ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 105

கேள்வி: போக மகரிஷி அறிந்த ரகசியங்களில் ஒரு சிறிதேனும் அன்பர்கள் அறிந்து கொள்ள உபாயம் அருளுங்கள்

இறை அனுமதித்தால் தக்க காலத்தில் கூறுவோம். அதற்குள் அவரவர்கள் பிரச்சனைகளுக்கு அவரவர்களே அறிந்து கொள்ள பழனியம்பதிக்கு சென்று முருகப் பெருமானையும் போகனையும் வணங்கிவிட்டு அவரவர் இல்லத்திலே போகரின் உருவத்தை வைத்து முருகப் பெருமானின் உருவத்தை வைத்து அன்றாடம் பூஜித்து வணங்குவதும் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து அதிகாலையிலே போகனை நினைத்து நினைத்து நினைத்து துதி செய்தால் அவன் உள்ளிருந்து பலவற்றைக் காட்டித் தருவான். இன்னென்ன பிணிக்கு இன்னென்ன செய்தால் நன்மை உண்டு. உன் பிணிக்கு இதை செய்தால் போதும் என்று உள் உணர்வாகவே உணர்த்தி வழிகாட்டுவான்.

கேள்வி: எல்லா ஆண்களும் எல்லா பெண்களும் வேலைக்கு சென்று விட்டால் வீட்டுப் பணிகள் என்ன ஆவது?

இறைவன் அருளால் அப்படியெல்லாம் நீ கலக்கம் கொண்டிட வேண்டாமப்பா. ஏனென்றால் எல்லோரும் படித்து வேலைக்கு சென்று விடலாம் என்கிற நிலை வந்தாலும்கூட அப்பொழுதும் கலைமகள் (அன்னை சரஸ்வதிதேவி) அருள் கிட்டாமல் எத்தனை பேர் இருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு பணி வேண்டாமா? அவர்களெல்லாம் வீட்டுப் பணிகளை ஏற்க முன்வருவார்கள். இல்லப் பணிகளை என்னதான் பிறரை வைத்து செய்தாலும் கூட எத்தனைதான் வெளியில் சென்று பணியாற்றினாலும் கூட ஒரு கணவனும் மனைவியும் சேர்ந்து செய்வதுதான் சிறப்பிலும் சிறப்பைத் தரும். நல்ல ஆக்கப்பூர்வமான அதிர்வெண்களைத் தரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 104

கேள்வி: வால்மீகி இராமாயணத்தில் ராமர் மான் மாமிசத்தை உண்டார் என்று கூறப்படுவது இடைசெருகலா?

மகாவிஷ்ணுவின் அவதாரம் ராமர் என்பதை நீ ஒப்புக்கொள்கிறாயா? (பதில் : ஆமாம்). அப்படியென்றால் மான்களை வேட்டையாடவே கூடாது என்று மிக மிக சராசரியான மன்னனே அக்காலத்திலெல்லாம் சட்டம் இயற்றியிருந்தான் தெரியுமா? மான்கள் முயல் இன்னும் சாதுக்களான விலங்குகளை யாரும் எக்காலத்திலும் வேட்டையாடுதல் கூடாது. இன்னும் கூறப்போனால் முறையான பக்குவம் பெற்ற மன்னர்கள் பொழுது போக்கிற்கு என்று வேட்டையாட செல்ல மாட்டார்கள். என்றாவது கொடிய விலங்குகள் மக்களை இடர்படுத்தினால் மட்டும் அதிலும் முதலில் உயிரோடு பிடிக்கதான் ஆணையிடுவார்கள். முடியாத நிலையில்தான் கொல்வார்கள். ஒரு சராசரி மன்னனே இப்படி செயல்படும் பொழுது மகாவிஷ்ணுவின் அவதாரம் என்று கூறப்படுகின்ற ஸ்ரீ ராமபிரான் இவ்வாறெல்லாம் செய்திருப்பாரா? கட்டாயம் செய்திருக்கமாட்டார். அப்படி விலங்குகளைக் கொன்று தின்னக்கூடிய அளவில் ஒரு கதாபாத்திரம் கற்பனையாகக்கூட ஒரு ஞானியினால் படைக்கப்படாது. ஒரு வேளை அது உண்மை என்றால் அப்பேற்ப்பட்ட ஸ்ரீ ராமர் தெய்வமாக என்றும் போற்றப்படுவாரா? யோசித்துப் பார்க்க வேண்டும். என்ன காரணம்? பின்னால் மனிதனுக்கு வசதியாக இருக்க வேண்டும். ராமரே இவற்றையெல்லாம் உண்டிருக்கிறார். நான் உண்டால் என்ன? என்று பேசுவற்கு ஒரு காரணம் வேண்டுமல்லவா?

பலம் என்பது உடலில் இல்லை மனதில் இருக்கிறது. சுவாசத்தை எவனொருவன் சரியாக கட்டுப்படுத்தி சிறு வயதிலிருந்து முறையான பிராணாயாமத்தை கடைபிடிக்கிறானோ அவனுக்கு 72000 நாடி நரம்புகள் பலம் பெறும் திடம் பெறும். அவனுடைய சுவாசம் தேவையற்ற அளவிலே வெளியேறாது. நன்றாக புரிந்து கொள். எவனொருவன் வாய் வழியாக சுவாசம் விடுகிறானோ அவனுக்கு தேகத்தில் (உடலில்) அத்தனை வியாதிகளும் வரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 103

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

யார் யாருக்கு விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடந்து கொண்டேயிருக்கிறது. அந்தக் கடுமையான விதியிலிருந்து ஒருவனைக் காப்பாற்ற வேண்டுமென்றால் அதற்கு சரியான காரணத்தை இறையிடம் நாங்கள் காட்ட வேண்டும். அப்படி சரியான காரணம் எம்மைப் பொருத்தவரை தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் தர்மம் இது ஒன்றுதான். அதனையும் தாண்டி மனதிலே அப்பழுக்கில்லாமல் எந்த சூது வாது இல்லாமல் சிறு குழந்தை போல் மனதை வைத்திருந்தால் அதையும் ஒரு சரியான காரணமாகக் காட்டுவோம். ஆனால் இங்கு வருகின்ற பலருக்கும் வெறும் லோகாய விஷயங்களைக் கேட்பதற்காக நாங்கள் வருத்தப்படவோ சினப்படவோ இல்லை. அது மனிதனின் தேவை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் எம்மிடம் வந்தும் ஒன்றும் நடக்கவில்லை என்றால் குற்றம் எங்கே? என்று யாரும் சிந்தித்துக்கூட பார்ப்பதில்லை. எனவே இன்று இங்கு எம்முன்னே அமர்ந்து வாக்கைக் கேட்கின்ற அனைவருக்கும் கூறுகிறோம். எமது வாக்கை நூற்றுக்கு நூறு சரியாகப் புரிந்து கொண்டு சரியான தர்ம வழியில் எவன் ஒருவன் நடக்கிறானோ கட்டாயம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எதைக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் அவனுக்கு எதை செய்ய வேண்டுமோ அதை நாங்கள் இறையருளால் செய்திருக்கிறோம் செய்து கொண்டிருக்கிறோம் இனியும் செய்வோம். அப்படியெல்லாம் ஏதுமில்லை. பல ஆண்டுகளாக சித்தர்கள் வழியில் நான் வருகிறேன். என் கஷ்டங்கள் எதுவும் தீரவில்லை. மாறாக கஷ்டங்கள் அதிகமாகி இருக்கிறது என்று யாராவது எண்ணினால் இரண்டு நிலைகளை அங்கே பார்க்க வேண்டும். ஒன்று பரிபூரணமாக முன் ஜென்ம பாவங்கள் அங்கே குறையவில்லை. முன் ஜென்ம பாவங்கள் ஓரளவு குறைந்திருந்தாலும் இந்த ஜென்மத்தில் இளமை காலத்திலிருந்து அவன் நடந்து கொண்ட விதத்தை சிந்தித்து பார்த்தால் எங்கே குற்றம்? எங்கே குறைகள்? என்பது அவனவன் மனதிற்கு கட்டாயம் புரியும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 102

கேள்வி: ஜீவாத்மாவை எப்பொழுது பாவம் பற்றத் தொடங்குகிறது?

எப்பொழுது பரமாத்வாவை ஜீவாத்மா பிரிந்ததாக நம்பப்படுகிறதோ கூறப்படுகிறதோ எப்பொழுது பிறவி என்று இந்த மாய லோகத்திற்கு ஒரு உயிர் வருகிறதோ அப்பொழுது பாவம் பற்றி விடுகிறது.

கேள்வி: விதியைத் தாண்டி கேள்விகளை கேட்க சிந்திக்க செயல்பட எங்களுக்கு அருள்புரிய வேண்டும்

இறைவன் அருளால் விதி தாண்டி எத்தனையோ நாங்கள் கூறுகிறோம். ஆனால் அதனை ஏற்கத்தான் மனிதனின் மனம் இடம் தருவதில்லை. ஒருவன் ஒரு மிகவும் அழகான இல்லம் வைத்திருப்பதாகக் கொள்வோம். இப்பொழுது இங்கு ஆணையிடுகிறோம். அந்த இல்லத்தை விற்றுவிட்டு தர்மம் செய் என்றால் அதை செய்ய ஆயத்தமாக இருக்கிறானா? இங்கு யாராவது இப்படி இருக்கிறார்களா? இருந்தால் விதி தாண்டி எப்படி வாழ்வது? விதி தாண்டி எதையெல்லாம் செய்யலாம். எப்படி செய்யலாம் என்று நாங்கள் கூறுவோம்.

கேள்வி: ஒருவனுக்கு பாவம் பார்க்கப் போனால் அவர்களின் பாவம் நம்மை பற்றிக் கொள்ளும் என்ற சொல் வழக்கில் இருக்கிறது அது குறித்து

இறைவன் அருளால் பிறரை பார்த்து இரக்கப்பட்டு உதவி செய்து நாம் சங்கடத்தில் மாட்டிக் கொள்வோம் என்ற அடிப்படையில்தான் உன் வினா அமைந்திருக்கிறது என்று யாம் எண்ணுகிறோம். கட்டாயம் பிறருக்கு உதவ வேண்டும். அப்படி உதவும் பொழுது உதவுகின்ற மனிதனுக்கு தொடர்ந்து இன்னல்கள் வருமேயானால் நாகரீகமாக ஒதுங்கிக் கொள்ளலாம். தவறேதுமில்லை. இது மனித ரீதியான சிந்தனை. ஆனால் எத்தனை கஷ்டங்கள் துன்பங்கள் வந்தாலும் தர்மத்தை கைவிடாமல் பிறருக்கு உதவுவதை நிறுத்தாமல் இருப்பதுதான் மகான்களின் போதனை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 101

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான ஜபத்தைவிட உள்ளன்போடு ஆத்மார்த்தமாக பரிசுத்த இதயத்தோடு ஒரே ஒரு முறை இறை நாமத்தை ஜபித்தால் இறை தரிசனம் உண்டு. ஆனால் இறை தரிசனம் வேண்டும் என்கிற அந்த எண்ணம் தீவிரமடைந்து லோகாயம் எல்லாம் போக வேண்டும் என்ற எண்ணத்தோடு ஜெபித்தால் கட்டாயம் இறை துவாபர யுகத்தில் மட்டுமல்ல திரேதா யுகத்தில் மட்டுமல்ல இந்த கலியுகத்திலும் காட்சி தருவார் என்பது உறுதி. இருந்தாலும் லகரம் (லட்சம்) ககரம் (கோடி) மந்திரங்களை ஜெபி என்று கூறுவதன் காரணமே மனித மனம் ஒரு ஒழுங்குக்கு கட்டுப்படாததால் (அப்படி) கூறிக்கொண்டே இருந்தால் என்றாவது ஒருநாள் அவனையும் அறியாமல் மனம் லயித்து ஒரு முறை ஒரு முறை அந்த திருவின் நாமத்தை மனம் வாக்கு காயம் (உடல்) 72000 நாடி நரம்புகள் பரவ கூறுவான் என்று தானப்பா நாங்களும் கூறுகிறோம். எனவே கூறிக்கொண்டேயிரு. இறைவன் கருணையால் அது ஏதாவது ஒரு நிலையில் சித்திக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 100

அகத்திய மாமுனிவரின் (குருநாதர்) பொது வாக்கு:

இறைவன் அருளால் எப்பொழுது மனித குலம் தாங்கொண்ணா துயரை நுகர்கிறதோ அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த சமுதாயத்தில் தர்மம் குறைந்திருக்கிறது என்று. தர்மம் குறைவதுகூட பாதகமில்லை. பாவத்தில் கொடிய பாவம் எது தெரியுமா? ஒருவன் தர்மம் செய்யலாம் அல்லது செய்யாமல் போகலாம். அது அவனின் கர்மவினையைப் பொறுத்தது. அது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால் நல்லவர்களை இனம் காண முடியாமல் நல்லவர்களையெல்லாம் ஏளனம் செய்து ஒதுக்கிவிட்டு தீயவர்களையும் ஆளுமை கொண்டு கர்வத்தோடு இருக்கக்கூடிய மனிதர்களை வெறும் பதவிக்காகவும் தனத்திற்காகவும் அவன் பின்னால் ஒரு கூட்டம் சென்று கொண்டேயிருக்கிறது. ஒருவன் நான் பாவம் செய்யவில்லை என்று மார் தட்டலாம். ஆனால் பாவம் செய்து கொண்டிருக்கும் மனிதனை அண்டிப் பிழைக்கிறானே? அதுதான் மாபெரும் பாவம். இப்பேற்ப்பட்ட சமுதாயக் கூட்டம் இருக்கும் வரையில் எங்கெல்லாம் நல்லவை நடக்கிறதோ அதை புரிந்து கொள்ளாத அறியாமை இருள் இருக்கும் வரையிலும் எங்கெல்லாம் நல்ல விஷயங்கள் நடக்கிறதோ அங்கெல்லாம் குதர்க்கவாதம் பேசி விமர்சனம் செய்துவிட்டு வெறும் வெற்று ஆர்பாட்டத்திற்கும் வெற்று வேடிக்கைக்கும் கூட்டத்திற்கும் செவி கொடுத்து பார்வை கொடுத்து அதை நோக்கி ஒரு மனித சமுதாயம் செல்லும் வரையிலும் நதி வரண்டுதான் இருக்கும். வருணன் பொய்த்துதான் போவான். முதலில் ஒருவன் தான் நல்லது செய்வது என்பது அடுத்த நிலை. ஏற்கனவே அவனை சுற்றி நடக்கக்கூடிய உண்மையான நல்ல விஷயங்களையெல்லாம் செவி கொடுத்து கேட்க வேண்டும். கண் கொண்டு பார்க்க வேண்டும். எதைப் பார்த்தாலும் அதில் குற்றம் கண்டு கொண்டே இருப்பதைவிட இது தக்கது இது தகாதது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயங்களை முதலில் கேட்க பழக வேண்டும். கேட்டு கேட்டு கேட்டு கேட்டு கேட்டு மனதிலே பதிய வைத்து வைத்து வைத்து பிறகு அதனையே விவாதம் செய்து செய்து செய்து செய்து பிறகு அதனை நடைமுறைப்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். நல்லதை எண்ணி நல்லதை உரைத்து நல்லதை செய்ய அப்படி செய்யக்கூடிய மனிதர்கள் எல்லாம் சத்சங்கமாக கூட கூட வருணன் பொழிவான். நதி கரைபுரண்டோடும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 99

கேள்வி: ஐயனே சம்பளத்தில் ஒரு 10% தானத்திற்கு கொடுத்தால் போதுமா?

பதில்: அப்படி என்றால் கர்மவினையும் 10% தான் குறையும் போதுமா?

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 98

அகத்திய மாமுனிவர் (குருநாதர்) பொதுவாக்கு

இறைவன் அருளைக் கொண்டு கூறுவது என்னவென்றால் நூற்றுக்கு நூறு எம்மை நம்பி எம் வழியில் வருகின்ற அனைவருக்கும் நாங்கள் (சித்தர்கள்) இறைவனருளால் நல்ல வழி காட்டுவோம். உலகியல் ரீதியாக முன்னேற்றம் காட்டினால்தான் ஒருவனுக்கு நாங்கள் அனுக்ரஹம் செய்கிறோம் என்பது மிகவும் குழந்தைத்தனமான எண்ணம். நன்றாக எமது வார்த்தையை கவனித்து பொருள் கொள்ள வேண்டும். எதற்காக இந்த ஜீவ அருள் ஓலைக்கு (ஜீவநாடி) இங்கு வருகின்ற அனைவரையும் இழுத்து வந்து விதவிதமான வாக்குகளைக் கூறி விதவிதமான தேர்வுகளை வைக்கிறோம் என்றால் இங்கு மனித நிலையிலே வெறும் தோற்றத்தில் மனிதனாக குணத்தில் மிருகமாக இருக்கலாம். பிறகு தோற்றத்திலும் குணத்திலும் மனிதனாக இருக்கலாம். தோற்றத்திலும் குணத்திலும் மனிதனைவிட மேம்பட்ட மாமனிதனாக இருக்கலாம் புனிதனாக இருக்கலாம்.

இதையெல்லாம் தாண்டி ஒவ்வொரு மனித ஆத்மாவையும் சித்த ஆத்மாவாக மாற்ற வேண்டும். இதுதான் இறைவன் எங்களுக்கிட்ட (சித்தர்கள்)கட்டளை. ஒவ்வொரு மனிதனையும் சித்தர்களாக மாற்ற வேண்டும் என்றால் அது எத்தனை பெரிய இரசவாதம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது எளிமையான காரியம் அல்ல. செம்பை தங்கமாக்குவதோ அல்லது இரும்பை பொன்னாக்குவதோ அல்ல. அது மிக மிக எளிது. ஆனால் மனிதனை குறைந்தபட்சம் மனிதனாக்கி அவனை மாமனிதனாக்கி அந்த மாமனித நிலையிலிருந்து மேலும் புனிதனாக்கி அவனை நல்ல நிலையிலே சித்தனாக்க வேண்டும். அப்படி சித்த நிலை நோக்கி செல்ல வேண்டும் என்றால் நாங்கள் கற்பிக்கும் பாடங்கள் கடினமாகத்தான் இருக்கும். அந்த பாடங்களை சரியாக உள்வாங்கி எவன் புரிந்து கொள்கிறானோ லோகாய (உலகியல் ரீதியாக) கஷ்டங்களையெல்லாம் ஒதுக்கி வைத்து எம் பின்னால் வருகிறானோ அவனை நாங்கள் ஒரு சித்தனாக்கி விடுவோம். சித்தனாக்கி விட்டால் பிறகு அவன் எதற்கு இன்னொரு சித்தனை நாட வேண்டும்? அவன் இறையைகூட நாட தேவையில்லை. ஒவ்வொரு ஆணையும் பெண்ணையும் அந்த நிலைக்கு அழைத்து போக வேண்டும் என்றுதான் நாங்கள் இந்த ஜீவ அருள் நாடி என்று நாமமிட்டு மூன்று முனிவர்களும் போராடிக் கொண்டிருக்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 97

கேள்வி: அரச மரம் பற்றி

பல அரசர்களே மரம் போல் இருக்கிறார்களப்பா. இறைவனின் அருளாலே அரச மரத்திலே பலவிதமான ஆற்றல்கள் போதிந்திருப்பதை மனிதர்கள் மெல்ல மெல்லதான் புரிந்து கொள்கிறார்கள். மனித சிந்தனையிலே பெரும்பங்கு வகிப்பது மனிதன் கூறுவது போல மூளையாகும். அந்த மூளை நன்றாக வேலை செய்வதற்கு அயர்வுராமல்(சோர்வுராமல்) இருப்பதற்கு வேண்டிய வேதிப்பொருள்களை எல்லாம் தூண்டிவிடக்கூடிய நிலை அந்த அரச மரத்தை சுற்றியுள்ள காற்றிலே இருக்கிறது. இதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகள் இருக்கும் பட்சத்திலே அடிக்கடி அரச மரத்தடியிலே உள்ள விநாயகப் பெருமானையும் நாக தெய்வங்களையும் வணங்கி பலமுறை சுற்றி வந்தால் சில நாழிகை அங்கு அமர்ந்தால் கட்டாயம் அங்குள்ள விநாயகர் காப்பாற்றுகிறாரோ இல்லையோ அந்த அரச மரத்தின் மூலிகைத் தன்மை கட்டாயம் தேகத்தைக் காப்பாற்றும். எனவே இது போன்ற ஒவ்வொரு விருக்ஷத்திடமிருந்தும் அற்புதமான மூலிகைப் பயன்கள் காற்றின் மூலம் மனித சுவாசத்தின் மூலம் உள்ளே செல்கிறது. இதனை மனிதன் நன்றாக புரிந்து கொண்டு அந்த இடத்திலே இருக்கும் பொழுது இறை சிந்தனையோடும் வேறு தேவையற்ற சிந்தனைகளும் இல்லாமல் இருந்து அமைதியாக வாய் வழியாக இல்லாமல் ஆழ்ந்த பெருமூச்சை நாசியின் வழியாக விட்டு இழுத்தால் கட்டாயம் நல்ல பலனை பெறலாம்.

ஒவ்வொரு மரத்தினாலும் நல்ல பலன் உண்டு. சில மரங்கள் தீய பலனைத் தருவதாக மனிதன் எண்ணலாம். அதை நேரடியாக தீய பலன் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அது யாருக்கு உகந்ததோ அவர்கள் அந்த மரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கூறுங்கால் புளிய விருக்ஷம் எனப்படுவது அதிக அனல் உஷ்ணம் அங்கு தங்குவது கூடாது என்று கூறப்படுவது உண்மைதான். ஆனால் அதிக அளவு குளிர் தேகம் கொண்டவர்கள் சீதளக் குற்றம் உள்ளவர்கள் அங்கு தாராளமாக தங்கலாம்.

கேள்வி: அம்மையப்பன் தான் உலகம் என்பதன் பொருள்

இறைவனையும் இறைவியையும் தாய் தந்தையாக பாவிக்க வேண்டும் என்கிற பொருளும் உண்டு. ஒவ்வொரு குழந்தையும் தன் பெற்றோர்களை இறைவனுக்கு சமமாக மதிக்க வேண்டும் என்கிற பொருளும் உண்டு.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 96

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 96

கேள்வி: பெண்கள் மூத்தோனை (விநாயகரை) எவ்வாறு வழிபடுவது?

பெண்களுக்கு மூத்தோன் என்றால் முதலில் கணவன் என்று நாங்கள் கூறுவோம். கணவனை வணங்கு என்று நாங்கள் பெண்களைப் பார்த்து கூற இயலுமா இக்காலத்திலே? இன்னொரு வகையில் பார்த்தால் உடன் பிறந்தவர்களில் யார் மூத்தவர்களோ அவர்களை வணங்க வேண்டும். இவையெல்லாம் ஒருபுறம் இருக்க விநாயகப்பெருமானை வணங்குகின்ற தன்மையைத்தான் நீ வினாவாகக் கேட்டிருக்கிறாய். இறைவனை வணங்குவதற்கென்று விதிமுறைகள் என்று வேதங்களிலும் ஆகமங்களிலும் எத்தனையோ கூறப்பட்டிருந்தாலும் கூட எம்மிடம் வருகின்ற சேய்களுக்கு(பிள்ளைகளுக்கு) நாங்கள் அதனையெல்லாம் வலியுறுத்துவதில்லையப்பா. ஏனென்றால் விதிமுறைகளைக் கூறினால் பிறகு விதிமுறைகள்தான் அங்கே இருக்குமே தவிர பக்தி இல்லாமல் போய் விடும். விதிமுறைகள் புரிவதற்காக வகுக்கப்பட்டவை. அதனையே பிடித்துக் கொண்டு மனிதன் தொங்குவதுதான் வேதனையிலும் வேதனை.

காசியிலே இருந்தால் முக்தி என்றால் இவன் காசியில் இறந்தால் முக்தி என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். காசி என்றால் ஆக்ஞா சக்கரம். அங்கே நினைவை நிறுத்தி நிறுத்தி நிறுத்தி சதாசர்வகாலம் அந்த காசியிலே (புருவ மத்தி) இருந்தால் அது முக்திக்கு வழிவகுக்கும். பஞ்சமா பாதகங்களை செய்துவிட்டு காசியிலே இறந்தால் முக்தியா கிட்டும்? தனி நரகமே ஏற்படுத்த வேண்டுமல்லவா? தேர் இழுக்க வேண்டுமென்றால் குண்டலினி எனப்படும் தேரினை எண்ணங்கள் என்னும் கயிற்றால் வைராக்யம் எனும் வலிமையால் மேலே ஏற்றி ஏற்றி மூலாதாரம் ஸ்வாதிஷ்டானம் மணிப்பூரகம் என்று ஒவ்வொரு ஆதாரமாகக் கடந்து சஹஸ்ர ஆதாரத்திற்கு கொண்டு வந்து அதனை நிலைநிறுத்த வேண்டும். அந்தத் தேர் புறப்பட்ட இடத்திற்கு வந்துவிடும். இந்தத் தேர் மேலே வந்துவிட்டால் கீழே இறங்குவது கடினம். ஆனால் வைராக்யம் பெற்ற ஞானிகள் மேலும் கீழும் இந்த குண்டலினி தேரையும் இழுப்பார்கள். இதற்கு உவமானமாக ஒரு தேரை வைத்து அதனுள் சுவாமியை வைத்து இழுப்பது என்று சுட்டிக்காட்டினால் அந்தத் தேர் இழுப்பதையே பெருமையாக வைத்துக் கொண்டு இதிலும் கலவரத்தை வளர்த்துக் கொண்டு வாழ்கின்ற மனித கூட்டத்திற்கு எதனைக் கூறுவது? எனவே விதிமுறைகளை விட்டுவிட்டு ஆத்மார்த்தமாக ஒவ்வொரு ஆணும் பெண்ணும் எப்படியெல்லாம் இறைவனை வணங்கத் தோன்றுகிறதோ பாசத்திற்குரிய தந்தையை அன்பிற்குரிய மனைவியை பாசத்திற்குரிய அன்னையை குழந்தையை எப்படியெல்லாம் பார்க்கிறார்களோ அப்படி பார்த்து அப்படி பேசிக்கொண்டால் அதுதான் உண்மையான வழிபாடு.