முருடேஸ்வர் கோயில்

முருடேஸ்வர் கோவில் மிகவும் பழமையான கோயில். கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பட்கலா தாலுகாவில் உள்ள கடற்கரையில் உள்ள ஒரு கோயில். இக்கோயில் அழகிய மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கும் அரபிக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ளது. மூன்று பக்கம் கடல் சூழ்ந்த கந்துக மலையின் மீது அமைந்துள்ளது. சாளுக்கிய மற்றும் கடம்ப சிற்பங்களைக் கொண்டுள்ளது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இக்கோயில் சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது. முருதேஸ்வரா என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ மிருதேச லிங்கமே பிரதான மூல லிங்கமாகும். இந்த லிங்கமானது இறைவன் ராவணனுக்கு கொடுத்த ஆத்ம லிங்கத்தின் ஒரு பகுதி ஆகும். தரை மட்டத்தில் இருந்து சுமார் இரண்டு அடி கீழே இருப்பதாக கோயில் புராண வரலாறு சொல்கிறது. மூலஸ்தானத்தில் லிங்கத்தை விளக்கு வெளிச்சத்தில் மட்டுமே தற்போது தரிசிக்கலாம். மூலஸ்தானத்தை தவிர கோயில் முழுவதுமாக நவீனப் படுத்தப்பட்டுள்ளது. 1977ம் ஆண்டு கோவிலுக்கு அருகில் 5 கோடி செலவில் 123 அடிகள் / 37 மீட்டர்கள் உயரம் சிவன் சிலை இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 20 அடுக்குகள் கொண்ட 249 அடிகள் உயரம் கொண்ட ராஜகோபுரம் 2008 இல் கட்டி முடிக்கப்பட்டது.

இக்கோவிலுக்கு பின்பகுதியில் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சிவன் சிலை 123 அடி உயரத்தில் இருக்கிறது. இதன் எதிரில் ராட்சத நந்தி உள்ளது. நேபாளத்தில் 143 அடி உயரத்தில் கைலாஷ்நாத் மகாதேவர் சிலை உலகிலேயே பெரிய சிவன் சிலை ஆகும். கணபதி ஆஞ்சநேயர் நாகர் சுப்பிரமணியர் நவக்கிரகம் தத்தாத்ரேயர் சன்னதிகள் உள்ளன. இங்கு சிவன் பார்வதியை ராமர் சீதா லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர் பூஜிப்பது போன்று சிலை வடிக்கப்பட்டுள்ளது. சனீஸ்வர பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. முருடேஸ்வர் சன்னதியில் அணையா விளக்கு உள்ளது. இதில் எண்ணெய் ஊற்றி காசு போட்டு பக்தர்கள் தங்கள் முகத்தை எண்ணெயில் பார்க்கின்றனர்.

இலங்கையை ஆட்சி செய்த அசுரர்களின் அரசன் ராவணன். சிவனின் சக்திகள் அனைத்தும் சேர்ந்த ஒரு ஆத்ம லிங்கம் வேண்டும் என்று ஆசைப்பட்டு அதன் மூலமாக அழியா வரம் பெற வேண்டும் என நினைத்து சிவனை நோக்கி கடும் தவம் இருந்தார். அவரது தவம் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு ஆத்ம லிங்கத்தை கொடுத்து சென்று சேரும் இடம் வரை இந்த லிங்கத்தை எங்கும் கீழே வைக்க வேண்டாம் என்று கூறினார். ஆத்ம லிங்கத்தை பெற்றுக் கொண்ட ராவணன் இலங்கை திரும்பிக் கொண்டிருந்தான். இதனை அறிந்த நாரத முனிவர் ஆத்ம லிங்காத்தை வைத்து ராவணன் அழியா வரம் பெற்று விட்டால் ராவணனால் பூமிக்கு அழிவு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணர்ந்தார். எனவே விநாயகரை அணுகி ஆத்ம லிங்கத்தை ராவணன் இலங்கை கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார். இராவணன் தினமும் சூரியன் மறையும் நேரம் தவறாமல் பிரார்த்தனை செய்யும் வழக்கத்தை வைத்திருந்தார். இதனை அறிந்த விநாயகர் விஷ்ணுவை உதவிக்கு அழைத்தார். இராவணன் இலங்கை செல்லும் வழியில் விஷ்ணு தனது சுதர்சன சக்கரத்தை பயன்படுத்தி சூரிய ஒளியை மறைத்தார். மாலை வந்து விட்டது என்று நினைத்த இராவணன் மாலை வழிபாடு செய்ய நினைத்தார். அப்பொழுது விநாயகர் ஒரு சிறுவன் வேடத்தில் அங்கு தோன்றினார்.

இராவணன் தனது பூஜை முடித்து வரும் வரை ஆத்ம லிங்கத்தை வைத்து கொள்ள கேட்டார். விநாயகர் தான் சிறுவன் என்றும் இத்தனை எடை கொண்ட லிங்கத்தை நீண்ட நேரம் வைத்திருக்க முடியாது ஆகவே என்னால் இந்த எடையை தூக்க முடியாமல் இருக்கும் போது மூன்று முறை உங்களை அழைப்பேன். நீங்கள் வரவில்லை என்றால் ஆத்ம லிங்கத்தை தரையில் வைத்து விடுவேன் என்று கூறினார். இதற்கு சம்மதம் தெரிவித்த ராவணன் ஆத்ம லிங்கத்தை விநாயகரிடம் கொடுத்தார். ராவணன் பூஜை முடித்து மீண்டும் திரும்பி வருவதற்கு முன்பாகவே விநாயகர் மூன்று முறை அழைத்தார். ராவணன் வரவில்லை எனவே ஆத்ம லிங்கத்தை கீழே வைத்து விட்டார். பின்னர் விஷ்ணு அவரது சுதர்சன சக்கரத்தை அழைத்துக் கொள்ள இருள் நீங்கி மீண்டும் பகல் வந்தது. ராவணன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து ஆத்ம லிங்கத்தை தனது வலிமையால் பிடுங்க முயற்சி செய்தார். அவரது முயற்சியில் ஆத்ம லிங்கம் ஐந்து துண்டுகளாக உடைத்தது. கோபத்தில் அதனை வீசினார். ஒவ்வொரு துண்டும் ஒவ்வொரு இடத்தில் விழுந்தது. அதில் ஒரு துண்டு முருதேஸ்வர் கோயில் உள்ள இந்த இடத்தில் விழுந்தது. இந்த இடத்தில் முருடேஸ்வர் கோயில் கட்டப்பட்டது.

வினாயகரால் ஆத்ம லிங்கம் வைக்கப்பட்ட இடம் ஒன்றும் ஒரு துண்டு விழுந்த இடத்தில் முருடேஸ்வர் கோயிலும் ஒரு துண்டு விழுந்த இடத்தில் சஜ்ஜேஸ்வர் கோயிலும் ஒரு துண்டு விழுந்த இடத்தில் குணேஸ்வர் கோயிலும் ஒரு துண்டு விழுந்த இடத்தில் தாரேஸ்வர் கோயிலும் ஆக ஐந்து இடங்களில் இந்த லிங்கத்தின் ஐந்து துண்டுகள் இருந்தது. இந்த ஐந்து இடத்தையும் வாயு பகவான் பஞ்ச சேத்திரங்கள் என்று அழைக்கப்பட வேண்டும் என்று அறிவித்தார்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.