ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 44

கேள்வி: தர்மம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள்? யாருக்கு தர்மம் செய்ய வேண்டும்? இல்லாதவர்களுக்கா? நம் உடன் பிறந்தவர்களுக்கா? உறவினர்களுக்கா?

இறைவனின் கருணையைக் கொண்டு தர்மம் எனப்படும் வார்த்தையை நாங்கள் பயன்படுத்தும் பொழுது மிக மிக நுணுக்கமாக கவனிக்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே ஒரு மனிதனுக்கு தர்மத்தின் அனைத்து சூட்சுமத்தையும் கூறிவிட இயலாது. பொதுவாக கூறுகிறோம். தர்மம் செய்ய செய்யத்தான் தர்மத்தின் அனைத்து நுணுக்கங்களும் ஒரு மனிதனுக்கு புரிபடத் துவங்கும். இந்த நிலையில் நாங்கள் கூறுவது என்னவென்றால் யாருக்கு வேண்டுமானாலும் அவர்களின் தேவையறிந்து எந்த நிலையிலும் காலம் பார்க்காமல் திதி பார்க்காமல் நட்சத்திரம் பார்க்காமல் இரவு பகல் பார்க்காமல் கிழமை பார்க்காமல் தாராளமாக தேவைப்படும் மனிதர்களுக்கு தேவைப்படும் உதவியை தேவைப்படும் தருணத்தில் தரலாம். யாருக்கு தந்தாலும் நன்மைதான். இருந்தாலும் இரத்த சம்பந்தமான உறவுகளுக்கு தருவது கட்டாயக் கடமை. அதை தர்மத்தில் நாங்கள் சேர்க்க மாட்டோம். இரத்த தொடர்பு இல்லாதவர்களுக்கும் பிரதிபலன் எதிர்பாராமல் செய்வதைதான் நாங்கள் தர்மத்தில் சேர்க்கிறோம். அதே தருணம் ஒருவனுக்கு ஒரு உதவியை தர்மத்தை செய்யும் பொழுது அவன் அதனை முறைக்கேடாக பயன்படுத்துகிறான். எப்படி இதனை நாங்கள் ஏற்றுக் கொள்வது? என்றால் ஒருமுறை செய்து பார்த்துவிட்டு இது ஏற்புடையது இல்லை என்று மனதிலே பட்டுவிட்டால் நிறுத்திக் கொள்ளலாம். நாங்கள் அதை குறை கூறவில்லை. ஆனால் ஒவ்வொரு மனிதனையும் பார்த்து இந்த உதவியை இவன் சரியாக பயன்படுத்துவானா? என்று ஆராய்ந்து கொண்டே போனால் கட்டாயம் தர்மம் செய்ய இயலாது.

இறைவன் இவ்வாறு பார்த்து செய்தால் இங்கே மனிதனுக்கு பஞ்சபூதங்கள் கிட்டாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் காற்று வீசட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் சூரிய ஔி கிட்டட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் நீர் கிடைக்கட்டும். இங்கே சரியான மனிதர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? அவர்களுக்கு மட்டும் நிலவொளி கிடைக்கட்டும் என்று இறைவன் ஒரு பொழுதும் சிந்திப்பதில்லை செயல்படுவதில்லை. அந்த இறைவனின் மிகப்பெரிய பராக்ரம சிந்தனைக்கு ஒவ்வொரு மனிதனையும் நாங்கள் அழைக்கிறோம். அந்த உயர்ந்த உச்ச நிலையிலிருந்து அள்ளி அள்ளி வழங்குவதே எம் வழியில் வருபவர்களுக்கு அழகாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 43

கேள்வி: ஐயனே சரிவிகித உணவு என்பது என்ன? எப்பொழுது எவ்வகையான உணவை மனிதன் உண்ண வேண்டும்?

இறைவன் அருளால் நாங்கள் அடிக்கடி கூறுவது போல உணவை மனிதன் உண்ண வேண்டும். எந்த உணவும் மனிதனை உண்ணக் கூடாது. அப்படிப் பார்த்து மனிதன் உண்ணும் ஒரு முறையை கற்க வேண்டும். இன்னும் கூறப்போனால் உணவு என்பது ஒரு மனிதன் வாயைப் பார்த்து நாவைப் பார்த்து உண்ணக் கற்றுக் கொண்டிருக்கிறான். அப்படியல்ல வயிற்றைப் பார்த்து வயிற்றுக்கு எது சுகமோ வயிற்றுக்கு எது நன்மை தருமோ அப்படிதான் உண்ண பழக வேண்டும். உணவும் ஒரு கலைதான். இன்னும் கூறப்போனால் உணவு எனப்படும் இரை சரியாக இருந்தால் மாற்று இரை தேவையில்லை. அதாவது மாத்திரை தேவையில்லை என்பது உண்மையாகும். எனவே உடல் உழைப்பு சிந்தனை உழைப்பு இவற்றைப் பொறுத்து ஒரு மனிதன் உணவை தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதுமே உணவிலும் சாத்வீகத்தைக் கடைபிடிப்பது அவசியமாகும். ஒருவனின் அன்றாடப் பணிகள் என்ன? அதிலே உடல் சார்ந்த பணிகள் என்ன? உள்ளம் சார்ந்த பணிகள் என்ன? இவற்றையெல்லாம் பிரித்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்றாற் போல் உணவை பயன்படுத்த வேண்டும். அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் உணவைக் குறைத்துக் கொள்வதும் உணவிற்கு பதிலாக கனி வகைகளை சேர்த்துக் கொள்வதிலும் இன்னும் கூறப்போனால் மசை பண்டம் இன்னும் அதிக காரம் அதிக சுவையான பொருள்கள் செயற்கையான உணவு பொருள்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து உணவை ஏற்பதே சிறப்பாக இருக்கும்.

வயது தன்னுடைய உடலின் தன்மை அன்றாடம் செய்கின்ற பணியின் தன்மை மனநிலை இவற்றை பொருத்துதான் எப்பொழுதுமே உணவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதைவிட முக்கியம் ஒருவன் எந்த சூழலில் இருக்கிறானோ எந்த தட்ப வெப்ப நிலையில் இருக்கிறானோ அதற்கு ஏற்றாற் போல் மாற்றிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட கவனம் வேண்டியது உணவை பகிர்ந்துண்டு ஏற்பது. அது மட்டுமல்லாமல் உயர்ந்த உணவாயிற்றே இதை வீணடிக்கக் கூடாது என்பதற்காக ஏற்காமல் உணவு வீணானாலும் உடல் வீணாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஏற்பதே சிறந்த உணவாக இருக்கும். உணவு நல்ல உணர்வை தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும். சாத்வீக உணவாக இருக்க வேண்டும். எனவே உணவை ஒவ்வொரு மனிதனும் உண்ணும் பொழுது அந்த உணர்வை சிரமப்படுத்தாத உணவாகப் பார்த்து ஒரு உணவு உள்ளே செல்கிறதென்றால் அந்த உணவு பரிபூரணமாக செரிமானம் அதாவது ஜீரணம் அடைந்த பிறகே அடுத்ததொரு உணவை உள்ளே அனுப்பும் முறையைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

காலம் தவறாமல் நாழிகை தப்பாமல் உண்ணுகின்ற முறையை பின்பற்ற வேண்டும். வேறு வகையில் கூறப்போனால் சமையல் செய்கின்ற ஒரு தருணம் ஒருவன் ஒரு அடுப்பிலே ஒரு பாத்திரத்தை ஏற்றி நீரை இட்டு அதிலே அரிசியை இட்டு அன்னம் சமைத்துக் கொண்டிருக்கிறான். அப்பொழுது அங்கே மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள். அதனால் மூன்று மனிதர்களுக்கு ஏற்ப அன்னம் தயாரித்துக் கொண்டிருக்கிறான். அன்னம் பகுதி வெந்துவிட்டது. இப்பொழுது மேலும் மனிதர்கள் அங்கே வந்துவிட்டார்கள். உடனடியாக ஆஹா இப்பொழுது சமைத்த உணவு பத்தாது. இப்பொழுது வெந்து கொண்டிருக்கும் இந்த அரிசியிலேயே இன்னும் மூன்று பேருக்குத் தேவையான அரிசியைப் போடுகிறேன் என்று யாராவது போடுவார்களா? மாட்டார்கள். இதை முழுமையாக சமைத்தப் பிறகு வேறொரு பாத்திரத்தில் மேலும் தேவையான அளவு சமைப்பார்கள். இந்த உண்மை சமைக்கின்ற அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏற்கனவே உண்ட உணவு அரைகுறையான செரிமானத்தில் இருக்கும் பொழுது மேலும் உணவை உள்ளே அனுப்புவது உடலுக்கு வியாதியை அவனாகவே வரவழைத்துக் கொள்வதாகும். ஒரு மனிதனுக்கு பெரும்பாலான வியாதிகள் விதியால் வராவிட்டாலும் அவன் மதியால் வரவழைத்துக் கொள்கிறான். விதியால் வந்த வியாதியை பிராத்தனையாலும் தர்மத்தாலும் விரட்டலாம். பழக்க வழக்கம் சரியில்லாமல் வருகின்ற வியாதியை மனிதன்தான் போராடி விரட்டும் கலையைக் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல உணவு என்பது நல்ல உணர்வை வளர்க்கும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் பக்குவமாக உணவை அகங்காரம் இல்லாமல் ஆத்திரம் இல்லாமல் வேதனை இல்லாமல் கவலையில்லாமல் கஷ்டமில்லாமல் நல்ல மன நிலையில் அதனை தயார் செய்ய வேண்டும். நல்ல மனநிலையில் அதனை பரிமாற வேண்டும். உண்ணுபவனும் நல்ல உற்சாகமான மன நிலையில் உண்ண வேண்டும். இதில் எங்கு குறை இருந்தாலும் அந்த உணவு நல்ல உணர்வைத் தராது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 42

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவனின் அருளைக் கொண்டு இயம்புவது யாதென்றால் ஒரு மனிதனின் மனோநிலை எந்த அளவிற்கு பக்குவம் அடைகிறதோ எந்த அளவிற்கு சாத்வீகம் அடைகிறதோ எந்த அளவிற்கு உயர் நுண்மா நுழை ஞானம் பெறுகிறதோ அந்த அளவிற்குதான் அவனை பொறுத்தவரை இந்த உலகமும் வாழ்க்கையும் உயர்வாக தெரியும். மனம் தான் வாழ்க்கை மனம் தான் உலகம் என்பதை மனிதன் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு மனிதனுக்கு எல்லாம் வெற்றி எண்ணியது எல்லாம் நடக்கிறது என்றால் இந்த உலகம் அவனுக்கு இனிப்பாக தெரியும். இன்னொரு மனிதனுக்கு தொட்டதெல்லாம் தோல்வி எல்லாம் எதிராக நடக்கிறது. எண்ணங்கள் ஒருவிதமாகவும் நடைமுறை செயல்கள் வேறுவிதமாகவும் இருக்க அவனை பொறுத்தவரை இந்த உலகம் கயப்பாக (கசப்பாக) தோன்றும். எனவே இப்படி இந்த உலகை உலகை சுற்றி உள்ள மனிதர்களை உலகில் நடக்கும் சம்பவங்களை ஒரு மனிதன் தான் எண்ணியபடி இருந்தால் நன்மை என்று எண்ணுவது பெரிதும் தவறல்ல என்றாலும் அப்படிதான் நடக்க வேண்டும் என்று எண்ணி அதற்கு மாறாக நடக்கும் போது எண்ணி வருத்தப்படுகிறான். அதுதான் அவனுக்கு மிகப்பெரிய வேதனையும் மன உலைச்சலையும் தருகிறது. எனவே இப்படித்தான் என்று எதிர்பார்ப்பதை விட எப்படி இருந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளக்கூடிய பக்குவத்தை இறைவா எனக்கு கொடு என்று மனோரீதியாக ஒருவன் வைராக்கியத்தையும் திடத்தையும் அடைந்து விட்டால் அவனை பொறுத்தவரை துன்பமான வாழ்க்கை என்று ஒன்றுமே இல்லை. எனவே துன்பங்கள் மற்றும் தொல்லை தரும் மனிதர்களை என்னை விட்டு அகற்று என்று வேண்டுவதை விட எல்லா நிலைகளிலும் எல்லா சூழல்களிலும் நான் திடகார்த்தமாக நான் தெய்வீக எண்ணத்தோடு வாழும்படியாக என் சிந்தனையை வைத்திரு இறைவா என்று வேண்டிக் கொண்டால் அது தான் தீர்க்கமான ஒரு முடிவாக நல்ல ஒரு நிச்சயமான நிம்மதியான வாழ்விற்கு ஒரு அடித்தளமாக அமையும்.

யாங்கள் அடிக்கடி கூறுவது உண்ணுகின்ற உணவு அல்லது பருகுகின்ற மோரிலே உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால் அந்த அதிகமாக உள்ள உப்பை மட்டும் பிரித்தெடுப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக சிறிது நீரை சேர்த்து அந்த உப்பை சரி செய்வது போல ஒரு மனிதன் கர்ப்ப கோடி காலம் பிறவி எடுத்து சேர்த்த பாவத்தை மட்டும் அவனை விட்டு பிரிப்பது என்பது கடினம். ஆனால் அதற்கு பதிலாக புதிதாக பாவம் செய்யாமலும் அதாவது புதிதாக உப்பை சேர்க்காமலும் சிறிது நீரையோ மோரையோ சேர்ப்பது போல புண்ணியத்தை அதிகமாக சேர்த்துக் கொண்டே வந்தால் அந்த உப்பின் தன்மை சமத்துவம் பெறுவது போல அந்த பாவத்தினால் வரக்கூடிய துன்பம் அவன் தாங்கக்கூடிய வண்ணம் இருக்கும். நன்றாக கவனிக்க வேண்டும் பாவம் இங்கே குறைவதில்லை. பாவம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால் சேர்த்த மோரின் அளவு அதிகமானதால் உப்பின் தன்மை தெரியாதது போல சேர்த்து வைத்த புண்ணியத்தின் பயனாக அல்லது சேர்க்கின்ற புண்ணியத்தின் பயனாக பாவத்தின் தாக்கம் அவன் தாங்கும் வண்ணம் அமைந்து விடுகிறது அவ்வளவே. இந்த கருத்தை மனதிலே வைத்துக் கொண்டு எம்மை நாடுகின்ற ஒவ்வொரு மனிதனும் அப்படியென்றால் நாடாத மனிதன் செயல்பட வேண்டாமா என்று வினவ வேண்டாம். யாராக இருந்தாலும் அப்படி ஒரு மனப்பான்மையை வளர்த்து கொண்டால் வாழ்க்கை என்றும் உயர்வாக இனிமையாக திருப்தியாக சந்தோஷமாக சாந்தியாக இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 41

கேள்வி: பசு பதி பாசம் பற்றி?

பசுவாகிய இந்த ஆன்மாக்கள் பதியாகிய இறைவனை விட்டு விட்டு பாசம் எனும் உலகியல் சுகத்தினுள்ளே மூழ்கி விடுகிறது. இந்த இரண்டிற்கும் பொதுவாக இருப்பவர் பதி இறைவன். பொதுவான இறையை நாடாமல் அந்த இறையின் படைப்பான அந்த படைப்புகளிலே இந்த பசு நாட்டம் கொள்வதால்தான் இத்தனை துன்பங்களும் அனாச்சாரங்களும் ஆன்மாவிற்கு ஏற்படுகிறது. இந்த ஆன்மாவின் கண்ணை மறைப்பது எது? மாயை. மாயை வைத்து கொண்டிருப்பது விதி. விதியை யார் இயக்குவது இறைவன். இறை எந்த அடிப்படையில் இயக்குகிறது? அந்த ஆன்மாவின் பாவ புண்ணியத்தின் அடிப்படையில் அப்பொழுது அந்த ஆன்மா என்ன செய்ய வேண்டும்? பாவத்தை குறைத்து புண்ணியத்தை அதிகரிக்க வேண்டும். இப்படி வாழ்ந்தால் அது பதியை தாண்டி பாசத்திற்கு போகாமல் பாசம் என்றாலே வழுக்கும் என்று புரிந்து கொண்டு பதியுடன் மட்டுமே அது இருக்கும்.

கேள்வி: இறைவனுக்கு என்று பிரியமான விஷயம் ஏதேனும் உண்டா?

வில்வத்தால் எமக்கு ஆராதனை செய்வது எமக்கு பிரியம் என்று இறை எங்காவது எழுதி வைத்திருக்கிறதா? அப்படியல்ல. இறையோடு தொடர்புடைய அனைத்தும் மனிதனுக்கு நன்மையைத் தரக்கூடியவைதான். வில்வத்தை ஏற்றுக் கொள் என்றால் மனிதன் உண்ண மாட்டான். ஆனால் அதையே பிரசாதம் என்றால் சாப்பிடுவான். அது மட்டுமல்ல அன்போடு எதைக் கொடுத்தாலும் அதை இறை ஏற்றுக் கொள்ளும். எனவே பக்தி அன்போடு செய்யப்படும் செயலை அல்ல அந்த செயலுக்குள் ஔிந்திருக்கும் அர்த்தத்தைத்தான் இறை பார்க்கிறது. இன்னொன்று வேறு மார்க்கத்தைப் பின்பற்றக் கூடியவர்கள் நெய் தீபத்திற்கு பதிலாக வேறு வகை தீபத்தை ஏற்றுகிறார்கள். இன்னும் சிலர் மலர்களைப் போடுவதேயில்லை. அதையும் இறை ஏற்கத்தானே செய்கிறது. அண்ட சராசரங்களைப் படைத்தது இறைவன். அந்த இறைக்கு மனிதன் தரக்கூடியது ஒன்றுமல்ல தன் உள்ளத்தைத் தவிர.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 40

கேள்வி: அய்யனே பெரும்பாலும் கோவில்கள் என்றால் ஒரு மகானோ ஒரு சித்தரோ அங்கு இருப்பார்கள் அவர்களால் தான் அந்த கோவிலுக்கு சக்தி இருக்கிறது என்று கூறுகிறார்களே அது உண்மைதானா?

பிள்ளைகளால் பெற்றோருக்கு பெருமையா அல்லது பெற்றோர்களால் பிள்ளைக்கு பெருமையா? எனவே சித்தர்களால் ஒரு ஆலயம் வளம் பெருகிறது என்பது சித்தர்களின் தொண்டை வைத்து கூறலாமே தவிர பிரதானம் சித்தர்கள் மகான்கள் நாங்கள் தான் என்று கூறவில்லை. இறைவனின் அருளும் இறைவனின் கருத்தும் இறைவனின் கடாட்சம் தான் எப்பொழுதுமே முக்கியமே தவிர எம் போன்ற மகான்கள் இறைவனின் அருளை உயர்த்துகிறார்கள் என்று கூறுவதை நாங்கள் ஒரு பொழுதும் ஏற்கவில்லை. ஏனென்றால் நான் பிறந்து பத்து ஆண்டுகள் கழித்து தான் என் தாய் பிறந்தாள் என்று கூறினால் எப்படி நகைப்புக்கு (சிரிப்புக்கு) உள்ளாகுமோ அதைப் போல்தான் சித்தர்களாலும் ஞானிகளாலும் தான் ஒரு ஆலயம் உயர்வு பெறுகிறது என்று கூறுகின்ற கூற்றை நாங்கள் ஏற்போம். அந்த கருத்தை ஏற்றால் இந்த கருத்தையும் ஏற்கலாம்.

கேள்வி: ஒருவருக்கு தர்மசிந்தனை இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அவனைப் பெற்றவர்களுக்கு தர்ம சிந்தனை இல்லை. அந்த மகன் தன்னைப் பெற்றவர்களை மீறி தர்மத்தை செய்கின்றான். இதனால் அவன் தன் பெற்றோர்களை மதிக்கவில்லை. அவர்கள் மனதை காயப்படுத்துகிறான். இந்த செயலில் மகனின் தர்மத்திற்கு கனம் (பலன்) அதிகமா? அல்லது பெற்றவர்களை காயப்படுத்திய பாவத்திற்கு கனம் (பலன்) அதிகமா?

பிரகலாதனின் பக்தி அவன் தந்தைக்கு பிடிக்கவில்லை. தந்தையின் போக்கு பிரகலாதனுக்கு பிடிக்கவில்லை. தந்தை என்ற உறவில் பிரகலாதன் மதிப்பை வைத்திருந்தான். ஆனால் தந்தையின் கருத்தில் பிரகலாதனுக்கு மதிப்பு இல்லை. எனவே தாய்க்கும் தந்தைக்கும் ஆற்ற வேண்டிய கடமை கொடுக்க வேண்டிய மரியாதை மைந்தன் (மகன்) கொடுத்துத்தான் ஆக வேண்டும். ஆனால் அவர்களுடைய கருத்தை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை இந்த கருத்து நல்லவற்றிற்கு சத்தியத்திற்கு அறத்திற்கு இறைக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் மட்டுமே. எனவே இந்த நிலையிலே தாய்க்கும் தந்தைக்கும் தன் பிள்ளை தாராளமாக தர்மம் செய்வது பிடிக்கவில்லை என்றால் அந்த மைந்தன் (மகன்) ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து தர்மத்தை செய்யலாம். அதே சமயம் தாய்க்கும் தந்தைக்கும் செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 39

கேள்வி: பள்ளி இறுதி வகுப்பு படிக்கும் மாணவர்கள் பயமின்றி தேர்வு எழுதி நல்ல மதிப்பெண்கள் பெற பரிகாரம் சொல்லுங்கள்?

தேர்வைக்கண்டு ஒரு மாணவன் பயப்படுகிறான் என்றால் அவன் அங்கேயே தோற்றுவிட்டான் என்றுதான் பொருள் அல்லது பயப்படும்படியான ஒரு தேர்வு முறையை மனிதன் ஏற்படுத்தி இருக்கிறான் என்றால் அந்த மனித சமுதாயமே தோற்று விட்டதாக பொருள். கல்வியை கற்றுக் கொள்ள பயம் எதற்கு? புதிதான ஒரு விஷயத்தை மனிதன் அனுதினமும் தெரிந்து கொண்டுதான் இருக்கிறான். குழந்தை எப்படி கற்றுக் கொள்கிறது? ஊமையாகப் பிறக்கின்ற ஒரு குழந்தை எவ்வாறு ஒரு மொழியைக் கற்றுக் கொள்கிறது? யாராவது ஆசான் வந்து போதிக்கிறானா? ஏன்? கூர்த்த கவனம் வேறு புற சிந்தனைகள் ஏதுமில்லை. பரிபூரண கவனம். தன் செவியில் என்ன விழுகிறது? என்பதை சரியாக கிரகித்துக் கொள்கிறது குழந்தை. குழந்தையாக இருக்கின்ற பெரும்பாலான மனிதர்கள் அவ்வாறுதான். அப்படியிருக்கும் பட்சத்தில் புதிதாக ஒரு செய்தியை தெரிந்து கொள்ள தெரிந்து கொண்டு அந்த வழியில் கடமை ஆற்றத்தான் பள்ளிக்கு செல்கிறோம் என்ற உணர்வு பலருக்கும் இருப்பதில்லை. மாணவர்கள் தொடர்பான குறைகள் ஒருபுறமிருக்கட்டும். யாரும் சொல்லித் தராமலேயே ஒரு கலைக்காட்சியை (சினிமா) மாணவன் சென்று பார்க்கிறான். யாரும் உபதேசம் செய்யாமலேயே அதன் விளக்கங்களை புரிந்து கொள்கிறான். ஆனால் பாடத்திட்டம் என்று வரும்பொழுது மட்டும் பலரால் ஏன் அதை புரிந்து கொள்ள முடியவில்லை? இங்கே சிந்திக்க வேண்டும். புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துக் கூறுவது ஆசிரியரின் கடமை. என்னதான் எடுத்துக் கூறினாலும் புரிந்து கொள்ளாமல் இருப்பது என்பது ஒரு மாணவனின் மதிநிலை.

இதற்கு பக்தி வழியாக ஹயக்ரீவர் வழிபாட்டையும் அன்னை கலைவாணி வழிபாட்டையும் நாங்கள் கூறினாலும் எந்த ஒரு விஷயமும் ஆர்வத்தைத் தூண்டும் விதமாக இருக்க வேண்டும். நன்றாக கவனிக்க வேண்டும். சிறுவர்கள் அயர்வு (சோர்வு) காலத்திலே வாகனத்தை (புதிய வாகனம்) கண்டால் ஆர்வமாகப் பார்ப்பார்கள். தந்தைக்குத் தெரியாமல் வாகனத்தை எடுத்து ஓட்டுவதில் ஆர்வம் காட்டுவார்கள். யாரும் சொல்லித் தராமலேயே இதை ஏன் செய்கிறார்கள்? அதன்மீது உள்ள ஒரு ஈர்ப்பு. அப்படி கல்வியின் மீது ஒரு மனிதனுக்கு ஈர்ப்பு வர வேண்டும். ஒரு மாணவனுக்கு ஈர்ப்பு வர வேண்டும். அப்படி வரும் வண்ணம் கல்வி முறையை போதித்தால் எல்லா மாணவர்களுமே அறிவில் தலை சிறந்தவர்களாக இருப்பார்கள்.

கேள்வி: எனக்கு பின்னாடி ஒரு பெண் தெய்வம் இருப்பதாக ஒரு பெரியவர் சொன்னார். அந்த தெய்வம் யார்?

உன் மனைவி தானப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 38

கேள்வி: திருநல்லூர் காளி பற்றி? (கும்பகோணம் அருகில்)

நீ நல்லூர் அன்னையை தரிசித்தபொழுது அன்னையின் திருமேனியை அலங்கரித்த தூசின் வண்ணம் என்ன? (பதில் – நீலம்).

உக்கிர அன்னையின் மேனியில் எந்த வண்ணம் உள்ள ஆடை இருக்கிறதோ அஃதாெப்ப அவர்கள் எண்ணும் காரியத்திற்கு ஆசிகள் என்று புரிந்து கொள்ள வேண்டும். குருதி (சிகப்பு) வண்ணத்திலே ஆடை அணிந்திருந்தால் எதிரிகள் வீழ்வார்கள். பசுமை வண்ணம் அணிந்து இருந்தால் மறுமலர்ச்சி ஏற்படும். நீலம் அணிந்து இருந்தால் பொருளாதார சிக்கல் மற்றும் ராகு தோஷம் குறையும்.

கேள்வி: காசி விஸ்வநாதர் கோவிலில் செய்யப்பட்ட அபிஷேகத்தை இறைவன் ஏற்றுக் கொண்டாரா?

ஆசிகளப்பா. ஒவ்வொரு வழிபாட்டையும் செய்து விட்டு அதை இறைவன் ஏற்றுக் கொண்டு விட்டாரா என்று கேட்பது எப்படி இருக்கிறது என்றால் ஒவ்வொரு முறையும் தேர்வு எழுதி விட்டு தேர்வை திருத்துகின்ற குருநாதனிடம் எனக்கு எந்த அளவிற்கு மதிப்பெண் போடப்போகிறாய் போட்டிருக்கிறாய் என்று கேட்டால் அந்த குருவின் மனநிலை எவ்வாறு இருக்கும். ஆக உன் கடமையை உறுதியாக தெளிவாக செய்து கொண்டே போ. இறைவன் அருள் என்று வரும்? எப்படி வரும்? என்றெல்லாம் எண்ணிப் பார்க்காதே. வெற்றி இருக்கிறதா என்று பார்த்து பார்த்து செய்வதற்கு ஆன்மீகம் ஒன்றும் உலகியல் காரியம் இல்லையப்பா. இது உனக்கு மட்டுமல்ல. இது போன்ற சிந்தனையுள்ள அனைவருக்கும் இந்த பதில் பொருந்துமப்பா.

கேள்வி: ரமணர் (மகரிஷி) தன் தாய்க்கு முக்தி அடைய வழி செய்ததாக கூறப்படுகிறது பற்றி?

ஆதிசங்கரரும் அவ்வாறுதான் செய்து இருக்கிறார். என்றால் அந்த (தாயின்) ஆத்மா முன்னரே பக்குவப்பட்டு ஆதிசங்கரர் போன்ற புண்ணியவானை பிள்ளையாகப் பெற அது (தாயின் ஆத்மா) விரிவாக்கம் பெற்று அந்த (தாயின்) ஆத்மா இப்பிறவியைக் கூடுதலாகப் பெற்று வந்திருக்கிறது. எனவே கடந்த பிறவிலேயே அடைய வேண்டிய முக்தியை அந்த ஆத்மா (தாயின் ஆத்மா) தள்ளித்தான் அடைந்திருக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 37

கேள்வி: ஆஞ்சிநேயர் பற்றி?

ஆஞ்சிநேயர் இறைவனின் அம்சம். சாக்சாத் சிவபெருமானின் சக்தி தான் மால்தூதன் (ஆஞ்சிநேயர்). ராம நாமத்தை மால்தூதன் மட்டுமல்ல ஜடாயு என்ற பட்சி (பறவை) வடிவில் இருந்த மகானும் ஜெபித்து நலமடைந்து இருக்கிறார். இவரின் சகோதரர் சம்பாதி என்ற பட்சியும் ராம நாமத்தால் உயர்ந்திருக்கிறார்.

கேள்வி: அபிஜித் காலம் எது?

உச்சி பொழுதிற்கு சற்று முன் உள்ள சிறப்பான நாழிகைதான் இது.

கேள்வி: கனவில் சிவலிங்கம் தோன்றுகிறது. பல விக்கிரங்களும் தோன்றுகின்றன?

சுப பலன்தான். இறை படங்களையோ ரூபங்களையோ ஸ்தலங்களையோ (கோவில்) பசு மயில் கருடன் அன்னப்பறவை புறாக்கள் போன்றவைகளையோ கனவில் பார்ப்பது நன்மையையே தரும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 36

கேள்வி: பிரளயம் பற்றி?

ஏறத்தாழ நான்காயிரத்து சொச்சம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த தமிழகத்தில் ஒருமுறை ஸ்ரீரங்கம் பகுதியிலே மிகப்பெரிய பிரளயம் ஏற்பட்டது. பிரளயம் வடிந்து மீண்டும் இடம் பெயர்ந்த மக்கள் எல்லாம் மாண்ட பொழுது தொடர்ந்து மழை பெய்தது. பிரளயம் என்றால் உலகமே அழிந்து விடாதப்பா. ஆங்காங்கே சிறு சிறு அழிவுகள் ஏற்படும். அப்போதெல்லாம் அரங்கத்திலே இருந்து அரங்கனை பூஜை செய்யும் பாக்கியத்தை இங்கு வந்து செல்லும் பலரும் பெற்று இருக்கிறார்கள். ஒரு முறை அரங்கனுக்கு தளிகை ஏதும் செய்ய இயலாத சூழல் ஏற்பட்ட போது அவரவர்கள் தம் வீட்டிலே உள்ள தரக்குறைவான தானியத்தை எடுத்து வந்து இதுதான் இருக்கிறது என்று கொடுத்து அதை ஏதோ ஒரு கஞ்சி போல் வைத்துப் படைக்க அதை பால் சாதமாக அரங்கன் மாற்றி அருளினார். அப்படி அரங்கனை சோதித்தவர்களில் எம் சேய்களும் உண்டு.

கேள்வி: கஞ்சமலை பற்றி?

பல்வேறு மகான்களும் ஞானிகளும் இருந்த இடம். அரூபமாக இன்னும் இருக்கின்ற இடம். பல்வேறு மூலிகைகளும் ஏராளமான இரும்பு தாதுக்களும் இருப்பதால் இந்த மூலிகைகளில் அயச்சத்து (இரும்புச் சத்து) அதிகமாக இருக்கும். குறிப்பாக முழுமதி (பெளர்ணமி) தினங்கள் இங்கு செல்ல ஏற்ற தினமாகும்.

கேள்வி: உச்சிஷ்ட கணபதியின் தாத்பரியம் என்ன?

இனி பிறவி வேண்டாம் என்ற தன்மையை அளிப்பதுதான் இதன் தாத்பரியம். ஞான மார்க்கம் யோக மார்க்கம் மட்டும் வேண்டும் அல்லது வாக்கு பலிதம் ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் வழிபட வேண்டிய ஒன்று.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 35

கேள்வி: தீபத்தில் முகங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாமா?

பலமுறை உரைத்திருக்கிறோம். முகங்கள் அதிகமாக அதிகமாக தோஷங்கள் குறையும். தீபத்தின் முகங்களுக்கும் ஜாதக பாவங்களுக்கும் தொடர்பு உண்டு.

கேள்வி: 12 முக தீபத்தின் சிறப்புகளைப் பற்றி?

சகல வதனங்களும் அதிலே அடங்கி இருப்பதால் அத்தருணம் பிரதானமாக ஒரு கோரிக்கையை வைத்து ஒரு சஷ்டி திங்கள் (ஆறு மாதம்) மன ஈடுபாட்டாலோ (வழிபாடு) செய்தால் அது இறைவன் அருளால் நிறைவேறும். வீட்டில் ஏற்றுவதை விட ஆலயத்தில் ஏற்றுவது சிறப்பு. ஒவ்வொரு முறையும் புதிய மண் அகல் விளக்கை பயன்படுத்த வேண்டும்.

கேள்வி: என் உறவினர் ஒருவர் தன் மனைவி தன்னை மதிப்பதே இல்லை என்று குறைபட்டுக் கொள்கிறார்?

இந்த உலகத்தில் அவனுக்கு மட்டும்தானா இந்த நிலை? எத்தனையோ ஆண்கள் மனைவியை மதிப்பதில்லை. இதற்கு நவகிரக காயத்ரி அதிதெய்வ காயத்ரி சப்த கன்னியர் மந்திரங்களை உருவேற்றி வழிபாடு செய்யச் சொல்.