அகத்திய மாமுனிவர் பொது வாக்கு
இறையருளால் இயம்பிடுவோம் இத்தருணம் இறை வணங்கி அறம் தொடர எந்நாளிலும் நலமே. இடைவிடாத பிராத்தனைகள் மெய் தளராமல் மெய் உரைத்தல் என்றென்றும் மேன்மையாம். ஒரு மனிதனின் உடலை தாய் தந்தை உருவாக்கலாம். அது வெறும் மாமிசம் பிண்டங்கள்தாம். அதற்கு உள்ளே உயிர் அல்லது ஆத்மாவை எந்த கால கட்டத்தில் எந்த கிரக நிலை இருக்கும் போது நுழைக்க வேண்டும் என்பதை இறைவன் தீர்மானிக்கிறான். அந்த ஆத்மாவின் பாவ புண்ய கணிதத்தை ஆராய்ந்து அது மறு பிறப்பில் எப்பேற்ப்பட்ட குடும்பத்தில் பிறக்க வேண்டும் எப்படிப்பட்ட தாய் தந்தை அரவணைப்பில் வாழ வேண்டும்? அல்லது பிறந்தவுடன் தாயை இழக்க வேண்டும் அல்லது தந்தையை இழக்க வேண்டும் அல்லது இருவரும் இருந்து புறக்கணிக்கப்பட வேண்டும் அல்லது இருவராலும் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும் இறுதிவரை தாய் தந்தையரால் கல்வி கொடுக்கப் பட வேண்டும் வாழ்க்கையில் இது போன்ற நிகழ்வுகளை காண வேண்டும் இந்த வயதிலே இன்னென்ன துன்பங்களை அனுபவிக்க வேண்டும் விபத்தை பொருளாதார நஷ்டம் காதல் தோல்வி அடைய வேண்டும் பெண்ணால் மோசம் அடைய வேண்டும் பெண்ணால் மேன்மை அடைய வேண்டும் என்று ஒரு கதையை எழுதித்தான் இறைவன் ஒவ்வொரு ஆத்மாவையும் பூமிக்கு அனுப்புகிறான். சரி இதில் மனிதனின் பங்கு எங்கே?
எல்லாம் விதிதான் என்று ஒரு மனிதன் ஓர் இடத்தில் அமைதியாக அமர்ந்து விட்டால் போதுமா? பிறகு எதற்கு ஆலயங்கள் வழிபாடுகள்? என்று கேட்க தோன்றும் ஆம் எல்லாம் விதிதான். விதியை மழை என்று எடுத்துக் கொள். மழையை தடுக்க உன்னால் முடியாது. ஆனால் மழையில் இருந்து உன்னை காத்துக் கொள்ள ஒரு குடையை எடுத்து செல்லலாம் அல்லவா? அந்த குடை தான் நாங்கள் காட்டும் வழிபாடுகள் வழிமுறைகள்.