ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 95

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 95

விருத்தகிரீஸ்வரர் ஆலயம் பற்றி அகத்தியர் மாமுனிவரின் (குருநாதர்) பொதுவாக்கு

இறைவன் அருளால் கண்டராதித்தன் சோழன் காலத்திருந்தே பெருமை பெற்றது விருத்தகிரீஸ்வரர் ஆலயம். விருத்தம் என்றால் இலக்கணத்திலே விருத்தம் என்ற பா வகை இருக்கிறது. பழமை என்ற ஒரு பொருளும் இருக்கிறது. பழமறைநாதர் என்ற நாமத்தோடு அங்கு சிவபெருமான் அருள்புரிந்து கொண்டிருக்கிறார். காசி போன்ற இடங்களுக்கு செல்ல இயலாதவர்கள் இந்த விருத்தகிரிக்கு சென்று வேண்டுதல்களை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்த ஸ்தலம் முழுவதுமே கிரிவலம் போல பிரகார வலம் வருவதும் குறிப்பாக மாத சிவராத்திரியன்று வணங்கினால் கடுமையான பிரம்மஹத்தி தோஷம் நீங்கக்கூடிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. மிக மிக உயர்வான ஆலயம். அங்கு ஆழத்து பிள்ளையார் இருக்கிறார். அந்த ஆழத்து பிள்ளையை ஒவ்வொரு மனிதனும் சதுர்த்தி மற்றும் மக நட்சத்திர தினத்தன்று சென்று நல்ல முறையிலே வழிபாடு ஏழைகளுக்கு அன்ன சேவை செய்தால் கேது திசையால் ஏற்படக்கூடிய சில எதிர் விளைவுகள் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எல்லா ஆலயங்களும் சிறப்பான ஆலயங்கள்தான். அங்கு செல்லக்கூடிய மனிதனின் மனம் மனதிலே இருக்கக்கூடிய பக்தி அவன் செய்கின்ற செயல் இவற்றைப் பொறுத்து அவனவனுக்கு பலன் ஏற்படும்.

கேள்வி: வான மண்டலத்தில் பல மாற்றங்கள் உதாரணமாக உத்தராயணம் தட்சிணாயனம் வளர்பிறை தேய்பிறை போன்ற மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. ஆனால் விடியற்காலையிலே தோன்றும் விடிவெள்ளி மாறாமல் இருக்கிறதே அது எப்படி?

விடிவெள்ளியும் மாறிக் கொண்டுதான் இருக்கிறதப்பா. அதை கவனித்துப் பார்த்தால் புரியும்.

விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 94

அகத்தியர் மாமுனிவரின் (குருநாதர்) பொதுவாக்கு

மனித வடிவிலே சிறந்த குரு வேண்டுமென்று பல மனிதர்கள் நாடுகிறார்கள். நன்றாக புரிந்து கொண்டிட வேண்டும். மனித வடிவிலே சிறந்த குருமார்கள் இல்லாமலில்லை. ஆனால் அதை ஒரு மனிதன் தன்னுடைய முன்ஜென்ம பாவங்களை குறைத்து குறைத்து குறைத்து அதனையும் தாண்டி ஆன்மீக தாகம் எடுத்து எடுத்து எடுத்து அதை நோக்கிய சிந்தனையைத் தவிர வேறு எந்த சிந்தனையும் இல்லாத நிலையில் இறைவனாகப் பார்த்துதான் தக்க குருவை அனுப்பி வைப்பார். ஆனால் தன்னைப் பற்றி வெளியில் கூறிக்கொள்ளும் பெரும்பாலான குருமார்கள் அனைவருமே முழுமையான ஞானமோ முழுமையான இறையருளைப் பெற்றவர்களோ அல்ல. வெறும் ஒரு மடத்து நிர்வாகியாகவும் ஆன்மீகத்தைத் தொழில் போலவும் செய்யக்கூடிய மனிதர்களே அதிகம். எனவே மனித வடிவில் குருவைத் தேடி காலத்தை வியம் (விரயம்) ஆக்கிட வேண்டாம். சந்திக்கின்ற ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு நல்ல விஷயம் இல்லாமலிருக்காது. அதைக் கற்றுக் கொண்டு தனக்குள்ளே பிரம்மத்தைத் தேடுகின்ற முயற்சியாக அமைதியாக முன் அதிகாலையிலே வடக்கு திசை நோக்கி பத்மாசனமிட்டு அமர்ந்து அமைதியாக மிக மெதுவாக சுவாசத்தை உள்ளே வைக்கும் கும்பத்தை செய்திடாமல் மெல்ல மெல்ல சுவாசப் பயிற்சியை பயின்று வந்தால் நல்ல பலன் உண்டு. அப்படியே தியானத்திலே அமர்ந்து எது நடந்தாலும் சிந்தனை எத்தனை தடுமாற்றம் அடைந்தாலும் சிந்தனை எங்கு அலைந்து திரிந்து திளைத்து சென்றாலும் எத்தனை குழப்பம் வந்தாலும் அவற்றையெல்லாம் ஒரு மூன்றாவது மனிதனின் பார்வை கொண்டு பார்க்க பழக வேண்டும். ஒரு சிந்தனை தவறு என்றால் அந்த சிந்தனை இன்னொரு மனிதரிடம் அதிலும் ஆன்மீக வழியில் வரும் மனிதரிடம் இருந்தால் இவன் ஏற்றுக் கொள்வானா? என்று பார்த்து இவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்றால் பிறரிடம் இந்த சிந்தனையிருந்தால் அவனை மதிக்கமாட்டோம் என்றால் நம்மிடம் மட்டும் ஏன் இந்த சிந்தனை? என்று ஆய்ந்து பார்த்து பகுத்துப் பார்த்து இவனை இவன் சரிசெய்து கொண்டால் மெல்ல மெல்ல முன்னேற்றம் ஏற்படும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 93

கேள்வி: கல்வியை அரசாங்கமே ஏற்று நடத்த அருள் செய்ய வேண்டும்?

இறைவன் அருளால் லட்சுமி (பணம்) இருந்தால் சரஸ்வதியை (கல்வி) வாங்கலாம் என்ற நிலை இப்பொழுது இருக்கிறது. இது காலகாலம் இருக்கக்கூடிய ஒரு நிலைதான். முற்காலத்திலும்கூட ஒரு சில அறிவிலிகள் நிறைய தனத்தை தந்தால்தான் போதிப்பேன் என்றெல்லாம்கூட இருந்திருக்கிறார்கள். இது மனித மலினங்களில் ஒன்று. இதை தவிர்ப்பது என்பது கடினம். இருந்தாலும்கூட ஏழைகளுக்கு இலவசமாக கல்வியைத் தரவேண்டுமென்று பல நல்ல உள்ளங்கள் ஒன்றுகூடி அதற்காக போராடினால் மெல்ல மெல்ல இதற்குரிய சூழ்நிலை ஏற்படும். இருந்தாலும்கூட பிரம்மனுக்கு உகந்த ஸ்தலங்கள் சென்று வணங்குவதும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குறைந்தபட்சம் 120 தினங்கள் பிரம்மாவையும் சரஸ்வதியையும் இல்லத்தில் வணங்குவதுமாக இருந்தால் இப்படி முறையற்ற கல்வி முறையற்ற மனிதனுக்கு போகாமல் தேவையான மனிதனுக்கு நியாயமான முறையில் கல்வி கற்பிக்க ஒரு சூழல் ஏற்படும்.

கேள்வி: தாங்கள் ஏழு கடல்களை உள்ளங்கையில் வைத்து குடித்ததின் நோக்கம் என்ன ஐயனே?

இறைவன் எம்மைக் கருவியாக வைத்து எத்தனையோ செயல்களை செய்திருக்கிறாரப்பா. அதில் ஒன்றுதான் நீ வினவியது.

கேள்வி: கல்வியை அரசாங்கமே ஏற்று நடத்த அருள் செய்ய வேண்டும்?

இறைவன் அருளால் லட்சுமி (பணம்) இருந்தால் சரஸ்வதியை (கல்வி) வாங்கலாம் என்ற நிலை இப்பொழுது இருக்கிறது. இது காலகாலம் இருக்கக்கூடிய ஒரு நிலைதான். முற்காலத்திலும்கூட ஒரு சில அறிவிலிகள் நிறைய தனத்தை தந்தால்தான் போதிப்பேன் என்றெல்லாம்கூட இருந்திருக்கிறார்கள். இது மனித மலினங்களில் ஒன்று. இதை தவிர்ப்பது என்பது கடினம். இருந்தாலும்கூட ஏழைகளுக்கு இலவசமாக கல்வியைத் தரவேண்டுமென்று பல நல்ல உள்ளங்கள் ஒன்றுகூடி அதற்காக போராடினால் மெல்ல மெல்ல இதற்குரிய சூழ்நிலை ஏற்படும். இருந்தாலும்கூட பிரம்மனுக்கு உகந்த ஸ்தலங்கள் சென்று வணங்குவதும் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்து குறைந்தபட்சம் 120 தினங்கள் பிரம்மாவையும் சரஸ்வதியையும் இல்லத்தில் வணங்குவதுமாக இருந்தால் இப்படி முறையற்ற கல்வி முறையற்ற மனிதனுக்கு போகாமல் தேவையான மனிதனுக்கு நியாயமான முறையில் கல்வி கற்பிக்க ஒரு சூழல் ஏற்படும்.

கேள்வி: தாங்கள் ஏழு கடல்களை உள்ளங்கையில் வைத்து குடித்ததின் நோக்கம் என்ன ஐயனே?

இறைவன் எம்மைக் கருவியாக வைத்து எத்தனையோ செயல்களை செய்திருக்கிறாரப்பா. அதில் ஒன்றுதான் நீ வினவியது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 92

கேள்வி: வடலூர் (கடலூர் மாவட்டம்) வள்ளலார் ஔிதேகம் அடைந்ததைப் பற்றி?

இறைவன் அருளாலே வெளியில் தெரிந்த வள்ளலார் ஒருவன். தெரியாத வள்ளலார் அநேகம் பேர் இருக்கிறார்களப்பா. இருந்தாலும் இறைவன் திருவடியை அடைவதற்கு எத்தனையோ வழிமுறைகள் உண்டு. அதில் ஒன்றுதான் வள்ளலார் அடைந்த வழிமுறை. அவன் (வள்ளலார்) ஔிதேகம் பெற்றதும் உண்மை. மறைந்ததும் உண்மை. அதைப் போன்று பின்னால் பலருக்கும் அந்த வாய்ப்பை இறைவன் தந்ததும் உண்மை. இனி எதிர்காலத்தில் தரப்போவதும் உண்மை.

கேள்வி: தீர்த்தமலையில் (தருமபுரி மாவட்டம்) உள்ள தீர்த்தங்களின் சிறப்புகள் என்ன? அவைகள் எப்பொழுது உருவானது?

இறைவன் அருளால் பல்வேறு விதமான தீர்த்தங்கள் அங்கு இருக்கிறது. இராம தீர்த்தம் கூட அங்கு இருக்கிறது. அகத்தியர் என்ற நமது நாமத்திலும் தீர்த்தம் இருக்கிறது. அனுமன் நாமத்திலும் தீர்த்தம் இருக்கிறது. இது போன்ற தீர்த்தங்கள் எல்லாம் இறைவன் அருளால் காலகாலம் உருவாக்கப்பட்டு மனிதனின் தீராத கொடிய பிணிகளை தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவைகள். ஆனாலும்கூட இதுபோன்ற இடங்களில் அநாகரீகமான மனிதர்கள் சென்று பல அனாச்சாரங்களில் ஈடுபட்டால் கட்டாயம் இறைவன் அருளை மாற்றிவிடுவார் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றளவு பரிசுத்த உள்ளத்தோடு சென்று பரிபூரணமான சரணாகதியோடு இறைவனை வணங்கி அந்த தீர்த்தத்தை அருந்த கட்டாயம் நன்மைகள் உண்டு. கொடும் நோய்கள் தீரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 91

கேள்வி: வியாபாரம் சிறக்க எந்த ஸ்தலம் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

இறைவனின் கருணையைக் கொண்டு நல்ல முறையில் வியாபாரம் தொழில் அமைந்து அதனை அலட்சியம் செய்தவர்க்குதான் மறுபிறவியிலே சரியான தொழிலும் வியாபாரமும் அமைவதில்லை. அடுத்ததாக வியாபாரத்தில் பொய் சொல்லலாம் தவறொன்றுமில்லை. பொய் சொல்லாமல் இருந்தால் வியாபாரத்தில் தோற்றுவிடுவோம் என்ற சித்தாந்தம் மனிதரிடம் இன்றுவரை நிலவி வருகிறது. இதுவும் தொழில் தோஷம் ஏற்பட காரணமாக இருக்கிறது. எத்தனை நஷ்டங்கள் கஷ்டங்கள் வந்தாலும் ஒருவன் வியாபாரத்தை நேர்மையாகத்தான் செய்ய வேண்டும். இவையெல்லாம் மனிதர்களால் வெறும் ஏட்டளவில் மட்டும்தான் ஏற்க முடிகிறது. நடைமுறையில் யாரும் அப்படி இருப்பதில்லை. அப்படியிருந்தால் உடனடியாக நஷ்டம் வருகிறது என்று பயந்து வியாபாரத்தில் பொய் சொல்ல மனிதன் துவங்கி விடுகிறான். இப்படி செய்யாவிட்டால் வியாபாரத்தில் ஜெயிக்க முடியாது என்று சமாதானம் கூறுகிறான். அதனால்தான் வியாபார ஸ்தானத்திலே தோஷத்தை ஏற்படுத்திக் கொள்கிறான். இருந்தாலும்கூட திருவெண்காடு ஸ்தலத்திற்கு சென்று வழிபாடு செய்வதும் புதன்கிழமை தோறும் புதனுக்கும் பெருமாளுக்கும் தச வதன நெய் தீபம் ஏற்றுவதும் இன்ன பிற வழிபாடுகள் செய்வதும் தச தோஷ நிவர்த்தி யாகம் செய்வதும் தச லாப அபிவிருத்தி யாகம் செய்வதும் தக்க வியாபாரமோ தொழிலோ அறிந்த ஏழைக்கு தொழிலைத் துவங்க உதவி செய்வதும் இந்த தோஷத்தை நீக்கி வியாபாரத்தில் வெற்றியைத் தரும்.

திருவெண்காடு கோவிலைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 90

கேள்வி: நமக்கு முன் பின் தெரியாத நமது முன்னோர்கள் செய்த பாவத்திற்கு நாங்கள் ஏன் தண்டனையை அனுபவிக்க வேண்டும்?

பிறகு நீ பாவம் செய்தாய் அதனால் அனுபவிக்கிறாய் என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கிறது. ஜோதிடம் இதையெல்லாம் நாகரீகமாக கூறுகிறது என்பதை புரிந்துகொள். முன்னோர்கள் பாவம் ஒருவனை படுத்துகிறது என்றால்? இவன் என்ன புண்ணியவானா? ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். முன் செய்த பாவம். அதுதான் இவனுக்கு முன்னோர்கள் வழியாக வருகிறது. இதில் இன்னொன்றையும் எடுத்துக் கொள்ளலாம். அந்த முன்னோர்கள் யார்? இவனே அந்த முன்னோர்களாக இருந்து பாவங்கள் செய்து இருக்கலாம். இன்னொன்று. முன்னோர்கள் பாவம் செய்து ஒரு சொத்தை சேர்க்க அந்த சொத்தினால் வரும் லாபத்தை அந்த குடும்பம் அனுபவிக்க அதனால் உணவு உண்ண அதனால் இரத்தம் ஏற்பட அந்த இரத்தத்தினால் வாரிசுகள் ஏற்பட கட்டாயம் அந்த வாரிசுகளுக்கு அந்தப் பாவங்கள் வரத்தான் செய்யும். முன்னொர்கள் கொடுக்கின்ற சொத்துக்களை ஆசையோடு ஏற்று கொள்ளுகின்ற மனிதன் பாவத்தையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். முன்னோர்கள் பாவங்கள் மட்டுமல்ல புண்ணியங்களும் வருகிறது. அதை மனிதன் மறந்து விடுகிறான். எனவே பாவமும் புண்ணியமும் ஒரு மனிதனோடு மட்டும் போய்விடுவதில்லை. அவன் வாரிசுகளையும் தாக்குகிறது என்பதை நினைவிலே கொண்டு கூடுமானவரை பாவத்தைக் குறைத்து புண்ணியத்தை அதிகரித்துக் கொண்டால் நன்மைகள் அதிகரிக்கும்.

கேள்வி: ஒரே மாதிரியான உருவ ஒற்றுமையில் ஆணாக இருந்தாலும் அல்லது பெண்ணாக இருந்தாலும் அதிலும் இரத்த சம்பந்தமில்லாதவர்கள் 7 பேர் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்த கூற்று உண்மையா?

7 மட்டுமல்ல அதற்கு மேற்பட்டவர்கள் உண்டு. இதற்கும் பல்வேறு தெய்வீக சூட்சும காரணங்கள் இருக்கிறது. இதற்கு பிறிதொரு சந்தர்பத்தில் விளக்கம் தருவோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 89

கேள்வி: பல உன்னதமான ஆத்மாக்கள் விண்மீன்களாக மாறும் என்று கூறியிருந்தீர்கள். அவர்களின் நிலை என்ன? அவர்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள்?

சதா சர்வ காலம் இறை தியானத்தில் இருப்பார்கள். தன் ஆக்கப் பூர்வமான கதிர்களை பூமிக்கும் மற்ற லோகங்களுக்கும் (உலகங்களுக்கும்) அனுப்பிக்கொண்டே இருப்பார்கள். எவையெல்லாம் (ஆத்மாக்கள்) இறைவனை நோக்கி வர வேண்டும் என்று துடிக்கிறதோ அவற்றை மேலும் நல்ல பாதையில் தூண்டி விடுவதற்குமான முயற்சியில் அது போன்ற ஆத்மாக்கள் இறங்கி செயலாற்றிக் கொண்டே இருக்கும்.

கேள்வி : திருஷ்டி கழிப்பது என்றால் என்ன? அரைஞாண் கயிறு கட்ட வேண்டுமா?

அரை என்றால் இடுப்பு என்ற ஒரு பொருள் இருக்கிறது. இன்னொன்று ஒட்டு மொத்த மனிதனின் அரைப்பகுதி பாதிப்பகுதியை ஒட்டிதான் குண்டலினி சக்தி இருக்கிறது. கனகம் எனப்படும் தங்கத்திலும் வெள்ளியிலும் பஞ்சு நூலிலும் கயிறுக் கட்டிக் கொள்வதும் குறிப்பாக காளையினத்தவர் (ஆண்கள்) கட்டிக் கொள்வதும் சிலவகையான சூட்சுமமான சக்திகளை பெற உதவும். ஆனால் ஏதோ அங்காடியில் (கடையில்) விற்கிறது வாங்கிக் கட்டிக் கொள்வது போல அல்ல. எப்படி முப்புரி நூல் எனப்படும் பூணுலை முறையாக ஜெபித்து அணிகிறார்களோ இதையும் இப்படிதான் அணிய வேண்டும். இதை மட்டுமல்ல. உடலிலே பிற்சேர்க்கையான ஒரு அணிகலனை ஒருவன் அணிந்து கொள்ள வேண்டுமென்றால் ஏதோ அங்காடியில்(கடை) வாங்கி அணிவதில் நன்மை ஏதுமில்லை. அதை முறையாக எடுத்து வந்து இல்லத்திலாவது அமர்ந்து குறைந்தபட்சம் ஒரு சப்த (07 நாட்கள்) தினங்களாவது பூஜை செய்து மந்திர உருவேற்றி அணிய வேண்டும். அது உடலுக்கு ஒரு கவசம் போல் ஒரு பாதுகாப்பைத் தரும். இதை ஆண்கள்தான் அணிய வேண்டும். பெண்கள் அணியக்கூடாது என்பதெல்லாம் இல்லை. யார் வேண்டுமானாலும் அணியலாம். பஞ்சு நூலாலும் அணியலாம். தவறொன்றுமில்லை. இது போன்ற பல்வேறு விதமான சடங்குகளெல்லாம் இறை நம்பிக்கையையும் பிராத்தனையையும் அடிப்படையாகக் கொண்டு ஏற்படுத்தப்பட்டவை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 88

கேள்வி: ஒரு ஆன்மா எந்த உடலைத் தேர்ந்தெடுக்கிறதோ அந்த உடலுடன் வளர்கிறது. சில உடல்கள் பார்ப்பதற்கு அழகாகவும் ஆரோக்யமாகவும் இருக்கிறது. அதே சமயம் அழகற்றதாகவும் ஆரோக்யமில்லாமலும் இருந்தாலும் ஒரு ஆன்மா ஆன்ம பலத்தைப் பெற்றிருக்கிறது. இவை இரண்டும் உடலை உகுந்த பிறகு எப்படி இருக்கும்?

உடலின் ஏற்ற மாற்றங்கள் ஆன்மாவை பாதிப்பதில்லை. ஆனாலும் கூட இந்த உலகிலே ஆன்மாவைப் பார்க்கின்றவர்கள் யாருமில்லை. உடலைப் பார்த்துதான் எடைப் போடுவார்கள் மதிப்பீடு தருவார்கள். அப்படி ஆன்மா உயர்வாகவும் உடல் பிறரால் மதிக்கப்படாமல் இருக்கப்பட வேண்டும் என்ற நிலைக்கு ஒரு ஆன்மா தள்ளப்பட வேண்டும் என்றால் அதற்கு ஏற்றாற்போல் பாவ புண்ணியங்கள் இருக்க வேண்டும். சில மகான்களும் ஞானிகளும் விரும்பியே பிறர் தன்னை மதிக்கக்கூடாது என்பதற்காக அழகற்ற தேகத்தை பெறுவதும் உண்டு. அஷ்டாவக்ரர் அப்படித்தான். அஷ்ட வக்ரம் எனப்படும் எட்டு விதமான கோணல்களோடு கூடிய உடம்பைப் பெற்று பிறவியெடுத்தார். அவரைப் பார்ப்பவர்கள் எல்லாம் ஏளனம் செய்தார்கள். அது குறித்து அவர் வருத்தப்படவில்லை. ஏனென்றால் இந்த ஆன்மா பயணம் செய்வதற்கு ஏதோ ஒரு உடல் என்ற அளவில் மட்டும்தான் அதை நினைத்தார். தேகம் (உடல்) அழகாக இருக்க வேண்டும் என்பதைவிட ஆரோக்யமாக இருக்க வேண்டும் என்பதில்தான் மனிதன் கவனம் செலுத்த வேண்டும். தேகத்தை விட ஆன்மா அழகாக இருப்பதே மனிதனுக்கு ஏற்புடையது. ஆன்மாவிற்கு அழகு எது? என்றால் தர்மமும் சத்தியமும் தான். அதை மட்டும் ஒரு மனிதன் வளர்த்துக் கொண்டால் போதும். ஒரு நிலையிலே இந்த தேகத்திற்கு ஏற்படக்கூடிய வயோதிகம் இளமை அழகு அனைத்துமே தேகத்தோடு முடிந்து விடுகிறது. ஆன்மாவை அணுவளவும் பாதிப்பதில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 87

கேள்வி: வாகன விபத்தில் ஒரு உயிர் பிரிந்தால் அந்த வாகன ஓட்டிக்கு அதனால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படுமா? அல்லது அறியாமல் செய்த தவறு என்று மன்னிக்கப்படுமா?

வேண்டுமென்றே செய்தால் அப்பொழுது பாவத்தின் அளவு 100-க்கு 100 விழுக்காடு தாக்கும். அறியாமல் செய்தால் பாவத்தின் தாக்கம் அந்த அளவு இல்லையென்றாலும் கூட ஓரளவு அதன் பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அறியாமையினாலே செய்தேன் என்று கூறினாலும் கூட அந்த பாவத்தின் அளவு ஏதாவது ஒரு வகையில் பாதிப்பாக அமையும். அறியாமல் தொட்டாலும் அறிந்து தொட்டாலும் நெருப்பு சுடத்தானே செய்யும்.

கேள்வி: விருக்ஷங்களிலும் (மரங்கள்)ஆன்மா இருக்கிறது புல்களிலும் ஆன்மா இருக்கிறது. நுண்ணிய கிருமிகளிலும் ஆன்மா இருக்கிறது. அனைத்து ஆன்மாக்களுமே மேன்மையடைந்து முக்தி அடைய வேண்டும் என்று முன்னர் கூறியிருந்தீர்கள். இந்த அறையிலேயே கோடான கோடி கிருமிகள் இருக்கக்கூடும். இந்த நுண்ணிய கிருமிகளாய் பிறப்பெடுக்க வேண்டுமென்றால் அது என்ன கர்ம வினை?

ஒரு சில பாவங்கள் என்பதல்ல. எத்தனையோ வகையான பாவங்களின் தொகுப்புதான் நாங்கள் (சித்தர்கள்) முன்னரே கூறியது போல் ஆன்மாவின் சட்டையாக (உடலாக) மாறுகிறது. ஒரு ஆன்மாவின் சட்டையைப் (உடல்) பொறுத்து அதன் பாவத்தைப் புரிந்து கொள்ளலாம். அதாவது ஒரு ஆன்மாவிற்கு பெரும்பாலும் மனித சட்டை கொடுக்கப் படுகிறதென்றால் பெரும்பாலும் புண்ணிய பலன் இருக்கிறது என்று பொருள். அதற்காக விலங்குகளாகப் பிறந்த அனைத்து ஆத்மாக்களும் முழுக்க முழுக்க பாவிகள் என்று நாங்கள் (சித்தர்கள்) கூறவில்லை. அதிலும் விதி விலக்குகள் உண்டு. சில புண்ணிய ஆத்மாக்கள் கூட சில காரணங்களுக்காக விலங்குகளாக பிறவியெடுப்பதும் உண்டு. அவற்றையெல்லாம் விலங்குகள் என்ற வரிசையில் சேர்க்கக்கூடாது. ஆனால் பொதுவாக விலங்குகள் என்று பார்க்கும் பொழுது அறியாமையிலே பிறவிகள் எடுக்கக்கூடிய உயிர்கள் அனைத்துமே கோடான கோடி பாவங்களை நுகர்ந்து தீர்ப்பதற்காக இது போன்ற விலங்குகள் பிறவியைப் பெறுகின்றன.

விலங்களுக்கு அதன் செயல்களுக்கு முழுக்க முழுக்க அதன் பாவங்களைக் கழிப்பதற்குண்டான நிலைதான் இருக்கிறது. புதிதாக புண்ணியத்தை சேர்த்து கொள்ள இயலாது. புதிதாக பாவத்தையும் சேர்த்துக் கொள்ள இயலாது. உதாரணமாக ஒரு நூறு பிறவி ஆடாக பிறந்து அது தன் உயிரை மனிதனின் அசுரத்தனத்தால் தன்னைக் கொன்று உண்ணக்கூடிய மனிதனுக்கு தன் உடல் பயன்படவேண்டும் என்ற விதி பெற்று அந்த ஆடு பிறக்கும் பொழுது அதனுடைய கர்மாவானது அதன் கழுத்தில் இருக்கிறது. நாங்கள் அடிக்கடி கூறுவது போல அதனை வெட்டுகின்ற கத்தியானது அதன் கர்மாவைக் குறைக்கிறது. ஆடு கத்திக் குறைக்கிறது. எனவே இப்படி பிறவியெடுத்து பிறவியெடுத்து அதன் பாவங்கள் தீர்ந்த பிறகு அடுத்த தேகத்தை (உடலை) நோக்கி செல்கிறது. இப்படி மேலேறி மேலேறி ஒரு தினம் அல்லது ஏதாவது ஒரு பிறவியிலே மனிதனாக அல்லது மனித சட்டை (உடல்) கொடுக்கப்பட்டு சற்றே சிந்தனையாற்றலும் கொடுக்கப்படுகிறது. ஆனால் எதற்காக கொடுக்கப்படுகிறது? இன்னும் மேலேறி செல்ல வேண்டும். மனிதனாக புனிதனாக மாமனிதனாக மகானாக ஞானியாக முனிவனாக சித்தனாக அல்லது தேவனாக கந்தர்வனாக. ஆனால் இந்த இடத்திற்கு வந்த பிறகு மனிதன் தன் செயலால் மீண்டும் கீழ் நோக்கியும் செல்கிறான் அல்லது மேல் நோக்கியும் செல்கிறான். கீழ் நோக்கி செல்லாதே என்று வழிகாட்டத்தான் எம் போன்ற மகான்களை இறைவன் படைத்து அருளாணை இட்டிருக்கிறார்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 86

கேள்வி: அன்னை தெரசாவைப் பற்றிக் கூறுங்கள் ஐயனே

தொண்டுங்கள் தொடர்ந்து செய்கின்ற எல்லோரையும் இறைவன் அருள் பெற்ற சேய்கள் என்று நாங்கள் கூறுவோம். எனவே நல்லதொரு வழிகாட்டக்கூடிய நூற்றுக்கணக்கான ஞானிகள் இல்லாத தேசத்திலிருந்தும் கூட ஒரு சில மகான்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய அந்த தேசத்திலிருந்து கூட இப்படி உன்னதமான தொண்டை செய்யக்கூடிய ஒரு நங்கை வந்திருக்கிறாள் என்றால் அது பாராட்டப்படக்கூடிய விஷயம். இந்த சேவை இல்லாததால்தான் இந்து மதம் என்று அழைக்கப்படுகின்ற இந்த மார்க்கம் களங்கப்பட்டு இருக்கிறது. எப்பொழுது சேவையும் பிராத்தனை எனப்படும் பக்தியும் பிரிந்து நிற்கிறதோ அந்த மார்க்கம் வளராது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த இந்து மார்க்கமானது வளர வேண்டும் என்று ஆசைப்படக்கூடிய மனிதர்கள் ஜாதி மத வேறுபாடுகளைக் களைந்து சேவைகளை அதிகப்படுத்தினால் கட்டாயம் இந்த மார்க்கம் உயர்ந்த மார்க்கமாக மாறும். உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட ஆனால் கருத்துக்களைப் பின்பற்றாத மனித கூட்டம் கொண்ட ஒரு மார்க்கம் இது.