மூலவர் அம்மநாதர் அம்மையப்பர். கிழக்கு நோக்கி லிங்க வடிவில் சந்திர அம்சத்துடன் அருள்பாலிக்கிறார். அம்பாள் ஆவுடைநாயகி ஆவுடையம்மன் கோமதியம்பாள். கிழக்கு நோக்கிய தனி கருவறையில் ஆவுடையம்மை ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மறு கையைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் புன்சிரிப்புடன் காட்சித் தருகிறாள். தல விருட்சம் பலாமரம் ஆலமரம். தீர்த்தம் தாமிரபரணி வியாச தீர்த்த கட்டம். இடம் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சேரன்மகாதேவி.
கோயிலுக்கு தெற்கு நோக்கியும் கிழக்கு நோக்கியும் இரண்டு வாசல்கள் உள்ளன. ஐந்து நிலை ராஜகோபுரம். பிரகாரத்தில் ஒரே கல்லில் செய்யப்பட்ட நடராஜருடன் சிவகாமி அம்மை காரைக்கால் அம்மை ஆகியோர் உள்ளார்கள். நாய் வாகனம் இல்லாத பைரவர் இருக்கின்றனர். நவக்கிரக சன்னதி கிடையாது. சந்திரன் நுழைவு வாசலின் வலப்புறத்தில் இருக்கிறார். மகாவிஷ்ணு காசி விஸ்வநாதர் விசாலாட்சி சுப்பிரமணியர் கஜலட்சுமி சனீஸ்வரர் நவகன்னிகள் ஆகியோரும் இருக்கின்றனர். இத்தலம் நவகைலாயங்களில் ஒன்று. இக்கோயிலை நந்தனார் தரிசித்திருக்க வேண்டும். இவரது சிற்பம் கொடிமரத்திற்கு கீழேயுள்ள பீடத்தில் இருக்கிறது. இவர் இங்கிருந்து சுவாமியை வணங்கியபடி இருக்க நந்தி சற்று விலகியிருக்கிறது. தற்போதும் கொடிமரம் அருகில் நின்று விலகிய நந்தி அருகில் நின்று சிவனை தரிசிக்கலாம். இக்கோயிலை கட்டிய சகோதரிகள் நெல் குத்தி அரிசி புடைக்கும் சிற்பம் முன்மண்டபத்திலுள்ள ஒரு தூணில் இருக்கிறது. அருகில் மற்றொரு தூணில் லிங்க பூஜை செய்யும் உரோமசர் உள்ளார். இத்திருக்கோயிலுக்கு அருகே யாக தீர்த்தம் உள்ளது. இங்கு தான் உரோமச முனிவருக்கு இறைவன் பக்தவச்சலராக காட்சியளித்தார். அங்கு தற்போது பக்தவச்சலார் கோவில் உள்ளது. அம்மநாதர் கோவிலுக்கும் யாக தீர்த்தத்திற்கும் இடையே ரணவிமோசன பாறை ஒன்று உள்ளது. இங்கு தொடர்ந்து 41 நாட்கள் விடாமல் ஸ்நானம் செய்தால் தீராத நோய்களும் தீரும். இத்தலத்தில் மார்கழி மாதத்தில் திருவிழா நடக்கும். இந்த திருவிழா அன்று அனைத்து நதிகளும் மூன்று நாட்கள் இந்தப் பகுதியில் சங்கமிக்கும் என்பது புராண வரலாறு.
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் இரண்டாவதான இக்கோயில் 2 ஆவதாக உள்ள கிரகமான சந்திரனுக்கு உரியது. சந்திர தலம் என்றும் சந்திர கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.
இங்கு உரோமசர் லிங்க பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். பிற்காலத்தில் அந்த லிங்கம் ஒரு அரச மரத்தின் கீழ் இருந்தது. இப்பகுதியில் வசித்த சகோதரிகளான சிவபக்தைகள் இருவர் நெல் குத்தி அரிசி வியாபாரம் செய்து வந்தனர். தினமும் இத்தல லிங்கத்திற்கு பூஜை செய்து வணங்கிய பின்பே தங்கள் வேலையை துவங்குவார்கள். வெகுநாளாக இந்த லிங்கம் கோயிலில் இல்லாமல் மரத்தடியில் யாராலும் கவனிக்கப்படாமலேயே இருக்கிறதே என்று எண்ணினார்கள். எனவே சிவனுக்கு கோயில் கட்ட நினைத்தார்கள். ஏழைகளான அவர்களிடம் கோயில் கட்டுமளவிற்கு பணம் இல்லை. அவர்கள் தங்களது உழைப்பின்மூலம் கிடைக்கும் பணத்தை சிறுகச் சிறுக சேர்த்து வைத்தனர். அவர்களது பக்தியில் மகிழ்ந்த சிவன் அடியார் வடிவில் அப்பெண்களின் வீட்டிற்கு சென்றார். அவரை வரவேற்ற சகோதரிகள் உபசரித்து உணவு பரிமாறினர். அப்போது வீட்டில் விளக்கு எரியவில்லை. அதை சுட்டிக் காட்டிய அவர் விளக்கு எரியாத வீட்டில் எவ்வாறு பிரகாசம் இருப்பதில்லையோ அதைப் போலவே மங்களமும் இருப்பதில்லை. எனவே மங்களம் இல்லாத இவ்வீட்டில் நான் சாப்பிட மாட்டேன் என்று எழுந்தார். பதறிப் போன சகோதரிகள் அவசரத்தில் தேடிய போது விளக்கை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே சமையலுக்கு வைத்திருந்த தேங்காயை உடைத்து அதில் நெய்விட்டு விளக்கேற்றினர். மகிழ்ந்த சிவனடியார் சாப்பிட்டுவிட்டு சுய ரூபத்தில் காட்சி தந்தார். சகோதரிகள் சிவனை வணங்கினர். அதன்பின்பு அவர்களது இல்லத்தில் செல்வம் பெருகியது. அதைக் கொண்டு இங்கு கோயில் எழுப்பினார்கள்.
ராஜ ராஜ சோழன் மற்றும் ராஜேந்திர சோழன் கோவிலைக் கட்டியதாக கல்வெட்டுக்கள் உள்ளது. இத்திருக் கோயிலில் பாண்டியர்கள் கால கல்வெட்டுகளும் உள்ளது. மகாதேவி என்பது சேர மன்னன் மகளின் பெயர் ஆகும். சேர மன்னர் தன் மகளின் பெயரை இந்த ஊருக்கு சூட்டினார் என்றும் அதன் பின்னரே இந்த ஊருக்கு சேரன்மகாதேவி மங்கலம் என்ற பெயர் வந்தது என்று கோயிலில் உள்ள கல்வெட்டுக்களில் காணப்படுகிறது.