கேள்வி: கோயில் என்றாலே புண்ணியமான இடம் தானே. இராசி இல்லாத கோயில்கள் என்ற ஒன்று இருக்கிறதா?
இறைவன் அருளால் மனிதன் தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களுக்கு எப்பொழுதுமே பிறவற்றை அல்லது பிறரை குற்றம் சாட்டுவது என்பது இயல்பாகி விட்டது. ஆயிரக்கணக்கான ஆடு மாடுகளை கொன்று குவிக்கும் பொழுது வராத பாவம் ஆயிரக்கணக்கான மனிதர்களை போர் என்ற பெயரில் கொன்று குவிக்கும் போது வராத பாவம் ஒரு ஆலயம் சென்று தரிசித்தால் வந்துவிடுமா என்ன? ஆலயத்தில் இறைவனால் எந்த அனாச்சாரமும் நடப்பதில்லை. அவனவன் விதியின் படி நடக்க வேண்டியது நடந்து கொண்டே இருக்கிறது. அதற்கும் ஒரு ஆலயத்திற்கும் தொடர்பு இல்லை. இன்னொன்று காலத்தில் ஆலய கட்டுமான பணிகள் செய்யும்போது பல்வேறு மனிதர்கள் அந்த கட்டுமானத்தின் காரணமாக அந்த வேலையின் காரணமாக உயிரை துறந்திருக்கிறார்கள். அதற்கெல்லாம் பூஜை நடந்திருக்கிறது. இன்னும் எமக்கு பிடிக்காத பலவும் நடந்திருக்கிறது. ஆலய வேலை பழுதுபடாமல் இருக்க உயிர் பலியெல்லாம் கூட தந்திருக்கிறார்கள். இவையெல்லாம் எக்காலத்திலும் மூடர்கள் செய்யக்கூடிய விஷயம்தான். அக்காலத்தில் அரசனும் சில மூட பழக்க வழக்கங்களுக்கு ஆளாகி இப்படியெல்லாம் செய்ததுண்டு. ஆனால் அதற்கும் இன்னவள் கூறிய வினாவிற்கும் தொடர்பில்லை. அங்கு திரையை போட்டு மறைத்து விட்டால் மட்டும் ஒருவனின் கர்மாவையும் மறைத்து விட முடியுமா என்ன?