மூலவர் கைலாசநாதர். லிங்க வடிவில் குருவின் அம்சமாக அருள்பாலிக்கிறார். அம்பாள் சிவகாமி. தெற்கு நோக்கிய தனி கருவறையில் சிவகாமி அம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்திய படியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படி நின்ற கோலத்தில் புன்சிரிப்புடன் காட்சி தருகிறாள். தீர்த்தம் தட்சிணகங்கை. ஊர் திருநெல்வெலி அருகே முறப்பநாடு. சூரபத்மனும் மற்ற அரக்கர்களும் செய்த கொடுமையை தாங்க முடியாத முனிவர்கள் இறைவனிடம் முறையிட்ட இடம் என்பதால் முறையிட்ட நாடு என்று பெயர் பெற்று பின்னர் அது முறப்பநாடு என மறுவியதாகவும் முறம்பு என்ற தடித்த கல் வகைகள் நிறைந்த மேடான பகுதியாக இருந்ததால் முறம்ப நாடு என அழைக்கப்பட்டு பின்னர் முறப்ப நாடாக மறுவியதாகவும் முற்காலத்தில் இங்கு வாழ்ந்த பெண்ணொருத்தி தன் வீட்டு முற்றத்திற்கு வந்த புலியை முறத்தால் அடித்து விரட்டியதால் முறப்பநாடு என்ற பெயர் வந்ததாகவும் மூன்று வகை பெயர்க் காரணங்கள் கூறப்படுகின்றன. புராண பெயர் கோவில்பத்து. தலமரம் பலாமரம். தீர்த்தம் தாமிரபரணி. இக்கோயிலில் சுவாமிக்கு எதிரேயுள்ள நந்தி குதிரை முகத்துடன் இருக்கிறது. சோழ மன்னன் மகளின் குதிரை முகமாக பிறந்தது. அவளுக்கான முற்பிறவி பாவத்தை இந்த நந்தி ஏற்றுக் கொண்டதால் இந்த நந்தி குதிரை முகத்துடன் இருப்பதாக தலவரலாறு உள்ளது. இக்கோயில் தாமிரபரணியின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. ஒன்பது கைலாய தலங்களில் இத்தலம் நடுவில் இருக்கிறது. எனவே இத்தலம் நடுகைலாயம் என்று பெயர் பெற்றது. அகத்தியரின் சீடரான உரோமச மகரிஷிக்கு இறைவன் இத்தலத்தில் குருவாக காட்சி கொடுத்தார். இக்கோயிலில் சிவபெருமானே தட்சிணா மூர்த்தியாகத் தென் திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.
கோயில் உள்ளே நுழைந்தவுடன் பத்து தூண்களை கொண்ட பந்தல் மண்டபம் உள்ளது. அங்குக் கொடிமரம் பலிப்படம் நந்தி ஆகியவை உள்ளன. அதனை தாண்டி அர்த்த மண்டபமும் அதனை தாண்டிக் கிழக்கு நோக்கிய சுவாமி கைலாசநாதர் கருவறை உள்ளது. வெளியே தெற்கு நோக்கிய தனி கருவறையில் சிவகாமி அம்மை காட்சி தருகிறாள். கோவிலின் உள்சுற்று பிரகாரத்தில் முறையே அதிகார நந்தி சூரியன் ஜுர தேவர் நால்வர் அறுபத்து மூவர்கள் தெற்கு திசை நோக்கிய தட்சணாமூர்த்தி பஞ்ச லிங்கங்கள் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் கஜலட்சுமி சனீஸ்வரர் சண்டிகேஸ்வரர் நடராஜர் சிவகாமி அம்மை சந்திர பகவான் ஆகியோர் பரிவார மூர்த்திகளாகக் காட்சி தருகின்றார்கள். கன்னிமூலை விநாயகருக்கு தனி சன்னதி இருக்கிறது. இவரது சன்னதிக்கு முன்புறத்தில் துவாரபாலகர்கள் போல இரண்டு விநாயகர்கள் இருக்கிறார்கள். இங்குள்ள பைரவர் சன்னதியில் இரண்டு பைரவர்கள் உள்ளனர். நாய் வாகனத்துடன் காட்சி தருபவர் கால பைரவர். வாகனம் இல்லாதவர் வீர பைரவர். கோயிலுக்கு எதிரே ஆற்றின் மறு கரையில் தசாவதார தீர்த்த கட்டம் உள்ளது. இங்கு மகா விஷ்ணுவின் பத்து அவதாரங்களான தசாவதாரச் சிற்பம் ஒரே கல்லில் வடிக்கப்பட்டு உள்ளது.
முற்காலத்தில் வாழ்ந்த சோழநாட்டு மன்னன் ஒருவனுக்கு முன்வினை பயனால் குதிரையின் முகம் கொண்ட பெண் குழந்தை பிறந்தது. தனது மகளின் அந்த நிலைமையைக் கண்டு வருந்திய மன்னன் பல கோவில்களுக்குச் சென்று வழிபட்டு வந்தான். அவனுடைய தூய பக்திக்கு இறங்கி அருள் செய்யத் திருவுள்ளம் கொண்ட சிவபெருமான் அவனது கனவில் தோன்றி இந்த முறப்பநாடு ஸ்தலத்திற்கு சென்று இங்குள்ள தாமிரபரணியில் நீராடி இங்கு லிங்க வடிவிலுள்ள தன்னை வணங்கிடுமாறு கூறினார். அதன் படியே மன்னனும் தன் மகளை அழைத்துக் கொண்டு இங்கு வந்து தாமிரபரணியில் நீராடி இறைவனை வணங்க மன்னரின் மகளுக்கு இருந்த குதிரை முகம் மறைந்து சுய முகம் தோன்றியது. இதனால் மகிழ்ந்த சோழ மன்னன் லிங்க வடிவிலுள்ள சிவபெருமானுக்கு இங்கு கோயிலை கட்டினான். வல்லாள மகராஜா இக் கோயிலை பெரிதாகக் கட்டி பூஜை காரியங்கள் சிறப்பாக நடைபெற நிலபுலன்கள் எழுதி வைத்தான். நவகைலாய தலங்களில் ஐந்தாவதான இக்கோயில் நவக்கிரகங்களில் குருவிற்குரிய தலமாக விளங்குகிறது. நவகைலாயங்களில் மற்ற தலங்களுக்கு இல்லாத சிறப்பு இந்த தலத்திற்கு உண்டு. காசியில் கங்கை நதி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது. அதே போல முறப்பநாட்டிலும் தாமிரபரணி வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. எனவே இதை தட்சிணகங்கை என்று பெயர் பெற்றது. இங்கு குளித்தால் கங்கையில் குளித்ததற்கு ஈடானது.
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் ஐந்தாவதான இக்கோயில் குருவுக்கு உரியது. குரு தலம் என்றும் குரு கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.
திருவைகுண்டம் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயிலில் உள்ள கலியாணகுறடு என்ற மண்டபத்தில் நவகைலாயங்கள் பற்றிய செய்திகளும் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளது. விஜயநகர பேரரசின் தளபதி விட்டலராயன் இத்திருகோயிலுக்கு வந்து வழிபட்டதை விட்டிலாபுரம் கல்வெட்டு கூறுகிறது. இந்தக் கைலாசநாதரை மிருகண்டு மகரிஷி மார்க்கண்டேயன் மற்றும் காஞ்சனமாலை ஆகியோர் வழிபட்டுள்ளார்கள்.