அமைதி பற்றி அகத்திய மாமுனிவர் பொது வாக்கு:
ஒரு மனிதன் பூஜைகள் செய்வதும் ஸ்தல யாத்திரை செல்வதும் ஏழைகளுக்கு உதவி செய்வதும் அதோடு இறை நாமத்தை பிராத்தனை செய்வதும் தியானம் செய்வதும் சுவாசப் பயிற்சி செய்வதும் யோகாசனம் செய்வதும் முக்கியம் முக்கியம் அவசியம். அதைவிட அவசியம் மனோரீதியாகப் பக்குவப்பட்டு இன்னும் இன்னும் அமைதியோடு பிறரோடு தொடர்பு கொள்ளும் பொழுது அந்த மனம் புண்படாமல் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவே ஆன்மீகத்தின் முதல் பாடமாகும். இவையில்லாமல் வேறு எத்தனை திறமைகளை ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டாலும் இறையின் பரிபூரண அருளாசி கிட்டாது. அது மட்டுமல்லாமல் பல அப்பியாசங்களை (பயிற்சிகளை) செய்து இப்படி நல்ல பண்புகளை வளர்க்கத் தவறினால் செய்கின்ற பூஜா பலன்கள் அனைத்தும் சாளரமுள்ள பாத்திர நீர் போல் நிற்காமல் சென்று விடும்.
யாருக்கு சென்று விடும்?
எந்த மனிதனிடம் தேவை இல்லாமல் விவாதம் அபவாதம் செய்து மன வேதனையை இவன் ஏற்படுத்துகிறானோ அந்த மனிதனுக்கு இலவச சேவையாக இவன் செய்த பூஜா பலன்களையும் புண்ணிய பலன்களையும் தாரை வார்க்கிறான் என்பதுதான் ஆன்மீகத்தின் மிகப் பெரிய பேருண்மையாகும். ஆகவே அதொப்ப உண்மையை மனதிலே கொண்டு சினத்தை தவிர்த்து மெளனத்தைக் கடைபிடித்தால் எப்படி ஒரு கஞ்சன் தன்னுடைய தனத்தை பேழைக்குள்ளே (பெட்டிக்குள்ளே) வைத்து வைத்து பூட்டுகிறானோ அப்படி இவன் செய்த பூஜா பலனும் புண்ணிய பலனும் மெளனத்தில் விரயம் ஆகாமல் இருக்கும்.
இந்த இடத்தில் மனிதனுக்கு ஒரு வினா தோன்றும். அது எப்படி? அழியக்கூடிய சராசரியான பொருளைக் கொடுத்தாலே மிகப் பெரிய புண்ணியம் என்று சித்தர்கள் கூறும் பொழுது நாங்கள் செய்கின்ற பூஜா பலனும் புண்ணிய பலனும் இன்னொரு மனிதனுக்கு போகிறது என்றால் அதனாலும் எமக்குப் புண்ணியம் ஏற்பட வேண்டுமே? அப்படிப் பார்த்தாலும் தர்மத்தில் அது உயர்ந்த தர்மம் தானே? என்று ஒரு வினா மனிதனுக்குள் தோன்றும். உண்மைதான். எப்பொழுது ஒரு விஷயம் புண்ணியமாக மாறும்? மனம் உவந்து மனமார மன ஆறுதல் பெற செய்யும் காரியத்தில் தான் அதொப்ப புண்ணியம் வரும். ஒரு மனிதனுடைய பொருளை வேறொருவன் பறித்துக் கொண்டு செல்வது அல்லது அதை வேறு வழியில் இழப்பது என்று வரும் பொழுது அது புண்ணியமாக மாறாது. அது பாவத்தின் காரணமாக ஒரு நஷ்ட ஈடு போல் ஆகும். எனவே மனிதன் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். சிந்தனையிலே மேம்பாடு ஆழம் அகலம் பண்பாட்டின் உச்சம் வார்த்தைகளை இன்னும் குறைக்கக் கற்றுக் கொள்ளுதல் மெளனத்தைப் பழகுதல் தேவையற்ற விவாதத்தை தவிர்த்தல் தான் எண்ணுவதுதான் நியாயம் என்று அடித்துக் கூறாமல் இருத்தல் (அது உண்மையாக இருந்தாலும் கூட பிறர் கூறுவது மூடத்தனமாக இருந்தாலும் கூட) – இந்த குணங்கள்தான் ஒருவன் ஆன்மீகத்தில் கடைஏறுவதற்கு ஏற்ற வழியாகும். அடுத்தவருக்கு புரிய வைக்கும் வார்த்தையிலே இதம் (இனிமை) வேண்டும். இங்கிதம் வேண்டும். சுகமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் மெளனம் காக்க வேண்டும். கோபத்தாலோ சினத்தாலோ ஒருவன் மனதில் உயர்ந்த கொள்கைகளை புகுத்தி விடலாம் என்றால் அது ஒரு பொழுதும் நடவாது. பிறரை குறை கூறுவதற்கு முன்னால் தம்மிடம் குற்றம் குறை இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மனிதன் வேண்டுமானால் நானா அப்படி நடந்து கொள்கிறேன்? கிரகங்கள்தான் என்னை அவ்வாறு இயக்குகிறது என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம். அப்படியானால் உன்னால் பாதிப்பு அடைந்த ஒரு மனிதன் வந்து உன்னை தாக்கும் பொழுது அவன்மீது உனக்கு கோபம் வரக்கூடாது. ஏன் என்றால்? அவன் கிரகம் அவனை அவ்வாறு இயக்குகிறது என்று அமைதியடைய வேண்டும். ஒன்று கிரகம் என்றால் அப்படி வந்துவிட வேண்டும். இயல்பு என்றால் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட முறையில் எத்தனையோ பிரச்சனைகள் மனக்காயங்கள் இருக்கலாம். வேதனைகள் இருக்கலாம். ஆனால் ஆதிக்கம் செலுத்த முடியாத இடத்தில் இவன் வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருக்கிறான். அதே நேரத்தில் இவன் ஆதிக்கம் செல்லுபடியாகும் இடத்தில் ஏன் திணிக்க எண்ணுகிறான்? பணிவாகவே சொல்லலாமே பணிவு என்பது கோழைத்தனம் ஆகாது. அதுதான் இனிமையை வளர்க்கிறது. உறவை மேம்படுத்துகிறது. ஆக்கப்பூர்வமான அலைகளை வெளிக் கொண்டு வருகிறது. அந்த அலைகள் அடுத்தவன் மனதை சாந்தப்படுத்துகிறது. ஒரு வார்த்தை இவன் பேசமாட்டானா? என்று அடுத்தவன் ஏங்கும் வண்ணம் வார்த்தைகளை குறைத்தே பயன்படுத்த வேண்டும். ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை ஒரு ஓவியம் சொல்லும் என்பார்கள். வார்த்தைகள் இரத்தினச் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள் ஆகும்.