்தார். அவர் தினமும் அங்கிருந்த கணபதி கோவிலின் முன்பு அமர்ந்து கிருஷ்ணன் பெருமைகளைச் சொல்லும் பாகவதத்தைப் பாராயணம் செய்து வந்தார். பின்னாளில் அவர் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் சிலை ஒன்றைச் செய்து கோவிலில் இருந்த கணபதியின் மடியில் வைத்து வழிபடத் தொடங்கினார். அதன் பின்னர் அந்தக் கோவிலில் வழிபட்டு வந்த இரு குடும்பத்தின் மரபு வழியினரும் வறுமை நீங்கி வளம் பெற்றனர். பின்பு கோவில் புதுப்பிக்கப்பட்டு அனைவரது வழிபாட்டுக்கும் கொண்டு வரப்பட்டது. இந்த ஆலய வழிபாட்டில் முக்குற்றி புஷ்பாஞ்சலி எனும் சிறப்பு வழிபாடு பிரசித்திப் பெற்றதாக உள்ளது. இந்த வழிபாட்டிற்காக முக்குற்றி எனப்படும் செடியை 108 எனும் எண்ணிக்கையில் வேருடன் பறித்து வந்து வாசனைத் திரவத்தில் மூழ்க வைத்து பின்னர் அதனை எடுத்து விநாயகருக்கான மந்திரங்களைச் சொல்லி வழிபாடு செய்கிறார்கள். இவ்வழிபாடு ஒரு நாளில் ஐந்து முறை நடத்தப்படுகிறது.
கிருஷ்ணரை மகிழ்விக்கும் நிகழ்ச்சியாக ஆண்டு தோறும் மகர விளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் தனியாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் இசையை இறைவனுக்கு அர்ப்பணம் செய்து இங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. தை மாதம் மூலம் நட்சத்திர நாளில் பாகவத சப்தக யஜ்னம் எனும் சிறப்பு நிகழ்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் எட்டு நாட்கள் நடைபெறும் ஆண்டுத் திருவிழா சித்திரை முதல் நாள் வரும் விசுத் திருவிழா நாளில் வண்ண மயமான ஆறாட்டு விழாவுடன் நிறைவடைகிறது. ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் பாகவத பிரபாசனம் அகண்ட நாம ஜெபம் போன்ற சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்பெற்று வருகின்றன.