அகத்திய மாமுனிவர் அருளிய பொது வாக்கு:
இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இதுபோல் நல்விதமாய் எமை நாடும் சேய்கள் ஏன் மனித குலம் முழுவதும் எல்லா உயிரினங்களும் நலமாய் வாழ பாவ எண்ணங்கள் இல்லாது வாழ பாவத்தின் பிடியிலிருந்து விலகி வாழ இறைவன் அருளாலே நல்லாசிகளை இயம்புகிறோம். இயம்புகிறோம் இதுபோல் நல்விதமாய் ஹஸ்தம் (அஸ்த நட்சத்திரம்) மீன் ஓடும் காலம் இதுபோல் இறைவனின் அருள் ஆணையால் யாம் எம் சேய்களுக்கு சில வாக்குகளை கூற இருக்கின்றோம் நலமாய். நலமாய் வாழத்தான் உயிர்கள் எண்ணுகின்றன. நலமாய் வாழத்தான் மாந்தனும் எண்ணுகிறான். நலமாய் வாழ வேண்டும் என எண்ணுகின்ற மாந்தன் நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலமே செய்ய நலமே நடக்கும் என்று நாங்களும் நாள்நாளும் கூறிக் கொண்டே இருக்கிறோம். நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலத்தை செய்தாலும் நலமில்லாமல் வருகிறதே? என மனிதன் விரக்தி கொண்டே வாழ்கிறான். நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலமாய் வாழ என்றென்றும் யாங்கள் அருளாணையிட்டாலும் நலத்தை எண்ணி நலத்தை உரைத்து நலத்தை செய்து வாழ மாந்தர்களுக்கு பல்வேறு தயக்கங்கள் இருக்கின்றன. அத் தயக்கம் யாவற்றையும் விட்டுவிட்டு என்ன விளைவுகள் நடந்தாலும் நலம் எண்ணி நலத்தை உரைத்து நலமாய் வாழ இதுபோல் மீண்டும் அதுபோல் நலத்தை நினைவூட்டி நலமாய் அனைவரும் வாழ இறைவனருளால் நல்லாசிகளை இயம்புகிறோம்.
இயம்புகிறோம் இதுபோல் மனம் தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமாகும். இயம்புகிறோம். தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டமானது இதுபோல் விதவிதமாய் மனிதர்களை வாட்டி வதைத்துக் கொண்டே இருக்கிறது. தொடர்ந்த எண்ணங்களின் ஓட்டம் ஒடுங்கினால் தொடரும் எண்ணங்கள் அற்ற நிலை வரும். எண்ணங்களற்ற நிலை ஒரு மனிதனுக்கு எப்பொழுது வருகிறதோ அன்றுதான் அவன் பின்னங்கள் இல்லாது வாழக்கூடிய வழியை அறிவான். எனவே எவ்வித எண்ணங்களும் இல்லாத நிலையை நோக்கி மனிதன் செல்வது என்பது எடுத்த எடுப்பிலேயே கடினம் என்றுதான் பக்திவழி கூறிக் கொண்டே இருக்கிறோம். பக்தியும் தர்மமும் சத்தியமும் ஒருநாள் கட்டாயம் மனிதன் எண்ணுகின்ற நிரந்தர நிம்மதியை, நிரந்தர சந்தோஷத்தை தரும். ஆனால் அதுவரை மனிதனின் மனம் அலை பாய்ந்து கொண்டேதான் இருக்கிறது இந்த உலகினால் ஆசாபாசங்களால் பந்தபாசங்களால் பற்றால். ஆசையால் அதனால்தான் எடுத்த எடுப்பிலேயே இவற்றையெல்லாம் விடு என்று கூறுவதைவிட மாந்தர்களின் போக்கிலேயே ஆன்மீக வழிமுறைகளை போதித்து இதுபோல் பல்வேறு விதமான சடங்குகளையும் பூஜை முறைகளையும் கூறி அந்த வழியிலிருந்து மெல்ல மெல்ல அவன் மேலேறி வரவேண்டும் என்றுதான் யாங்கள் எதிர்பார்க்கின்றோம். ஆனாலும்கூட எத்தனைதான் நுணுக்கமாய் யாங்கள் வெளிப்படையாய் தெளிவாய் உரைத்தாலும் யாங்கள் எந்த நோக்கிலே உரைத்தாலும் அந்த நோக்கிலே புரிந்து கொள்ளாமல் போவதுதான் மனிதர்களின் தன்மையாகும்.
யாங்கள் எதை எதற்காக எப்படி கூறுகிறோம்? என்பதை சரியாக புரிந்து கொள்ளக் கூடிய மனம் ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் அவன் விரைவில் இறையருளை பரிபூரணமாக பெற்றுவிடுவான். இதுபோல் மனதிலே ஒரு மனிதனுக்கு கள்ளமும் சூதும் சூழ்ச்சியும் இல்லாத நிலையிலே அவன் இறையருளைப் பெறுவது எளிதாகும். சுயநலமும் சூழ்ச்சியும் சந்தேகமும் ஆளுமை சிந்தனையும் அகங்காரமும் யாரிடம் இருந்தாலும் இறையருளைப் பெறுவது கடினமாகும். எனவே எமை நாடும் சேய்கள் நாள்நாளும் எமது வாக்கின் போக்கை சிந்தித்து சிந்தித்து யாங்கள் என்ன கூற வருகிறோம்? எதற்கு கூறுகிறோம்? எப்படி கூறுகிறோம்? எந்த இடத்தில் கூறுகிறோம்? எதற்காக கூறுகிறோம்? என்ன வழிமுறைக்காக கூறுகிறோம்? அதனை எப்படி புரிந்துகொள்ள வேண்டும்? என்பதை நன்றாக சுய ஆய்வு செய்து புரிந்து புரிந்து புரிந்து எமது வாக்கை அசைபோட்டு அசைபோட்டு அந்த வழியில் மேலேற இறைவன் அருளால் நல்லாசிகளை இயம்புகிறோம்.
இதுபோல் நல்விதமாய் தொடர்ந்து இறை பக்தியும் பரிபூரண சரணா பக்தியும் இந்த சரணா பக்தி என்பது சரணாகதியிலிருந்து வருவதாகும். சரணாகதி பக்தி இல்லையென்றால் ஒரு மனிதனுக்கு எந்தவிதமான நிம்மதியும் சட்டென்று வந்துவிடாது. எனவேதான் எந்தவிதமான ஐயமுமின்றி சரணாகதி பக்தியை ஒருவன் வளர்த்துக்கொள்ள வேண்டும். சரணாகதி பக்தி வளரவேண்டும் என்றால் ஒரு மனிதனிடம் கூடுமானவரை குற்றங்களும் குறைகளும் இல்லாமல் இருத்தல் அவசியம். குற்றங்கள் இருந்தாலும் அவற்றை உள்ளுணர்ந்து மெல்ல மெல்ல திருத்திக்கொள்ள வேண்டும். தவறு செய்வதைவிட பலர் முன் அந்தத் தவறை எவனொருவன் ஒத்துக்கொள்கிறானோ அவன்தான் எமது வழியில் வர தகுதி பெற்றவனாவான். எனவே நல்விதமாய் சிந்தனையை வளர்த்து சிந்தனையை கூர்மையாக்கி எமது வழிமுறையை புரிந்துகொண்டு வர பரிபூரண நல்லாசியை இத்தருணம் கூறுகிறோம்.