தேவார பதிகத்தில் கரிஉரித்த சிவன் என்றும் வடமொழியில் கஜசம்ஹார மூர்த்தி என்றும் இச்சிவனை அழைக்கின்றார்கள். சிவனின் பல்வேறு ஆனந்தத் தாண்டவங்களில் கஜ சம்ஹார தாண்டவம் மிக முக்கியமான ஒன்றாகும். யானை முகமுடைய கஜமுகா அசுரனை வதம் செய்யும் சிவபுராணக் காட்சி இங்கு அற்புதமான சிலை ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையின் கீழே யானையின் தலை கிடக்கிறது. யானையின் மத்தகத்தின் மீது ஒரு காலை ஊன்றி தனது திரிசூலத்தால் வதம் செய்கிறார் ஈஸ்வரன். வதம் செய்யப்பட்ட யானையின் தோலையே தனது மாலையாகத் தரித்து கொள்கிறார் ஈஸ்வரர். அதுவே ஈஸ்வர சிற்பத்திற்கு அக்னி திருவாட்சியாகவும் அமைந்துள்ளது. மேலே யானையின் இரண்டு கால்கள் தொங்கிய நிலையிலும் யானையின் வால் மேல் நீட்டிய நிலையிலும் காணப்படுகின்றன. கீழே இரண்டு கால்கள் கிடக்கின்றன. சிவனின் ரௌத்ரப்பார்வை நான்கு கரங்கள் அக்கரங்களுக்கான ஆயுதங்கள் இரண்டு கால்களில் ஒன்று தூக்கிய நிலையிலும் இன்னொன்று ஊன்றிய நிலையிலும் உள்ளது. சிவனின் உள்ளங்கால் தரிசனம் காணலாம்.
ஆபிசார வேள்வியில் எழுந்த யானை இறைவனை நோக்கிச் சினந்து ஓடிவர அதை அழிப்பதற்காக இறைவன் அதன் உடலுள் புகுந்தார். உலகங்கள் இருண்டன அம்பிகை செய்வதறியாது திகைத்தார். இறைவன் தன்னுள் புகுந்ததைத் தாளாத யானை பஞ்ச முக தீர்த்தத்தில் போய் வடமேற்கு மூலையில் விழுந்தது. இறைவன் அதையழித்துத் தீர்த்தத்தின் தென் மேற்கு மூலையில் எழுந்து வந்தார். கணவனைக் காணாது அம்பிகை வருத்த முற்றுச் செல்ல முற்பட இறைவன் எழுந்து வெளிப்படவே முருகப் பெருமான் தன் தாய்க்கு இதோ தந்தையார் என்று சுட்டிக் காட்டினார். இவ்வரலாறு பற்றிய காட்சி கோயிலுள் சிற்பங்களாக உள்ளன.
பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்தது இச்சிலை அற்புதமான உலோக வேலைப்பாடுகள் சோழ சிற்பிகளின் அதீத கற்பனை திறனை வெளிப்படுத்துகிறது. மயிலாடுதுறை திருவாரூர் சாலையில் பத்தாவது கிமீ தூரத்தில் வழுவூர் உள்ளது.