திருமூலநாதர் திருக்கோயில் திருச்சி

மூலவர் திருமூலநாதர் சுயம்பு வடிவாக அருள்பாலிக்கிறார். சப்த ரிஷிகள் இங்கு பிரார்த்தனை செய்து ஞானம் பெற்றதினால் இறைவன் ஞானபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். அம்மாள் குங்கும சுந்தரி. அம்மனின் வாகனமாக நந்தி விளங்குகிறார். கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூர் பங்குனி ஆற்றங்கரையில் இக்கோயில் உள்ளது. முகப்பைத் தாண்டியதும் அகன்ற பிரகாரமும் மகாமண்டபமும் உள்ளன. மகாமண்டபத்தினுள் உள்ளே அம்பாள் குங்கும சுந்தரியும் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் கிபி 7 ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட கோயில் இது. திருஞானசம்பந்தர் இங்கு சில நாள் தங்கியிருந்து திருமூலநாதரை வணங்கி சென்றுள்ளார். தீர்த்தம் பங்குனி தீர்த்தம். தல மரம் வில்வம். இம்மரம் பித்ரு சாப விமோசன தலமரமாக விளங்கி வருகிறது. தனது கணவர் உயிர் பெற்று மீண்டும் எழுவதற்கு ரதிதேவி தவம் செய்த திருக்கோயிலான பூவாளூர் திருமூலநாதர் திருக்கோயிலுக்கு மன்மதபுரம் என்றொரு பெயரும் உண்டு. பண்டைய காலத்தில் பூக்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக இத்திருக்கோயில் இருந்ததால் பூவாளியூர்  என்றழைக்கப்பட்டது. பின்னர் அது மருவி பூவாளூர் என்று மாறியது.

இக்கோயிலில் இறைவன் கல்யாண திருக்கோலத்தில் இருப்பதால் இறைவியின் சன்னதியும் இறைவன் சன்னதிக்கு இடதுபுறத்திலேயே அமைந்துள்ளது. இறைவன் இறைவியின் சன்னதிகள் இணைந்து அமைந்துள்ளதால் பிரகாரம் வலம் வரும்போது இரண்டு சன்னதிகளையும் சேர்த்தேதான் சுற்றியாக வேண்டும். தனியே சுற்ற இயலாது. மண்டபத்தினுள் 63 நாயன்மார்கள் வடக்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். தட்சிணாமூர்த்தி தனி சன்னதியில் உள்ளார். மஹாலிங்கம் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார். வெள்ளை வாரண விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது. பாலதண்டாயுதபாணி கெஜலட்சுமி ஜேஷ்டாதேவி ஆகியோர் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கின்றனர். சண்டிகேஸ்வரர் துர்க்கை அம்மன் சண்டிகேஸ்வரி தனி சன்னதிகள் உள்ளது. நடராஜர் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். நவகிரகம் பைரவர் சனீஸ்வரர் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளன. மேலும் 12 திருமுறைகள் புத்தகங்களை கொண்டு திருமுறை கோயில் இங்கு உள்ளது.

கோயில் 130 அடி அகலமும் 170 அடி நீளமும் கிழக்கு நோக்கியவாறு நான்கு பிரகாரங்களைக் கொண்டுள்ளது. கிழக்கு நோக்கிய கோவிலில் மூன்று நிலை கோபுரம் உள்ளது. கோவில் வளாகம் பெரியது. கோயில் கட்டிடக்கலை பாணியில் இருந்து கோயில் சோழர் காலத்தைச் சேர்ந்தது என்று நாம் கருதலாம். கோஷ்ட மூர்த்திகளாக நர்தன கணபதி தட்சிணா மூர்த்தி லிங்கோத்பவர் பிரம்மா துர்க்கை ஆகியோர் காணப்படுகின்றனர். தட்சிணா மூர்த்தி மற்றும் விநாயகர் சிலைகள் சமீப காலத்தில் செதுக்கப்பட்டதாகத் தோன்றினாலும் பழமையானதாகத் தெரிகிறது. அம்மன் சன்னதியின் மகா மண்டபத்தில் தனி சன்னதியில் 12 கரங்களுடன் மயிலின் மீது அமர்ந்த சண்முகரின் சிறிய சிலை உள்ளது. இக்கோயிலின் முருகப்பெருமானை அருணகிரிநாதர் பாடியிருக்கிறார். கிராமத்தின் கிராம தெய்வமான வாக்குவாலம்மன் என்ற சிறிய கோயில் பிரதான கோயிலின் நுழைவாயிலில் அமைந்துள்ளது. இரண்டு முக்கிய சன்னதிகளைச் சுற்றியுள்ள பெரிய பிரகாரத்தில் சுவாரஸ்யமான சிற்பங்களுடன் கூடிய பல தூண்கள் உள்ளன.

கோயிலுக்கு முன்பு பங்குனி ஆற்றங்கரையில் கயா பல்குனி ருத்ர சித்தர் சன்னதி உள்ளது. இங்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று பிதுர் ஹோமம் நடைபெறுகிறது. பிதுர்க்களே இத்தலத்திற்கு நேரில் வந்து யாக ஆகுதிகளை ஏற்று ஆசிர்வதிப்பதினால் இத்தலம் தென்னிந்திய கயா என்று அழைக்கப்படுகிறது. யாகம் செய்ய வசதி இல்லாதவர்கள் தலத்திற்கு வந்து கோயிலை தூய்மை படுத்தும் உழவார திருப்பணிகளில் பலருடன் சேர்ந்து செய்தால் பிதுர் ஹோமம் நடத்திய பலன் கிடைக்கும். தீயச்செயல்கள் செய்து அதற்கு பிராயசித்தம் தேடுபவர்கள் பங்குனி மாதம் ஆற்றங்கரையை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட உடல்சுத்தி உள்ளம்சுத்தி புத்திசுத்தி மனசுத்தி அறிவுசுத்தி ஆகிய ஐந்து சுத்திகளும் கிடைக்கும். ஒரு ரிஷி தன் முன்னோர்களுக்கு சடங்குகள் செய்ய விரும்பினார். அப்போது அங்கு நதி இல்லாததால் கயாவில் நடத்த நினைத்தார். இந்த இடத்தை விட்டுச் செல்வதற்கு முன் அவர் இந்த கோயிலில் சிவனைப் பிரார்த்தனை செய்தார். இறைவன் தனது சிலம்பை எடுத்து வீசினார். உடனே அந்த இடத்தில் கங்கை ஓடத் தொடங்கியது. உடனே ரிஷி அந்த இடத்திலேயே தான் செய்ய வேண்டிய முன்னோர்க்கு உண்டான சடங்கை செய்தார். அன்று முதல் இக்கோயில தென்னகத்தின் கயாவாக விளங்குகிறது.

தேவர்களுக்கு அசுரர்கள் தொல்லை கொடுத்துக் கொண்டே இருந்தனர். தேவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாமல் நேரடியாக சிவபெருமானிடம் சென்று தங்களைக் காப்பாற்றுமாறு முறையிட்டனர். முருகன் வருவார் காப்பாற்றுவார் எனக் கூறிவிட்டு மீண்டும் தவத்தில் அமர்ந்து விட்டார் சிவபெருமான். ஆண்டுகள் பல கடந்தும் அசுரர்களின் தொல்லை தீரவில்லை. முருகனும் வரவில்லை. சிவபெருமானின் தவமும் கலையவில்லை. தேவர்கள் மன்மதனிடம் சென்று காமக்கணையை வீசி சிவனது தவத்தைக் கலையச் செய்யும்படி கூறினர். மன்மதன் இதற்கு மறுத்து விட்டான். மறுத்தால் நாங்கள் சாபம் விடுவோம் என தேவர்கள் பயமுறுத்தவே பயந்த மன்மதன் சிவபெருமான் மேல் மன்மத பாணத்தை ஏவினான். சிவபெருமான் மன்மதனை நோக்கித் திரும்ப அவரின் நெற்றிக்கண் பார்வைபட்டு மன்மதன் எரிந்து போனான். இந்த நிகழ்வு நடைபெற்ற திருக்கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. தனது கணவரை இழந்த ரதிதேவி கண்ணீர் விட்டுக் கதறி அழுதாள். தனது கணவனை காப்பாற்ற உடனடியாக சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருக்கத் தொடங்கினாள். மன்மதன் இல்லாததால் பிரம்மாவும் தனது படைப்புத் தொழிலைச் செய்ய முடியாமல் தவித்து வந்தார். தனது மானசீக புதல்வரை இழந்த மகாவிஷ்ணுவும் பிரம்மாவும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். இதனால் மனம் இளகிய சிவபெருமான் தவம் செய்து கொண்டிருந்த ரதியின் முன்பு  தோன்றினார். உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான். மற்றவர்களின் கண்களுக்கு அரூபமாகத் தெரிவான் என்று ரதியிடம் கூறிய சிவபெருமான்  மன்மதனை உயிர் பெற்று எழச் செய்தார். இந்த இடம் பூவாளூர் திருமூலநாதர் திருக்கோயிலில்.

சிவத்தலங்களில் பொதுவாக துர்க்கையம்மன் கோயிலின் இறைவன் தேவகோட்டத்தில் அமைந்திருப்பார். ஆனால் பூவாளூர் திருமூலநாதர் திருக்கோயிலில் விஷ்ணு துர்க்கை அம்மன் தனி சன்னதி கொண்டு எழுந்தருளியிருக்கிறார்.  நவராத்திரிப் பெருவிழாவின் போது இந்த அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. சிறப்பு வாய்ந்த துர்க்கை அம்மனுக்கு 8 கரங்கள் உள்ளன என்பது இத்திருக்கோயிலின் தனிச் சிறப்பாகும். ஏழு முனிவர்களின் புதல்வர்களாகிய எழுபது முனிவர்கள் சைவ சாத்திர நுட்பங்கள் தமக்கு அருளுமாறு பெருமானை வேண்டி யாகம் செய்தார்கள். வேள்வியில் மகிழ்ந்த சிவபெருமான் எழுபது முனிவர்கள் உள்ளிட்ட பிரம்மன் முதலியோருக்கு சைவ சாஸ்திர நூல்களின் நுட்பங்களை அருளியது இத்திருக்கோயிலில்தான் என்கிறது தல புராணம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.