மூலவர் கைலாசநாதர். தாமரை வடிவ பீடத்தின் மீது லிங்கத் திருமேனியில் அருள் புரிகிறார். அம்பாள் அழகிய பொன்னம்மை. ஒரு கரத்தில் மலர் ஏந்தியும் மற்றொரு கரத்தைக் கீழே தொங்கவிட்ட படியும் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சித்தருகிறாள். அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. தல விருட்சம் வில்வம். தீர்த்தம் விருட்சதீர்த்தம் தாமிரபரணி. ஊர் தென்திருப்பேரை. பெரிய கோட்டை இருக்கும் ஊரை பேரை என சொல்வார்கள். இவ்வூர் தமிழகத்தின் தெற்கே பெரிய கோட்டை போல் இருப்பதால் தென்திருப்பேரை என்று பெயர் பெற்றது. நவக்கிரகங்களில் சூரியனுக்குரிய வாகனம் குதிரையாகும். இங்குள்ள நவக்கிரக சன்னதியில் சூரியன் சந்திரன் குருபகவான் சுக்கிரன் ஆகிய நால்வரும் குதிரை வாகனத்தில் எழுந்தருளியிருக்கிறார்கள். குருவும் சுக்கிரனும் எட்டு குதிரைகள் பூட்டிய தேரிலும் சூரியன் 7 குதிரைகள் மற்றும் சந்திரன் 10 குதிரைகள் பூட்டிய தேரிலும் காட்சியளிக்கின்றனர். இவ்வூரில் உள்ள மகர நெடுங்குழைக்காதர் (பெருமாள்) கோயில் நவதிருப்பதிகளில் ஒன்றாகும். இப்பெருமாள் கோயில் சுக்கிரனின் அம்சத்தை கொண்டது. இந்தக் கோவிலில் உறையும் தாயார் திருப்பேரை நாச்சியார் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய பெயரால் தென்திருப்பேரை என்றும் அழைக்கப்படுகிறது. மழைக் கடவுளான வருண பகவான் இங்கு இறைவனை வழிபட்டதால் இந்தத் தலம் வருண ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.
தாமிரபரணி ஆற்றின் தெற்கு கரையோரம் அமையப்பெற்றுள்ள இந்தக் கோவிலுக்குள் நுழையத் தெற்கு வாயிலே பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. சுற்று பிரகாரத்தில் நந்தி விநாயகர் தட்சிணாமூர்த்தி சுப்பிரமணியர் சண்டிகேஸ்வரர் நடராஜர் சிவகாமி அம்மை பைரவர் ஆகியோர் பரிவார தெய்வங்களாகக் காட்சி தருகிறார்கள். வல்லப விநாயகர் சக்தி விநாயகர் கன்னிமூல கணபதி சித்தி விநாயகர் என நான்கு விநாயகர்கள் உள்ளார்கள். இக்கோயிலில் கால பைரவர் ஆறு கைகளில் ஆயுதம் ஏந்தி காட்சி தருகிறார். இத்தலத்து இறைவன் வேதத்தின் அம்சமாக கருதப்படுவதால் பைரவருடன் நாய் வாகனம் இல்லை. பிரகாரத்தில் உள்ள சுப்பிரமணியர் திருச்செந்தூர் முருகனைப் போல வலது கையில் தாமரை மலருடன் காட்சி தருகிறார். இவருடன் வள்ளி தெய்வானை இருக்கின்றனர். சனிபகவானுக்கு தனிசன்னதி உள்ளது.
அம்பாள் சன்னதியில் கொம்பு முளைத்த தேங்காய் ஒன்று இருக்கிறது. ஆங்கிலேய கலெக்டராக இருந்த கேப்டன் துரை ஒரு சமயம் இப்பகுதிக்கு வந்தார். சாவடியில் தங்கியிருந்த அவர் இளநீர் கொண்டு வரச் சொன்னார். கலெக்டரின் சேவகர் ஒரு தென்னந் தோப்பிற்கு சென்று இளநீர் கேட்டார். அங்கிருந்த விவசாயி அந்த தோப்பில் உள்ள இளநீர்கள் சுவாமி கைலாசநாதரின் அபிஷேகத்திற்கு பயன்படுத்தக் கூடியதால் தர முடியாது என சொல்லி விட்டார். கேப்டன் துரை கோபத்துடன் தோப்பிற்கு சென்று விவசாயியிடம் இந்த தோப்பிலுள்ள இளநீருக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு? சும்மா பறிச்சு போடு என்றார். விவசாயி கலெக்டரின் உத்தரவை தட்ட முடியாமல் ஒரு இளநீரை பறித்துப் போட்டார். அந்த இளநீரில் மூன்று கொம்பு முளைத்திருந்தது. இதைக்கண்ட கலெக்டர் பயந்து விட்டார். உடனே கோயிலுக்குச் சென்று இறைவனிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் தினசரி பூஜைக்காக ஆறரை துட்டு என்று அழைக்கப்பட்ட 26 சல்லி பைசாவை காணிக்கையாக வழங்கினார். இந்த தேங்காய் தற்போதும் இக்கோயிலில் இருக்கிறது. இதில் இருந்த ஒரு கொம்பு ஒடிந்து விட்டது. தற்போது இந்த தேங்காய் இரண்டு கொம்புகளுடன் உள்ளது.
அகத்தியரின் சீடரான உரோமச முனிவர் தாமிரபரணி நதிக்கரையில் பல இடங்களில் லிங்க பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று அதற்கான இடங்களை தேர்ந்தெடுத்து தருமாறும் குருவிடம் கேட்டார். சிவனுக்கு பூஜை செய்த தாமரை மலர்களை தாமிரபரணியில் வீசும்படியும் அவை எங்கெல்லாம் கரை ஒதுங்குகிறதோ அங்கெல்லாம் லிங்க பிரதிஷ்டை செய்யும்படியும் அகத்தியர் கூறினார். அதன்படி உரோமசர் தாமரை மலர்களை நீரில் விட 9 பூக்கள் பல இடங்களில் கரை ஒதுங்கின. இந்த இடங்களில் எல்லாம் சிவலிங்க பிரதிஷ்டை செய்தார் உரோமசர். இவை நவ கைலாய தலங்கள் எனப்பட்டன. நவக்கிரகங்கள் ஒன்பது என்பதால் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு இடம் ஒதுக்கப்பட்டது. 1. பாபநாசம் 2. சேரன்மாதேவி 3. கோடகநல்லூர் 4. செங்காணி 5. முறப்பநாடு 6. ஸ்ரீவைகுண்டம் 7. தெந்திப்பேரை 8. ராஜாதிபதி 9. சேந்தபூமங்களும் ஆகிய கோயில்கள் நவகைலாயங்கள் என்று அழைக்கப்படுகிறது. உரோமசர் தாமிரபரணியில் மிதக்க விட்ட மலர்களில் ஏழாவது மலர் கரை ஒதுங்கிய தலம் இது. நவ கைலாயம் என்று அழைக்கப்படும் கோவில்களில் இக்கோயில் புதன் பகவானுக்கு உரியது. புதன் பகவான் தலம் என்றும் புதன் கைலாயம் என்றும் இக்கோயில் அழைக்கப்படுகிறது.
கோவிலில் உள்ள சுவர்களில் பல கல்வெட்டுகள் உள்ளன. கோயிலின் முன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூணில் முதலாம் குலோத்துங்கனின் கிபி 1109 ஆண்டு கல்வெட்டு உள்ளது. இதில் ராஜராஜப் பாண்டி நாட்டு முடிகொண்ட சோழ வளநாட்டுத் திருவழுதி வளநாட்டு தென்திருப்பேர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. வீரகேரளவர்மன் கல்வெட்டில் திருவழுதி வளநாட்டு திருப்பேரான சுந்தரபாண்டியச் சதுர்வேதி மங்கலத்து ஸ்ரீகைலாசமுடையார் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இதே போல் மாறவர்மன் சுந்தரபாண்டியன் கல்வெட்டுகளும் உள்ளன.