ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 34

கேள்வி: 18 சித்தர்களும் முக்கியமான (சிதம்பரம் பழனி போன்ற) ஸ்தலங்களில் அடங்கியிருப்பதாக பெரியோர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் பழனிக்கு செல்லும் மக்கள் முருகனை மட்டும் வணங்குகிறார்கள். போகரை வணங்குவதாக எனக்கு தெரியவில்லை இது ஏன்?

இறைவன் அருளால் புரிந்து கொள்ள வேண்டும். 18 சித்தர்கள் என்பது தவறான வழக்காகும். பதி எனப்படுவது இறைவனை குறிக்கக்கூடியது. பதி எண் சித்தர்கள் பதியாகிய இறைவனை சதாசர்வகாலம் எண்ணக்கூடிய அனைவருமே சித்தர்கள்தான். இது மருவி 18 என்று ஆகிவிட்டது. அடுத்தாக சித்தர்கள் அடங்கியிருப்பதாக கூறப்படும் அதாவது ஜீவ அருட் பீடம் என்று எம்மாலும் ஜீவ சமாதி என்று மனிதர்களாலும் கூறப்படுகின்ற எல்லா இடங்களிலும் அவ்வாறு இருப்பதல்ல. பின் அந்த வழக்கம் எவ்வாறு ஏற்பட்டது? என்றால் அதுபோன்ற ஸ்தலங்களில் சித்தர்கள் பல காலம் தங்கி இறை தொண்டும் மக்களுக்கு சேவையும் செய்திருப்பார்கள். இன்னொன்று வேருக்கு நீர் ஊற்றினாலே அது விருட்சத்தின் (மரத்தின்) எல்லா பகுதிகளுக்கும் செல்லும். மூலவராகிய இறைவனை வணங்கினாலே அது சித்தர்களுக்கும் சேர்த்துதான் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். எனவே போகனை வணங்கவில்லை என்பதை குற்றமாக கொள்ள வேண்டாம் என்றாலும் அதுபோன்ற இடங்களில் தனியாக ஒரு சித்த சன்னதி இருந்தால் கட்டாயம் சென்று வணங்குவது நல்ல பலனைத் தரும். மேலும் நெறிப்படுத்த மனிதனுக்கு உண்மையை உணர்த்த அந்த சித்தர்களுக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பதை யாம் இத்தருணம் இயம்புகிறோம்.

கேள்வி: சஹஸ்ர லிங்கம் லிங்கம். இதில் எது சிறந்தது?

வைரம் வைடூரியம் இரண்டில் எது உயர்வு? கனகம் கனகத்தில் செய்யப்பட்ட ஆபரணங்கள் இதில் எது உயர்வு? எனவே அனைத்தும் உயர்வுதானப்பா. இருக்கின்ற பரம்பொருளை எதன் வழியாக மனிதன் பார்க்க விரும்பினாலும் பார்க்கின்ற மனிதனின் மனோபாவம் சரியாக இருந்தால் அவன் கல்லிலும் கடவுளைக் காணலாம். மனோபாவம் சரியில்லையென்றால் கடவுளே எதிரில் வந்து நின்றாலும அவனுக்கு கல்லாகத்தான் தெரியும். இரண்டுமே உயர்வுதான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 33

கேள்வி: ஆதாம் ஏவாள் பற்றி

இறைவன் அருளாலே ஏதோ ஒரு குறிப்பிட்ட ஒருவனை இறைவன் படைத்துவிட்டு அப்படி படைக்கப்பட்ட ஆணிலிருந்து ஒரு பெண்ணைப் படைத்தான் என்று ஒரு குறிப்பிட்ட மார்க்கத்தை சேர்ந்தவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதற்காக அதை குறை கூறவும் நாங்கள் விரும்பவில்லை. எனவே நீக்கமற நிறைந்துள்ள இந்த பிரபஞ்சம் அண்ட சராசரங்கள் எப்பொழுதுமே இருக்கின்றன. இங்கே ஆத்மாக்களும் எப்பொழுதுமே இருந்து கொண்டு இருக்கின்றன. இறைவன் எப்பொழுது இந்த உலகத்தைப் படைத்தான்? எப்படி படைத்தான்? என்று பார்க்கப்போனால் அதை புரிந்து கொள்ளக்கூடிய அறிவாற்றலானது மனித கூட்டுக்குள் இருக்கக்கூடிய ஆத்மாவிற்கு கிடையாது. இந்த மனித கூட்டுக்குள் இருக்கின்ற ஆத்மாவானது தன் உடலை மறந்து தனக்குள் நீக்கமற நிறைந்துள்ள ஆத்மாவை புரிந்து கொண்டு அந்த ஆத்மாவும் பரமாத்மாவும் ஒன்று என்று உணரும் பொழுதே அந்த ஆத்மாவிற்கு மெல்ல மெல்ல புலப்படத் துவங்கும்.

அதாவது பரந்துபட்டு ஓடுகின்ற ஒரு புண்ணிய நதி. அந்த நதியை சுட்டிகாட்டி அந்த அற்புதமான ஒரு புண்ணிய நதியைப் பார்த்து ஒருவன் கேட்பான் இது என்னப்பா? என்று இன்னொருவன் கூறுவான் இது புண்ணிய நதி இது கங்கை இது காவிரி இது சரஸ்வதி இது யமுனை என்று. சரி என்று ஒரு செப்புக் கலசத்திலே அந்த நதி நீரை அள்ளி இப்பொழுது இது என்ன? என்று கேட்டால் இது கலச நீர் என்பான். அந்த நதியிலே ஓடுகின்ற நீர்தான் கலசத்துள் வந்திருக்கிறது. ஆனால் நதியிலே இருக்கும் பொழுது அது கங்கை என்றும் காவிரி என்றும் பெயர் பெற்றது. இப்பொழுது அதே நீர் கலசத்திற்குள் வந்த பிறகு கலச நீர் என்றாகிவிட்டது. அந்த கலச நீரை நதியிலே மீண்டும் விட்டுவிட்டால் மீண்டும் நதி என்று பெயரை அடைந்து விடுகிறது. இப்படியாக இந்த ஆத்மா பரமாத்மா எனப்படும் நதியிலிருந்து பிரிக்கப்பட்டு இந்த உலகென்னும் கலசத்திற்குள் அடைக்கப்பட்டது. கலச நீர் ஜீவாத்மா என்று அழைக்கப்படுகிறது. மீண்டும் நதியோடு கலந்துவிட்டால் பரமாத்மா ஆகிவிடுகிறது. எனவே திடும்மென்று ஒரு நாள் ஒரு ஆணையோ பெண்ணையோ திடீரென்று இறைவன் படைத்து விடவில்லை. அதற்கு முன்பே தேவர்கள் யட்சர்கள் கந்தர்வர்கள் என்றெல்லாம் இருக்கிறது. அங்கே தவறு செய்பவர்களை அனுப்புவதற்கென்றே ஒரு சிறைக்கூடம் போல் ஒன்று செயல்பட்ட போது இந்த பூமி படைக்கப்பட்டு முதலில் மேலானவர்கள் செய்யக்கூடிய அறியாமையிலே அல்லது அகங்காரத்திலே செய்யக்கூடிய குற்றங்களுக்காக அவர்களை பதவியிறக்கம் செய்வதற்காக மனித குலம் படைக்கப்பட்டது. அந்த மனித குலம் மேலும் மேலும் விரிவடைந்து மீண்டும் மீண்டும் தவறுகள் மீண்டும் மீண்டும் பாவங்கள் என்று அடுக்கடுக்காக பிறவிகள் வந்து கொண்டே இருக்கிறது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 32

கேள்வி: திருமூலர் சித்தர் பற்றி கூறுங்கள் ஐயனே

சிவலோகத்தில் உள்ள சுத்த சதாசிவர் என்ற மகான் ஒருமுறை பூமியிலே இறைவனின் சிலை வடிவத்தைக் காண்பதற்காகவும் எம்மை (அகத்தியர்) தரிசிப்பதற்காகவும் சில அரிய கருத்துக்களை தெரிந்து கொள்வதற்காகவும் பூமிக்கு வந்து பல ஸ்தலங்களை தரிசித்து வருகையிலே ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மூலர் என்ற ஓர் இடையர் உயிர் இழக்க அந்த தேகத்திற்குள் இந்த முனிவரின் ஆத்மா புகுந்து சில லீலைகள் புரிய வேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளமாக இருந்தது. கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த ஆவினங்கள் (பசுக்கள்) மீது இரக்கம் கொண்டு தன் தேகத்தை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு மூலர் உடம்பினுள் இந்த முனிவர் புகுந்து ஆடு மாடுகளை அந்தந்த வீடுகளில் சேர்த்துவிட்டு மீண்டும் உடலைத் தேடியபோது இறைவன் அசரீரி வாக்காக உன் உடலை யாம் மறைத்து விட்டோம். இனி இந்த உடலிலே இருந்து நீ செய்ய வேண்டிய செயல்களைச் செய் என்று கூற பிறகு அந்த உடலிலேயே இருந்து பலருக்கு உபதேசம் செய்ததோடு 3000 ஆண்டுகள் கடுமையான தவத்தில் இருந்தார்.

ஆண்டுக்கு ஒன்றாக பாடலைப் பாடி யோகம் ஞானம் மந்திரம் தந்திரம் வித்தை கலை சாஸ்திரம் வேதம் என்று அனைத்து மூலக்கூறுகளிலும் மனிதனுக்கு புரியும் வகையிலும் துன்மார்க்கர்களுக்கு எட்டாத வகையிலும் நுட்பமாக மனித தேகம் மற்றும் தேகம் நிலையாமை தேகம் தோன்றுகின்ற தன்மை ஆன்மாவின் தன்மை என்றெல்லாம் பல கூறுகளாகப் பிரித்து அதே சமயம் மரபு,சாஸ்திரம் என்ற பெயர்களில் மனிதர்கள் புரியாமலும் புரிந்த பிறகு சுயநலத்தாலும் செய்து வரும் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி நல்லதொரு தத்துவ ஞானப் பாடல்களையெல்லாம் இறைவன் அருளைக் கொண்டு எழுதி வைத்தார். அப்படிபட்ட அற்புதமான மகானப்பா அவர்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 31

அகத்தியரின் பொது வாக்கு

இறை வணங்கி இயம்புகிறோம். இத்தருணம் இடைவிடாத பிராத்தனைகள் செய்கின்ற நல் அறங்கள் நலம் சேர்க்கும். இந்த வாழ்வில் எதிர்படும் துன்பங்கள் யாவும் அவரவர் கர்மத்தின் எதிரொலியாகும். அதனை உணர்ந்து பாவங்கள் செய்யாமலும் செய்த பாவத்தை எண்ணி வருந்தி திருந்தியும் அதோடு இறை வணங்கியும் அறம் புரிந்தும் வாழ நலமாகும். திவ்யமான பரம்பொருளை உணர்ந்து திருவடி பற்றும் வளர துன்பங்கள் அணுகாது. இதைத் தவிர வேறு எதை அடைந்தாலும் நிரந்தர சாந்தி கிட்டாது. தளர்வோ விரக்தியோ வேதனையோ எதிர்மறை எண்ணங்களோ ஒரு பொழுதும் துன்பத்தை மாற்றாது. திட மனம் கொண்டு எதனையும் எதிர்கொள். பதற்றமின்றி செயல் படுத்துதலும் நலம் சேர்க்கும். சேர்க்கின்ற புண்ணியம் கடைசி வரையில் துணையாகும். சேர்க்கின்ற பாவமொ கடைசி வரையில் இடராகும் (துன்பத்தை தரும்). சிறப்பில்லா பாவ சூழல் மேலும் பாவத்தை சேர்த்துவிடும் என்பதால் சிந்திக்க வேண்டும். பாவம் எண்ணம் கூடாது. பாவ எண்ணங்கள் வளரவும் கூடாது. கூடாதப்பா தவறான மாந்தர்களுடன் உறவும் கூடாது. குறித்திடுவோம் எத்தனை துன்பத்திலும் எத்தனை சிக்கலிலும் கருத்தில் இதனை கொள்ள வேண்டும். இதனால் பாவம் செய்தேன் என்றியம்பக் கூடாது. பற்றற்று வாழ அதற்கான முயற்சியைத் தொடர நலம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 30

கேள்வி: செடி கொடிகளை கொன்றுதான் இந்த பூமியில் வாழ வேண்டுமா? வேறு மாற்று வழியில்லையா?

மனிதனாக பிறந்து விட்டாலே பாவங்கள் செய்துதான் ஆக வேண்டும் என்பதற்கு இந்த வினாவும் ஒரு உதாரணம். ஆனாலும் ஐம்புலனை சரியாக கட்டுப்படுத்தி யோக நிஷ்டையில் அமர்ந்து யோக மார்க்கத்தில் செல்லக்கூடிய ஒரு பாக்கியம் பெற்ற ஆத்மாக்கள் ஐம்பூதங்களில் இருந்து தன் உடலுக்கு தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள முடியும். காட்டிலிருந்தும் தன்னை சுற்றியுள்ள கதிர்வீச்சிலிருந்தும் சூரிய சந்திர ஔியிலிருந்தும் மண்ணிலிருந்தும் கூட அந்த பொருளின் புற பாதிப்புகள் ஏதும் இல்லாமல் தன் உடல் சோர்ந்து போகவண்ணம் தேவையான சத்துக்களை கிரகிக்க முடியும். இதற்கு பஞ்சபூத சாஸ்திர சக்தி தத்துவ முறை என்று பெயர். இவற்றையெல்லாம் சராசரி மனிதனால் உடனடியாக பின்பற்ற முடியாது.

கேள்வி: இந்த சூழ்நிலையில் நாங்கள் என்ன செய்வது?

எப்பொழுதும் வழக்கம் போல் வாழ்ந்து கொண்டே வா. பின்னால் இறைவன் அருளால் அதற்குண்டான சூழல் ஏற்பட்டால் யாமே அது குறித்து கூறுகிறோம்.

கேள்வி: அமாவாசை நாட்களில் கண் தெரிய உதவும் மற்றும் தொலை தூரத்தில் இருப்பவற்றை அறிய உதவும் மூலிகைகள் குறித்து

நீ கூறிய அனைத்து மூலிகைகளிலும் சதுரகிரி கொல்லிகிரி மற்றும் பர்வதமலையிலும் இருக்கிறதப்பா. ஆனால் அது யாருக்கு கிட்ட வேண்டுமோ அவனுக்கு தான் அது கிட்டும். இந்த மூலிகை கிடைக்க வேண்டிய வினைப்பயன் இருக்கின்ற மனிதனுக்கு உண்மையில் இந்த மூலிகை குறித்த ஆர்வம் இராது.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 29

கேள்வி: ஒரு வீட்டில் இருக்கும் நபர் ஆத்மஹத்தி (தற்கொலை) செய்து கொண்டால் அந்த ஆத்மா அங்கேதான் திரிந்து கொண்டிருக்குமா?

அது ஆத்மாவிற்கு ஆத்மா மாறுபடும். வாழும்போது அது கடைசியாக அது எந்த நிலையில் இருந்ததோ எந்த அளவிற்கு பிராய்ச்சித்தம் செய்து முன்ஜென்ம பாவத்தை குறைத்து இருக்கிறதோ எந்த அளவிற்கு புண்ணியத்தை சேர்த்து இருக்கிறதோ எந்த அளவிற்கு ஆத்ம பலத்தை அதிகரித்துள்ளதோ அதை பொறுத்தே அந்த ஆத்மா செல்லும் தூரமும் காலமும் பரிணாமமும் இருக்கும். அப்படி எதுவும் செய்யாமல் சராசரியாக உண்டு உறங்கி ஒரு விலங்கு போல் வாழ்ந்த ஆத்மாவால் உணரவும் முடியாது. வேறு எங்கும் செல்லவும் முடியாது. குறிப்பிட்ட இடத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும்.

கேள்வி: ஐயனே ராகுகாலம் எமகண்டம் குளிகை காலம் இவற்றை எப்போது பார்க்க வேண்டும்? காரணம் என்ன?

இது போன்ற ஜாதக மற்றும் நேர காலங்களை எல்லாம் ஒரு மனிதன் சுயநலமாக லோக ஆதாயம் கருதி செய்யக்கூடிய செயலுக்கு மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். பொது நலம் கருதி செய்யக்கூடிய போது சேவை கருதி செய்யக்கூடிய சிகிச்சை அல்லது அவசரமான மருத்துவ உதவி இது போன்ற தருணங்களில் இவற்றை பார்க்கக்கூடாது. எனவே பொதுவான நன்மைகளைக் கருதி செய்யக்கூடிய காரியங்கள் தர்ம காரியங்கள் வழிபாடுகள் யாகங்கள் ஆலய தரிசனங்கள் இவற்றிற்கு இது பொருந்தாது. சுயநலமாக செய்யக்கூடிய லோக ரீதியாக செய்யக்கூடிய செயல்கள் ஒரு இல்லம் வாங்க வேண்டும் ஒரு வாகனம் வாங்க வேண்டும் புதிதாக ஆடை வாங்க வேண்டும் வீட்டிற்கு ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றெல்லாம் ஒரு மனிதன் முடிவெடுக்கும் தருணம் அவனுடைய ஜாகத்திற்கு ஏற்ற ஒரு காலமாக பார்த்துக் கொள்வது ஏற்புடையது.

கேள்வி: திருப்புகழ் படித்தால் முக்தி கிடைக்குமா?

திருப்புகழ் ஓதி ஓதியபடி நடந்தால் முக்தி.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 28

கேள்வி: சாந்தி அடையாமல் அலையும் ஆத்மாக்களுக்கு பசி தாகம் உண்டா?

ஆத்மாவிற்கு உடலுக்கு உண்டான உணர்வுகள் உண்டே தவிர அந்த உணர்வுகளுக்கு உண்டான தேவைகள் இல்லை. பசிக்கும் ஆனால் உண்ண முடியாது. வலிக்கும் ஆனால் வலியை வெளிப்படுத்த முடியாது. கரங்கள் இல்லாமல் இருக்கும். ஆனால் கரங்கள் இருப்பது போன்ற ஒரு பிரம்மை இருக்கும். உறவுகளை பார்க்கும் பேசும். ஆனால் அதை உணரும் சக்தி அதன் உறவுகளுக்கு இருக்காது. எனவே இது ஒருவகையான அவஸ்தை. இயற்கையான மரணமோ அல்லது மாறான மரணமோ வாழும் போது மனிதனாக வாழ வேண்டும். பாவத்தை மூட்டை மேல் மூட்டை கட்டி கொண்டவனுக்கு தான் செய்ததெல்லாம் பாவம் என்ற உணர்வு வரும்வரை அதற்குண்டான துன்பமும் அதை திருத்தும் வண்ணம்தான் இறைவன் அவ்வாறு அமைத்திருக்கிறான். யாரையும் தண்டிப்பதோ வேதனைப்படுத்துவதோ அல்ல விதியின் வேலை. உணர்ந்து திருத்தப்பட வேண்டும் என்பதுதான்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 27

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு

இறைவனின் அருள் கடாட்சத்தைக் கொண்டு இயம்புவது யாதென்றால் யாம் கலாகாலம் எம்மை நாடும் மாந்தர்களுக்கு இறைவன் கருணையை பெறுவதற்கு உண்டான வழிமுறைகளை இறைவனின் கருணையைக் இயம்பிக் கொண்டே இயம்பிக் கொண்டு இருக்கிறொம். ஒரு மாந்தன் இன்னொரு மாந்தனை எந்த வித பிரதிபலனும எதிர் பாராமல் விரும்புவதற்கு யாது காரணமாக இருக்க இயலும்? ஒரு மனிதன் சக மனிதனை விரும்புகிறான் அவனை கண்டால் சந்தோஷம் கொள்கிறான் என்றால் என்ன பொருள்? அந்த சந்தோஷத்தை தரக்கூடிய மனிதன் அவனுடைய மன எண்ணங்களிலிருந்து நல்ல அதிர்வலைகளை அனுப்புகிறான் என்பது பொருள்.

ஒரு விருட்சம்(மரம்) அல்லது செடி மலர்கின்ற இடத்தில் சென்று அந்த செடிகளை மிகவும் கொடூர பார்வை பார்த்து கொலைக் கருவிகளால் (கத்தி கோடாரி போன்ற) சேதப்படுத்தியும் அன்றாடம் பழகிக் கொண்டே இருந்தால் பிறகு அந்த மனிதன் சாதாரணமாகவே அந்த பகுதியில் நடந்து சென்றாலே செடிகளும் விருட்சங்களும் (மரங்களும்) உள்ளுக்குள் அஞ்சி நடுங்கும் வாடத் தொடங்கிவிடும். அதோடு மட்டுமல்லாமல் அந்த செடிகள் சரியான மலரை மலர்க்காமலும் காய்களை காய்க்காமலும் இருந்து விடும். இதை மனிதர்கள் எங்கு வேண்டுமானாலும் பரிசோதிக்கலாம். எனவே எந்த உயிராக இருந்தாலும் ஓரறிவோ ஈரறிவோ தேவர்களோ யாராக இருந்தாலும் முதலில் ஒருவரை ஒருவர் பார்க்கும் பொழுது சந்தோஷம் ஏற்படுகிறது என்றாலே அந்த மனிதன் எண்ணங்களின் ஆக்க பூர்வமான அலைகள் தான். அதை தான் யாங்கள் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே நடக்கும் என்று காலகாலம் இயம்பிக் கொண்டு இருக்கிறோம்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 26

கேள்வி: பிரம்மஹத்தி தோஷம் பற்றி

பாவத்தின் செயலை விட நோக்கத்தை வைத்து தான் இறைவன் பாவத்தின் அளவை நிர்ணயம் செய்வார். சுயநலத்திற்காக ஒரு மனிதன் பிற மனிதனை தாக்கி காயம் ஏற்படுத்தினாலோ அல்லது உயிர்சேதம் ஏற்படுத்தினாலோ அது பிரம்மஹத்தியில் சேரும். ஆனால் சமுதாயத்தை காக்க ஒரு சில மனிதர்களுக்கு தீங்கு செய்யும் மனிதர்களை விரட்டி அடிப்பதற்காக செய்யப்படும் போர் அல்லது தற்காப்பு நடவடிக்கைகளில் எதிர்பாராதவிதமாக ஒரு மனிதன் இறந்தால் அதுவும் பிரம்மஹத்தியில் வரும் என்றாலும் அது சுயநலத்திற்காக செய்யப்படவில்லை என்பதால் பெரிதளவு அது தாக்கம் ஏற்படுத்தாது. இருந்தாலும் அதற்கு பிராயச்சித்தம் செய்யப்பட வேண்டும். ஆனால் பிராய்ச்சித்தம் என்பது கடுமையாக இராது. எளிமையான முறையிலே அவனவனால் முடிந்த சிவவழிபாடோ அல்லது பஞ்சாட்சர ஜபம்(நமசிவய) செய்தால் கூட இந்த பாவம் குறைந்துவிடும். ஆனால் எந்த உயிரை கொன்றாலும் பிரம்மஹத்தியின் அளவு விகிதாசாரத்தில் வேறுபாடு இருக்குமே தவிர தோஷம் என்பது இருக்கத்தான் செய்யும். ஆனால் பாவம் என்பதை அந்தந்த செயலை மட்டும் பார்க்காமல் அந்த மனிதனின் சூழ்நிலை வாழும் நிலை பக்குவம் இவற்றை வைத்து பார்க்க வேண்டும்.

அதாவது சகல வேதங்களையும் முறையாக கற்று சகல கல்வி கேள்விகளில் தேர்ச்சி பெற்று எல்லா வகையான ஞானக்கருத்தும் தெரிந்து இது தக்கது இது தகாதது இதை செய்யலாம் இதை செய்யக் கூடாது இதை செய்தால் பாவம் இதை செய்தால் புண்ணியம் என்றெல்லாம் அறிந்து ஓரளவு பக்குவம் பெற்ற மனிதன் யாருக்கு தெரியப் போகிறது என்று எந்த ஒரு சிறிய தவறையும் செய்தாலும் அது மிகப்பெரிய பாவமாக மாறும். ஆனால் அறியாத மனிதன் கல்வி கேள்வி கல்லாத மனிதன் எதுவும் தெரியாத மனிதன் ஏதோ உண்பதும் உழைப்பதும் வாழ்வதுமாக இருக்கின்ற மனிதன் வேறு வழியில்லாமல் மிருக உணர்ச்சிக்கு அடிமையாகி எதையாவது செய்து விட்டு பின்னர் தன் மனதால் வருந்தி வருந்தி அழுதால் அந்த பாவம் மன்னிக்கப்படும். வயிற்றுக்கு வழியில்லாமல் ஒருவன் எல்லா வகையான நேர்மையான வழிமுறைகளையும் தேடி தேடி தேடி தோற்றுப் போய் களவு தொழிலை மேற்கொண்டால் அவன் மன்னிக்கப்படுவான். ஆனால் இதை செய்வதற்கு தான் உனக்கு ஊதியம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு அந்த பணிக்காக ஒருவனுக்கு அரசாங்கமோ ஒரு நிறுவனமோ ஊதியம் வழங்குகிறது. ஆனாலும் அந்த பதவியைப் பயன்படுத்தி ஒருவன் ஒரு காரியம் சாதிப்பதற்கு எனக்கு கையூட்டாக(லஞ்சம்) இந்த தனம் வேண்டும் என்று கேட்டால் கட்டாயம் அது பல கோடி பிரம்மஹத்தி தோஷத்திற்கு சமமப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 25

கேள்வி: பெண்கள் குங்குமம் வைப்பதன் அவசியம் மற்றும் தாத்பரியம் பற்றி கூறுங்கள்

இறைவன் அருளால் இடை காலத்தில் இந்த பழக்கம் ஏற்பட்டது. மங்கல சின்னம் என்று நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் உடலுக்கு தீங்கைத் தரும் இராசாயனங்களையெல்லாம் வைத்துக் கொள்வதை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையப்பா. இன்னமும் கூறப் போனால் நீ கூறிய அந்த செந்நிற வண்ணத்தை விட நேரடியாக தூய்மையான சந்தனத்தை வைத்துக் கொள்ளலாம். நல்ல முறையில் தயாரிக்கப்பட்ட திருநீற்றை வைத்துக் கொள்ளலாம். பெண்கள் அப்படி செந்நிற வண்ணத்தை இட்டுக் கொள்ளாமல் மங்கலமான கஸ்தூரி மஞ்சள் பொடியை பொடித்து அவற்றை வைத்துக் கொள்ளலாம். அதுதான் சித்தர்கள் முறையாகும்.

கேள்வி: அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கும் பொழுது அது விதிப்படிதான் நடக்கிறதா ஐயனே?

அனைத்தும் விதிப்படிதான்.

கேள்வி: கோடி கோடியாக தர்மம் செய்ய வேண்டும்.

தர்மத்தின் தன்மை கொடுக்கின்ற பொருளின் அளவைப் பொருத்ததல்ல. கொடுக்கின்ற மனிதனின் மனதைப் பொறுத்தது. கோடி கோடியாக அள்ளித் தந்துவிட்டு தனிமையில் அமர்ந்து கொண்டு அவசரப்பட்டு விட்டாமோ? நமக்கென்று எடுத்து வைத்துக் கொள்ளாமல் கொடுத்து விட்டாமோ? என்று ஒரு தரம் வருத்தப்பட்டாலும் அவன் செய்த தர்மத்தின் பலன் வீணாகிவிடும். ஆனால் ஒரு சிறு தொகையை கூட மனமார செய்துவிட்டு மிகவும் மனம் திறந்து இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததே? என்று ஒருவன் மகிழ்ந்தால் அது கோடிக்கு சமம். எனவே இது குறித்து நீ வருந்த வேண்டாம்.