கேள்வி: தர்மத்தில் எப்படி கர்ணனை பார்த்தால் பொறாமையாக இருக்கிறதோ அதைப் போல் பக்தியில் பிரகலாதன் பார்த்தால் பொறாமையாக இருக்கிறது.
பக்தியில் இடை எழுத்தை எடுத்து விட்டால் பதி என்று வரும். பதியை பக்தியோடு பார்ப்பது ஒரு நிலை ஒரு காலம். இன்றும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதுபோல் பதியும் பத்தினியை அவ்வாறுதான் நோக்க வேண்டும். பதி பக்தி என்று பதிக்கும் பத்தினிக்கும் ஒரு உடன்பாடு சம நிலையில் வந்து விட்டால் அந்த பதிக்குள் இருக்கின்ற இறையும் பத்தினிக்குள் இருக்கின்ற இறைத் தன்மையும் ஒன்றுபட அங்கே மெய்யான பக்தி உணர்வு என்பது வெளிப்படும். ஆனால் எனக்குள் இருக்கின்ற எதிர்பார்ப்புகள் எல்லாம் நீ பூர்த்தி செய்தால் என்னை அனுசரித்து நீ நடந்து கொண்டால் என் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் உன் செயல்கள் இருந்தால் மட்டுமே வாழ்க்கை என்று வெறும் புற செயலோடு ஒப்பிட்டுப் பார்த்து வாழ்வதால் இங்கு உறவுகள் உறவுகளாக இல்லாமல் துறவுகளாக ஆகிவிட்டன. எனவே பக்தி என்பது எதையும் எதிர்பார்க்காது. எந்த நிலையிலும் எதனாலும் பாதிக்கப்படாது. பக்தி என்பது பூரணத்துவத்தை மட்டும் உணரக் கூடியது. பக்தி என்பது அழியாத அன்பு மற்றும் கருணையின் கலப்பாகும். எனவே பக்தியில் செயல் பார்க்கப்படுவதில்லை நோக்கம் மட்டுமே பார்க்கப்படுகிறது.
ஆழ்ந்த நோக்கம் புற மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாமல் போனாலும் இறையால் புரிந்து கொள்ளப்படும். எனவே அதனால்தான் இறைக்கு முன்னால் வேடதாரிகள் தோற்று விடுகிறார்கள். வேடமிடாத மெய் பக்தர்கள் அங்கே வெற்றி பெறுகிறார்கள்.