ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 24

கேள்வி: வயதானவர்களிடம் ஆசி பெறுவது பற்றி

வெறும் வயது மட்டும் பெரியவர் என்ற தகுதியைத் தந்துவிடாது. மனதிலே தெளிவு உள்ளத்திலே உறுதி எண்ணத்திலே உறுதி வேண்டும். இச்சைகள் குறைந்திருக்க வேண்டும். மனதிலே சபலங்கள் இருக்கக் கூடாது. தேகத்தை யோகாசனம் செய்து ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். ஆன்மாவை சுற்றியுள்ள அலைவரிசையானது மிகத் தெளிவாக இருக்க வேண்டும். அது போன்ற மனிதரிடம் ஆசி பெற்றால்தான் உண்மையாக பலிதமாகும். எனவே இறை நிலையிலே எமது நிலையிலே இருப்பவர்களின் காலில் விழுதல் தவறல்ல நன்மைகள் உண்டாகும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 23

மக்களுக்கு அகத்திய மாமுனிவர் அருளும் நல்லாசிகள்

உந்தனுக்கு கடை (கடைசி) வரையில் இறையருள் தொடர நல்லாசிகள். எது குறித்தும் கலக்கம் கொள்ள வேண்டாம். அன்றன்று காலம் விதிப்படி விதிப்பயனாக அவனவன் செய்த வினையின் எதிரொலியாக ஆண்டாண்டு காலம் சில கஷ்டங்களும் மன உலைச்சல்களும் தொடரத்தான் செய்யும். கஷ்டங்கள் தொடருகிறதே என்று இறை வழி விட்டு விலகக்கூடாது. சிறப்பில்லா வாழ்க்கையிலே சிறப்பில்லா சம்பவங்கள் எதிர்பட்டாலும் இறை வணங்க மறுத்தல் கூடாது. செய்கின்ற தர்மத்தை விடக் கூடாது. சிந்தை கொள். எம்மீது ஆர்வம் கொண்டு நீ செய்கின்ற அனைத்து செயல்களுக்கும் எமது அருளாசி உண்டப்பா. அப்பனே அது குறித்து மனிதர்கள் விமர்சனங்கள் செய்தாலும் மனம் சிதிலம் கொள்ளாதே. அவ்விடத்தில் அது குறித்து நீயும் விவரங்கள் ஆர்வத்தோடு கொடுத்தாலும் கூட உந்தனுக்கு தவறான நாமம் (பெயர்) தான் சூட்டப்படும். நல்ல எண்ணத்தில் நீ செய்தாலும் குதர்க்கமாகத்தான் பேசுவார்கள். அப்படி தொடர்ந்து பேசினால் நீயும் ஒதுங்கிக் கொள் என்பதே எமது அருள்வாக்கு ஆகும்.

ஒவ்வொரு மனிதனின் மனம் எப்படி? என்று எமக்குத் தெரியும். ஒவ்வொரு மனிதனையும் இறை சக்தியைக் கொண்டு பக்குவம் அடைந்த மனிதனாக மாற்ற முடியும் என்றாலும் கூட இறைக்கு வேலை அதுவல்ல. அன்னவனே உழன்று சிதிலப்பட்டு வேதனைப்பட்டு கவலைப்பட்டு கஷ்டப்பட்டு பக்குவப்பட்டு தன்னைத்தானே மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் இறையின் எண்ணமாகும். அறிவிலே தெளிவும் மனதிலே உறுதியும் இருக்க வேண்டும். இது கிடைப்பதற்கு மனிதன் வாழ்விலே துன்பங்கள் பட வேண்டும். அதை அறிவிலே ஊடுருவி நாங்களே தெளிய வைப்போம். சதுரகிரியோ திருவண்ணாமலையோ இயன்ற போது சென்று வா. நல்லதோரு அனுபவங்களும் இறை அருளாசியும் உனக்குக் கிடைக்கும். தொடர்ந்து பூஜைகள் செய்ய முடியவில்லையே? என்று வருந்தாதே. அந்த ஏக்கமே ஒரு பூஜைதான். எந்த இடத்தில் அமைதி கிடைக்கிறதோ அங்கு அமர்ந்து பூஜை செய்யலாம். அங்குதான் இங்குதான் அதிகாலைதான் உச்சிப்பொழுதுதான் என்பது இல்லை. இறையை வணங்க காலம் நாழிகை சூழல் எதுவும் தேவையில்லை. மனம் ஒன்றி இருந்தால் மட்டும் போதும். எனவே இதனை எண்ணி அமைதியாக வாழ். நல்லதொரு வாழ்க்கை இறைவன் அருளால் உனக்கு கிடைக்கும் ஆசிகள்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 22

கேள்வி: ஐயனே நாங்கள் தினசரி செய்ய வேண்டிய கடமைகள் பூஜைகள் என்ன?

குறைந்தபட்சம் ஏதாவது ஒரு ஆலயம் சென்று மனமொன்றி வழிபடுவது நன்மையைத் தரும். அப்படியும் இல்லாதவர்கள் குறைந்தபட்சம் இரண்டு நாழிகையாவது (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) காலையிலாலோ மாலையிலோ இல்லத்தில் அமைதியாக நெய் தீபம் ஏற்றி உயர்வான முறையிலே வாசனாதி திரவியங்களையெல்லாம் இட்டு ஏதாவது இறை நாமாவளியை (சொல்லி) மனதிற்கு பிடித்த எந்த இறைவனின் வடிவத்தையாவது வணங்கி வருவது நன்மையைத் தரும். குறைந்த பட்சம் ஒரு மனிதருக்காவது அவனுக்கு வேண்டிய நியாயமான உதவிகளை செய்வது இறைவனின் அருளை விரைவில் பெற்றுத் தரும். அடுத்ததாக தன் கடமைகளை மறக்காமல் நேர்மையாக ஆற்றுவது என்ற உறுதியை எடுத்துக் கொண்டு அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். மனைவியாகப்பட்டவள் இல்லறக் கடமைகளை ஆற்றுவதும் கணவனாகப்பட்டவன் பணியில் உள்ள கடமைகளை ஆற்றுவதும் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டிய கடமைகள் ஆற்றுவதும் எதையும் ஒத்தி வைக்காமல் நேர்மையான முறையில் உடனுக்குடன் செய்கின்ற ஒரு பழக்கத்தை கடைபிடித்துக் கொண்டே இறை வழிபாடு தர்ம காரியங்கள் செய்வது கட்டாயம் இறைவனை நோக்கி செல்வதற்கு மிக எளிய வழியாகும்.

கேள்வி: கார்க்டோக நல்லூர் பற்றி:

தாமிரபரணி கரையில் உள்ள மண்ணையும் நீரையும் கலந்து பிசைந்து பிறகு தன் மூச்சுக் காற்றால் கார்க்கோடகன் என்னும் பாம்பு ஐயனை வடிவமைத்த இடம் இது. உடலிலே ஒவ்வாமை விஷத்தன்மை உடையவர்களுக்கு வழிபாடு செய்ய ஏற்ற இடம்.

(இக்கோவிலைப்பற்றி மேலும் அறிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வரும் பக்கத்தில் படித்துக் கொள்ளலாம்) https://tsaravanan.com/karkodaka-nallur/

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 21

கேள்வி: குரங்கில் இருந்து மனிதனா?

அப்படி நாங்கள் எங்காவது உரைத்தோமா? மனிதன் ஆராய்ச்சி ரீதியாக இந்த கருத்தை உரைத்திருக்கிறான். குரங்கில் இருந்து மனிதன் வரவில்லை. இதை மனித விஞ்ஞானம் ஏற்றுக் கொள்ளாது என்று எமக்கு நன்றாகத் தெரியும். ஆனால் இதுதான் உண்மை.

அப்படியானால் மற்ற உயிர்கள் எதிலிருந்து வந்தன?

அனைத்து உயிர்களையும் நீ உயிர்களாகப் பார்க்கவில்லை. அதன் வெளித்தோற்றமான கூட்டை மட்டும்தான் பார்க்கிறாய். அந்தக் கூட்டுக்குள் இருப்பது எல்லாமே இறை சக்திதானப்பா. அவைகள் அங்கு சிறிய சிறிய பிழைகள் செய்யும் போது விலங்காக விருட்சமாக(மரமாக) முனிவராக தேவராக கந்தர்வனாக மனிதராக உருமாற்றம் அடைகிறது. மற்றபடி ஒரு சிங்கத்தின் உடலில் கூட ஒரு உயர்ந்த முனிவரின் ஆன்மா இருக்கலாம். ஒன்று சாபத்திற்காக அல்லது மனித தேகம் எடுத்தால் மாயையில் சிக்கி விடுவோம் என்பதற்காக சிங்கமாகவோ புலியாகவோ மானாகவோ இருக்கலாம் என்று அப்பிறவியை எடுக்கலாம். இன்னும் சில தேவர்கள் முனிவர்கள் தங்கள் கர்மாவை எப்படி கழிப்பார்கள் தெரியுமா? மெதுவாக கீழிறங்கி வந்து மானாக பிறவி எடுப்பார்கள். பல அசுரர்கள் புலிகளாக சபிக்கப்பட்டிருப்பார்கள். அந்த புலிகளின் முன்னால் திரிந்து ஆசை காட்டி தன்னைக் கொல்ல வைப்பார்கள். அப்படி அவர்கள் அழிய நேர்ந்தால் போதும் பல ஜென்ம தோஷங்கள் அந்த ஒரு பிறவியிலேயே கழிந்து விடும். இப்படியெல்லாம் பல்வேறு சூட்சுமங்கள் உள்ளன. மனித சரித்திரமோ சிந்தனையோ இதனை ஏற்றுக்கொள்ளாது. ஏற்றுக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான், இறைவன் மனிதனுக்கு விசித்திரமான அறிவைக் கொடுத்திருக்கிறான்.

கேள்வி : ஜோதி ரூபமா? அரூபமா ?

காற்று – ரூபமா? அரூபமா?

வாக்கு – ரூபமா? அரூபமா?

இறை – ரூபமா? அரூபமா?

எண்ணங்கள் – ரூபமா? அரூபமா?

வார்த்தைகள் – ரூபமா? அரூபமா?

இதற்கு என்ன பதிலோ இந்த கேள்விக்கும் அதுதான் பதில்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 20

கேள்வி: கலி காலத்தில் தீயவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதே?

ஒரு வகையில் இதை ஏற்றுக் கொண்டாலும் இன்னொரு வகையில் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டு்ம். உதாரணமாக 1000 பேருக்கு 100 பேர் என்று தீயவர்கள் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதே சமயம் 10000 மனிதர்கள் இருந்தால் அங்கே 1000 தீயவர்கள் இருப்பார்கள். எனவே அன்று மனிதக் கூட்டம் குறைவு. அன்று நன்மை தீமை பாவம் புண்ணியம் போன்றவற்றில் மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. அரசனும் இறை நம்பிக்கையோடு இருந்தான். எனவே நீ கூறுவது போல் தற்போது உள்ளது போல் மோசம் இல்லையென்றாலும் எல்லாக் காலங்களிலும் தீயவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அதனால் தான் காலம் காலமாக நீதி போதனைகளும் தரப்படுகின்றன. தற்போது தீயவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறதென்றால் அதற்கு ஜனத்தொகைதான் காரணம். இந்த பெருங்கூட்டத்தில் மிக மிக மிக சிறிய அளவு மக்கள் தான் இங்கு(தடத்திற்கு) வருகிறார்கள். அதிலேயும் மிக மிக மிக சிறிய அளவிலேதான் எமது வாக்கை கேட்கிறார்கள் நம்புகிறார்கள். அதிலேயும் மிக மிக மிக சிறிய அளவிலே தான் எமது வாக்கை செயல்படுத்துகிறார்கள்.

கேள்வி: பால் சைவமா? அசைவமா?

இந்த உலகிலே சைவர்களே இல்லை தெரியுமா? பிறந்த குழந்தை தாய்ப் பாலை அருந்துகிறது. பின் அது எப்படி சைவமாகும்? ஒரு உயிரினத்தை துடிக்க துடிக்க கொன்று தின்னாதே என்றுதான் நாங்கள் கூறுகிறோம். பாலை நீ கறக்காவிட்டால் பசுவிற்கு துன்பம் ஏற்படும். நீ பாலை கறப்பதால் பசுவிற்கு எந்த வித துன்பமும் ஏற்படுவதில்லை.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 19

கேள்வி: இறை காட்சி கிடைக்க வழிகாட்டுங்கள் குருவே?

பிரஹலாதனின் பக்தி ராவணின் பக்தி நாயன்மார்களின் பக்தி ஆழ்வார்களின் பக்தி மன உறுதி மன வலிமை சித்தர்களைப் போன்ற பற்றற்ற தன்மை வந்துவிட்டால் கட்டாயம் இறை காட்சி கிடைக்கும்.

கேள்வி: பக்குவம் பெறுவது பற்றி?

ஒரு மனிதனை பக்குவப்படுத்துவது என்பது இரசவாதத்தை விட கடினமானது. வெளியில் இருந்து வரும் விமர்சனங்களுக்கு கோபப்பட்டால் ஒருவனால் எப்படி ஆன்மீகத்தில் முன்னேற முடியும்?

கேள்வி: ஒரு மனிதன் செல்ல வேண்டிய படிநிலைகள் யாவை?

  1. மிருக பதவி 2. மனித பதவி 3. மா மனித பதவி 4. மா மா மனித பதவி 5. கந்தர்வன் 6. தேவன் 7. மகான்.

கேள்வி: சக்தியும் சிவனும் வெவ்வேறா? அல்லது ஒன்றா?

தங்கமும் நகையும் வெவ்வேறா? இரண்டும் ஒன்றுதானே அதைபோல் தானப்பா.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 18

கேள்வி: ஐயனே ஒரு ஆத்மா எப்போது? எந்த மாதத்தில்? ஒரு பெண்ணின் கர்ப்பத்தில் உள்ள பிண்டத்தில் பிரவேசிக்கிறது?

இறைவன் அருளைக் கொண்டு இதை முழுக்க முழுக்க இறைவன் தான் முடிவெடுப்பார். ஆணும் பெண்ணும் சேர்ந்து சதை பிண்டத்தை உருவாக்குகிறார்கள். அதற்குள் என்ன வகையான ஆத்மா? அது என்ன வகையான காலத்திலே என்னென்ன வகையான நிலையிலே அந்த பிண்டத்திற்குள் நுழைய வேண்டும் என்பதை இறைவன் முடிவெடுக்கிறார்.

எப்படி முடிவெடுக்கிறார்?

அந்த குடும்பம் புண்ணியம் அதிகம் செய்த குடும்பமா? புண்ணியங்களை தொடர்ந்து செய்து வரும் பாரம்பர்யம் மிக்க குடும்பமா? அப்படியானால் அந்த புண்ணியத்தின் அளவின் விழுக்காடு எந்த அளவு இருக்கிறது? புண்ணியத்தின் தன்மை எந்தளவிற்கு இருக்கிறது? அப்படியானால் அதற்கு ஏற்றார் போல் ஒரு புண்ணிய ஆத்மாவை அங்கே பிறக்க வைக்க வேண்டும். அப்படியானால் அந்த புண்ணிய ஆத்மா அங்கே பிறப்பதற்கு எந்த கிரகநிலை உகந்தது? என்பதையெல்லாம் பார்க்கிறார். அதற்கு ஏற்றார் போல் தான் அந்த ஆணும் பெண்ணும் சேரக்கூடிய நிலையை விதி உருவாக்கும். விதியை இறைவன் உருவாக்குவார். அதன் பிறகு அந்த சதை பிண்டம் உருவாகின்ற நிலையில் ஒரு ஜாதகம் இருக்கும். அதுவும் கூடுமானவரை உச்ச ஜாதகமாகவே இருக்கும். இந்த கூடு உருவாகிவிட்ட பிறகு நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளானது அதற்குள் ஆத்மாவை அனுப்புகின்ற ஒரு காலத்தை நிர்ணயம் செய்து அதற்கேற்ற கிரகநிலைக்கு தகுந்தாற் போல் உள்ள கால சூழலில் முடிவெடுப்பார். இது ஆதியிலும் நடக்கலாம் இடையிலும் நடக்கலாம் இறுதியிலும் நடக்கலாம்.

இந்த நிலையிலே சில மிக விஷேசமான புண்ணிய சக்தி கொண்ட ஆத்மாக்கள் ஒரு முறை உள்ளே சென்றுவிட்டு பிறகு மீண்டும் வெளியே வந்து இறைவனைப் பார்த்து நான் இந்த குடும்பத்தில் பிறக்க விரும்பவில்லை வேறு எங்காவது என்னை அனுப்புங்கள் என்றெல்லாம் உரைக்கின்ற நிலைமையும் உண்டு. இஃதோப்ப நிலையில் அந்த பிண்டம் ஆண் பிண்டமாக இருக்கலாம் உள்ளே இருக்கின்ற ஆத்மா பெண் தன்மை கொண்ட ஆத்மாவாக இருக்கலாம். அந்த பிண்டம் பெண் பிண்டமாக இருக்கலாம். உள்ளே நுழைகின்ற ஆத்மா ஆண் ஆத்மாவாக இருக்கலாம் அல்லது பெண் ஆத்மாவாக இருக்கலாம். பெண் பிண்டம் பெண் ஆத்மா அங்கு பிரச்சனை இல்லை. ஆண் பிண்டம் ஆண் ஆத்மா அங்கும் பிரச்சனை இல்லை. ஆனால் இதை மாறி செய்வதற்கும் சில கர்ம வினைகள் இருக்கின்றன. இதற்குள் நுழைந்தால் அது பல்வேறு தெய்வீக சூட்சுமங்களை விளக்க வேண்டி இருக்கும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 17

கேள்வி: அசைவ உணவு ஏற்பதனால் வரும் தீமைகள் என்ன? சைவ உணவின் நன்மைகள் என்ன?

இறைவன் கருணையால் மிக எளிமையாக மனிதன் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் கூட இதற்கும் வாத பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். ஒரு மனிதன் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி தன்னை விட வலு குறைந்த உயிரினங்களைக் கொன்று தின்கிறான். இது ஒருபுறம் இருக்கட்டும். இப்பொழுது ஒரு அரக்கனோ அல்லது மனிதனை விட பல மடங்கு வலு பெற்ற ஒரு மனிதனோ வந்து இன்று முதல் என் உடல் ஆரோக்கியத்திற்காக மனித உடலை தின்னும் நிலை எனக்கு வந்துவிட்டது. எனவே இன்று முதல் வீட்டிற்கு ஒருவன் தன்னை தியாகம் செய்ய வேண்டும். இல்லையென்றால் என் வீரர்கள் வந்து அழைத்து செல்வார்கள் என்று கூறினால் அந்த மனிதனை எத்தனை மனிதர்களால் ஒத்துக் கொள்ள முடியும்? நியாயம் என்று கூற முடியும்? தன்னை யாரும் இடர்படுத்தக் கூடாது என்று எண்ணுகின்ற மனிதன் தான் பிறரை இடர்படுத்தக் கூடாது என்ற ஒரு சிந்தனைக்கு வர வேண்டுமல்லவா? எனவே தன்னுடைய உடலை வளர்ப்பதற்கு பிறரின் உடலை வருத்தித்தான் அந்த செயலை செய்ய வேண்டுமென்றால் அதைவிட பட்டினி கிடந்து உயிரை விடலாம். அது ஒரு மனிதனுக்கு உயர்ந்த நிலையை நல்கும் இறையருளை தரும். எனவே இது குறித்து பல்வேறு நூல்களில் கூறப்பட்டிருக்கிறது. அறங்களில் மிகச்சிறந்த அறம் கொல்லாமை. அறியாமையால் செய்துவிட்டால் அதை அறிந்த பிறகு மெல்ல மெல்ல அதனை விட்டுவிடுவது மிகச்சிறந்த தொண்டாகும். இறைவன் அருளை பெறுவதற்கு மிக எளிய பூஜையாகும். இதை நிறுத்துவிட்டாலே மிகப்பெரிய பாவம் சேராமல் ஒரு மனிதன் தன்னை தற்காத்துக் கொள்ளலாம்.

இது தொடர்பாக யாரிடமாவது விவாதம் செய்தால் தாவர இனங்களுக்கும் உயிர் இருக்கிறதே அதை உண்ணலாமா? அதில் பாவம் வராதா? என்று அடுத்த வினா எடுத்து வைப்பான். கடுமையான உடல் உழைப்பு செய்பவனுக்கு உடல் களைத்து விடுகிறது. எனவே மாமிசத்தை உண்டால் தான் உடலுக்கு வலிமை என்று அவன் கூறுவான். இது போன்ற உயிர்க் கொலைகளை செய்யக்கூடிய தேசத்தில் உள்ளவர்கள் நன்றாகத் தானே வாழ்கிறார்கள்? அவர்களுக்கு எந்த கஷ்டமும் வரவில்லையே? என்று வினவுவான். நன்றாக கவனிக்க வேண்டும். தாவர இனங்களை உண்பதால் பாவம் வராது என்று நாங்கள் கூறவில்லை. குறைந்தபட்ச பாவம் வரத்தான் செய்யும். அதனால்தான் பிறவியே வேண்டாம் என்று இறைவனிடம் கேட்டுக் கொள்ள வேண்டும். மனிதனாக பிறவி எடுத்து விட்டாலே எத்தனைதான் நேர்மையாக வாழ்ந்தாலும் தவிர்க்க முடியாமல் சில பாவங்களை செய்து தான் ஆக வேண்டும். எனவே அதனையும் தாண்டி பல கோடி மடங்கு புண்ணியத்தை செய்தால் இந்த பாவம் நீர்த்து போகும். ஆனால் முன்னர் சொன்ன உயிர்க்கொலை பாவம் நீர்த்துப் போகாது. அவ்வளவே மன்னிக்ககூடிய பாவம் மன்னிக்க முடியாத பாவம் என்று எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன. சில தவிர்க்க முடியாத பாவம் இறையால் மன்னிக்கப் படலாம். சில பாவங்கள் இறையால் மன்னிக்கப்பட மாட்டாது. எனவே தெரிந்தும் எதற்கு (இறையால்) மன்னிக்கப்படாத ஒரு பாவத்தை ஒரு மனிதன் செய்ய வேண்டும்?

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 16

கேள்வி : சிசு ஹத்தி (குழந்தை கொலை) பற்றி

சிசு ஹத்தி என்று மனித குழந்தையை மட்டும் நீ கூறுகிறாய். கொடுமையான சிசு ஹத்தி என்று எத்தனையோ இருக்கிறது தெரியுமா? மிக மிக இளம் தளிராக இருக்கின்ற பசுமை மாறாமல் இருக்கின்ற ஒரு சிறு இலையை கிள்ளினால் ஆயிரத்து எட்டு சிசுவை கொன்றதற்கு சமம் தெரியுமா? ஒரே ஒரு மலர் மொட்டை ஒருவன் கொய்தால் அது பத்தாயிரத்து எட்டு பிறந்த குழந்தையை கொல்வதற்கு சமம். இப்படியானால் பார்த்துக் கொள் ஒரு மனிதன் எத்தனை வகையான சிசு ஹத்தி பாவத்தை சுமந்து கொண்டு செல்கிறான். இதனையும் மீறி மனிதன் ஜீவித்து இருக்கிறான் என்றால் இறைவனின் பெரும் கருணையால் தான். எனவே குழந்தை பூமிக்கு வந்த பிறகு கொன்றால் தான் பாவம் கருவிலே கொன்றால் பாவம் இல்லை என்று எண்ணிக் கொண்டிருக்கிறான். எந்த நிலையிலும் அது பிரம்ம ஹத்தி தோஷமாக உருவெடுத்து மனிதனை வாட்டிக் கொண்டு தான் இருக்கும். எனவே விழிப்புணர்வோடு இருந்து இதிலிருந்து மனிதன் தன்னை தன் குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அறியாமல் செய்திருந்தால் எத்தனை ஆதரவற்ற குழந்தைகளை ஆதரிக்க முடியுமோ ஆதரித்து இந்த தோஷத்தை நீக்கிக் கொள்ள வேண்டும். எத்தனை பசுவோடு கன்றுகளை தானம் அளித்து இந்த தோஷத்தை குறைத்து கொள்ள வேண்டுமோ குறைத்துக் கொள்ள வேண்டும். எந்த அளவிற்கு சிவாலயங்களில் நெய் தீபம் ஏற்றி குறைத்துக் கொள்ள வேண்டுமோ குறைத்துக் கொள்ள வேண்டும். வாய்ப்பு உள்ளவர்கள் சிவலிங்க பிரதிஷ்டை செய்து அதை தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் வாழ்க்கைக்கு பிறகும் நிரந்தரமாக பூஜிப்பதற்கு ஒரு ஏற்பாட்டை செய்ய வேண்டும். இதுபோல் செய்வதோடு ஆயிரமாயிரம் விருட்சங்களை (மரங்களை) தானம் செய்வதும் அதை நட்டு பாரமரித்து நிழல் தரும் விருட்சங்களாக மாற்றுவதும் என்று ஒரு தொண்டை செய்தால் இந்த ஹத்தி தோஷம் நீங்கி விடும்.

ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 14

கேள்வி: திருவண்ணாமலையின் சிறப்பு பற்றி

அனைவரும் அறிந்த ஒன்று தான் அக்னி ஸ்தலம். அதோடு மட்டுமல்லாமல் பாவ வினைகளையெல்லாம் எரிக்கக்கூடிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. பல ஸ்தலங்கள் சென்று வழிபட முடியாத மனிதர்கள் சில ஸ்தலங்கள் சென்றால் பல ஸ்தலங்கள் சென்ற பலன் உண்டு என்று கூறுவதுண்டு. அதுபோன்ற ஸ்தலங்களில் சிறப்பான ஸ்தலம். நினைத்தால் முழு எண்ணங்களோடு நினைத்தாலே முக்தி தரக்கூடிய ஸ்தலங்களில் இதுவும் ஒன்று. இந்த நிலையில் மட்டுமில்லாமல் இன்றும் அரூப நிலையிலும் ரூப நிலையிலும் எண்ணற்ற சித்தர்கள் நடமாடிக் கொண்டு இருக்கக் கூடிய ஸ்தலங்களில் இந்த ஸ்தலமும் ஒன்று. இந்த இடத்திலே ஒரு மனிதன் செய்கின்ற நல்வினைகள் பல மடங்காகப் பெருகும். தீ வினைகளும் பல மடங்காகப் பெருகும்.

கேள்வி : சிவனை வணங்கும் போது

சிவனை வணங்கும் போது அம்பாளுக்கு உரிய பூரம் நட்சத்திரத்திலும் அம்பாளை வணங்கும் போது சிவனுக்குரிய ஆருத்ரா (திருவாதிரை) நட்சத்திரத்திலும் வணங்குவது சிறப்பு.

கேள்வி: காஞ்சிபுரம் அத்திவரதர் பற்றி

நீர் தொடர்பான கண்டங்கள் விலகி விடும். சந்திர தோஷங்கள் இருந்தால் விலகிவிடும். மேலும் சந்திரனின் பரிபூரண ஆசி கிடைக்கும்.

கேள்வி: கோடி ஹத்தி பெருமாள் பற்றி (அருள்மிகு மகாலட்சுமி சமேத வான்முட்டி பெருமாள் திருக்கோயில் மயிலாடுதுறை.)

ஹத்தி தோஷம் நீக்கக்கூடிய ஸ்தலம். முற்பிறவியில் கொலை அல்லது கொலைக்கு சமமான பாவங்கள் செய்த மனிதர்கள் எல்லாம் இங்கு உழவார பணியும் மற்ற தொண்டுகளும் செய்தால் அந்த பாவங்கள் எல்லாம் விலகும்.