கேள்வி: முதல் தவறு முதல் கர்மா எப்படி ஆரம்பமாகிறது?
ஒரு மனிதன் பூமியில் சகல சௌபாக்யங்களோடு பிறவியெடுக்க காரணம் அவன் அதற்கு முன்பு மனிதனாக இல்லாமல் சற்று மனிதனைவிட மேம்பட்ட யட்ச கந்தர்வ கூட்டத்தில் இருந்து அல்லது கடும் தவம் செய்த அசுரனாகவோ இருந்து ஏதோ ஒரு சிறு பிழை செய்து பிடி சாபம் நிலவுலகத்திற்கு செல் மனிதனாக என்று சாபம் வாங்கியிருப்பான். நன்றாக கவனிக்க வேண்டும். அதாவது மனிதனை விட பல நிலைகள் மேம்பட்ட தேவ வர்க்கமோ தேவதை வர்க்கமோ செய்கின்ற ஒரு சிறு குற்றம். மனித கண்ணோட்டத்தில் பார்த்தால் அது குற்றமே அல்ல. சுந்தரரின் கதை தெரியுமா? அது குற்றமா? அதுபோன்ற குற்றங்களுக்கு தண்டனை கொடுப்பதாக இருந்தால் ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
அம்பிகையின் தோழிகளை பார்த்து அழகு மிக்க யுவதிகளாக இருக்கிறார்களே? என்று ஒரு கணம்தான் சிந்தித்தார். சிவன் அழைத்தார். இது காமனை எரித்த இடம். எனவே இங்கு இந்த எண்ணம் எல்லாம் வரக்கூடாது வந்து விட்டது. செல் பூலோகம் என்றார். சுந்தரர் அஞ்சி நடுங்கி விட்டார். தெரியாமல் செய்து விட்டேன் என்னை தண்டிக்காதீர்கள் என்று. ஆனாலும் சிவபெருமான் விடவில்லை. சாபத்தை கொடுத்தார். மனிதர்கள் அறிந்தும் அறியாமலும் குழப்பத்தில் இருப்பதால் அவர்கள் செய்யும் தவறுகளை எல்லாம் இறைவன் எளிதில் மன்னித்து விடுகிறார். ஆனால் மனிதர்களைத் தாண்டி ஒரு உயர்வான நிலைக்கு சென்ற பிறகு சிறிய தவறு கூட வரக்கூடாது. வந்தால் அவர்கள் எந்தவிதமான சாபத்திற்கும் ஆளாகலாம். அப்படி ஒருவனுக்கு மனிதப் பிறவி சாபமாக கிடைக்கிறது என்று வைத்துக் கொள். அவன் பல்லாண்டு காலம் தேவனாக உச்சத்தில் வாழ்ந்திருப்பான். அவனை பொறுத்தவரை அவன் செய்தது தவறாக இருந்தாலும் கூட அவன் ஒரு புண்ணிய ஆத்மாதானே? அதனால் மிக உயர்ந்த செல்வ செழிப்பிலே புகழின் உச்சியிலே தேக ஆரோக்கியத்திலே தோற்றப் பொலிவிலே சகலத்திலும் நன்றாக இறைவன் தந்துதான் பிறவி கொடுப்பார். ஆனால் (இவையெல்லாம்) கொடுத்த பிறகு அவன் என்ன செய்வான்? ஊழ்வினையாலும் மாயையாலும் பழைய விஷயங்கள் எல்லாம் மறந்து போய் சராசரியாக தனக்கு கிடைத்த பட்டம் பதவி அந்தஸ்து தோற்றம் தனம் இவற்றை வைத்து பாவங்களை செய்யத் துவங்குகிறான். பிறகு மீண்டும் மீண்டும் இந்த சுழலிலே மாட்டிக் கொண்டு தவிக்கிறான். எனவே எந்த நிலையிலும் ஒரு மனிதன் விழிப்புணர்வோடு இருந்து பாவங்களை செய்யாமல் இருந்தால் மீண்டும் மீண்டும் இந்த சுழற்சியில் மாட்டிக் கொண்டு அவதிப்பட நேரிடாது.