இந்தியாவின் மகாராஷ்டிராவில் இகத்புரி அருகே திரிங்கல்வாடி கோட்டையின் சுவரில் அனுமான் அருள் பாலிக்கிறார்.


இந்தியாவின் மகாராஷ்டிராவில் இகத்புரி அருகே திரிங்கல்வாடி கோட்டையின் சுவரில் அனுமான் அருள் பாலிக்கிறார்.


கர்நாடாக ஹம்பி இந்த இடத்திற்கு ராமர் லட்சுமணன் வந்தபோது ராமருக்கு தாகமாக இருந்தது குடிக்க தண்ணீர் இல்லை. எனவே லட்சுமணன் தனது அம்பால் ஒரு பெரிய பாறாங்கல் மீது ஒரு அம்பு எய்தினான். பாறை 2 ஆக பிளவுபட்டு அந்த பாறையின் நடுப்பகுதியில் இருந்து தண்ணீர் வந்தது. அதன் இருபுறமும் பிற்காலத்தில் சிவலிங்கங்கள் அமைக்கப்பட்து மால்யவந்த ரகுநாதசுவாமி கோவில் கட்டப்பட்டது.





கர்நாடகா ஹம்பி துங்கபத்திரா நதிக்கரையில் காணப்பட்ட அனுமானின் அழகிய மூர்த்தி. ராமாயண காலத்தில் ஹம்பி மற்றும் அதன் சுற்றுப்புறங்கள் கிஷ்கிந்தா என்று அழைக்கப்பட்டன. இங்கே தான் ராமர் அனுமான் மற்றும் பிற வானராங்களை சந்தித்து தனது படையை உருவாக்கினார்.

வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி நட்சத்திரக் குன்று என்று அழைக்கப்படும் ஊரில் மலை மேல் சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோயில் உள்ளது. சிவன் தான் லிங்க வடிவில் காட்சியளிப்பார். ஆனால் சிவனும் முருகனும் ஒன்றே என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு லிங்க வடிவ சுப்பிரமணியராக அருள்பாலிக்கிறார். இங்கு முருகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். இத்திருத்தல கருவறையில் நாகாபரணத்துடன் முருகரும் சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒன்றாக காட்சி தருகிறார்கள். இக்கோயில் சுமார் 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. காஞ்சி புராணம் மற்றும் அருணாச்சல புராணத்தில் இக்கோவிலைப் பற்றிய புராண வரலாறு உள்ளது. 27 நட்சத்திரங்களும் சிவ சர்பமும் முருகப் பெருமானை வழிபடுகிறார்கள். வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப் பெருமான் அமர்ந்து நித்யம் சிவபூஜை செய்கிறார். 27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோயில் அமைந்திருக்கிறது. எனவே நட்சத்திர கோயில் என்றும் அழைக்கப் படுகிறது. மலை மீது உள்ள இக்கோவிலுக்கு செல்ல படிக்கட்டுகள் 300 உள்ளது.
வேல் விளையாட்டில் வல்லவனான வேலவன் வாழைப் பந்தலில் இருந்து எய்த அம்பு பருவத மலை மீது பாய்ந்தது. அப்போது அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன. அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடு த்து மலையில் இருந்து வழிந்தோடியது. உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு சிவப்பு நதி செய்நதி எனும் பெயரும் உண்டு. சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்ம கத்திதோஷம் பிடித்தது. எனவே செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரை கண்டீஸ்வரரையும் இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாச நாதரையும் பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி உபதேசித்தார். அதே போல் முருகப்பெருமான் செய்நதியின் வலது கரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி கடலாடி மாம்பாக்கம் மாதிமங்கலம் எலத்தூர் குருவிமலை பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும் இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு ஓரந்தவாடி நார்த்தாம்பூண்டி நெல்லிமேடு மோட்டுப்பாளையம் பழங்கோயில் மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன.
முருகப்பெருமான் வழிபட்ட இந்த 14 சிவாலயங்களையும் இரண்டு சிவாச்சாரியார்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்விருவரும் ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம். ஒரு வருடம் ஆடிக் கிருத்திகைக்கு திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. அதனால் மனம் வருந்தினர். இருவரின் கனவிலும் தோன்றிய முருகன் திருத்தணிக்கு செல்லவில்லை என வருந்த வேண்டாம் நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாக சிவசுப்ரமணிய ஐக்கியத்தில் குடியிருக்கிறேன். சூரியன் சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும் நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கின்றன. எனவே நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட என்னை வந்து சேருங்கள் என இருவர் கனவிலும் முருகர் அருள்புரிந்தார். திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர். அங்கே முருகன் குறிப்பிட்டபடி லிங்கம் ஒன்று கிடந்தது. அதை ஒரு நாகம் பாதுகாத்துக் கொண்டிருந்தது. குருக்களைக் கண்டதும் நாகம் லிங்கத்திற்கு குடைபிடித்த நிலையில் சிலையாகி விட்டது. குருக்கள் இருவரும் சிறு கொட்டகை அமைத்து லிங்கத்தை முருகனாக கருதி வழிபட்டனர். காலப்போக்கில் வள்ளி தெய்வானை சமேத முருகன் சிலையும் வைக்கப்பட்டது. நாகம் வடிவெடுத்து சுப்பிரமணியருக்கு நிழல் தந்ததால் நாகத்தின் கீழ் சுப்பிரமணியர் இருப்பது போல் சிலை வடிக்கப்பட்டது. திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் இக்கோவில் உள்ளது.









திருவிதாங்கூர் மன்னர் வீரகேரள வர்மா குமரி மாவட்டத்திலுள்ள தக்கலை எனும் ஊரில் அமைந்துள்ள அரச மரத்தடியில் இந்த வினாயகரை பிரதிஷ்டை செய்தார். ஆடி மாதம் தொடங்கும் போது இவரின் தலை உச்சியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளுத்து கருப்பு நிறத்தை அடைவார். தை மாதம் தொடங்கும் போது மெல்ல மெல்ல வெண்மையாகத் தொடங்கும். தை முதல் ஆனி வரை உள்ள 6 மாதம் வெள்ளை நிறமாகவும் ஆடி முதல் மார்கழி வரை 6 மாதம் கருப்பு நிறமாகவும் காட்சியளிக்கிறார் இந்த விநாயகர். விநாயகரின் நிறம் மாறும் போது இவர் அமர்ந்துள்ள அரசமரமும் நிறம் மாறுகிறது. இங்கு ஒரு கிணறும் உள்ளது. இந்த விநாயகர் ஆரம்பத்தில் அரை அடி உயரம் இருந்ததாக கூறப்படுகிறது.















கர்நாடக மாநிலத்தில் ஹம்பி என்ற ஊரில் புகழ்பெற்ற கோவிலாக விருபாட்சர் கோவிலில் உள்ளது. இங்கு மூன்று தலைகளும் ஒரே உடலும் கொண்ட நந்தியானது உலகில் வேறு எங்கும் இது போன்ற நந்தி கிடையாது. இக்கோவிலில் மூன்று கால வழிபாடு நடைபெறுகிறது. நந்தியின் மூன்று தலை பகுதிகள் மிகவும் நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தலைப்பகுதி மட்டும் சிதைந்த நிலையில் தற்போது காணப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கோவில்களில் இக்கோவிலின் கோபுரம் மிகவும் உயரமானதாகும்.



தட்சிணாமூர்த்தி தனது சின்முத்திரை காட்டும் திருக்கரத்தை மார்பின் மீது வைத்து கால் மாற்றி அமர்ந்த நிலையில் அருள்கிறார். அவரின் வலக் காலில் யோகப் பட்டயம் அமைந்துள்ளது. இந்த திருக்கோலத்திற்கு உத்குடியாசன திருக்கோலம் என்று பெயர். இலுமியன் கோட்டுர் என்ற ஊரில் உள்ள தெய்வநாதேஸ்வரர் சிவன் கோவிலில் இந்த தட்சணாமூர்த்தி அருள் பாலிக்கிறார்.



ராஜஸ்தானின் சித்தோர்கர் கோட்டையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கௌமுக் குந்த் என்பது புகழ்பெற்ற புனிதமான நீர் ஊற்று ஆகும். இந்த நீரில் பழமையான சிவலிங்கம் உள்ளது. கௌமுக் என்றால் பசுவின் வாய் என்று பொருள். பசுவின் வாயில் இருந்து நீர் பாய்கிறது என்பதால் இந்த பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்குள்ள பழங்கால பசுவின் வாயிலிருந்து வரும் நீர் வருடம் முழுவதும் தொடர்ந்து சிவலிங்கத்தின் மீது அபிசேகம் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறது. இந்த கோட்டையின் பல இயற்கை நீர் ஊற்றுக்களில் இந்த நீர் ஊற்றும் ஒன்றாகும். இன்று வரை தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டே இருக்கிறது. சில சமயங்களில் சிவலிங்கம் முழுவதையும் மூடும் வகையில் தண்ணீர் நிரம்பி விடும். கோடை காலத்தில் குளத்தின் நீர்மட்டம் குறைவாக இருக்கும் போது அங்குள்ள கௌமுகமும் சிவலிங்கமும் பழங்கால சிவன் குடும்பம் தொடர்பான சிலைகளும் தெளிவாகத் தெரியும். இந்த நீர் ஊற்றைப்பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் பல வருடங்களுக்கு முன்பு சில வருடங்கள் மழை இல்லாமல் இருந்தது. அப்போதும் பசுவின் முகத்தில் இருந்து தண்ணீர் இருந்து நிற்கவில்லை.
கோவிலுக்குள் ஒரு பெரிய தெய்வத்தின் சிலை கண்ணாடிக்கு முன்பாக இருந்து தன்னைத்தானே பார்த்துக் கொண்டிருப்பதைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிற்பக்கலை அறிஞர்களின் கூற்றுப்படி இந்த சிலை பார்வதி தேவியின் சிலை. இக்கோவிலில் ஒரு சிறிய அறையில் இரண்டு பசுக்களின் முகங்கள் உள்ளன அவற்றின் முகங்கள் கிட்டத்தட்ட அழிந்து விட்டன. இரண்டாவது பசுவின் கீழ் சில பழமையான சிவலிங்கம் அமைந்துள்ளது. கோவிலின் முன்புறத்தில் நாற்கர வடிவில் உள்ள பெரிய விஷ்ணுவின் சிலை உள்ளது. பசுவின் வாயிலிருந்து வரும் தண்ணீர் சிவலிங்கத்தின் மேல் விழுந்த பின்பு அங்கிருந்து பிரதான குளத்திற்குச் செல்கிறது. அதன் அருகே ஸ்ரீ யந்திர வடிவ சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. அதன் பின்னால் உமா மகேஸ்வரர் சிலை பக்கத்தில் நிறுவப்பட்டுள்ளது. சுவரில் சுவரில் முழு சிவகுடும்பத்துடன் தொடர்புடைய பல சிலைகள் உள்ளது. இவை தற்போது மிகவும் சீரற்ற முறையில் உள்ளது. இந்த நீர் மருத்துவத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. இங்கே தங்கியிருந்தால் அந்த இடத்தின் தெய்வீக தன்மை பசி இல்லாமல் செய்கிறது. இந்த கட்டுமானம் 11 ஆம் நூற்றாண்டில் ராஜா போஜ் என்பவரால் சமிதேஷ்வர் கோயிலுடன் இணைந்து கட்டப்பட்டது. இக்கோவில் வாசலுக்கும் அரண்மனைக்கும் நடுவே சுரங்கப்பாதை உள்ளது.


























