தீர்த்தீஸ்வரர் கோயில்

மூலவர் தீர்த்தீஸ்வரர். உற்சவர் தீர்த்தீஸ்வரர். கோயிலின் மூலவராகவும் உற்சகராகவும் தீர்த்தீஸ்வர சுவாமி அருள்பாலிக்கிறார். பங்குனி அமாவாசை முதல் மூன்று நாட்கள் தீர்த்தீஸ்வரர் மீது சூரியக்கதிர் படர்ந்து தனது வழிபாட்டை செய்கிறது. அம்பாள் திரிபுர சுந்தரி. தீர்த்தீஸ்வரர் சன்னதியும் திரிபுர சுந்தரி தேவியின் சன்னதியும் கிழக்கு திசையை நோக்கி அமைந்திருக்கிறது. தல விருட்சம் மகிழம் மரம். ஆலயத்தின் தல விருட்சமான மகிழ மரத்திற்கு அடியில் மாழ்வினை தீர்த்தர் சன்னதி உள்ளது. அவருடன் வீரபத்திரர் விசாலாட்சி மகாவிஷ்ணு ஒன்றாக அருள்பாலிக்கிறார்கள். திருவள்ளூரில் உள்ள புகழ்பெற்ற வீர ராகவப் பெருமாள் கோயிலை ஒட்டி அமைந்துள்ள பழமையான சிவன் கோவில் இது. வீர ராகவப் பெருமாள் கோயிலின் பெரிய கோயில் குளத்தை நோக்கி இக்கோயில் அமைந்துள்ளது. மூர்த்தி தீர்த்தம் தலம் என மூன்றிலும் சிறந்து விளங்கும் இத்தலம் புராணத்தில் தீர்த்தபுரி என்று அழைக்கப்பட்டது. பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில் 18 ஆம் நூற்றாண்டில் மீண்டும் புணரமைத்து கட்டப்பட்டது.

கருவறையைச் சுற்றியுள்ள சுவரில் விநாயகர் தட்சிணாமூர்த்தி விஷ்ணு பிரம்மா துர்க்கை மற்றும் சண்டிகேஸ்வரரின் கோஷ்ட உருவங்கள் உள்ளன. வரசித்தி விநாயகர் வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர் தர்ம சாஸ்தா பால தண்டாயுதபாணி நவக்கிரகம் நடராஜர் கால பைரவர் சன்னதிகளும் உண்டு. மூன்று நிலை ராஜகோபுரத்தை கொண்டது இக்கோயில். சிவனுக்கும் அம்பாளுக்கும் இடையே சுப்பிரமண்யர் சன்னதி உள்ளது. இந்த அமைப்பு சோமாஸ்கந்தர் அமைப்பு ஆகும்.

மது கைடபர் என்ற அரக்கர்கள் ரிஷிகளுக்கு இடையூறு செய்து வந்தனர். இவர்களை அழிக்க திருமாலிடம் முறையிட்டனர் ரிஷிகள். திருமால் சக்ராயுதத்தை ஏவி அரக்கர்களை வதம் செய்தார். வேதத்தில் சிறந்த அவர்களை அழித்ததால் திருமாலுக்கு தோஷம் ஏற்பட்டது. இதனால் இங்கு வந்து தீர்த்தீஸ்வரரை வேண்டி தோஷம் நீங்கப்பெற்றார் திருமால். இதனால் இறைவன் மால்வினை தீர்த்தர் என்று அழைக்கப்படுகிறார். ஒரு சமயம் காஞ்சி மஹாபெரியவர் இங்கு ஒரு மண்டலம் தங்கி சுவாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் மகிழம் மரம் மால் வினை தீர்த்தரை வலம் வந்து வணங்கினால் மரத்தில் இருந்து மகிழம் பூ உதிர்வதுபோல் பக்தர்களது வாழ்விலும் துன்பங்கள் உதிரும் என்று அருளினார். சில காலம் முன்பாக பௌர்ணமி தினங்களில் சுவாமிக்கு செய்யப்படும் அபிஷேக தீர்த்தத்தை கனக குளிகை காலத்தில் ஓநான் வேலி சித்தர் என்பவர் எடுத்து மற்ற புண்ணிய தீர்த்தங்களோடு சேர்த்து திருவண்ணாமலையில் கிரிவல பாதையில் தீர்த்த பிரசாதமாக வழங்கினார். இந்த தீர்த்தத்தை பருகியவர்கள் தங்களது உடலில் உள்ள நோய்கள் பல நீங்கப் பெற்றார்கள்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.