அகத்தியரின் பொது வாக்கு:
இறைவன் அருளாலே இறைவன் என்ற மகாசக்தியிலிருந்து பிரிந்த துகள் தான் அனைவரும் என்று தத்துவார்த்தமாக கூறினாலும் கூட இறைவன் விளையாட்டாக இந்த உலகை படைத்ததாக சொல்லுவோம். அப்படி படைக்கும் பொழுது இப்படி வாழ வேண்டும். இப்படி வாழ கூடாது. இது தக்கது. இது தகாதது. இது நன்மையை தரக்கூடியது. இது தீமையை தரக்கூடியது என்றெல்லாம் நல்ல ஞானிகளையும் உடன் அனுப்பி போதனைகளையும் செய்திருக்கிறார். ஆனாலும் கூட இங்கு வந்த பிறகு ஆத்மாக்கள் வெறும் லோகாய இச்சைக்குள் சிக்கி தவறுகளையும் பாவங்களையும் செய்து கொண்டேதான் போகிறது. இது எங்ஙனம்? என்றால் ஒரு மகா பெரிய ஞானி யோகி இருப்பதாக கொள்வோம். அந்த ஞானியின் போதனைகளை கேட்டு பலரும் மனம் திருந்தி நல்ல வழியில் வருவதாக கொள்வோம். ஆனால் அந்த ஞானியின் பிள்ளை அவ்வாறு இருக்க வேண்டும் இருக்க வேண்டும் என்கிற கட்டாயம் இல்லையே? ஞானியின் பிள்ளை அசட்டுத்தனமாக மூடத்தனமாக தவறுகளை செய்யக்கூடிய பிள்ளையாக பலருக்கும் இருப்பது போலத்தான். இறைவன் படைப்பாக இருந்தாலும் இறைவனைப் போல உயர்ந்த எண்ணங்கள் இல்லாமல் வாழும் சூழலை மாயையால் மனிதன் உண்டாக்கி கொள்கிறான். ஆனால் இறைவன் தான் இந்த உயிர்கள் எல்லாம் படைத்தார் என்பதற்கு குழந்தைகளை பார்த்தால் புரிந்து கொள்ளலாம். குழந்தைகளிடம் வஞ்சகம் இல்லை. சூழ்ச்சி இல்லை. சூது இல்லை. வாது இல்லை. அது இறைவனின் நகலாக இருக்கிறது. அது பிறகு வளர வளர ஏற்கனவே வளர்ந்த குழந்தை அனைத்தையும் அந்த குழந்தைக்கு சொல்லி தந்து விடுகிறது.
நல்லதை தொடர்ந்து செய் என்று எண்ணிதான் இறைவனை இறைவன் உயிர்களை படைத்திருக்கிறார். ஆனால் அப்படி ஒருபோதும் செய்ய மாட்டேன் அப்படி செய்தால் உடனடியாக நன்மைகள் ஏற்பட போவதில்லை. லோகாய நஷ்டம் ஏற்படுகிறது. எனவே நான் சுயநலவாதியாகத்தான் வாழ்வேன் என்பது மனித சமுதாயத்தின் ஒட்டுமொத்த தீர்மானமாக இருக்கிறது. அப்படி பார்க்கும் பொழுது இறைவன் நல்ல எண்ணத்தில் தான் அனைத்தையும் செய்து இருக்கிறார். இறைவன் மனிதனை இப்படி ஒரு மாயையில் தவிக்க விட்டதாக தத்துவார்த்த ரீதியில் புலம்பலாமே தவிர இந்த குற்றத்திற்கு முழுக்க முழுக்க மனிதர்களை காரணம். ஏனென்றால் சிந்திக்கும் ஆற்றலை தந்து தான் உயிர்களை இறைவன் உலாவை விட்டிருக்கிறார். வெளியூருக்கு செல்லும் மைந்தனுக்கு போக வர செலவுக்கும் உணவு அங்காடிக்கு உண்டான செலவுக்கும் சத்திரத்தில் தங்குவதற்கு உண்டான செலவுக்கும் தனம் தந்து அந்த தனம் எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் வேறுவிதமான ஏற்பாடுகளையும் செய்து தான் தந்தை அனுப்புகிறார். ஆனால் பிள்ளையோ அதனை கேட்காமல் தவறான வழியில் சென்றால் அனுப்பிய தந்தையின் குற்றமா? தவறான வழியில் சென்ற பிள்ளையின் குற்றமா?