ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 194

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் கருணையாலே உலகியல் வாழ்வும் உலகியல் வாழ்வு சார்ந்த விஷயங்கள் மட்டுமே ஒரு மனிதனை மாயையில் ஆழ்த்துவதாக எண்ணி விடக்கூடாது. அது பொதுவான மாயை. ஆன்ம ஞானத்தில் வந்த பிறகும் கூட இது ஆன்மீகமோ? இது தான் மெய்யான இறை வழியோ? என்று எண்ண வைத்து மாயையில் ஆழ்த்துகின்ற விஷயங்களும் இருக்கின்றது. இன்னும் கூறப் போனால் கடுகளவு கூட ஆன்மீகம் பற்றி தெரியாத ஆன்மாக்கள் கூட தப்பித்து விடலாம். ஆனால் படிப்படியாக பிறவி கர்மா இறை நவக்கிரகம் ஞானம் அபர ஞானம் பர ஞானம் என்றெல்லாம் விவாதித்துக் கொண்டு சகல சாஸ்திரங்களையும் வேதங்களையும் எப்பொழுது ஒரு ஆத்மா கற்கத் துவங்குகிறதோ அப்பொழுதே குழப்பமும் தெளிவும் பிறகு மீ்ண்டும் குழப்பம் பிறகு புரிதலும் பிறகு புரியாத நிலையும் ஏற்பட்டு அதற்குள்ளே அந்த ஆன்மா மாயையில் சிக்குவதற்கு வாய்ப்புகள் ஏராளம். வேறு வகையில் கூறப் போனால் எல்லாவற்றையும் ஓதுதலும் ஓதியதை அசை போடுவதும் ஒருபுறமிருக்க பரிபூரண சரணாகதி அந்த பக்தி வழியில் செல்லும் பொழுதே சற்றே சுலபமாக மாயையை விடுவதற்கு இறைவன் அருளலாம் என்பதால்தான் பக்தி வழியையும் தர்ம வழியையும் நாங்கள் காட்டுகின்றோம்.

ஒரு மனிதன் யோகாசங்கள் செய்ய வேண்டாமா? வேண்டும். பிரணாயாமம் செய்ய வேண்டாமா? வேண்டும். உடல் பயிற்சி செய்ய வேண்டாமா? வேண்டும். ஒரு மனிதன் ஸ்தல யாத்திரை செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும். யாகம் செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும். தர்மங்கள் செய்ய வேண்டாமா? செய்ய வேண்டும். ஆனால் இவைகளை நிஷ்காம்யமாக (விருப்பு வெறுப்பின்றி) செய்ய ஒரு மனிதன் கற்றுக் கொள்வதே மாயையில் சிக்கிக் கொள்ளாமல் வாழ்வதற்குண்டான வழியாகும். எனவே ஒரு மனிதன் என்ன தான் ஆன்மீக வழியில் வருவதாக எண்ணினாலும் கூட தான் பிறரைப் போல் அல்ல. ஆன்மீகத்தில் இருக்கிறோம் என்று எண்ணும் பொழுதே ஒரு மாய சேற்றில் அவன் விழுந்து விடுகிறான். உண்மையான ஆன்மீகம் யாரையும் வெறுப்புடன் பார்க்காது. உண்மையான ஆன்மீகம் எல்லோரையும் அரவணைத்தே செல்லும். உண்மையான ஆன்மீகம் பிறரை தூஷகம் (நிந்தை) செய்தாலும் (பதிலுக்கு) பிறரை தூஷகம் செய்யத் தூண்டாது. எனவே கிட்டத்தட்ட பக்தர்கள் பார்வையில் இறை எப்படி இருந்தாலும் இறைவனின் பார்வையில் பக்தர்கள் எப்படி இருக்கிறார்கள்? என்பதே ஒரு உயர்ந்த சிந்தனையாகும். அந்த சிந்தனையை வளர்த்துக் கொண்டால் தான் மாயையில் சிக்கிடாமல் இருப்பதற்கு நல்லதொரு வழியை மனிதர்கள் உணரலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 193

கேள்வி: தாங்கள் வகுத்துக் கொடுத்துள்ள சாஸ்திரங்களிலும் பூஜா முறைகளிலும் யாகங்களிலும் உள்ள இடைசெருகல்களை நீக்கி மூலத்தை தந்து அருள வேண்டும்:

இடையிலே ஏற்பட்டுள்ள கருத்துப் பிழைகளையெல்லாம் நீக்க வேண்டுமென்றால் அப்படி நீக்கினாலும் அவற்றை ஏற்கும் மனம் ஒரு மனிதனுக்கு வர வேண்டும் என்றால் அதற்கு பரிபூரண இறையருள் வேண்டுமப்பா. அத்தனை எளிதாக மனித மனம் ஏற்றுக் கொள்ளாது. உலகியல் சார்ந்த முன்னேற்றத்தைத் தராத சுகத்தைத் தராத நலத்தைத் தராத எந்த சாஸ்திரமும் எந்த மரபும் மனிதனால் அத்தனை எளிதாக பின்பற்றக்கூடிய நிலைக்கு வந்து விடவில்லை. அதனால்தான் இத்தனை இடைசெருகல்கள் காலகாலம் வந்திருக்கின்றது. உதாரணமாகக் கூறுவோம். சிலவற்றை மனிதன் அறிவு கொண்டு புரிந்து கொள்ள வேண்டும். முற்காலத்திலே நாணயங்கள் புழக்கத்தில் இல்லை. ஆனால் தற்போது மனிதர்களிடையே நாணயம் புழக்கத்தில் இருந்தது. அது போன்ற தருணங்களிலே ஒரு சிரார்த்தம் என்றால் திதி என்றால் அதை செய்கின்ற ஊழியனுக்கு தானியங்களையும் காய்கறிகளையும் தருவது மரபாக இருந்தது. காரணம் என்ன? அதைக் கொண்டு அவன் குடும்பம் பிழைக்க வேண்டும் என்று. ஆனால் இன்றும் அதைத் தான் தர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேவையான தனத்தைத் தந்தால் அவனுக்கு என்ன வேண்டுமோ அவன் அதை வாங்கிக் கொள்வான். ஆனால் இன்னமும் அதை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு நான் காய்கறிதான் வாங்கித் தருவேன் என்று இவன் கூற அவன் என்ன செய்கிறான்? காலையில் முதலில் ஒருவனுக்கு வாங்கிய அதே காய்கறியை வைத்துக் கொண்டே அனைவருக்கும் செய்து கொண்டிருக்கிறான். இந்தத் தவறுக்கு யார் காரணம்? யாருடைய மனநிலை காரணம்? எனவே சாஸ்திரங்களும் மரபுகளும் எதற்காக ஏற்படுத்தப்பட்டன? என்பதை புரிந்து கொண்டு கால சூழலுக்கு ஏற்ப சிலவற்றை தன்னுடைய சுயநலம் அல்லாமல் பொது நலம் கருதி மாற்றிக் கொள்வது தவறல்ல. ஆனால் சாஸ்த்திரங்களை மனிதன் சுயநலத்திற்காக மட்டுமே எப்பொழுதும் மாற்றுகிறான். பொது நலத்திற்காக மாற்றுவதில்லை.

தர்மம் செய் என்றால் மட்டும் இன்று வெள்ளிக்கிழமை. இப்பொழுதுதான் தனத்தை வாங்கி வந்திருக்கிறேன். நீ இரண்டு தினம் கழித்து வா. இப்பொழுதுதான் அந்தி சாய்ந்து இருக்கிறது. இப்பொழுதுதான் அந்தியிலே விளக்கேற்றி இருக்கிறேன். இப்பொழுது எதுவும் தரக்கூடாது. இன்று செவ்வாய் கிழமை. எதுவும் தரமாட்டேன். இன்று புதன்கிழமை. அதைத் தரமாட்டேன் என்று தருவதற்கு ஆயிரம் சட்ட திட்டங்களைக் கூறுகின்ற மனிதன் பெறுவதற்கு எந்த சட்ட திட்டமாவது போடுகிறானா?. வெள்ளிக்கிழமை எனக்கு தனம் வேண்டாம் என்று யாராவது கூறுகிறார்களா? வெள்ளிக்கிழமை தானே மகாலட்சுமிக்கு உகந்த தினம் என்று வழிபாடு செய்கிறான். எனவே தனக்கென்றால் ஒரு நியாயம். பிறருக்கென்றால் ஒரு நியாயம் என்பது மனிதனின் சுபாவமாகப் போய் விட்டது. இது போன்ற நிலையிலே ஜாதகத்தைப் பார்த்து பலன் சொல்லும் ஒருவனிடம் மனிதன் எப்படி கேட்கிறான்? என் ஜாதகம் நன்றாக இருக்கிறதா? நிறைய செல்வம் சேருமா? என்று தான் கேட்கிறான். நிறைய புண்ணியம் செய்தேனா? நிறைய தர்ம காரியங்களில் எனக்கு நாட்டம் வருமா? என்று யாரும் கேட்பதில்லை. அதுமட்டுமல்லாமல் ஜாதகம் சொல்கின்ற மனிதன் எப்படி சொல்கிறான்? நீ பிறருக்கு எந்த உதவியும் செய்து விடாதே. யாருக்காவது உதவி செய்தால் தேவையற்ற அபவாதம் தான் வரும். எனவே ஒதுங்கி இரு. அதுதான் உனக்கு நன்மையைத் தரும் என்றெல்லாம் போதிக்கின்ற நிலைமைக்கு இன்றைய தினம் அனைவருமே ஆளாகி விட்டார்கள். எனவே நல்லதை தர்மத்தை சத்தியத்தை விட்டுக் கொடுக்காமல் பொது நலத்தை பொது சேவையை விட்டுக் கொடுக்காமல் ஒருவன் சாஸ்திரத்தை அனுசரித்தும் சாதகமோ அல்லது பாதகமோ இல்லாமல் பொது நலம் கருதி அதில் மாற்றங்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 192

கேள்வி: பழனியில் சாலையோரத்தில் ஒரு உயர்ந்த ஆன்மாவை தரிசித்தோம். அவரைப் பற்றி கூறுங்கள் ஐயனே?

இறைவன் அருளால் பிற்காலத்தில் இதுபோன்ற ஆத்மாக்களைப் பற்றி நாங்கள் விளக்கம் கூறுவோம். பொதுவாகவே வாழும் மகான்கள் என்று பலரை மனிதர்கள் நாடுகிறார்கள். அதை நாங்கள் குறையோ குற்றமோ கூறவில்லை. ஆனாலும் கூட நாங்கள் ஏற்கனவே உன்னொத்து ஒருவன் வினவிய வினாவிற்கு கூறியதையே இப்பொழுதும் கூறுகிறாம். அதாவது ஒருவன் இந்த ஜீவ அருள் ஓலையை(ஜீவநாடி) நம்பி நாடி இதன் கருத்துக்களை ஏற்கத் துவங்கும் பொழுது நாங்கள் இறைவனருளால் கூறுகின்ற கருத்தையெல்லாம் 100 க்கு 100 பின்பற்றி அதன் வழியாக நடக்க நடக்க மெய்யான ஞானிகளை இவன் தேட வேண்டாம். மெய்யான ஞானிகள் இவனைத் தேடி வருவார்கள். அதுதான் ஏற்புடையது. அங்கு ஞானி இருக்கிறார் இங்கு ஞானி இருக்கிறார் என்று தேடி சென்றால் அதனால் தேவையில்லாத குழப்பங்கள்தான் ஏற்படும். எத்தனைதான் மிகப்பெரிய ஞானியாக இருந்தாலும் கூட இந்த பூமியிலே பிறவி எடுத்துவிட்டால் சில விரும்பத்தகாத குணங்களும் அவரிடம் இருக்கலாம். அப்பொழுது என்னவாகும்? அந்த ஒரு பகுதியைப் பார்க்கின்ற மனிதன் தவறாகப் பார்ப்பான். நாங்கள் நல்லவற்றை எடுத்துக் கூறினால் சித்தர்களே இப்படியெல்லாம் உயர்வாகக் கூறுகிறார்களே? எங்கள் பார்வைக்கு அப்படி தௌன்றவில்லையே? என்று ஒருவன் கூறுவான். எனவேதான் சமகாலத்தில் வாழ்கின்ற ஞானிகள் குறித்து நாங்கள் எந்த விளக்கமும் தர விரும்புவதில்லை.

கேள்வி: திருப்பதியில் பெருமாள் ஓரிடத்திலும் அலர்மேல்மங்கை தாயார் வேறொரு இடத்திலும் இருப்பதன் காரணம் என்ன?

அப்படி புறத் தோற்றத்தில் தானப்பா இருக்கிறது. வேங்கடவனின் திருமார்பிலே அன்னை திரு (மகாலட்சுமி) எப்பொழுதுமே அருள்புரிந்து கொண்டு இருப்பதால் தான் அந்த ஸ்தலம் அமோகமாக இருக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 191

கேள்வி: விருக்ஷங்களிலும் (மரங்களிலும்) ஆன்மா இருக்கிறது. புட்களிலும் ஆன்மா இருக்கிறது. நுண்ணிய கிருமிகளிலும் ஆன்மா இருக்கிறது. அனைத்து ஆன்மாக்களுமே மேன்மையடைந்து முக்தியடைய வேண்டும் என்று முன்னர் கூறியிருந்தீர்கள். இந்த அறையிலேயே கோடானு கோடி கிருமிகள் இருக்கக்கூடும். இந்த நுண்ணிய கிருமிகளாய் பிறப்பெடுக்க வேண்டுமென்றால் அது என்ன கர்ம வினை?

ஒரு சில பாவங்கள் என்பதல்ல. எத்தனையோ வகையான பாவங்களின் தொகுப்பு தான் நாங்கள் முன்னரே கூறியது போல் ஆன்மாவின் சட்டையாக (உடலாக) மாறுகிறது. ஒரு ஆன்மாவின் சட்டையைப் (உடலைப்) பொறுத்து அதன் பாவத்தைப் புரிந்து கொள்ளலாம். அதாவது ஒரு ஆன்மாவிற்கு பெரும்பாலும் மனித சட்டை (உடல்) கொடுக்கப்படுகிறதென்றால் பெரும்பாலும் புண்ணிய பலன் இருக்கிறது என்று பொருள். அதற்காக விலங்குகளாகப் பிறந்த அனைத்து ஆத்மாக்களும் முழுக்க முழுக்க பாவிகள் என்று நாங்கள்(சித்தர்கள்) கூறவில்லை.

அதிலும் விதி விலக்குகள் உண்டு. சில புண்ணிய ஆத்மாக்கள் கூட சில காரணங்களுக்காக விலங்குகளாக பிறவியெடுப்பதும் உண்டு. மிகப்பெரிய மகான்கள் கூட பசுக்களாக தாங்கள் பிறக்க வேண்டும் என்று வரம் கேட்டு தம் பால் முழுவதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்று வரம் கேட்டு வாங்கி வருவதும் உண்டு. அவற்றையெல்லாம் விலங்குகள் என்ற வரிசையில் சேர்க்கக்கூடாது. ஆனால் பொதுவாக விலங்குகள் என்று பார்க்கும் பொழுது அறியாமையிலே பிறவிகள் எடுக்கக்கூடிய உயிர்கள் அனைத்துமே கோடானு கோடி பாவங்களை நுகர்ந்து தீர்ப்பதற்காக இது போன்ற விலங்குகள் பிறவியைப் பெறுகின்றன. விலங்குகளுக்கு அதன் செயல்களுக்கு முழுக்க முழுக்க அதன் பாவங்களைக் கழிப்பதற்குண்டான நிலைதான் இருக்கிறது. புதிதாக புண்ணியத்தை சேர்த்துக் கொள்ள இயலாது. புதிதாக பாவத்தையும் சேர்த்துக் கொள்ள இயலாது. உதாரணமாக ஒரு நூறு பிறவி ஆடாகப் (ஆடு) பிறந்து அது தன் உயிரை மனிதனின் அசுரத்தனத்தால் தன்னைக் கொன்று உண்ணக்கூடிய மனிதனுக்கு தன் உடல் பயன்படவேண்டும் என்ற விதி பெற்று அந்த ஆடு பிறக்கும் பொழுது அதனுடைய கர்மாவானது அதன் கழுத்தில் இருக்கிறது. நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல அதனை வெட்டுகின்ற கத்தியானது அதன் கர்மாவைக் குறைக்கிறது. ஆடு கத்திக் குறைக்கிறது.

எனவே இப்படி பிறவியெடுத்து பிறவியெடுத்து அதன் பாவங்கள் தீர்ந்த பிறகு அடுத்த தேகத்தை (உடலை) நோக்கி செல்கிறது. இப்படி மேலேறி மேலேறி ஒரு தினம் அல்லது ஏதாவது ஒரு பிறவியிலே அது மனிதனாக அல்லது மனித சட்டை (மனித உடல்) கொடுக்கப்பட்டு சற்றே சிந்தனையாற்றலும் கொடுக்கப்படுகிறது. ஆனால் எதற்காக கொடுக்கப்படுகிறது? இன்னும் மேலேறி செல்ல வேண்டும். மனிதனாக புனிதனாக மாமனிதனாக மகானாக ஞானியாக முனிவனாக சித்தனாக அல்லது தேவனாக கந்தர்வனாக. ஆனால் இந்த இடத்திற்கு வந்த பிறகு மனிதன் தன் செயலால் மீண்டும் கீழ் நோக்கியும் செல்கிறான் அல்லது மேல் நோக்கியும் செல்கிறான். கீழ் நோக்கி செல்லாதே என்று வழிகாட்டத்தான் எம் (அகத்திய மாமுனிவர்) போன்ற மகான்களை இறைவன் படைத்து அருளாணை இட்டிருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 190

கேள்வி: மனதிற்கும் ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாடு என்ன? மனம்தான் ஆத்ம ஸ்வரூபமா? இதில் புத்தி என்பது எங்கே வருகிறது?

இதை வேறு விதமாகக் கூறலாம். ஒரு மின் சக்தியை எடுத்துக் கொண்டால் மின் சக்தி என்பது இதுதான் இங்குதான் இருக்கிறது என்று கூற இயலுமா? காற்றின் ஆற்றல் இங்குதான் இருக்கிறது என்று கூற இயலுமா? இயலாது. ஆத்மா என்பது நீக்கமற நிறைந்துள்ள ஒரு சக்தி என்று வைத்துக் கொள். அது அறியாமையிலே பாவ மாயையிலே சிக்கி இந்த உடலுக்குள் சிறைபட்டிருக்கிறது என்றால் கண்ணிலே மட்டும் இருக்கிறதா? கையிலே மட்டும் இருக்கிறதா? அல்லது வயிற்றிலே மட்டும் இருக்கிறதா? என்றால் இல்லை. அப்படி எடுத்துக் கொள்ளக் கூடாது. உடல் எனப்படும் ஒரு கூடு. அந்த கூடு இயங்குவதற்கு வேண்டிய ஆற்றலை ஆத்மாவிடமிருந்துதான் இந்தக் கூடு பெறுகிறது. இந்த ஆத்மாவானது தன்னை உணராமல் தன் உடலை தான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறது. அதாவது ஒரு மனிதன் தன் உடலின் மானத்தை மறைக்க ஆடை அணிகிறான். அந்த ஆடை கிழிந்து விட்டால் நான் கிழிந்து விட்டேன் என்று அந்த மனிதன் கூறமாட்டான். என் ஆடை கிழிந்து விட்டது என் ஆடை அழுக்காகி விட்டது. என் ஆடை பழுதடைந்து விட்டது என்று வேறு ஆடை மாற்றிக் கொள்வான். மனிதன் தன் உடலுக்கு ஆடை போடுகிறான். ஆன்மாவிற்கு போடப்பட்ட ஆடைதான் இந்த உடல்.

விதவிதமான ஆடைகள் சிங்கம் புலி ஆடு மாடு என்று விதவிதமான ஆடைகளை ஆத்மாவிற்கு போட்டு இறைவன் அனுப்புகிறான். இந்த உடல் வேறு. இ்ந்த உடலுக்குள் இருக்கின்ற ஆத்மா வேறு என்பதை புரிந்து கொள்வதற்கு ஒரு மனிதன் பல நூறு பல கோடி பிறவிகளை எடுக்க வேண்டும். நிறைய புண்ணியங்களை பிராத்தனைகளை செய்ய வேண்டும். அப்படி செய்யும் பொழுதுதான் நீ கூறிய ஆத்மா என்பது என்ன? என்பது உன் உள்ளத்திற்கு தெரிய வரும். மனம் என்றால் என்ன? மனம் என்பது தனியான ஒரு பொருள் அல்ல. இருதயம் என்பது இயங்குகின்ற ஒரு தன்மை. அதை குறிப்பாக இருதயம் (இதயம்) இருக்கிறதா? என்று மனிதர்கள் கேட்கிறார்கள். ஆனால் இங்கே உள்ளே இயங்குகின்ற இருதயத்திற்கும் இதயம் இருக்கிறதா? என்று மனிதன் கேட்பதற்கும் வேறுபாடு உண்டு. இரண்டும் ஒரு பொருள் அல்ல. உனக்கு நல்ல மனம் இருக்கிறதா? என்பதைத்தான் மனிதன் இதயம் இருக்கிறதா? என்று கேட்கிறான். தொடர்ந்த எண்ண ஓட்டங்களின் தொகுப்புதான் மனம். அந்த மனம் எங்கே விழிப்புநிலை பெறுகிறதொ அப்பொழுது நீ ஆத்மாவை உணரலாம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 189

கேள்வி: பைரவர் (பைரவரின் வாகனம்) ஊளையிடுவதன் காரணம் என்ன?

அகத்திய மாமுனிவர் வாக்க :

பல்வேறு காரணங்கள் இருக்கிறதப்பா. இது போன்ற நிலையிலே மனித கண்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையை மட்டும் பார்க்கக்கூடிய வண்ணம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வண்ணத்தின் மேலான அதிர்வெண்களும் கீழான அதிர்வெண்களும் மனிதக் கண்களுக்குத் தோன்றுவதில்லை. ஆனால் அந்த தோன்றாத அலை வரிசையிலே பல்வேறு ஆத்மாக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கும். அது போன்ற ஆத்மாக்கள் அந்த ஆத்மாக்களின் தன்மை இவற்றைப் பொருத்தே நீ கூறிய அந்த பைரவரின் வாகைக் குரல் ஒலிக்கிறது.

கேள்வி: ஆத்திசூடியில் வரும் அரவம் ஆடேல் அனந்தல் ஆடேல் என்பதன் பொருள் என்ன?

பாம்போடு பழக வேண்டாம் என்பது தான் நேரிடையான பொருள் என்றாலும் கூட இது போன்ற இந்த பாம்பானது சுருண்டு கிடக்கும் பட்சத்திலே அந்த குண்டலினி ஆற்றல் எனப்படும் அந்த சக்தி மனிதனுக்கு தெரியாமல் போய் விடுகிறது. இந்த ஆற்றலை பாம்பாக உருவகப்படுத்துவது மகான்களின் ஒரு நிலையாகும். இது போன்ற நிலையிலே அப்படி சுருண்டு கிடக்கும் அந்த பாம்பை ஆடாமல் அசையாமல் நேராக நிமிர்த்தி மேலே ஏற்ற வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும்.

கேள்வி: அதே ஆத்திசூடியில் வரும் புகழ்ந்தாரைப் போற்றி வாழ் என்பதன் பொருள் என்ன?

இதுபோன்ற நிலையிலே ஒருவனை மதித்து இன்னொருவன் வாழும் பட்சத்திலே தன்னை மதிக்கின்ற நியாயமாக தனக்கு உதவிகளை செய்கின்ற தன் உணர்வை மிதிக்காமல் மதிக்கின்ற மற்றவர்களை இவனும் மதித்து வாழ வேண்டும் என்பதே இதன் உட்பொருளாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 188

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 188

கேள்வி: கணினியில் ஜாதகம் கணிக்கும் பொழுது ஸ்ரீ சூரிய சித்தாந்த அயனாம்ச முறையையும் எடுத்துக் கொள்ளலாமா?

இப்பொழுது உள்ள அனைத்து முறையிலும் ஒட்டு மொத்த மனித சமுதாயத்தின் பாவ வினைகளால் இடை செருகல்களும் தவறுகளும் ஏற்பட்டுதான் இருக்கிறது. ஆயினும் பாதகமில்லை. வாக்கிய முறையை பின்பற்றுவது பொதுவாக நன்மையைத் தரும். அதற்கு மாறான முறையை பின்பற்றக் கூடாது என்று நாங்கள் கூறவில்லை. எப்படிப் பார்த்தாலும் அடிப்படை விதியை மனிதனால் கணிப்பது என்பது கடினம். ஏனென்றால் ஒரு மனிதனுக்கு கிரகங்கள் வக்ரமாவது தெரிகிறது. ஆனால் லக்னமே வக்ரமாவது என்பதெல்லாம் இறை சூட்சுமம் அறிந்த மகான்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் நீ கூறிய முறையைக் கூட தாராளமாக பின்பற்றலாம். ஆனாலும் கூட எம்மைக் கேட்டால் இங்கே தமிழ் மண்ணிலே புழங்குகின்ற வாக்ய முறைகளை தொடர்ந்து பின்பற்றுவது அனைவருக்கும் ஏற்புடையதாக இருக்கும்.

கேள்வி: ஆஞ்சிநேயர் தன் இதயத்தைப் பிளந்து காட்டிய பொழுது அதில் ராமரும் சீதையும் காட்சியளித்ததாக இதிகாசம் கூறுகிறது. இது எந்த நோக்கில் கூறப்பட்து? அனுமன் போல் அனைவரும் சிறந்த பக்தர்களாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கூறப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் தத்துவார்த்த விளக்கங்கள் உண்டா?

இறைவன் அருளாலே ஒரு காதலன் தன் காதலியைப் பார்த்து என்ன கூறுவான்? என் இதயத்தில் நீ இருக்கிறாய் என்று கூறுவான். அப்படிதான் காதலியும் கூறுவாள். எனவே என் சிந்தனை என்னுடைய எண்ணங்கள் என்னுடைய நோக்கம் நான் செய்கின்ற செயல்கள் அனைத்தும் நீயாக இருக்கிறாய் யாதுமாகி நிற்கிறாய் என்பது போல உண்ணும் உணவு பருகும் நீர் சுவாசிக்கும் காற்று இன்னும் நான் செய்கின்ற அனைத்து செயல்ளும் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் நீயாக இருக்கிறாய் என்பதை உணர்த்தும் வண்ணம் அந்த ராமபிரான் மீது மால் தூதனாகிய ஆஞ்சிநேயர் கொண்ட பக்தியை விளக்குவதற்காக இப்படி பரிபூரண சரணாகதியிலே ஒவ்வொரு மனிதனும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த சித்திரம் போடப்பட்டது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 187

இறை உண்டு பற்றிய அகத்திய மாமுனிவர் வாக்கு:

ஆகுமப்பா. இறை உண்டு. யாங்கள் (சித்தர்கள்) உண்டு. தெய்வ சக்தி உயர் சக்தி உண்டு. மாந்தனுண்டு. சித்தனுண்டு. எல்லா உயிர்களும் உண்டு. ஆயினும் கூட அவரவர் பக்குவம் மனநிலை அறிவுநிலை புண்ணியம் எண்ணங்கள் நடைமுறை வாழ்வு இவைகளைப் பொறுத்துத்தான் இந்த இதழில் (ஜீவநாடி) பலசமயம் யாங்கள் வாக்குகள் பகிர்வதும் மெளனம் காப்பதும். சித்தர்கள் பேதங்கள் பார்க்கலாமா? எல்லா உயிர்களும் ஒன்றுதானே என்ற எண்ணங்கள் மனிதனுக்குத் தோன்றும். எமக்கு எவர்மீதும் உயர்வு தாழ்வு பேதமில்லை. ஆயினும் கூட மனதிலே சில திட்டங்களை வகுத்துக் கொண்டு சில காட்சிகளை கற்பனை செய்து கொண்டு அது தொடர்பாகவும் அதுபோலத்தான் வாழ்வு என்றும் வாழ்வின் நோக்கம் என்றும் எம்முன்னே வந்து அமர்ந்தால் எமக்கு அவனவன் கர்மாதான் கண்ணுக்குத் தெரியும். சேர்த்த பாவத்தைக் குறைப்பதற்கும் இனி பாவம் செய்யாமல் வாழ்வதற்கும் மட்டும்தான் மனித தேகம் மனித பிறவி. அந்த ஆற்றலை இறை மனிதனுக்குத் தந்ததின் காரணம் பிறர் துன்பங்களைக் கண்டு வருந்த இரங்க வேண்டும் என்பதற்காகத்தான். அதுபோல இந்த எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்கள் உயர்ந்த ஆன்மாக்களே.

இதில் விலங்கு விருக்ஷம் (மரம்) மனிதன் என்ற பேதமில்லை. பல்வேறு காரணங்களுக்காக நாங்கள் (சித்தர்கள்) வாக்குகளை மறுப்பதும் நிறுத்துவதும் கூறாமல் இருப்பதும் உண்டு. முதல் காரணமாக இந்த இதழை (ஓலைச்சுவடி) வாசிக்கின்ற இவன் அனுதினமும் அதிகாலையிலும் ஏனைய அயர்வு பொழுதிலும் மனம் ஒன்றி அதிகமதிகம் பிராத்தனை செய்ய வேண்டும். அடுத்து எமை (அகத்திய மாமுனிவர்) நாடி வருபவர்கள் ஏதோ கோள் ஆய்வு செய்வதும் ஜோதிட நிமித்தம் கேட்பதும் அருள் வாக்கு கேட்பதுமாக இல்லாமல் மெய்யாகவே தர்மவானாக எல்லா நிலையிலும் நல்லவனாக இருக்க வேண்டும். வேறு வகையில் கூறப்போனால் எம்மை நாடாவிட்டாலும் பாதகமில்லை மனசாட்சிப்படி வாழ்ந்து வந்தால் அவன் எம்மைத் தேட வேண்டாம் யாமே அதுபோல் இருக்கும் மனிதனைத் தேடிச் செல்வோம்.

கோடி கோடியாக அள்ளிக் கொடுத்த தர்மனை விட பலநாள் பட்டினியாகக் கிடந்த அந்த அந்தணன் தன் பசி தன் குடும்பப் பசி அனைத்தையும் மறந்து வந்திருந்த முனிவருக்குத் தந்த அன்னமே உயர் அன்னமாகி அதுவே உயர் தர்மமாகிவிட்டது. தர்மம் என்பது அளவைப் பொறுத்ததல்ல. சத்யம் என்பது சூழ்நிலையைப் பொறுத்ததல்ல. விளைவு இருக்கும் சூழல் இவற்றைப் பொறுத்ததே. இருப்பதில் கொடுப்பது சிறப்பு என்றால் இருப்பதையே கொடுப்பது சிறப்பிலும் சிறப்பு.

உயர்ந்த கருத்துக்களை கேட்பதும் மனதில் பதிய வைப்பதும் சத்சங்கம் நடத்துவதும் மட்டுமல்லாமல் அதை பின்பற்றவும் முயல வேண்டும். இதெல்லாம் யாரால் இயலும்? கலிகாலத்தில் இதெல்லாம் சாத்தியமா? உயர்ந்த பழக்க வழக்கங்கள் கேட்பதற்கும் ஓதுவதற்கும் விவாதம் செய்வதற்கும் நன்றாக இருக்கிறது. ஆனால் பின்பற்றக் கடினமாக உள்ளது என்று ஒருவன் கூறினால் நல்லவனாக உயர்வானவனாக வாழ்வது எளிது என்றால் அனைவரும் அவ்வாறு வாழ்ந்துவிட்டு போவார்களே? அது கடினம் என்பதால்தான் அதற்குரிய மரியாதையும் இருக்கிறது. ஏன்? செல்வம் திரட்டுவதைவிட கடினம் இந்தக் காலத்தில் ஒரு மனிதன் நல்லவனாக வாழ்வது. ஆக இதனால் நான் இந்த தவறை செய்தேன். இந்த சூழ்நிலையால் நான் அடிபணிந்து போக வேண்டியிருந்தது என்று எந்தக் காரணமும் கூறாமல் ஒரு மனிதன் சத்தியவானாக இருக்க வேண்டும். அவ்வாறு ஒருவன் செல்லத் துவங்கிவிட்டால் இறை அவனை நோக்கி வரும் என்பது உறுதி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 186

கேள்வி: மோட்சம் பற்றிய விளக்கம்:

இறைவனின் அருளைக் கொண்டு இதை வேறு விதமாக விளக்குகிறோம். இந்த ஒரு நகரத்தில் இருந்து நீண்ட தொலைவு உள்ள நகரத்தை நோக்கி ஒரு பொது வாகனத்தில் இவன் ஏறி அமர்வதாகக் கொள்வோம். இவனைப் போல பலரும் அந்த தொலைதூர நகரத்திற்குச் செல்வதற்காக அந்த வாகனத்தில் அமர்ந்து இருக்கிறார்கள். இப்பொழுது உரிய அனுமதிச் சான்று பெற்று அந்த வாகனத்தில் இவனுக்கென்று ஒரு இருக்கை தரப்பட்டு அமர்ந்து இருக்கிறான். பலரும் அமர்ந்து இருக்கிறார்கள். ஆனால் அந்த வாகனம் அந்த நீண்டதூர நகரத்தை நோக்கி செல்வதற்கு முன்னால் இடையிடையே பல சிறிய பெரிய ஊர்களையும் நகரங்களையும் தாண்டி செல்லும். சில மனிதர்கள் இறுதியாக அந்த வாகனம் எங்கு செல்கிறதோ அதுவரை பயணம் செய்வதற்கு பயணச் சான்று வாங்கி இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் இறங்கிய வேண்டிய நகரம் அவர்களுக்கு வேண்டிய ஊர் அது. இன்னும் சிலர் பகுதியில் இடையில் உள்ள ஊரில் இறங்கிக் கொள்வார்கள். இது அந்தந்த மனிதனின் விருப்பத்தைச் சார்ந்தது. இந்த அந்த வாகனத்தில் தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருக்கிறான். ஒரு நிலையிலே இடையிடையே இறங்குபவர்கள் எல்லாம் குறைந்து விட்டு இறங்குகின்ற பயணிகள் அனைவருமே இப்பொழுது அந்த இறுதியாக செல்ல வேண்டிய ஊரை அல்லது நகரத்தை நோக்கித்தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. இப்பொழுது அவர்கள் சொந்த ஊரிலும் இல்லை. போக வேண்டிய ஊரை நோக்கியும் அவர்கள் இருந்திருக்கவில்லை. ஆனால் இடைப்பட்ட பயணத்தில் இருக்கிறார்கள்.

இந்த நிலையிலே அவர்களை எப்படி அழைப்பது? பயணம் செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று அழைக்கலாம். இப்பொழுது அந்த வாகனம் எந்த விதமான பழுதும் இன்றி எந்த விதமான இடையிலே பிரச்சனையும் இன்றி தொடர்ந்து சென்று கொண்டே இருந்தால் உரிய காலத்தில் அந்த நகரம் சென்று விடலாம். ஆனால் இடையிலே அந்த வாகனம் ஒரு பழுதாகி விடுகிறது. அந்த பழுதுக்காக சில காலம் தாமதமாகிறது. பிறகு பழுதை சரி செய்து செல்லும் பொழுது உணவு இடைவேளைக்காக ஓய்வு எடுக்கப்படுகிறது. அப்பொழுது கால தாமதமாகிறது. பிறகு இடையிலே ஓர் ஊர்வலம் வருகிறது தாமதமாகிறது. இப்படியெல்லாம் சென்று இறுதியாக அந்த நகரத்தை அடைகிறது. அதை போல் ஆத்மா என்பது இந்த நகரத்தை அடைவது போல இருக்கின்ற பரம்பொருளில் இருந்து துவங்கி அதன் செய்த முன்வினையின் காரணமாக பல்வேறு பிறவிகளை எடுத்து இறுதியாக மீண்டும் இறைவனோடு இரண்டறக் கலக்கிறது. இந்த கலக்கின்ற நிகழ்ச்சிக்கு முன்னால் தான் மாயையில் சிக்கி அறியாமையில் சிக்கி பல்வேறு தவறுகளை அது செய்யக்கூடிய நிலைக்கு ஆட்படுகின்றது. எப்பொழுது பாவமற்ற நிலைமை ஒரு ஆத்மாவுக்கு ஏற்படுகிறதோ அப்பொழுது அது முக்தி அல்லது இறுதி நிலை அல்லது இறையோடு இருக்கக்கூடிய இறையோடு இரண்டறக் கலக்கக் கூடிய இறை வாழ்கின்ற அருகில் இருக்கக் கூடிய சாயுச்சம் சாமீபம் சாலோகம் சாரூபம் என்ற நான்கு விதமான நிலையில் ஒரு நிலையை அந்த ஆத்மா அடைகிறது. இதற்கு இடைப்பட்ட பயணம் போன்றது தான் பிறப்பு. ஒரு வேளை மனிதனாகப் பிறக்கலாம் அது தேவப் பிறப்பாக இருக்கலாம் அல்லது மிருகப் பிறப்பாக இருக்கலாம். அது அதனதன் வினைப்பயனைப் பொறுத்தது. எனவே இந்த உலகிலே காணுகின்ற காட்சிகள் இந்த உலகிலே உணர்கின்ற உணர்வுகள் அனைத்துமே தற்காலிகமானவை நிரந்தரம் அல்ல.

நிரந்தரம் என்பது அந்த பரம்பொருளை உண்மையாக உணர்ந்து பரம்பொருளோடு இரண்டறக் கலப்பதுதான். அந்த முயற்சியில் ஒரு மனிதன் ஒரு பிறவியில் இறங்கினால் ஒரே பிறவியில் அவன் அதை சாதித்து விட முடியாது. எத்தனையோ பிறவிகள் அவன் தாண்டித் தான் போக வேண்டும். இடையிலே சராசரி எண்ணங்கள் அவனை கீழ் நோக்கி இழுக்கும். அதை எல்லாம் போராடி வைராக்கிய மனம் கொண்டு வெற்றி பெற்று தான் மேலேற வேண்டும். இதற்கு எத்தனை பிறவிகள் ஆகும் என்பதை இறைவன் மட்டுமே தான் அறிவான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 185

அமைதி பற்றி அகத்திய மாமுனிவர் பொது வாக்கு:

ஒரு மனிதன் பூஜைகள் செய்வதும் ஸ்தல யாத்திரை செல்வதும் ஏழைகளுக்கு உதவி செய்வதும் அதோடு இறை நாமத்தை பிராத்தனை செய்வதும் தியானம் செய்வதும் சுவாசப் பயிற்சி செய்வதும் யோகாசனம் செய்வதும் முக்கியம் முக்கியம் அவசியம். அதைவிட அவசியம் மனோரீதியாகப் பக்குவப்பட்டு இன்னும் இன்னும் அமைதியோடு பிறரோடு தொடர்பு கொள்ளும் பொழுது அந்த மனம் புண்படாமல் வார்த்தைகளைப் பயன்படுத்தக் கற்றுக் கொள்ள வேண்டும். அதுவே ஆன்மீகத்தின் முதல் பாடமாகும். இவையில்லாமல் வேறு எத்தனை திறமைகளை ஆன்மீகத்தில் வளர்த்துக் கொண்டாலும் இறையின் பரிபூரண அருளாசி கிட்டாது. அது மட்டுமல்லாமல் பல அப்பியாசங்களை (பயிற்சிகளை) செய்து இப்படி நல்ல பண்புகளை வளர்க்கத் தவறினால் செய்கின்ற பூஜா பலன்கள் அனைத்தும் சாளரமுள்ள பாத்திர நீர் போல் நிற்காமல் சென்று விடும்.

யாருக்கு சென்று விடும்?

எந்த மனிதனிடம் தேவை இல்லாமல் விவாதம் அபவாதம் செய்து மன வேதனையை இவன் ஏற்படுத்துகிறானோ அந்த மனிதனுக்கு இலவச சேவையாக இவன் செய்த பூஜா பலன்களையும் புண்ணிய பலன்களையும் தாரை வார்க்கிறான் என்பதுதான் ஆன்மீகத்தின் மிகப் பெரிய பேருண்மையாகும். ஆகவே அதொப்ப உண்மையை மனதிலே கொண்டு சினத்தை தவிர்த்து மெளனத்தைக் கடைபிடித்தால் எப்படி ஒரு கஞ்சன் தன்னுடைய தனத்தை பேழைக்குள்ளே (பெட்டிக்குள்ளே) வைத்து வைத்து பூட்டுகிறானோ அப்படி இவன் செய்த பூஜா பலனும் புண்ணிய பலனும் மெளனத்தில் விரயம் ஆகாமல் இருக்கும்.

இந்த இடத்தில் மனிதனுக்கு ஒரு வினா தோன்றும். அது எப்படி? அழியக்கூடிய சராசரியான பொருளைக் கொடுத்தாலே மிகப் பெரிய புண்ணியம் என்று சித்தர்கள் கூறும் பொழுது நாங்கள் செய்கின்ற பூஜா பலனும் புண்ணிய பலனும் இன்னொரு மனிதனுக்கு போகிறது என்றால் அதனாலும் எமக்குப் புண்ணியம் ஏற்பட வேண்டுமே? அப்படிப் பார்த்தாலும் தர்மத்தில் அது உயர்ந்த தர்மம் தானே? என்று ஒரு வினா மனிதனுக்குள் தோன்றும். உண்மைதான். எப்பொழுது ஒரு விஷயம் புண்ணியமாக மாறும்? மனம் உவந்து மனமார மன ஆறுதல் பெற செய்யும் காரியத்தில் தான் அதொப்ப புண்ணியம் வரும். ஒரு மனிதனுடைய பொருளை வேறொருவன் பறித்துக் கொண்டு செல்வது அல்லது அதை வேறு வழியில் இழப்பது என்று வரும் பொழுது அது புண்ணியமாக மாறாது. அது பாவத்தின் காரணமாக ஒரு நஷ்ட ஈடு போல் ஆகும். எனவே மனிதன் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும். சிந்தனையிலே மேம்பாடு ஆழம் அகலம் பண்பாட்டின் உச்சம் வார்த்தைகளை இன்னும் குறைக்கக் கற்றுக் கொள்ளுதல் மெளனத்தைப் பழகுதல் தேவையற்ற விவாதத்தை தவிர்த்தல் தான் எண்ணுவதுதான் நியாயம் என்று அடித்துக் கூறாமல் இருத்தல் (அது உண்மையாக இருந்தாலும் கூட பிறர் கூறுவது மூடத்தனமாக இருந்தாலும் கூட) – இந்த குணங்கள்தான் ஒருவன் ஆன்மீகத்தில் கடைஏறுவதற்கு ஏற்ற வழியாகும். அடுத்தவருக்கு புரிய வைக்கும் வார்த்தையிலே இதம் (இனிமை) வேண்டும். இங்கிதம் வேண்டும். சுகமான வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்த முடியாத சூழ்நிலையில் மெளனம் காக்க வேண்டும். கோபத்தாலோ சினத்தாலோ ஒருவன் மனதில் உயர்ந்த கொள்கைகளை புகுத்தி விடலாம் என்றால் அது ஒரு பொழுதும் நடவாது. பிறரை குறை கூறுவதற்கு முன்னால் தம்மிடம் குற்றம் குறை இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒரு மனிதன் வேண்டுமானால் நானா அப்படி நடந்து கொள்கிறேன்? கிரகங்கள்தான் என்னை அவ்வாறு இயக்குகிறது என்று கூறி தப்பித்துக் கொள்ளலாம். அப்படியானால் உன்னால் பாதிப்பு அடைந்த ஒரு மனிதன் வந்து உன்னை தாக்கும் பொழுது அவன்மீது உனக்கு கோபம் வரக்கூடாது. ஏன் என்றால்? அவன் கிரகம் அவனை அவ்வாறு இயக்குகிறது என்று அமைதியடைய வேண்டும். ஒன்று கிரகம் என்றால் அப்படி வந்துவிட வேண்டும். இயல்பு என்றால் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு தனிப்பட்ட முறையில் எத்தனையோ பிரச்சனைகள் மனக்காயங்கள் இருக்கலாம். வேதனைகள் இருக்கலாம். ஆனால் ஆதிக்கம் செலுத்த முடியாத இடத்தில் இவன் வேடிக்கை தானே பார்த்துக் கொண்டிருக்கிறான். அதே நேரத்தில் இவன் ஆதிக்கம் செல்லுபடியாகும் இடத்தில் ஏன் திணிக்க எண்ணுகிறான்? பணிவாகவே சொல்லலாமே பணிவு என்பது கோழைத்தனம் ஆகாது. அதுதான் இனிமையை வளர்க்கிறது. உறவை மேம்படுத்துகிறது. ஆக்கப்பூர்வமான அலைகளை வெளிக் கொண்டு வருகிறது. அந்த அலைகள் அடுத்தவன் மனதை சாந்தப்படுத்துகிறது. ஒரு வார்த்தை இவன் பேசமாட்டானா? என்று அடுத்தவன் ஏங்கும் வண்ணம் வார்த்தைகளை குறைத்தே பயன்படுத்த வேண்டும். ஆயிரம் வார்த்தைகள் சொல்ல முடியாததை ஒரு ஓவியம் சொல்லும் என்பார்கள். வார்த்தைகள் இரத்தினச் சுருக்கமாக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள் ஆகும்.