குருநாதர் அருளிய பொதுவாக்கு:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலம் செய்ய நலமே நடக்கும் என்று காலகாலம் எமை நாடும் மாந்தர்களுக்கு யாம் இயம்பிக்ல கொண்டே இருக்கிறோம். ஆயினும் கூட நலம் எண்ணுவதும் நலம் உரைப்பதும் நலம் செய்வதும் மாந்தர்களிடையே குறைந்து கொண்டேதான் வருகிறது.
இதுபோல் தன்முனைப்பும் மன குழப்பமும் இதோடு மற்றவர்களோடு தம்மை ஒப்பிட்டு பார்த்து வாழக் கூடிய வாழ்வு நிலையும் அகங்காரமும் எப்பொழுதுமே மனிதனிடம் குடிகொண்டு இருந்தால் அவனால் யாங்கள் கூறுகின்ற நல்ல கருத்தையெல்லாம் ஏற்று செயல்படுத்த இயலாது. விதி அங்ஙனம் இருந்தாலும் சிறிதளவாவது இறைவனை எண்ணி மதியை பயன்படுத்தி தேவையற்ற எதிர்மறை குணங்களையெல்லாம் விட்டுவிட்டு கூடுமானவரை மௌனத்தையும் மற்ற மனிதர்களால் மன உளைச்சல்கள் ஏற்படும் பொழுதெல்லாம் பொறுமையை கடைபிடித்து பொறுமையோடு வாழ்ந்து எவ்விதமான விவாதங்களும் செய்யாமல் தம் தம் கடமைகளை செய்து கொண்டே இருந்தாலே இறை வழி என்பது மிகத் தெளிவாக புலப்படும்.
இதுபோல் யாம் மென்மேலும் நல் உபதேசங்களை கூறும் பொழுதெல்லாம் இவைகள் நல்ல விஷயங்கள்தான். ஆனால் நடைமுறையில் ஏற்றுக் கொள்ள முடியவில்லையே? என்று பல மனிதர்கள் எண்ணுகிறார்கள். நடைமுறையில் ஏற்றுக் கொள்ளக் கூடிய மிக மிக எளிதான அனைவராலுமே பின்பற்றக்கூடிய விஷயம் என்றால் பெரும்பாலும் அதில் தவறும் பாவமும்தான் இருக்கும். புண்ணியமும் தர்மமும் சத்தியமும் பலகீனமான மனிதர்களால் அத்தனை எளிதாக பின்பற்ற முடியாது. அதிக மனோதிடம் இருக்கும் மனிதனால்தான் அதிக அளவு பாவங்களற்ற பிறவிகளால்தான் அவற்றை கடைபிடிக்க இயலும் என்பதை புரிந்து கொண்டு ஒரு மனிதன் தன்னைத்தானே எடை போட்டு பார்த்து தன்னால் சரியான வழியை நோக்கி போக முடியவில்லை என்றால் சரியான விஷயம் என்று தெரிந்தும் பின்பற்ற முடியவில்லை என்றால் அத்தனை பலகீனமாக இருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு மெல்ல மெல்ல தன்னை மாற்றிக் கொள்ள முயல வேண்டும். எனவே இதுபோல் கருத்தை மனதிலே வைத்துக்கொண்டால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.