அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு: இந்த பாடலுக்கான விளக்கம் கீழே தனியாக கொடுக்கப்பட்டுள்ளது
பூ வாட்டம் பொன் ஆட்டம் மனம் இருக்க என்றென்றும் கொண்டாட்டம்.
தேன் ஆட்டம் சொல் இருக்க என்றென்றும் மகிழ் வாட்டம்.
தினை ஆட்டம் உளம் இருக்க என்றென்றும் அது உறுதி ஆட்டம்.
ஆண் ஆட்டம் பெண் ஆட்டம் எல்லாம் அடங்கும் காலம் ஆட்டத்தில் விதி ஆட்டம்.
முன்னே மாந்தர் வாழ்வு வினை ஆட்டம் போல் இருக்கும் மதி ஆட்டம்.
ஆடி மாந்தன் அவன் தனக்குத்தான் விதி ஆட்டம் போடுகிறான்.
தொடர்ந்து பிறவி ஆட்டம் தொடர அதற்கு ஒப்ப அவன் ஆடிய மதி ஆட்டம் விதி ஆட்டம் ஆடி கதி ஆட்டம் போடுதப்பா.
வாழ்வு ஆட்டம் உயர் ஆட்டம் ஆட நலம் ஆட்டம் தொடரும்.
தப்பாட்டம் தவறாட்டம் ஆட தாழ்வு ஆட்டம் தொடரும்.
பெண் ஆட்டம் கண்டு பெண் நாட்டம் கொண்டால் வாழ்வின் ஆட்டம் தவறு ஆட்டம் ஆகும்.
புலன் ஆட்டம் வழியே மனம் ஆட முடிவில் திண்டாட்டம் ஆகுமப்பா.
ஆட்டம் ஆட மெய் ஆட்டம் ஆட பொய் ஆட்டம் ஆடாது வாழலாம்.
விதி ஆட்டம் ஆடும் அதன் வழியாட்டம்
யாவும் தொடர்ந்து சேர்க்கும் வீண் பழியாட்டம்
நரி ஆட்டம் புத்தி பேதலிக்க அது சரி ஆட்டம் என்று அத்தருணம் மதி சொல்ல
சரி ஆட்டம் அல்ல தப்பாட்டம் என விதி காட்டும்.
என்னாட்டம் ஆடினாலும் முடிவில் அந்தம் (முடிவு) ஆட்டம் வந்த பின்னே
முதல் ஆட்டம் தொடங்கி முடிவு ஆட்டம் வரை யாவும் கர்ம ஆட்டம் என புரியும்.
தர்ம ஆட்டம் ஆடும் மாந்தனுக்கு கர்ம வாட்டம் வாட்டாது.
பேதமில்லா பிராத்தனை ஆட்டம் ஆடும் மாந்தனுக்கு துயர் ஆட்டம் ஆட்டாது.
உயர் வாட்டம் தேடும் மாந்தன் உலக ஆட்டத்தில் உயர் ஆட்டம் தேடுகிறான்.
உயர் வாட்டம் என்பது மெய்ஞான வழியிலே என்பது புரியாது தடுமாற்றம் காணுகிறான்.
உள்ளபடி உள்ளம் உயர்வாட்டம் ஆட பொறுமை கூடத்தான் ஆட்டம் ஆட
எளிமை பின் ஆட்டம் ஆட கருணை தானும் நல் ஆட்டம் ஆட
இரக்கம் பின் ஆட்டம் ஆட சாந்தம் வதனம் ஆட்டத்தில் ஆட
தெளிவு உள்ளத்தில் சதா ஆட்டம் ஆட ஆடாத நிலையில் ஆடிய ஆட்டம் புரிபடும்.
ஆடுவதும் ஆட்டுவிப்பதும் தில்லையில் ஆடும் அம்பலத்து அரசனாட்டம் என்று தெரிய வரும்.
முடிவாட்டத்தில் தெரிய வரும். புத்தி முதலாட்டத்திலே தெரிந்தால் அவன் ஞானி.
சதா அம்பலத்திலே ஆடும் பொன்னம்பலம் ஆடியான் அடியினின் அடியையும்
ஆடும் அரசனின் ஆட்டத்தில் அடியையும் மறவாமல் தொழத்தான் தப்பாட்டமாய் தவறாட்டம் பாவாட்டம் ஆடாது வாழ்வு புனிதம் ஆகும்.
நல் ஆட்டம் வாழ்வில் ஆட நல் ஆடல் அரசன் அருளட்டும் என ஆசிகள்.
ஆட்டம் என்ற தமிழ் வார்த்தை வைத்து அகத்தியர் தமிழில் விளையாடி இருக்கிறார். இதன் விளக்கம் பலருக்கு புரியாது என்கின்ற காரணத்தால் இதன் விளக்கத்தை கீழே கொடுத்திருக்கிறோம்.
பூ போல மென்மையாகவும் தூய்மையான தங்கம் போல அழகாகவும் மனம் இருக்க என்றென்றும் கொண்டாட்டம் இருக்கும். தேன் போல இனிமையாகவும் சொல்லுகின்ற வார்த்தைகள் இருக்க என்றென்றும் அடுத்தவர் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். தினை மாவு போல உறுதியாக உள்ளம் இருக்க என்றென்றும் உள்ளம் உறுதியாகவே இருக்கும். ஆண் தனது உடல் வலிமையால் செய்கின்ற வினைகளும் பெண் தனது உடல் அழகால் செய்கின்ற வினைகளும் அடங்கிப் போகின்ற காலம் எனும் வாழ்க்கையின் விளையாட்டில் அவரவர்களின் கர்ம விதிகளே விளையாடுகின்றன. வாழ்க்கையின் முற்பகுதியில் மனிதர்களின் வாழ்க்கையானது அவர்கள் செய்யும் செயல்கள் எனும் வினைகளை போலவே இருப்பதால் அந்த வினைகளின் பயன்படியே அவர்களின் எண்ணங்களும் செயல்படுகின்றது. தன் விருப்பத்திற்கு ஏற்ப விளையாடிய மனிதன் வேறு எவராலும் இல்லாமல் தனக்குத் தானே கர்மங்களை சேர்த்துக் கொண்டு அந்த கர்ம விதிகளின் படியே தனது எதிர்கால வாழ்க்கையும் இருக்கும் படி மனம் போன போக்கில் செயல்படுகின்றான். தொடர்ந்து வரும் ஒவ்வொரு பிறவியிலும் மனம் போன போக்கில் வினைகளை தொடர்ந்து செய்து கொண்டு இருந்தால் ஏற்றபடியே விளையாடிய எண்ணங்களின் செயல்களும் அவன் சேர்த்துக் கொண்ட கர்மங்களின் விதிப்படியே செயல் பட்டு அதனால் அவனது வாழ்க்கையின் முடிவும் மாயையின் செயலாகவே விளையாடுகின்றது. வாழ்க்கையில் செய்யும் செயல்கள் அனைத்தையும் உயர்வான செயல்களாக செய்தால் அவற்றால் நல் வினைகள் சேர்ந்து வாழ்க்கையில் எப்போதும் நன்மையின் விளைவுகளே தொடரும்.
தப்பான செயல்களால் தவறான வினைகளை செய்தால் வாழ்க்கையில் எது நடந்தாலும் தாழ்மையான விளைவுகளே தொடரும். பெண் தனது உடல் அழகால் செய்யும் செயல்களை பார்த்து பெண் மீது ஆசை கொண்டால் வாழ்வின் நிகழ்வுகள் அனைத்தும் தவறான நிகழ்வுகளாகவே இருக்கும். புலன்கள் விரும்பிச் செல்லும் வழியே மனிதனின் மனமும் சென்றால் முடிவில் வாழ்க்கை மிகவும் கடினமாக ஆகுமப்பா. வினைகள் செய்ய வேண்டும் என்று தர்மமான செயல்களையே செய்தால் பொய்த்துப் போகின்ற நிகழ்வுகள் நடக்காத வாழ்க்கையை வாழலாம். கர்ம விதிகளின் படியே செயல்களைச் செய்தால் அதன் வழியாகவே வாழ்க்கையும் இருக்கும். அப்போது தேவையில்லாத பழிகளை சேர்த்துக் கொள்ளும் படி வாழ்க்கை ஆகிவிடும். எப்படி என்றால் தர்மத்திற்கு புறம்பான / அதர்மமான செயல்களை செய்யும் படி சிந்தனைகள் வினைப் பயனால் அறிவுறுத்த அது தர்மமான செயலே என்று அந்த நேரத்தில் கர்ம விதியால் கெட்டுப் போன எண்ணங்களும் எடுத்துச் சொல்லும். ஆனால் அது தர்மமான செயல் இல்லை தவறான / அதர்மமான செயல் என்று ஒருவருக்கு இருக்கும் நல்ல கர்மங்கள் வழி காட்டும். எந்த விதமான செயல்களை செய்தாலும் வாழ்வின் இறுதியில் இறப்பு எனும் நிகழ்வு நடந்த பிறகு வாழ்க்கையின் முதலில் செய்த செயல்களில் ஆரம்பித்து வாழ்க்கையின் கடைசியில் செய்த செயல்கள் வரை அனைத்தும் தாம் சேர்த்துக் கொண்ட கர்ம விதிகளின் வழியே செயல்பட்டது என்பது புரியும். தர்மமான செயல்களை செய்கின்ற மனிதனுக்கு கர்ம வினைகளினால் எப்போதும் துன்பம் வந்து கடினங்களை கொடுக்காது.
எந்தப் பிரிவினையும் இல்லாமல் தூய்மையான மனதுடன் இறைவனை வணங்கும் செயல்களை செய்கின்ற மனிதனுக்கு துன்பமான நிகழ்வுகள் எதுவும் வந்து வருத்தப் படுத்தாது. உயர்வான செயல்களை தேடும் மனிதன் உலக வாழ்க்கை எனும் விளையாட்டில் உயர்வான கர்ம வினைகளையே தேடுகிறான். உயர்வான செயல்கள் என்பது உண்மையான ஞானம் கற்றுக் கொடுக்கும் வழியில் செய்யும் செயல்களே என்பது புரியாது தடுமாற்றம் காணுகிறான். உள்ளபடி உயர்வான சிந்தனைகளையே செய்ய பொறுமையை வளர்த்துக் கொள்ளும் நன்மையான விஷயங்களை அவன் செய்ய எளிமையும் பொறுமையோடு சேர்ந்து செயல் பட அன்பும் கருணையும் அதனோடு சேர்ந்து நன்மையாக செயல்பட இரக்க குணமும் பின் அதனோடு சேர்ந்து செயல்பட அமைதியை பிரதிபலிக்கும் முகமும் அவற்றோடு சேர்ந்து செயல் பட தெளிவு உள்ளத்தில் எப்போதும் செயல்பட மனிதன் தானாக எந்த செயல்களும் புரியாத நிலையிலும் அவைகள் எல்லாம் சேர்ந்து புரிந்த நன்மையான வினைகளின் பயன்கள் அவனுக்கு புரிய ஆரம்பிக்கும். ஆன்மா புகுந்த வாழ்க்கை எனும் விளையாட்டில் உயிர் செய்கின்றதும் அவை அனைத்தையும் செய்ய வைப்பதும் சிதம்பரத்தில் திருச்சிற்றம்பலத்தின் அரசனாகிய இறைவன் என்று தெரிய வரும். வாழ்க்கை முடியும் போது நிகழும் நிகழ்வுகளில் தெரிய வரும். ஒருவனின் அறிவுக்கு இது எல்லாம் வாழ்க்கையின் முதல் நிகழ்விலேயே தெரிந்து விட்டால் அவன் ஞானி. எப்போதும் திருச்சிற்றம்பலத்திலே தாண்டவம் ஆடும் தங்க சபையில் ஆடுகின்ற இறைவனின் திருவடிகளின் ஆட்டத்தையும் வாழ்க்கை எனும் விளையாட்டிற்கு தலைவனாகிய இறைவனின் கூத்தாட்டும் திருவடிகளையும் எப்போதும் மறக்காமல் போற்றி வணங்கினால்தான் தப்பான செயல்களும் தவறான நிகழ்வுகளும் பாவங்களான வினைகளும் செயல் படாமல் வாழுகின்ற வாழ்க்கை புனிதமான வாழ்க்கையாகும். நன்மையாகவே செயல் பட வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் அனைத்தும் நன்மையாகவே நடக்க நன்மையான செயல்களுக்கு எல்லாம் தலைவனாகிய இறைவன் அருளட்டும் என ஆசிகள்.