ஜீவ நாடி வழியாக அகத்திய மாமுனிவர் வாக்கு: 275

அகத்திய மாமுனிவரின் பொதுவாக்கு:

யாம் கூறுகின்ற நங்கையை (பெண்ணை) மணக்க வேண்டும் என்று சிலர் எண்ணலாம். அப்பொழுதுதான் வாழ்க்கை மணக்கும் என்றும் எண்ணலாம். ஆனாலும் கூட விதியில் எது இடம் பெறுகிறதோ அதைதான் எப்பொழுதுமே மனிதன் நுகர இயலும். திருமணம் தொடர்பான கர்ம வினைகள் எத்தனையோ சிக்கலான கர்ம வினைகளைக் கொண்டிருக்கிறது. அது குறித்து ஆண்டாண்டு காலம் பாடம் எடுத்தாலும் கூட மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத விஷயம் இந்த களத்திர பாவம். எல்லா பாவங்களும் அப்படிதான் என்றாலும் களத்திர பாவம் என்பது மிகவும் நுட்பமானது. அதனால்தான் பல்வேறு தருணங்களிலே பல்வேறு விதமான திருமணங்கள் பொய்த்து போவதும் பல்வேறு திருமணங்கள் புறத் தோற்றத்திற்கு அவர்கள் ஒற்றுமையாக இருப்பது போல் தோன்றினாலும் உள்ளே நிம்மதியாக வாழாமல் இருப்பதுமாக இருக்கிறது. மனிதனின் பெருமளவு கர்மாக்கள் குறைகின்ற இடம் களத்திர பாவம். ஆன்மீகம் என்றாலே தற்சமயம் அது பலவகையான ஆன்மீகமாக மனிதனால் பார்க்கப்படுகிறது. இந்த ஜீவ அருள் ஓலையிலே (ஜீவநாடி) நாங்கள் (சித்தர்கள்) சுட்டிக் காட்டுகின்ற வழியானது மிக மிக ஞானியர் என்று மனிதர்களால் மதிக்கப்படுகின்ற ஞானியர்களாலேயே ஏற்றுக் கொள்ளப்படாத வழி முறையாகத்தான் இருக்கும். நீ கற்ற கற்கின்ற ஆன்மீக நூல்கள் நீ பார்க்கின்ற ஆன்மீக மனிதன் உன் செவியில் விழுகின்ற ஆன்ம செய்திகள் இது வரை கற்ற பல்வேறு ஆன்மீக விஷயங்கள் எல்லாம் கூட நாங்கள் (சித்தர்கள்) காட்டுகின்ற வழியிலே முரணாகத் தோன்றும்.

எமது வழி முறையில் வர வேண்டும் என்று நீயோ உன்னொத்து சிலரோ எண்ணலாம். நாங்கள் (சித்தர்கள்) வாழ்த்துகிறோம். ஆனால் அதனால் மிகப்பெரிய உலகியல் நன்மையோ அல்லது உளவியல் நன்மையோ வந்து விடாதப்பா. அதிக துன்பங்களும் அவமானங்களும் வரும். அதை சகித்துக் கொள்கின்ற பொறுமையும் சகிப்புத் தன்மையும் இருந்தால் எமது வழியில் நீயும் வரலாம். யாங்கள் (சித்தர்கள்) தடுக்கவில்லை. வந்து வெற்றி பெற நல்லாசி கூறுகிறோம். யாம் பலமுறை கூறியிருக்கிறோம். நாங்கள் (சித்தர்கள்) பாரபட்சம் பார்ப்பதில்லை என்று. எல்லோரும் இறைவனுக்கும் எமக்கும் சேய்கள்தான் (பிள்ளைகள்தான்). ஆனாலும் கூட இறைவனுக்கும் மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? சித்தர்களுக்கும் மனிதனுக்கும் குறுக்கே மாயத்திரையாக இருப்பது எது? அந்த மாயத்திரை எது? அது எப்பொழுது அகலும்? தீவிர பற்று தன் பிள்ளைகள் மேல் கொண்டிருக்கின்ற பாசம் அந்த பாசத்தின் காரணமாக ஏற்படுகின்ற தடுமாற்றம். அந்த தடுமாற்றத்தில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும் கூட தவறாக தெரியாத ஒரு நிலை. அதையே மற்றவர்கள் செய்தால் அது மிகப்பெரிய பஞ்சமாபாதகமாகத் தோன்றுவது. இவையெல்லாம் மாயையின் உச்சநிலை. எனவே சுயநலமும் தன்முனைப்பும் தீவிர பாசமும் ஆசையும் பற்றும் எந்த மனிதனுக்குள்ளும் எத்தனை காலம் இருந்தாலும் இறைவன் அவன் பக்கத்தில் அமர்ந்தாலும் அவனால் புரிந்து கொள்ள முடியாது.

உங்களது கருத்துக்களை வழங்கவும்

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.