ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 200

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

மைதானத்தில் வாயு உருளை (பந்து) வைத்து விளையாடுகின்ற மனிதர்கள் இரண்டு அணிகளாகப் பிரித்து கொண்டு வெற்றிப் புள்ளிகளைக் குவிக்கப் போராடுவார்கள். ஒருவன் அந்த வாயு உருளையை (பந்து) உதைத்துக் கொண்டே வெற்றிப் புள்ளிக்காக போராடுவான். மாற்று அணியினர் அதைத் தடுப்பார்கள். அப்பொழுது அந்ந வெற்றிப் புள்ளியைக் குவிக்க வேண்டிய மனிதன் இப்படியெல்லாம் தடுத்தால் என்னால் எப்படி வெற்றிப் புள்ளியை குவிக்க முடியும்? இவர்கள் எல்லோரும் விலகிச் சென்றால் நான் எளிதாக வெற்றி பெறுவேன் என்று கூறினால் அந்த ஆட்டத்தின் விதிமுறைகளை வகுத்துக் கொடுத்தவர்கள் ஒப்புக் கொள்வார்களா? அதைப் போலத்தான் ஞானம் பெற வேண்டும் தவம் செய்ய வேண்டும். இறை வழியில் செல்ல வேண்டும் நேர்மையாக வாழ வேண்டும் பக்தி வழியில் செல்ல வேண்டும். ஆனால் பல்வேறு தடைகள் வருகிறது. மனதிலே தேவையில்லாத எண்ணங்கள் வருகிறது என்று பல மனிதர்கள் வருத்தப்படுகிறார்கள். இவையெல்லாம் இல்லையென்றால் நன்றாக வெற்றி பெறலாம் என்றால் இவைகளைத் தாண்டி செல்வதற்குண்டான வைராக்யத்தை ஒரு மனிதன் பெற வேண்டும். உலகியல் ரீதியான வெற்றியைப் பெற வேண்டுமென்றால் எத்தனை தடையென்றாலும் அதனைத் தாண்டி செல்கிறான். தனக்கு பிரியமான காதலியை ஒரு இடத்தில் சந்திக்க வேண்டுமென்றால் எப்படியெல்லாம் சிந்தித்து அந்த சந்திப்புக்கு எத்தனை தடை வந்தாலும் அதனைத் தாண்டி அங்கே செல்கிறான் அல்லவா? என்ன காரணம்? அந்த நோக்கத்தில் அவனுக்கு உறுதி இருக்கிறது. அதைப் போல இறைவனை உணர வேண்டும். மெய்ஞானத்தை கண்டிப்பாக இந்த பிறவியில் உணர்ந்து விட வேண்டும். இறையருளை பரிபூரணமாகப் பெற்றுவிட வேண்டும் என்கிற உறுதி அணுவளவும் தளராமல் மனித மனதிலே வந்துவிட்டால் மற்ற விஷயங்கள் குறித்து அவனுக்கு எந்தவிதமான குழப்பமும் தேவையில்லை. எதை செய்தாலும் எப்படி செய்தாலும் நோக்கம் இறைவனிடம் இருந்தால் ஒரு மனிதன் எது குறித்தும் அஞ்சத் தேவையில்லை.

இது போன்ற ஜனகனின் காதையை (கதையை) நினைவூட்டினால் போதும். ஜனகன் மன்னனாகி அரசாண்டாலும் கூட அவனுடைய சிந்தனையானது இறைவனின் திருவடிகளில் இருந்தது. மன்னன் என்பது ஒரு வேடம் ஒரு நாடகம் என்பதை அவன் அறிந்திருந்தான். அதற்குள் அவன் லயித்துப் போய் விடவில்லை. அதைப் போல ஒரு மனிதன் இந்த உலகிலே எதை செய்தாலும் எந்த சூழலில் இருந்தாலும் இவையனைத்தும் ஒரு நாடகம் ஒரு சொப்பனம் என்று எடுத்துக் கொண்டு மெய் என்பது இறைவனின் திருவடியே என்பதை புரிந்து கொண்டு எதைப் பேசினாலும் எதை செய்தாலும் ஆழ்மனதிலே ஒரு தீவிர வைராக்யம் இறைவனின் திருவடியை நோக்கி இருந்து கொண்டேயிருந்தால் அர்ஜூனனின் குறி போல இது தவறாது இருந்தால் எந்த சூழலையும் தாண்டி சென்று வெற்றி காண இயலும். ஆனால் தடைகளும் குழப்பங்களும் மன சஞ்சலங்களும் இல்லாத நிலையில் ஒருவன் தவம் செய்யலாம் என்றாலும் அது யாருக்கும் இந்த உலகில் மட்டுமல்ல எந்த உலகிலும் சாத்தியமில்லை. ஒன்று இறை சிந்தனைக்கு மாற்றாக வந்து ஒருவனின் கவனத்தை திசை திருப்புகிறது என்றால் என்ன பொருள்? இறைவனின் சிந்தனையை விட அதிலே அவன் மனம் ஒரு ஈடுபாட்டை ஒரு சுகத்தை உணர விரும்புகிறது என்றுதான் பொருள். எனவே அதனையும் தாண்டி இறைவனின் திருவடிகளில் ஒரு சுவையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் நாங்கள் (சித்தர்கள்) எப்பொழுதுமே கூறவருவது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.