காசியிலுள்ள விசுவநாதர் ஆலயம் இஸ்லாமியர்களின் வசம் பூஜைகள் எதுவும் நடைபெறாமல் பூட்டிக் கிடந்தது. காசி தேசத்தை ஆண்ட நவாபிடம் கோயிலை தம்மிடம் தரவேண்டுமென்று குமரகுருபரர் வேண்டுகோள் விடுத்தார். சிம்மாசனத்தில் இருந்த நவாப் அவருக்கு ஆசனம் தராமல் நிற்க வைத்துப் பேசினார். மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் குமரகுருபரர் என்ன சொல்கிறார் என்று புரிந்து கொண்டார் நவாப். புரிந்த பின்னும் அகம்பாவத்துடன் கிழவரே நீர் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரிவில்லை. ஏதோ தானம் கேட்கிறீர்கள் என்பது தெரிகிறது. ஆனால் என்ன தானம் என்பது தெரியவில்லை. எனது மொழியில் கேட்டால்தான் எனக்குப் புரியும். என் மொழியில் நாளை வந்து கேளுங்கள் தருகிறேன் சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார். அந்த நவாபின் சபை குமரகுருபரரைப் பார்த்துச் சிரித்தது. குமரகுருபரரும் சிரித்தார்.
மறுநாள் விடிந்தது. எங்கே அந்த மதுரைக் கிழவர் என்று நவாப் விசாரித்தார். அவர் அரபி படிக்க போயிருக்கிறார் என்று ஒருவர் சொல்ல சபை சிரித்தது. வாசலில் சிங்கத்தின் கர்ஜனை கேட்டது. எல்லோரும் திடுக்கிட்டுத் திரும்பினார்கள். பிடரியும் கோரைப் பற்களும் சிவந்த கண்களுமாய் ஒரு முதிர்ந்த ஆண்சிங்கம் சபைக்குள் நுழைந்தது. குமரகுருபரர் அந்த சிங்கத்தின் மீது இரண்டு கால்களையும் தொங்கவிட்டு அதன் பிடரியைப் பிடித்து அமர்ந்திருந்தார். ஆண் சிங்கத்தின் மேல் அமர்ந்த ஆண் சிங்கம் போல் காட்சியளித்தார் குமரகுருபரர். அந்த ஆண்சிங்கத்தை தொடர்ந்து மூன்று பெண் சிங்கங்களும் அதன் குட்டிகளும் வந்தன. நவாபின் சபை கலைந்து காலைத் தூக்கிக் கொண்டது. நவாப் வாளை உருவிக் கொண்டு பதட்டத்துடன் நின்றான். என்ன இது கத்தினான் நவாப். நேற்று நீங்கள் எனக்கு அமர ஆசனம் தரவில்லை. எனவே ஆசனத்தை கையோடு எடுத்து வந்துவிட்டேன் என்றார் குமரகுருபரர். இதுவா ஆசனம் இது சிங்கமல்லவா அமரும் ஆசனம் இல்லையே என்று சொல்லி பயந்து நடுங்கிக்கொண்டிருந்தான்.
இதன் மீது நான் அமர்ந்திருப்பதால் இதுதான் என் ஆசனம் என் சிம்மாசனம். உன் ஆசனத்திலும் சிங்கம் இருக்கிறது. ஆனால் அது பொம்மைச் சிங்கம். பொம்மையில் அமர்ந்திருக்கிற பொம்மை நீ. உயிர் மீது அமர்ந்திருக்கிற உயிர் நான். உனக்கு நான் சொல்வது புரிகிறதா என்று சிரித்தார். அந்தச் சிங்கம் பாய்ந்து நவாபுக்கு அருகே சென்று நின்றது. நவாப் கத்தியைக் கீழே போட்டுவிட்டு பயத்தில் அலறினான். ஒரு பெண்சிங்கம் அவன் ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. மற்ற சிங்கங்கள் சபையை சுற்றிவந்தன. சபை வெறிச்சோடிப் போயிற்று. துதிபாடுகிற கூட்டம் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிற்று.
குமரகுருபரர் சிங்கத்தை பார்த்து இங்கே வா என்று கூப்பிட்டார். சிங்கங்கள் அவர் காலடியில் அமர்ந்து கொண்டன. நவாப் சிம்மாசனத்தின் காலடியில் பொத்தென்று உட்கார்ந்தான். குமரகுருபரர் நவாபை பார்த்துக் கொண்டு இருந்தார். அவர் கண்கள் சிரித்தன. நவாப் சலாம் செய்தான். உங்களை யாரென்று தெரியாமல் பேசியதற்கு என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். என் பொறாமையும் என் சபையின் திறமையின்மையும் உங்களைத் தவறாக எடை போட வைத்துவிட்டன. மறுபடி நான் மன்னிப்புக் கேட்கிறேன் மீண்டும் சலாம் செய்தான். தயவு செய்து சொல்லுங்கள் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான். காசி விசுவநாதர் ஆலயம் திறக்கப்பட வேண்டும். கங்கை நதிக்கரையில் மடம் கட்டிக் கொள்ள எனக்கு அனுமதி தரவேண்டும். நீங்கள் என் மொழியில் பேசினால் தருவதாகச் சொன்னேனே. நான் இப்போது உன் மொழியில்தானே பேசிக்கொண்டிருக்கின்றேன். யாருடைய துணையுமில்லாமல் புரிந்துகொண்டு எனக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்கிறாய் என்றார். ஆச்சரியப்பட்ட நவாப் பாரசீகத்தில் பேசுகிறீர்கள். இலக்கண சுத்தமாக பேசுகிறீர்கள். எப்படி உங்களால் இது சாத்தியமாயிற்று என்று கேட்டான். இறையருளால் மட்டுமே இது சாத்தியம் என்றார். உங்களுடைய இறைவனா என்னுடைய இறைவனா என்று கேட்டான் நவாப். அதற்கு குமர குருபரர் உன்னுடையது என்னுடையது என்று பொருட்கள் இருக்கலாம். இறைவன் எல்லோருக்கும் பொதுவானவர் என்றார். உடனே நவாப் காசி விசுவநாதர் கோயில் உங்களுடையது. அது திறக்கப்பட்டு சாவி உங்களிடம் தரப்படும். நீங்கள் பூஜை செய்து கொள்ளலாம் என்று நவாப் பணிவாகப் பேசினார்.