மூலவர் கைலாசநாதர். கிழக்கு நோக்கி லிங்க வடிவில் காட்சி தருகிறார். அம்பாள் சிவகாமி தெற்கு நோக்கிய தனி கருவறையில் நின்ற கோலத்தில் ஒரு கையில் மலர் ஏந்தியும் மறு கையை கீழே தொங்கவிட்ட படியும் இடை நெளித்தும் அழகிய புன்சிரிப்புடனும் காட்சித் தருகிறாள். நாகத்தின் கீழ் ஆனந்த கௌரி அம்மன் தனியாக அருள்பாலிக்கிறார். இவளுக்கு சர்ப்பயாட்சி நாகாம்பிகை என்றும் பெயர் உள்ளது. தல விருட்சம் வில்வம். தீர்த்தம் தாமிரபரணி. இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கோடகநல்லூர். புராண பெயர் கார்கோடக நல்லூர். பெயர் மருவி கோடக நல்லூர் என்று தற்போது விளங்கி வருகிறது. இத்தலம் நவகைலாயங்களில் ஒன்று இது செவ்வாய் தலமாகும். கொடிமரம் பலிபீடம் பரிவார மூர்த்திகள் என எதுவுமே இல்லாத வித்தியாசமான கோயில் இது. சுவாமியே பிரதானம் என்பதால் இக்கோவில் இந்த அமைப்பில் உள்ளது. துவாரபாலகர்களின் இடத்தில் கல்யாண விநாயகரும் முருகரும் துவார பாலகர்களாக இருக்கின்றனர். நவ கைலாய தலங்களிலேயே பெரிய மூர்த்தி இவர். எனவே இவருக்கு எட்டு முழத்தில் எட்டு வேட்டிகளை அணிவித்து அலங்கரிக்கிறார்கள். இக்கோயிலில் உள்ள நந்திக்கு தாலி கட்டி பெண்கள் வழிபடுகிறார்கள். இக்கோயிலைச் சுற்றி இங்கு கரு நீல வண்ண பாம்புகள் நிறைந்து காணப்பட்டாலும் நல்லோரை தீண்டுவதில்லை.
ஒரு முனிவர் இப்பகுதியில் தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக அவரது மகனும் இருந்தார். அவர் விறகு பொறுக்க காட்டிற்குள் சென்றுவிட்டார். அப்போது ஒரு ராஜகுமாரன் அங்கு வந்தான். அவனுக்கு ராஜ்ய அபிவிருத்திற்காக யாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. நிஷ்டையில் இருந்த முனிவரை எழுப்பி யாகம் செய்யும் முறை பற்றி கேட்டறியலாம் என எண்ணினான். ஆனால் எவ்வளவோ எழுப்பியும் அவர் கண் திறக்கவில்லை. கோபமடைந்த ராஜகுமாரன் ஒரு இறந்த பாம்பை எடுத்து முனிவரின் கழுத்தில் போட்டுவிட்டு சென்றுவிட்டான். நிஷ்டையில் இருந்ததால் முனிவருக்கு பாம்பு கழுத்தில் கிடப்பது தெரியவில்லை. விறகு பொறுக்கச் சென்ற மகன் திரும்பி வந்தார். தன் தந்தையில் கழுத்தில் பாம்பு கிடப்பதை பார்த்து கோபமடைந்தார். இந்த செயலை செய்தது ராஜகுமாரன் என்பது தெரிய வந்தது. உடனே அரண்மனைக்கு சென்று என் தந்தையின் கழுத்தில் போடப்பட்ட செத்த பாம்பு உயிர்பெற்று உன் தந்தையான பரிக்ஷித்து மன்னனை தீண்டும் என சாபமிட்டுவிட்டு சென்று விட்டார். சில நாட்கள் கழித்து மகாராஜாவின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடர்கள் ராஜாவுக்கு சர்ப்பதோஷம் இருப்பதாக கூறினர். பரிக்ஷித்து ராஜா பாம்பிடம் இருந்து தன்னை காத்துக் கொள்ள மிகவும் மறைவான இடத்தில் ஒரு மண்டபம் கட்டி வசித்தார். அதன் உள்ளே ஒரு எறும்புகூட புக வழியில்லை. ஒரு நாள் பரிக்ஷித்து ராஜா மாம்பழம் சாப்பிடும்போது உள்ளே குட்டியாக இருந்த கரு நீல வண்ண பாம்பு பழத்தினுள் இருந்து வெளிப்பட்டு ராஜாவை சாபப் படியும் கர்ம வினைப் படியும் தீண்டியது. இதனால் மகாராஜா இறந்து விடுகிறார்.
கார்கோடகன் என்னும் அந்த பாம்பு ஒருநாள் தான் வசித்த இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாட்டிக் கொண்டது. அப்போது அந்த வழியாக சூதாட்டத்தில் நாட்டையும் சொத்தையும் இழந்த நள மகாராஜா சோகத்தில் நடந்து வந்து கொண்டு இருந்தார். கார்கோடகன் பாம்பு தீயில் மாட்டிக் கொண்டதை பார்த்த நள மகாராஜா அந்த கார்கோடகன் பாம்பை உயிருடன் மீட்டு காப்பாற்றுகிறார். தன்னை காப்பாற்றியதற்கு பிராயச்சித்தமாக கார்கோடகன் பாம்பு நள மகாராஜாவை தீண்டி உருமாற்றியது. இதனால் நள மகாராஜா நாட்டு மக்களின் கண்களுக்கு தெரியாதவராக உருமாறினார். நள மகாராஜா உருமாறியதால் அவரது மனைவி தமயந்திக்கு கூட நள மகாராஜாவின் உருவம் தெரியவில்லை. இதனால் நள மகாராஜா நாட்டை இழந்து விட்டு எங்கோ சென்று விட்டார் என்று கருதினார். அந்த சமயத்தில் தேர் ஓட்டுவதில் மிகுந்த திறமை படைத்த நள மகாராஜா வீமராஜாவிடம் தேரோட்டியாக வேலைக்கு சேர்கிறார். நளன் வீமராஜாவிற்கு தேர் ஓட்டுவதை பார்த்த தமயந்தி உருவில் நளனை தெரியாவிட்டாலும் அவன் தேர் ஓட்டும் விதத்தை பார்த்து அவன் தான் தனது கணவன் என்பதை உறுதி செய்து கொண்டாள். பின்னர் நளனும் தமயந்தியும் ஒருவரையொருவர் பார்த்து சம்பாஷனை செய்து கொண்டனர். இதையறிந்த வீமராஜா நளனையும் தமயந்தியையும் மீண்டும் சேர்த்து வைத்தார். நளன் ஏழரை ஆண்டுகள் கழித்து மீண்டும் ராஜாவாக பட்டம் சூட்டிக் கொண்ட பின்னர் கார்கோடகன் பாம்பு மீண்டும் நளனை தீண்டி பழைய உருவத்திற்கு மாற்றியது.
பரிக்ஷித்து மன்னனையும் நளனையும் தீண்டிய பாவம் நீங்க விஷ்ணுவை நோக்கி அந்த கரு நீல வண்ண கார்கோடகன் பாம்பு தியானம் செய்தது. விஷ்ணு அங்கு தோன்றி இக்கோவிலில் உள்ள சிவபெருமானை வழிபட்டால் பாவம் நீங்கும் என்றார். அதன்படி சிவனை வழிபட்ட பாம்பு சாப விமோசனம் பெற்றது. பாம்பின் பாவத்தை போக்க சிவன் கைலாயத்தில் இருந்து வந்ததால் கைலாசநாதர் என்னும் பெயர் பெற்றார். கைலாசநாதர் கோயில்கள் பல இடங்களில் அமைக்கப்பட்டன. அதில் இந்தக் கோயிலும் ஒன்று. அங்காரகன் இங்கு சிவனை வழிபட்டார். அதனால் இது செவ்வாய் பரிகார தலமாயிற்று.
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் மூன்றாவது இக்கோயில் அங்காரகன் என்று அழைக்கப்படுகின்ற செவ்வாய்க்கு உரியது. செவ்வாய் தலம் என்றும் அங்காரக கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.