கேள்வி: ஐயப்பன் கோவில்களில் 18 படிகள் வரக்காரணம் என்ன? 18 என்ற எண்ணிக்கையின் சிறப்பு பற்றி கூறுங்கள்
இறைவன் அருளால் பொதுவாக 18 என்பது மனிதனுக்கு ஏதோ ஒரு வகையில் பிடித்துப் போய் விடுகிறது. அதனால்தான் 18 சித்தர்கள் மகாபாரதத்திலே 18 தினங்கள் யுத்தம் 18 பர்வதங்கள் (மலைகள்) என்று ஏற்றுக் கொண்டு விட்டான். இதில் சில இல்லாமல் இல்லை. இன்னவன் கூறிய ஹரிஹரபுத்திரனின் (ஐயப்பன்) அந்த படிகளின் எண்ணிக்கை பதி எண் (18) கணக்கிலே அந்த இரண்டையும் கூட்டி நவமாக்கி (ஒன்பதாக்கி) அந்த நவம் (ஒன்பது) என்பது மனிதனின் தேகத்திலே இருக்கிறது. இந்த நவத்தை (ஒன்பதை) வெல்ல வேண்டும் என்பதின் பரிபூரண சூட்சமம்தான் அங்கே படிகளாக வைக்கப்பட்டிருக்கிறது. இன்னொன்று விக்ரமாதித்தனின் ஆசனத்தில்கூட பல்வேறு படிகளும் பதுமைகளும் இருந்தன. படி தேவதைகள் என்று இருக்கிறது. ஒவ்வொரு நிலையிலும் பாவத்தைக் குறைத்து புண்ணியத்தை சேர்க்க சேர்க்க ஒரு படி மனிதன் ஏறுகிறான் என்பது தேவ மொழியாகும்.
இங்கே படிப்படியாக உயர்வது என்பது உலகியல்ரீதியாக வெளிப்படையாக பொருளாதார வெற்றியை பதவியை குறிக்கலாம். ஆனால் தேவ ரீதியில் இறை ரீதியில் மகான்கள் ரீதியில் நேற்றைவிட இன்றைய தினம் எந்தளவு பாவத்தைக் குறைத்திருக்கிறான்? எந்த அளவு புண்ணியத்தை செய்திருக்கிறான்? எனவே இறைவனை நோக்கி அடுத்த படியில் இவனை அமர்த்திவிடலாம் என்பதை படி தேவதைகள் தீர்மானித்து அடுத்த நிலைக்கு தள்ளிவிடும். அந்த நிலையிலேயே இருக்கிறானா? இன்னும் இறைவன் அருளை நோக்கி அடுத்த படிக்கு செல்கிறானா? என்பதை பார்த்து அந்த படி தேவதைகள் இன்னொரு படிக்கு தள்ளி விடுகிறது. இறுதியாக படிப்படியாக உயர்ந்து அந்தப் பதியிடம் (இறைவனிடம்) அந்த ஆத்மா செல்வதைதான் உண்மையான சூட்சுமப் படி குறிக்கிறது. இதை அந்த தெய்வத்திற்கு புறச்சடங்காக 18 படிகள் என்று வைத்திருக்கிறார்கள்.
எல்லா தெய்வங்களுக்கும் இந்த படி நிலை என்பது உண்டு. இதனால்தான் மலைகளில் ஏராளமான படிகள் வைத்து அந்தப் படிகளில் ஏறி இறங்கினால் இறையருள் என்று வைத்திருக்கிறார்கள். இறை அருள் என்பது பிறகு உடல் ஆரோக்கியம் என்பது முதலில். அந்தப் படி தேவதைகள் மட்டுமல்லாது ஒவ்வொரு படியின் அடியிலும் பல ரிஷிகளும் மகான்களும் தவம் செய்து கொண்டு இதோ என் மேல் ஏறிப் போகிறானே? இந்த மனிதனின் பாவங்கள் இத்தனை இருக்கிறது. இவன் இத்தனை இத்தனை பிறவிகள் எடுத்திருக்கிறான். இறைவா இப்பொழுதுகூட இவன் தன்னை உணராமல் ஏதோ சுற்றுலா போல்தான் இங்கு வந்திருக்கிறான். இவன் அறியாமையை நீக்கிவிடு. வேண்டுமானால் இவன் பாவங்களை நான் எடுத்துக் கொள்கிறேன் என்று ஒவ்வொரு படியின் அடியிலும் அமர்ந்திருக்கும் மகான் ஒவ்வொரு தினமும் வேண்டிக் கொண்டிருக்கிறார். எனவே அந்த படி என்பது சாதாரண விஷயமல்ல. படிப்படியாக மேலே செல்வதைக் குறிக்கும். பின்னால் இதனை நீ படிப்படியாக புரிந்து கொள்ளலாம்.
படிப்படியாக நாங்கள் பலவற்றைக் கூறினாலும் படிப்படி என்று நாங்கள் கூறும் பொழுது அது பல பேருக்கு அந்த படிப்படி என்பது புரியாமல்தான் போய் விடுகிறது. படி படி என்று குழந்தைகளைப் பார்த்து பெற்றோர்கள் கூறுவது குழந்தைகளுக்கு பிடிக்காதது போல நாங்கள் பல படிகளைக் கூறும்பொழுது மனிதர்களுக்கும் படிப்படி என்பது பிடிக்காமல் போய் விடுகிறது. படிப்படியாக நாங்கள் கூறுகிறோம். அதனை படிப்படியாக பதிவு செய்து படிப்படியாக மேலே ஏறி அந்த படியின் உச்சியிலிருக்கும் பதியிடம் (இறைவனிடம்) அனைவரும் சேர வேண்டும் என்று நல்லாசி கூறி படிப்படியாக இன்னும் மேலே உயர நாங்கள் அந்த எம்பிரானை வணங்கி இப்பொழுது சற்றே அயர்வு தந்து மேலும் படிப்படியாக வாக்குகளை பின்னர் உணவு இடைவேளைக்கு பிறகு சத்சங்கத்திற்குப் பிறகு இறையருளால் நாங்கள் கூறுவோம் என்று கூறி படிப்படியாக அனைவரும் உயர நல்லாசிகள்.