ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 195

அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:

இறைவன் அருளாலே நல்ல கருத்துக்களையும் நல்ல ஞானத்தையும் மனிதன் அன்றாடம் சிந்தித்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்க இருக்கத்தான் அதிலிருந்து அவன் விலகாமல் இருப்பதற்குண்டான மனோதிடம் உருவாகும். எனவே ஒரு மனிதன் மெளனமாக இருப்பதும் மெளனத்தைக் கலைத்துப் பேச முற்பட்டால் எப்பொழுதுமே நல்ல சாத்வீகமான நல்லதொரு சத் விஷயமாகப் பேசுவதும் இறை சார்ந்த விஷயமாகப் பேசுவதும் இருப்பதே ஏற்புடையதாக இருக்கும். முழுக்க முழுக்க ஆன்மீகத்தை வாழ்க்கையாகக் கொண்டு அதை நோக்கியே செல்வேன் என்று உறுதி எடுத்துக் கொண்ட மனிதர்களெல்லாம் மிக மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் எல்லா பணிகளையும் பார்த்துக் கொண்டு பகுதி பகுதியாக கால அவகாசம் ஒதுக்கி வித்தை (கல்வி) கற்கிறேன் என்கின்ற மாணவன் சற்றே குறைவாக மதிப்பெண் எடுத்தால் பாதகமில்லை. ஆனால் முழுநேரமும் வித்தை (கல்வி) கற்கத்தான் ஒதுக்கியிருக்கிறேன் என்று அப்படி ஒதுக்கி வித்தை கற்கின்ற மாணவர்கள் அதிக அளவு மதிப்பெண்ணை எடுக்கவேண்டும் அல்லவா?அதைதான் முழுநேர ஆன்மீகத்தை நோக்கி செல்கின்ற மனிதர்கள் கருத்தில் கொண்டிட வேண்டும். இல்லையென்றால் வெறும் உலகியல் பிரச்சனைகளிலிருந்து தப்பித்துக் கொள்ள ஒரு சாதனமாக்கத்தான் ஆன்மீகம் இருக்குமே தவிர உண்மையாகவே எந்த நோக்கத்திற்காக ஆன்மீகத்தை நோக்கி ஒரு மனிதன் செல்கிறானோ அந்த நோக்கம் கைவராமல் பல்வேறு பிறவிகளைத் தாண்டி செல்ல வேண்டியிருக்கும். அடுத்தடுத்த பிறவிகளில் இந்தப் பிறவியில் உழைத்த உழைப்பு கை கொடுக்கும் என்றாலும் மாயையில் சிக்கிவிட வாய்ப்பும் இருக்கிறது. இறைவனின் கருணையை சரியான பாத்திரமாக இருந்து மனிதன் பயன்படுத்திக் கொண்டிட வேண்டும்.

இறைவன் அருளாலே நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல நலம் எண்ணி நலம் உரைத்து நலம் செய்ய நலமே நடக்கும். இது உலகியலாக இருந்தாலும் ஆன்மீகமாக இருந்தாலும் பலிதமாகும். இறைவன் அருளாலே உள்ளத்தைப் பண்படுத்தி பண்படுத்தி உள்ளத்தை உறுதியாக்கி எண்ணத்திலே மேம்பாடு இன்னும் இன்னும் அதிகரித்து வாழுங்கால் எதுவும் நன்மையே நலம் தரும் செய்கையே. மன அழுத்தம் என்பது அதனைத் தாண்டி இந்த உலகில் பிற உயிர்களால் ஏற்படக்கூடிய அழுத்தம் தாக்கம் என்பது மிக இயல்பாக கடந்து போவதற்கு மனதை சரியான பக்குவநிலையில் வைத்திருந்தால் போதும். என்றுமே உலகையோ உலக இயல்பையோ மாற்றுவதும் திருத்துவதும் என்றும் கடினம். அங்கனம் இருக்கும் பட்சத்திலே ஒரு மனிதன் தன்னுடைய மனதைதான் பக்குவப்படுத்தி உறுதிபடுத்தி அனுசரித்து சாத்வீகமாக பார்க்க எதிர்கொள்ள பழக வேண்டும். நாங்கள் (சித்தர்கள்) அடிக்கடி கூறுவது போல கருவை கருப்பை சுமக்கட்டும். கருவிலே சுமக்க வேண்டிய குழவியை (குழந்தையை) இடுப்பில் சுமக்க முடியாது. தோளிலே சுமக்க முடியாது. அது போலதான் எதிர்காலமும். கடந்த காலம் சவம் போன்றது. சவத்தை தோளிலே சுமந்து கொண்டு திரிவது மனிதனுக்கு வேண்டுமானால் சுகமாக இருக்கலாம். மகான்கள் பார்வையில் அது தேவையற்றது. இக்கணம் இக்கணம் இக்கணம் நிகழ் நிகழ் நிகழ் அந்த நிகழ் நிகழ்காலம். அவற்றை சரியாகப் பயன்படுத்த வேண்டும். கடந்த கால கரையான்கள் செல்லட்டும். எதிர்கால நாகங்களும் வேண்டாம்.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.