அகத்திய மாமுனிவரின் பொது வாக்கு:
இறைவனின் கருணையைக் கொண்டு உரைப்பது யாதென்றால் இதுபோல் நலம் எண்ணி நலம் உரைத்து நலமே செய்ய நலமே விளையும் என்பது தான் மனிதன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய எளிய சூத்திரமாகும். வாழ்க்கையில் எப்பொழுதெல்லாம் மனம் விரும்பாத சம்பவங்கள் நிகழ்வுகள் நிகழ்கிறதோ விரும்பாத உறவுகள் தொடர்கிறதோ விரும்பாத சூழலில் இருக்க நேரிடுகிறதோ அப்பொழுதே புரிந்து கொள்ள வேண்டும். யாருக்கோ எப்பொழுதோ எந்த ஊருக்கோ நகருக்கோ நாட்டிற்கோ ஒட்டுமொத்தமாக பிடிக்காத உயிர்கள் விரும்பாத பாதிப்பை தரக்கூடிய ஒன்றை அம்மனிதன் செய்திருக்கிறான் என்று. ஏற்படுத்திய விளைவு ஏற்படுத்திய மனிதனை மீண்டும் சென்று சேர்ந்த பிறகே அந்த விளைவு நேரமாகும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். பழங்கால ஆயுதமான பூமராங்கு எப்படி எய்தவனிடமே திரும்ப வருமோ அது போல ஒவ்வொரு வினைக்கும் விளைவுகள் இருப்பதால் செய்கின்ற வினையை நல் வினையாய் செய்து விட்டு போனால் என்ன என்பதை தான் நாங்கள் காலம் காலமாக எம்மை நாடுகின்ற மனிதர்களுக்கு உணர்த்திக் கொண்டு இருக்கிறோம்.