அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் நல்விதமாய் இதுபோல் சேய்கள் அனைவரும் அனைத்து உயிர்களும் நலமாய் வாழ இறைவனருளைக் கொண்டு நாங்கள் பிரார்த்தனையை செய்கின்றோம் நாள்நாளும். இதுபோல் எல்லா உயிரும் சிறப்பாய் வாழ இதுபோல் காலகாலம் மகான்கள் செய்கின்ற பிரார்த்தனைகள் சிறப்பாக இருக்கும் பட்சத்தில் எல்லா உயிர்களும் சிறப்பாய் வாழ வேண்டுமே? ஆனால் நடைமுறையில் அப்படியில்லையே? என்ற ஐயம் எழும். அது ஒருபுறமிருக்க இக்கணம் இத்தருணம் ரோகிணி மீன் ஓடும் காலம் நல்விதமாய் அன்னையின் அருள் தடத்திலே கூடி இருக்கின்ற சேய்கள் அனைவருக்கும் இறைவனின் அருளைக்கொண்டு யாம் நல்லாசிகளை கூறுகிறோம்.
ஊருக்கா பேருக்கா பூஜை? இல்லை. உயிருக்கா உயிரில் உள்ள இறைக்கா பூஜை? இல்லை. உள்ளத்திற்கா உள்ளத்தில் உள்ள தொடரும் எண்ணத்திற்கா பூஜை? இதுபோல் எண்ணும் பொழுது நல்விதமாய் தாய்க்கா தந்தைக்கா? வாய்க்கா வாய்ப்புகளெல்லாம் மகனுக்கா வாய்க்கும்? வாய்த்தாலும் நல்விதமாய் மகளுக்கா வாய்க்கும்? அல்லது மகனுக்கா வாய்க்கும்? மகனுக்கோ மகளுக்கோ வாய்த்தாலும் அதுபோல் மகனுக்கும் மகளுக்கும் பிறக்கும் சேய்க்கா வாய்க்கும்? நல்விதமான வாய்ப்பை நல்விதமாய் தொடர்ந்து தாய்க்கா தந்தைக்கா என்றில்லாமல் இங்குள்ள அனைத்து சேய்க்கும் நல்வாய்ப்பு வாய்க்க நல்விதமாய் ஆனைக்கா அன்னை அருள் புரியட்டும் என்று அன்று பூனைக்கும் அருள் புரிந்து பின்னர் சிற்றுயிருக்கும் அருள் புரிந்த ஈசன் இந்த சிறு கூட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் இந்த ஆத்மாவிற்கும் அருள் புரிய நல்விதமாய் பரம்பொருள் அருளட்டும் அருளட்டும் என்று இந்த ஆனைக்கா தடத்திலே நல்விதமாய் ஆனைக்கா அன்னையின் திருவடி தொட்டு ஆனைக்கா அன்னையின் அன்பினை பெற சேய்கள் தொடரும் தொடரும். எதை தொடரும் தொடரும்? பிறவி தொடரும் என்றாலும் பிறவி தொடரா தொடர தொண்டினை தொடர உயிருக்கு அருளை தேடும் வழிமுறையை யாங்கள் கூறுகின்ற வழிமுறையை தொடர்ந்து பின்பற்ற நல்விதமாய் உயிருக்கா உதவும் இந்த அன்னைக்கா நிழலில் என்றென்றும் இச்சேய்கள் இளைப்பாற நல்விதமாய் நல்லாசியினை மீண்டும் அன்னையின் அடிதொட்டு கூறுகிறோம்.
நல்விதமாய் இவ்வாறு கூறினால் எவ்வாறு புரிவது தொண்டினை? இவ்வாறு கூறினால் எவ்வாறு புரிந்து கொள்வது வாழ்வினை? என்றெல்லாம் சிந்தையின் ஓடலாம் சேய்களுக்கு. யாங்கள் நாள்நாளும் சந்திக்கின்ற பிரச்சினையை சித்தர்கள் தொடர்பால் தீர்த்துக் கொள்ளலாம் என்று வந்தால் பிரச்சினையே எங்களை கொல்லலாம் என்றுதானே துரத்துகிறது. தீர்த்துக் கொள்ளலாமா? அல்லது பிரச்சினை எங்களைக் கொல்லலாமா? என்றெல்லாம் சிந்தனை சேய்களுக்கு ஓடுகின்ற இத்தருணத்திலே எப்பிரச்சினையும் தொடராது இருக்க எம்மை நம்புகின்ற சேய்கள் ஓலையிலே யாங்கள் ஓதுகின்ற வாக்கினை சரியாக புரிந்து கொள்கின்ற சேய்கள் நன்றாய் மனதை திடமாக்கி நுட்பமாக்கி உயர்வாக்கி சிந்தனையை கூர்மையாக்கி என்றென்றும் சராசரி மனிதர்களின் செயலைப் பார்த்து சங்கடம் கொள்ளாது என்றென்றும் எங்களது வாக்கினை சற்றே கூர்ந்து கவனித்து சிந்தித்து சிந்தித்து யாங்கள் என்ன கூற வருகிறோம்? எப்படி கூறுகிறோம்? எந்த நிலையில் கூறுகிறோம்? எதற்காக கூறுகிறோம்? எந்த வழிமுறையை கூறுகிறோம்? யாருக்கு கூறுகிறோம்? எந்தெந்த சூழலில் எவ்வாறெல்லாம் கூறுகிறோம்? என்று எண்ணி சரியாக புரிந்துகொள்ள எமது வாக்கின் தன்மையை மனதில் சரியாக பதிய வைக்க வாழ்வில் சங்கடங்கள் இல்லாமல் இறைநோக்கி செல்லலாம். ஆனால் அதுபோல் செல்வதற்கு மனம் வலிமை பெறவேண்டும்.
இதுபோல் பல்வேறு பிறவிகளில் சேர்த்த பாவ சுமைகள் கட்டாயம் வாட்டும். எம் தொடர்பு கிடைத்து விட்டாலேயே எல்லா துன்பங்களும் விலகிவிட வேண்டும் என்று சேய்கள் எண்ணுவது ஒருவகையில் சரி என்றாலும் அதுபோல் நேர்மையான பாதைக்கு அது சரியல்ல என்பதை புரிந்து கொண்டு துன்பங்கள் தொடர்ந்தாலும் இறைவனின் அருளால் அந்த துன்பத்தை தாங்குகின்ற வல்லமையை எமது சேய்கள் பெற வேண்டும் என்று கூறி இதோப்ல நல்லாசியை எம்முன் அமர்ந்த சேய்களுக்கும் அமர முயற்சி செய்து வர முடியாமல் சென்ற சேய்களுக்கும் இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம்.