அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் எத்தனைதான் விளக்கங்களை மனித மன நிலைக்கு ஏற்றாற்போல் நாங்கள் இறைவனின் அருளைக் கொண்டு இயம்பினாலும் இதுபோல் மனித மனம் பக்குவம் பெருந்தன்மை அடையாத வரையில் மனித மனம் சுயநலத்தை விடாத வரையில் மனித மனம் பிற மனிதர்களின் உணர்வுகளை மதிக்கத் தெரியாத வரையில் நாங்கள் எத்தனை நுணுக்கமாக விளக்கங்களை எது குறித்து கூறினாலும் மனிதன் ஏற்றுக் கொள்ள மாட்டான் அல்லது ஏற்றுக் கொண்டாலும் அதனை புரிந்து கொள்ள மாட்டான். புரிந்து கொண்டாலும் அதை காட்டிக் கொள்ள மாட்டான். ஏன்? நல்லதை நல்ல செயல்களை நல்ல குணங்களை புரிந்து கொண்டதை போல் காட்டிக் கொண்டாலே அதற்கேற்றாற்போல் நல்லவனாக வாழ வேண்டும். நல்லவனாக வாழ்ந்தால் உடனடியாக நன்மை ஏதும் கிடையாது. நிறைய மன வேதனைகளை சந்திக்க வேண்டும். எனவே எதற்கும் குதர்க்கமாகவே எடுத்துக் கொண்டு பிறரை குற்றம் சாட்டியே பழகி விட்ட மனிதனுக்கு தன்னை போல் பிறர் தன் உணர்வு போல்தான் பிறருக்கும் என்ற பரந்த பெருநோக்கு என்று வருகிறதோ அன்றுதான் இறைவனின் அருள் கடாட்சமே கிட்டும் என்பது மறந்து போய் விடுகிறது. எனவே தான் என்கிற தன் உணர்வு தன்முனைப்பு ஆதிக்க உணர்வு இவையெல்லாம் ஒவ்வொரு மனிதனிடமும் இருக்கும் வரையிலும் இறைவனின் பரிபூரண கடாட்சத்தை பெறுவது என்பது கடினம்.